பெரியகோயில் ஓவியத்தில் தஞ்சை நால்வர்

தஞ்சாவூர், டிச. 28:   தஞ்சாவூர் பெரியகோயில் அம்மன் சன்னதியின் முன் மண்டபக் கூரையில் காணப்படும் புராண ஓவியத் தொகுப்பில், தஞ்சையைச் சேர்ந்த நால்வர் நாட்டியமாடும் பெண்ணுக்கு நட்டுவாங்கம் சொல்லும் அரிய ஓவியக் காட்சி இடம் பெற்றுள்ளது (படம்).
    இதுகுறித்து வரலாற்று ஆய்வாளர் குடவாயில் பாலசுப்பிரமணியன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
    தற்போது தமிழகத்தின் தலைசிறந்த நாட்டிய விற்பன்னர்களில் பெரும்பாலானவர்கள் பின்பற்றும் நாட்டிய மரபு, சுமார் 180 ஆண்டுகளுக்கு முன்பு தஞ்சை நால்வர் என அழைக்கப்படும் நான்கு சகோதரர்கள் வகுத்த நாட்டிய நெறிமுறைகளேயாகும்.
    தஞ்சாவூர் சுப்பராய நட்டுவனார், பரமானந்தம் அம்மையார் தம்பதிக்கு, சின்னையா (1802), பொன்னையா (1804), சிவானந்தம் (1808), வடிவேலு (1810) ஆகிய நால்வரும் மகன்களாகப் பிறந்தனர்.
    இவர்கள், தஞ்சை சரபோஜி மன்னர் மற்றும் சிவாஜி ஆகியோர் காலத்தில் தஞ்சாவூர் பெருவுடையார் கோயிலில் நாட்டிய ஆசான்களாக பணிபுரிந்ததோடு, பரதநாட்டியம், ஹிந்துஸ்தானி ஆகியவற்றை கற்பித்தனர். மேலும், அக்கோயிலின் நாட்டிய உரிமையைப் பெற்றவர்களாகவும் திகழ்ந்தனர்.
     பின்னாளில் இவர்களில், வடிவேலு திருவனந்தபுரம் சுவாதித் திருநாள் மகாராஜாவிடமும், சின்னையா, மைசூர் சாமராஜ உடையார் சமஸ்தானத்திலும் அரசவைக் கலைஞர்களாக விளங்கினர்.
   இவர்கள் நால்வரும் நவசந்தி கவுத்துவம் என்ற கோயில் ஆடல் மரபை உருவாக்கிப் புகழ் பெற்றனர். பல சாகித்தியங்களையும் புனைந்தனர். இவர்களில் சிவானந்த நட்டுவனார் தமிழில் கையொப்பமிட்டு எழுதிய மோடி ஆவணம் ஒன்று சரஸ்வதி மகாலில் உள்ளது.
    இவர்கள் பெரியகோயிலில் பணிபுரிந்த போது, அம்மன் மண்டபத்து உள்கூரையில் தக்கன் யாகம் செய்த புராண வரலாறும், தேவி மகாத்மியமும் தொடர் ஓவியங்களாகத் தீட்டப் பெற்றன. அப்போது அந்த ஓவியர்தான், கோயிலில் கண்ட தஞ்சை நால்வர் நடனம் நிகழ்த்தும் காட்சி ஒன்றை புராணக் காட்சிகளுக்கு இடையே ஓவியமாகத் தீட்டியுள்ளார்.
    பொதுவாக நாயக்கர், மராட்டியர், சேதுபதி மன்னர்கள் காலத்து புராண ஒவியக் காட்சிகளில் ஓவியனின் சமகாலத்து முக்கியஸ்தர்களின் ஓவியங்களையோ அல்லது விழாக் காட்சிகளையோ படைப்பது வழக்கம். திருவாரூர், கோனேரிராஜபுரம், ராமநாதபுரம், மதுரை ஆகிய இடங்களில் இத்தகைய மரபைக் காண முடியும் என்றார் அவர்.
© Copyright 2008 Dinamani

No comments: