தாராசுரத்தில் அரிய சோழர் கால நாட்டியச் சிற்பம்

First Published : 13 Sep 2009 10:36:12 AM IST
thanks to dinamani news 
தஞ்சாவூர், செப். 12: தாராசுரம் ஐராவதீசுவரர் கோயிலில் அரிய சோழர் கால நாட்டியச் சிற்பம் (படம்) கண்டறியப்பட்டுள்ளது.  இதுகுறித்து கல்வெட்டு ஆராய்ச்சியாளர் குடவாயில் பாலசுப்பிரமணியன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:  கோயிலிலுள்ள திருமண்டபத் தூண் ஒன்றில் நங்கை ஒருத்தி, தான் விருதாகப் பெற்ற தலைக்கோலைத் தலையில் தாங்கி ஆடும் அரிய காட்சிச் சிற்பம் கண்டறியப்பட்டது.  நாட்டியக் கலையை முழுமையாகக் கற்றறிந்த பெண் அரங்கேற்றம் செய்யும் அரங்க மேடைக்கு தலைக்கோல் தானம் என இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தில் குறிப்பிட்டுள்ளார். அந்நாளில் போர் நிகழும்போது பகைவர்கள் தோற்று, புறமுதுகிட்டு ஓடும்போது விட்டுச் செல்லும் கொற்றக் கொடையின் மரக்காம்புக்கழி அல்லது பகை மன்னர்களின் நகரங்களுக்குப் பாதுகாப்பாக விளங்குகின்ற காடுகளில் விளைந்த மூங்கில் கழி ஆகியவற்றை வெட்டி எடுத்து வந்து, அதில் தங்கத் தகடு போர்த்தி, நவமணிகளைப் பதித்து, பின்பு புனித நதிகளின் நீரால் பூஜை செய்து அக்கோயிலுக்கு "தலைக்கோல்' என பெயரிடப்படும். பின்னர் அரசனின் பட்டத்து யானை மீது ஏற்றி நகர் வலம் வந்து நிறைவாக நடன மேடைமீது வைத்து மலர் தூவி வழிபடுவர். நாட்டிய அரங்கேற்றம் முடிந்தபிறகு, அந்நங்கையின் ஆடல் வல்லுநர்களால் அங்கீகரிக்கப் பெற்ற அப்பெண்ணின் கையில் அங்குள்ள தலைக் கோலை அளித்து அவளுக்குத் "தலைக்கோலி' என்ற விருதையும் வழங்குவர்.  சிலப்பதிகாரத்தில் மாதவி தலைக்கோல் விருது பெற்ற வரலாறு குறிக்கப்பட்டுள்ளது. பின்பு சோழப் பேரரசர்கள் காலத்தில் பல நாட்டிய நங்கையர்களுக்கு இந்தப் பட்டம் அளிக்கப்பட்டது. 
 
திருவாரூர் கோயில் உள்ளிட்ட பல கோயில் கல்வெட்டுகளில் இது கூறப்பட்டுள்ளது.  தாராசுரம் சிற்பத்தில் நவமணிகள் பதிக்கப்பெற்ற தலைக்கோலை வலது கையால் பிடித்த வண்ணம் தலையால் தாங்கிப் பேரழகோடு நங்கை ஆடும் காட்சியை நாம் காணலாம்.    இது பண்டைய தமிழ்நாட்டு நாட்டிய மரபின் காட்சி முத்திரையாக விளங்குகிறது என்றார் குடவாயில் பாலசுப்பிரமணியன்.

No comments: