ஸத்யபுத்ரர் -- அதியமான் நெடுமான் அஞ்சி--அதியமார் என்ற கள்ளர் அரச குலத்தினர்

கள்ளர் இனபட்டப்பெயர்கள் (அதியமார்) பற்றிய ஒரு விளக்கம்
அ எழுத்தில் பட்டப்பெயர்கள்
0024. அதிகமார். அதியமார்
இவை இரண்டும் கள்ளர் குல பட்டங்கள் இந்த இரு பட்ட பெயர் உடையவர்கள் அதியமான் நெடுமான் அஞ்சி வம்சாவளியை சேர்ந்தவர்கள் .....இவர்களை பற்றி இதோ ......
ஸத்யபுத்ரர் என்றால் பொய்யா எழினி  என்று பொருள் ....

நன்றி http://tamilartsacademy.com/books/tavam/chapter26.xmlடாக்டர். இரா. நாகசாமி
ஔவைக்கு நெல்லிக்கனி ஈந்த அதியமான் கல்வெட்டு


தென்னார்காடு மாவட்டத்தில் திருக்கோயிலூரிலிருந்து பதினாறு கல் தொலைவில் ஜம்பை என்ற ஊர் உள்ளது. இவ்வூரை திருவண்ணாமலையிலிருந்து (30 கி.மீ) சென்றடையலாம். இவ்வூர் பெண்ணை ஆற்றின் வடகரையில் உள்ளது. சுற்றிலும் பலகுன்றுகள் உள்ளமையால் இது பார்ப்பதற்கு இனிமையான சூழ்நிலையில் உள்ளது. பண்டைய கல்வெட்டுகள் இவ்வூர் "வாணகோப்பாடி நாட்டில்" இருந்தது எனக் கூறுகின்றன.
இவ்வூரில் தான் வரலாற்றுச் சிறப்புமிக்க அதியமான் நெடுமான் அஞ்சியின் கல்வெட்டை தமிழ்நாடு அரசு தொல்பொருள் ஆய்வுத்துறை கண்டுபிடித்துள்ளது. 
இதை எங்கள் துறை கல்வெட்டியல் பயிற்சி நிறுவன மாணவர் திரு. செல்வராஜ் கண்டுபடித்தார். கல்வெட்டியல் நிறுவனத்தின் ஓராண்டுக் காலம் பயிற்சி பெறும் மாணவர்கள் ஒரு பண்டைய ஊரைக் எடுத்துக் கொண்டு அங்குள்ள கல்வெட்டுகள், கோயில்கள், கலை, சிற்பம், சமுதாயம் முதலியவற்றை ஆய்ந்து நெடும் ஆராய்ச்சிக் கட்டுரை ஒன்று அளிக்க வேண்டும். திரு. செல்வராஜ் ஜம்பை கிராமத்தை தன் ஆய்வுக்கு எடுத்துக் கொண்டு ஆராய்ந்தார். பண்டைய தமிழ்க் கல்வெட்டு கிடைத்துள்ளது உடனே வரவும் எனத் தந்தி அவரிடமிருந்து வந்தது. 
சென்னையிலிருந்து ஜம்பைக்கு திருக்கோயிலூர் வழியாக ஒரே மூச்சாக வழியில் காபிக்கு கூடநிற்காமல் சென்றேன். அந்திமயங்கும் நேரமாகிவிட்டது ஊரின் அருகில் இருந்த மலைக்கு வேக வேகமாகச் சென்றோம். இருட்டுவதற்குள் அந்த கல்வெட்டை பார்த்துவிட வேண்டும் என்பதற்காக இந்த நேரத்தில் மலைமேல் ஏற்றீங்களே திரும்பி வரும்போது வழி தெரியாதே பார்த்து கூட்டிட்டுப் போங்க என்று யாரோ ஒருவர் கூறியது எங்கள் காதில் ஒலித்தது. அக்குன்றத்தில் "ஆள் ஏறாப்பாறை", "சன்யாசி மடம்", "தாசி மடம்" என்ற பகுதிகள் உண்டு. தாசிமடம் என்பது இயற்கையாக அமைந்த குகைத்தளம். அதில்தான் அக்கல்வெட்டு இருக்கிறது. ஒரே வரியில் எழுதப்பட்டுள்ள அக்கல்வெட்டைப் படித்தேன். 
ஸதியபுதோ அதியந் நெடுமாந் அஞ்சி ஈத்த பாளி


என்று கி.பி. முதல் நூற்றாண்டு எழுத்துக்களில் உள்ள அதைப் படித்தேன். குகைக்கு வெளியே ஓடிவந்தேன். மாணவர் செல்வராஜைக் கட்டி அனைத்துக் கொண்டேன். மீண்டும் குகைக்குள் ஒடினேன். அந்தக் கல்வெட்டை எழுத்து எழுத்தாகப் படித்தேன். மீண்டு வெளியே ஓடிவந்தேன். செல்வராஜை முதுகில் தட்டிக் கொடுத்தேன். எப்பேர்ப்பட்ட கல்வெட்டு, What a discovery! நீங்கள் கண்டுபிடித்துள்ள கல்வெட்டு எப்பேர்ப்பட்டது தெரியுமா? என்று கேட்டேன். 
மீண்டும் உள்ளே சென்று "ஸதியபுதோ அதியந் நெடுமாந் அஞ்சி" என்ற பெயரைத் தொட்டுத் தடவி ஆனந்த வெள்ளத்தில் ஆழ்ந்தேன். உடன் இருந்தவர்கள் என்ன இப்படி இருக்கிறாரே என எண்ணினார்கள். தசமுகனை சங்கரித்து, மைதிலியை மீட்டு, அயோத்திக்கு அண்ணல் இராமபிரான் திரும்புகிறான் என்று பரதனிடம் அனுமன் கூறியபோது பரதன் என்ன நிலை அடைந்தான் எனக் கம்பன் கூறுவான். 
ஆடுமின் ஆடுமின் என்னும் ஐயன்பால்
ஓடுமின் ஓடுமின் என்னும் ஓங்கு இசை
பாடுமின் பாடுமின் என்னும்
சூடுமின் சூடுமின் தூதன் தாள் என்னும்


வேதியர் தமைத் தொழும் வேந்தரைத் தொழும்
தாதியர் தம்மைத் தொழும் தன்னைத் தான் தொழும்
ஏதும் ஒன்று உணர்குறாது இருக்கும் நிற்குமால்


என்று தன்னிலை மறந்த நிலை. அதைத்தான் என்னிலைக்கு ஈடாகக் கூற இயலும். என் மனதில் அந்த அளவுக்கு உவகை ஏற்படுத்திய 
இக்கல்வெட்டின் சிறப்புதான் என்ன? 
அதில் உள்ள 
இரண்டு சொல் தொடர்கள் "ஸதியபுதோ"
என்பதும் "அதியந் நெடுமாந் அஞ்சி" என்பதே ஆகும். 
அதியமான் நெடுமான் அஞ்சியை அறியாத தமிழரும் உண்டோ? தனக்குக் கிடைத்த நெல்லிக்கனியை தான் உண்ணாது தமிழ் மூதாட்டி ஔவைக்கு அளித்த வள்ளல் அல்லவா அவன். அதை ஒளவையே பாடுவாள். "அருமையான நெல்லிக்கனி அதை உண்டால் என்றும் இறவாமல் இருக்கலாம் என்று தெரிந்தும் அதை நீ உண்ணாமல் அச்செய்தியை எனக்கு சொல்லாமல் நான் என்றும் இறவாமல் இருக்க வேண்டும் என்று எனக்கு ஈந்தனையே அதியர் கோமான் அஞ்சி! நீ ஆலகாலவிடத்தை தன் மிடற்றில் அடக்கி உலகை உய்ய வைத்த சிவனைப் போல சிறப்பாயாக" என
ஆர்கலி நறவின் அதியர் கோமான்
போரடு திருவில் பொலந்தார் அஞ்சி
பல்புரை பிறைநுதல் பொலிந்த சென்னி
நீலமனி மிடற்று ஒருவன் போல
மன்னுக பெரும நீயே! தொன்னிலை
பெருமலை விடரகத்து அருமிசை கொண்ட
சிறியிலை நெல்லித் தீங்கனி குறியாது
ஆதல் நின்னகத்து அடக்கி
சாதல் நீங்க எமக்கு ஈத்தனையே


எனப் பாடுகிறார். புறநானூறு இதையே சிறுபாணாற்றுப்படையில் நல்லூர் நத்தத்தனார் "நெல்லி அமிழ்து விளை தீகனி ஔவைக்கு ஈந்த அதிகன்" என்பார். இச்சிறந்த வீரனால் எவ்வளவு பாடல்கள் தமிழுக்கு கிடைத்துள்ளன! எவ்வளவு புலவர்கள் இவன் புகழைப்பாடி இருக்கிறார்கள்! ஔவையார், பரணர், மாமூலனார், அரிசில்கிழார், நல்லூர் நத்தத்தனார், பெருஞ்சித்திரனார், அஞ்சியின் அத்தைமகள் நாகையார், ஆகிய புலவர்கள் பாடிய சங்கப் பாடல்கள் அதியனின் புகழைக் கூறுகின்றன. தகடூரைத் இன்றைய தர்மபுரியை தலைநகராகக் கொண்டு ஆண்டவர்கள் அதியர் வழியினர். அதியமான் மரபின் முன்னோர்கள் தேவர்களைப் போற்றியவர்கள். வேள்வி வேட்டுச் சிறந்தவர்கள். 
கரும்பு பயிரிடும் மரபை அறிந்து இவ்வுலகில் கரும்பு பயிரிடச் செய்தவர்கள். 
"அமரர் பேணியும் ஆவூதி அருத்தியும்
அரும் பெறல் மரபின் கரும்பு இவண் தந்தும்
நீரக இருக்கை ஆழி சூட்டிய
தொன்னிலை மரபின் நின்முன்னோர்" புறம்


அதியமானைப் பற்றிய பெரும்பாலான பாடல்களை ஒளவையாரே பாடியிருக்கிறார். சுருங்கச் சொன்னால் ஔவையைக் குறிக்கும்போது அதியமான் நெடுமான் அஞ்சியின் நினைவும், அதிகனைக் கூறும்போது ஒளவையின் நினைவும் வராமல் இருக்காது. அவ்வளவுக்கு நெருங்கிய நண்பர்கள் அவர்கள் இருவரும். அவனை மழை போல் வாரி வழங்கும் வள்ளல் என்பர். ஒரு நாள் அல்ல, இரு நாட்கள் அல்ல, பல நாட்கள் பலரோடு சென்றாலும் முதல் நாள் எவ்வாறு முகமலர்ந்து வரவேற்றானோ அதே போல் வரவேற்கும் தன்மையன் அதியன். பரிசு பெறவருவோருக்கு அவனது அரணின் வாயில் எப்பொழுதும் திறந்திருக்கும் என "பரிசிலருக்கு அடையா வாயில்" என்னும் புறப்பாட்டு. 
அவன் பெரிய தேர்களையும், மதம் பொருந்திய யானைகளையும், விரைந்து செல்லும் குதிரைகளையும், வேல் ஏந்தும் வீரர்களையும் படையாகக் கொண்டான். "நெடுந்தேர் அஞ்சி", "நெடு நெறி குதிரை கூர்வேல் அஞ்சி", "கடும் பகட்டு யானை நெடுமான் அஞ்சி" என்றும் புகழப்படுகிறான்.
இப்பேர்ப்பட்டவன் அமைதியே உருவமாகவும் இருப்பான். சீறிக் கிளம்பினால் பெரும் காட்டையும் கணத்தில் சுட்டெரிக்கும் ஊழித் தீயையும் போல் இருப்பான். இவனது தூசிப் படைமுன் எதிர்த்து நிற்கமாட்டாமல் மாற்றரசர் புறமுதுகிட்டு ஓடுவர். அதியமான் புகழும் வீரமும் பலவாறும் சங்கப் பாடல்களில் போற்றப் பட்டுள்ளது.
இவன் பெற்ற வெற்றிகளில் இரண்டு சிறப்பாகக் கூறப்படுகின்றன.
௧) ஏழு அரசர்களுடன் போரிட்டு ஒருமுறை இவன் பெரும் வெற்றி கண்டான். இப்பெரும் வெற்றியை பாடும் அளவுக்கு ஆற்றல் படைத்த புலவர் அன்று இல்லை. 
௨)இவன் அடைந்த மற்றொரு வெற்றி மலையமான் திருமுடிக்காரியை வென்று திருக்கோயிலூரைக் கைப்பற்றியது. அதுவே இவன் பெற்ற தலையாய வெற்றியாகும். இவ்வெற்றியை பெரும்புகழ் பரணரும் பாடினார் என்று ஒவையாரே பாடுகிறார். 
"இமிழ்குரல் முரசின் எழுவரோடு முரணி சென்றமர் கடந்து நின்ஆற்றல் தோற்றிய அன்றும் பாடுநர்க்கு மற்கொல் மற்றுநீ முரண்மிகு கோவலூர் நூறி நின் அரண்அடு திகிரி ஏந்திய தோளே" புறம்
இவ்வளவு சிறந்த வீரன் இறுதியில் தகடூரில் முற்றுகையிட்ட சேரமான் பெருஞ்சேரல் இரும்பொறை என்னும் மன்னனால் தகடூர்ப் போரில் வீழ்த்தப்பட்டான். அவனது மார்பகத்தே வேல் பாய அவன் மாய்ந்து வீழ்ந்த போது ஔவை கதறி அழுது பாடியிருக்கிறார். "மாற்றானின் வேல் அவன் மார்பில் மட்டுமா தைத்ததது! இல்லை இரப்போர் கைகளை துளைத்து, அவனது குடிகள் கண்ணீர் சொரிய, நல்ல புலவர்களின் நாவையும் அல்லவா துளைத்தது. இனி பாடுநர் யாரிருக்கிறார்கள்? பாடுவோருக்கு அளிப்பவர்தாம் யாரிக்கிறார்கள்? என்று.
"இரப்போர் கையுளும் போகிப்
புரப்போர் புண்கண் பாவை சோர
அஞ்சொல் நுண்தேர்ச்சிப் புலவர் நாவில்
சென்று வீழ்ந்தன்று அவன்
அருநிறத் தியங்கிய வேலே
ஆசா கெந்தை யாங்குலன் கொல்லோ
இனிப் பாடுநருமில்லை
பாடுநர்க்கு ஒன்றீகுநருமில்லை" புறம்


என்னும் ஔவையின் பாடல் யார் உள்ளத்தைத் தான் தொடாது? அவனது உடல் தீயில் இடப்பட்டது. அவனுக்கு நடுகல் எடுத்து வணங்கினர். இம்மாபெரும் புகழ் படைத்த அதியமான் நெடுமான் அஞ்சியைப் பற்றிய பாடல்கள் சங்க இலக்கியங்களில் உளவாகின்றனவே இவை அனைத்தும் உண்மையானவையா? அன்றிக் கற்பனையில் தோன்றிய புனைந்துரைகளா? உண்மையாயின் அவன் எப்பொழுது வாழ்ந்தான்? என்ற கேள்விகள் எழுகின்றன. ஒரு சிலர் சங்கப் பாடல்கள் புனைந்துரைப்பாடல்கள் என்பர். 
இன்னும் சிலர் சங்க கால இலக்கியங்கள் கி.பி. எட்டாம் நூற்றாண்டைச் சார்ந்தவை என்பர். கிறிஸ்துவுக்கும் 700 ஆண்டுகட்கும் முற்பட்டவை என்போரும் உண்டு. இவ்வாறு முரண்பாடுள்ள கருத்துகள் ஓய ஏதாவது சான்று கிடைக்காதா என்று ஏங்கும் நெஞ்சங்களும் உண்டு.
முதன் முதலில் புகளூர் ஆர்நாட்டார் மலைக்கல்வெட்டில் மூன்று சேரர் தலைமுறையைக் குறிக்கும் கல்வெட்டைப் படித்து சங்க இலக்கியத்தில் குறிக்கப்பட்டுள்ள அரசர்களே கல்வெட்டில் குறிக்கப் பெறுபவர். இதிலிருந்து சங்க இலக்கியத்தின் காலத்தை கணிக்க முடியும் என்று உலகுக்கு வெளிக்காட்டியவர் திரு. ஐராவதம் மகாதேவன் அவர்கள் ஆகும். அவ்வளவு ஆதாரத்துடன் அவர் கூறியும் அதையும் நம்பாத பேர்வழிகள் நம்மிடையே உண்டு. எழுதியோரும் உண்டு. அந்த நிலையில் ஜம்பையில் இப்பொழுது கிடைத்துள்ள அதியமான் நெடுமான் அஞ்சியின் கல்வெட்டு சங்க இலக்கியத்தில் கூறியுள்ள அரசர்களும், தலைவர்களும், வாழ்ந்து வீரம் விளைத்து குடிகளைத் காத்து வரலாறு படைத்தவர்களே என ஐயம் திரிபற, ஆணித்தரமாக ஆதாரச்சான்றுடன் எடுத்துக் கூறுகிறது என்பதாலேயே இக்கல்வெட்டு சிறப்புடையது. 
இக்கல்வெட்டின் முன்நின்றபோது சங்க இலக்கியமே எம்கண் முன் நின்றது. எப்பேர்ப்பட்ட வரலாறு படைத்த பெருமகனின் கல்வெட்டு என்பதால் தான் ஆனந்த மேலிட்டில் திளைத்தோம் என்று கூறினேன். அதுவும் அவன் ஆட்சியிலே வேறு யாரோ கொடுத்தது அல்ல. அதியமான் நெடுமான் அஞ்சியே கொடுத்தது. அதுமட்டுமல்ல தகடூரைத் தலைநகராகக் கொண்டு ஆண்ட அவன் திருக்கோயிலூர் மலையமான் திருமுடிக்காரியை வென்றான் எனச் சங்க பாடல் கூறிற்று என்று பார்த்தோம். ஔவையும், பரணரும் அவனது திருக்கோயிலூர் வெற்றியைப் பாடினார்கள் என்றால் என்ன சிறப்பு! அந்த திருக்கோயிலூருக்கு மிக அருகிலேயே இந்தக் கல்வெட்டு இருக்கிறது என்றால் அதியமான் திருக்கோயிலூரை வென்றபோது இந்தப் பாளியை ஏற்படுத்தி கல்வெட்டைப் பொறித்திருக்கிறான் என்பது தெளிவல்லவா! அவன் திருக்கோயிலூரை எறிந்ததும் உண்மை, ஒளவையும் பரணரும் பாடியதும் உண்மை என்பதற்கு இதைக் காட்டிலும் வேறு சான்று என்ன வேண்டும். அதியன் சிவனடியை வணங்கிய போதும், அவன் எவ்வாறு எல்லாச் சமயங்களையும் போற்றியிருக்கிறான் என்பதும் தெளிவாகிறது. அது மட்டும் தானா கல்வெட்டு "அஞ்சி ஈத்த பாளி" என்கிறது ஈதல் கொடுத்தல் என்னும் பொருளில் ஈத்த என்ற சொல் அப்படியே சங்கப் பாடலில் அதுவும் அதியமானைப் பற்றிய பாடலிலேயே பயன்பட்டுள்ளது. "ஆதல் நின்னகத்து அடக்கிச் சாதல் நீங்க எமக்கு ஈத்தனையே" என்று கூறும் ஒளவையின் பாடல்.
தமிழக வரலாற்றுக்கு மட்டும் இக்கல்வெட்டு அரும்செய்திகளை அளித்துள்ளது என்று எண்ணிவிடக் கூடாது. இந்திய வரலாற்றுக்கே மிகச் சிறந்த செய்தியை அளித்துள்ளது இக்கல்வெட்டு. அதியனை "ஸதியபுதோ அதியன் நெடுமான் அஞ்சி" என்று அழைக்கிறது. 
இந்தியாவின் மிகச் சிறந்த அரசனாகத் திகழ்ந்தவன் மெளரியப் பேரரசன் அசோகன் கி.மு. மூன்றாம் நூற்றாண்டில் வாழ்ந்த அப்பெருமன்னன் தனது கல்வெட்டுகளில் சோழர், பாண்டியர், கேரளபுத்ரர், ஸத்யபுத்ரர் ஆகியோரைக் குறிக்கிறான். இவர்களது நாடுகள் அவனது ஆட்சிக்கு உட்பட்டவை அல்ல. தனி ஆட்சி நடத்தியவை. அங்கெல்லாம் பெளத்த தருமம் திகழ அவன் வகை செய்தான். 
அசோகன் குறிக்கும் ஸத்யபுத்ரர் யார் என்று இது வரை தெளிவாகத் தெரியவில்லை. சங்க இலக்கியங்களில் குறிக்கப்பெறும் வாய் மொழிக் கோசர் என்பவராய் இருத்தல் கூடும் எனச் சிலர் கூறினர். காஞ்சிபுரத்தை தலைநகராகக் கொண்டு ஆண்டவர்களாயிருக்கக் கூடும் என்று சிலர் கருதினார். மகாராஷ்டிரத்தில் ஸத்புத்ரர் என்போர் உண்டு. அவர்களாயிருக்கக் கூடும் என்போரும் உண்டு. ஸத்யமங்கலம் இவர் பெயரால் வந்தது என்றனர் சிலர். ஸதியபுதோ என்பவர் அதியமான்களாக இருக்கக்கூடும் என்று ஊகித்தவர்களும் உண்டு. இப்பொழுது கிடைத்துள்ள இக் கல்வெட்டு அசோகன் கூறும் ஸத்யபுத்ரர்கள் அதியமான்கள் தாம் எனத் திட்டவட்டமாக தெளிவாக்கிவிட்டது. அதியனை பொய்யா எழினி (சத்யபுத்ரர்) எனப்புறம் கூறும்.
  எவ்வளவு சிறப்பான கல்வெட்டுப் பாருங்கள்! 
ஓரே வரியுள்ள இக் கல்வெட்டுத்தான் எவ்வளவு செய்திகளை வரலாற்றுக்கு அள்ளி அள்ளி வீசுகிறது. இந்தக் கல்வெட்டின் முன் நின்றபோது அதியமான் நெடுமான் அஞ்சியே நம் முன் உயிர் பெற்று நிற்பது போன்ற ஒரு பிரமை. அவனைப் பாடிய ஔவை, பரணர், கபிலர், மாமூலனார், நத்தத்தனார், அரிசில்கிழார், பெருஞ்சித்தனார் போன்ற ஈடிலாப் புகழ் பெற்ற புலவர்கள் இக்கல்வெட்டு எழுதிய போது வாழ்ந்தவர்கள், கண்முன் நிற்பர். ஓரி, காரி, குமணன், பேகன், போன்ற வள்ளல்களும், கரிகால் பெருவளத்தான், இராச சூயம் வேட்ட பெருநற்கிள்ளி, எனும் சோழ மன்னர்களும் செல்வக்கடுங்கோ, சேரமான் தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை போன்ற சேரப் பேரரசர்களும், பாண்டியன் கானப்பேர் தந்த உக்கிரப் பெருவழுதி, தலையாலங்கானத்துப் பாண்டியன் நெடுஞ்செழியன் ஆகியோரும் வாழ்ந்த காலத்தில் இக் கல்வெட்டு பொறிக்கப்பட்டிருக்கிறது என்று அறியும் போது யாம் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்.



1 comment:

கார்மான் said...

அதியமான் தமிழகத்தின் தென்பகுதியினர் அல்லவா...அவர்கள் நடு நாட்டிற்கு எப்போது, ஏன் வந்தார்கள்.