திங்கள், ஏப்ரல் 04, 2005


நாட்டார் ஐயா


அண்மையில் ந.மு.வேங்கடசாமி நாட்டார் அவர்களின் படைப்புகளை நாட்டுடைமையாக்குவதாகத் தமிழக அரசு அறிவித்தது. இதன் பொருட்டு அவரின் குடும்பத்தாருக்கு ரூ. 5 லட்சம் பரிவுத் தொகையாக அளிக்கப்பெற்றது. இதே தருணத்தில் ந.பிச்சமூர்த்தி, க.நா.சு. ஆகியோரின் படைப்புகளும் நாட்டுடைமை ஆயின.
இவரைப் பற்றி இவரின் மகன் வே. நடராஜன் எழுதிய நாட்டார் ஐயா என்ற நூல், படிக்கக் கிடைத்தது. இதனைத் திருநெல்வேலி தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் (சுருக்கமாக ‘கழகம்’) வெளியிட்டுள்ளது. (முதல் பதிப்பு 1998, பக்- 277, விலை- ரூ.60.00)
ஒரே ஒரு பிரதிதான் உள்ளது. எனவே உடனே திருப்பிக் கொடுத்துவிடவேண்டும் எனப் பதிப்பாளர் முத்துக்குமாரசுவாமி கூறியிருந்தார். எனவே, அதைத் திருப்பிக் கொடுக்கும் முன் ஒரு முறை படித்துவிட வேண்டும் என்ற உந்துதல் பிறந்தது.
அக்காலத் தமிழ் நடையில் நூல் உள்ளது. வே. நடராஜன் , இடையிடையே தன் அநுபவங்களையும் கலந்தே எழுதியுள்ளார். எனினும் நூறு ஆண்டுகளுக்கு முந்தைய நிலவரங்களை அறிந்துகொள்ள இந்நூல் பெரிதும் உதவும்.
நாட்டார் என்பது, கள்ளர் மரபில் வந்தவர்களின் பட்டப் பெயர். கள்ளர் என்பவர், பல்லவரின் ஒரு கிளை. தொண்டை நாட்டினின்றும் சோழ பாண்டிய நாடுகளில் குடியேறி அரையர் என்னும் பெயருடன் ஆட்சி புரிந்து வந்தனர். பின்னர் சோழர் குடி முதலியனவும் இம்மரபில் கலந்துவிட்டது. (பக்-12)
நாட்டார், கள்ளர் சரித்திரம் என்ற ஆய்வு நூலை எழுதியுள்ளமை குறிப்பித்தக்கது. உ.வே.சா., இந்நூலை மிகவும் பாராட்டியிருக்கிறார். இதனைக் கல்லூரி மாணவர்களுக்குப் பாடநூலாக வைக்கவும் பரிந்துரைத்துள்ளார். மாண்புமிகு மு. கருணாநிதி, தன் தென்பாண்டிச் சிங்கம் நூலுக்குக் கள்ளர் சரித்திரத்தைத் துணையாகக் கொண்டுள்ளார். ‘தமிழ்கூறும் நல்லுலகத்தாரால் நாட்டார் ஐயா என்று அன்புடன் அழைக்கப்பெற்ற திரு. ந.மு.வே, நாட்டார் ஐயா அவர்களின் கள்ளர் சரித்திரத்தின் துணைகொண்டு இந்நூலை எழுதத் தொடங்குகிறேன்’ என்று முன்னுரையில் எழுதியுள்ளார்.
வேளிர் வரலாற்றின் ஆராய்ச்சி (1915), நக்கீரர் (1919), கபிலர் (1921), கள்ளர் சரித்திரம் (1923), கண்ணகி வரலாறும் கற்பு மாண்பும் (1926), சோழர் சரித்திரம் (1928), ஆகியன நாட்டாரின் நூல்கள். கட்டுரைத் திரட்டு I என்ற நூலும் வெளிவந்துள்ளது. சில செய்யுள்களும் இயற்றியுள்ளார்.
இவை தவிர, பண்டைய இலக்கியங்கள் பலவற்றுக்கு உரை வரைந்துள்ளார். கீழ்க்கணக்கு நூல்களில் இன்னா நாற்பது, களவழி நாற்பது, கார் நாற்பது என்பவற்றிற்கும் ஆத்திசூடி, கொன்றை வேந்தன், வெற்றிவேற்கை, மூதுரை, நல்வழி, நன்னெறி என்னும் பிற்கால நீதி நூல்களுக்கும் நாட்டார், திருந்திய முறையில் உரையும் முகவுரையும் எழுதியுள்ளார்.
அ.மு.சரவண முதலியாரைத் துணையாகக் கொண்டு, திருவிளையாடற்புராணத்திற்கு உரை எழுதியுள்ளார். சிலப்பதிகாரம், அகநானூறு, மணிமேகலை ஆகியவற்றுக்கும் நாட்டார், சிறந்த உரை எழுதியுள்ளார்.
திருவருட் கல்லூரி என்ற பெயரில் ஒரு கல்லூரியைத் தொடங்க நாட்டார் முயன்றுள்ளார். பின்னர் தமிழ்ப் பல்கலைக்கழகம் தொடங்கும் முயற்சியிலும் இவருக்குப் பங்கு உண்டு. கல்லூரி, பல்கலை இரண்டின் தேவையையும் வலியுறுத்தி, அறிக்கைகளை நாட்டார் உருவாக்கியுள்ளார். தமிழ்ப் பல்கலைக்கழகம் தோன்றவேண்டும் என்ற எண்ணத்தை, மாண்புமிகு எம்.ஜி. இராமச்சந்திரன் 1981ஆம் ஆண்டு நிறைவேற்றினார்.
தமிழ் மொழி வளர்ச்சிக்கு வேற்று மொழிச் சொற்களை அப்படியே பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று பலர் இக்காலத்தைப் போன்றே அக்காலத்திலும் கூறியுள்ளனர். இதைக் குறித்து நாட்டார், தம் கருத்தைத் தெளிவாக எடுத்து வைத்துள்ளார்.
*********
''ஒருவனுடைய குடும்ப வாழ்க்கையில் எதிர்பாராத வகையில் மிகுந்த பொருட் பற்றாக்குறை ஏற்படுவதாக வைத்துக்கொள்வோம். பற்றாக்குறையைப் போக்க உடனே நண்பர்களிடம் கடன் வாங்கிச் சமாளிக்கிறோம். நெருக்கடி நேரத்தில் கடன் வாங்குவதில் தவறில்லை. மதிப்புடனும் மானத்துடனும் வாழவேண்டும் என்று கருதுகிற ஒரு நன்மகன் நெருக்கடி நேரத்தில் கடன் வாங்கியதற்காக நன்றாக உழைத்து அதனால் கிட்டிய பொருளைக் கொண்டு வாங்கிய கடனைத் திருப்பிக் கொடுப்பான். எதிர்காலத்தில் நெருக்கடி வந்தாலும் கடன் வாங்கத் தேவையில்லாதபடி பொருளாதார வளமுடையவனாகத் தன்னை உயர்த்திக்கொள்வான்.
சான்றோன் ஒருவன் தன் குடும்ப வாழ்க்கையில் மேற்கொள்ளும் இத்தகைய நடைமுறையையே மொழி வளர்ச்சியிலும் பின்பற்ற வேண்டும். அறிவியல் நூல்களைத் தமிழில் மொழிபெயர்க்கும் போது அந்நூல்களில் காணப்படும் கலைச் சொற்களுக்கு உரிய பொருளுடைய சொற்கள் தமிழில் உள்ளனவா என்று தேடிக் கண்டுபிடிக்க வேண்டும். அவை போதாவிடத்து தமிழில் உள்ள வேர்ச் சொற்களிலிருந்து புதிய சொற்களைப் படைத்துக்கொள்ள வேண்டும்.
புதிய சொற்களைக் கண்டுபிடிக்கக் காலதாமதம் ஆகும்போது வேற்றுமொழிச் சொற்களையும் தமிழின் ஒலியியல் இயல்புக்கு ஏற்ப திரித்தே வழங்குதல் வேண்டும். கல்வியிற் பெரியவராகிய கம்பர் இலக்குவன், வீடணன் என்றிவ்வாறாக வடசொல் உருவினைத் தமிழியல்புக்கு ஏற்ப மாற்றியுள்ளமை காண்க. கிறித்துவ வேத புத்தகத்தை மொழிபெயர்த்தோர், இயேசு, யோவான், யாக்கோபு என்றிங்ஙனம் தமிழியல்புக்கு ஏற்ப சொற்களைத் திரித்தமையால் அதன் பயிற்சிக்குக் குறைவுண்டாயிற்றில்லை. ஒவ்வொரு மொழியிலும் இவ்வியல்பு காணப்படும். ஆகவே, பிற மொழிகளில் உள்ளவாறே அச்சொற்களைத் தமிழில் வழங்க வேண்டுமென்பது நேர்மையாகாது.''
***********
நாட்டாரின் கருத்து, இன்றைக்கும் தேவைப்படுவது. தமிழின் தூய்மையைக் காக்கும் வரையே அதன் உயிர் பொலிவுறும். அப்படியே வேற்றுச் சொல் தேவையெனினும் கூடிய விரைவில் தமிழ்ச் சொற்களைக் கண்டுபிடித்து, புழக்கத்திற்குக் கொணர்வது நம் அனைவரின் கடமை.
இங்கு, நாட்டாரின் வரலாற்றினைச் சுருக்கமாகக் காண்போம்.
12-4-1884 அன்று நாட்டார், தஞ்சை மாவட்டத்தில் நடுக்காவேரி என்ற ஊரில் பிறந்தார். தந்தை, முத்துச்சாமி நாட்டார். தாயார், தையலம்மாள். நாட்டாருக்கு முதலில் சிவப்பிரகாசம் எனப் பெயரிட்டனர். இளவயதில் இவருக்குத் தொடையின் மேற்புறத்தில் ஒரு கட்டி உண்டாகி வருத்தியது. அதனால் ஒரு குறவனைக் கொண்டு சூடு போட்டு ஆற்றி முடி எடுப்பதாக வேங்கடப் பெருமானை வேண்டிக்கொண்டு பெயரையும் வேங்கடசாமி என மாற்றினர்.
தொடக்கக் கல்வி வரை பள்ளியில் கற்ற இவர், பிறகு வீட்டில் இருந்தவாறு தாமே தமிழ் கற்கத் தொடங்கினார். பின்னர் மதுரைத் தமிழ்ச் சங்கம், மூன்று தேர்வுகளை நடத்தும் விவரம் அறிந்தார். அவற்றை எழுத விழைந்தார்.
1901ஆம் ஆண்டு மே மாதம் 24ஆம் தேதி மதுரைத் தமிழ்ச் சங்கத்தை வள்ளல் பாண்டித்துரைத் தேவர் நிறுவினார். அச்சங்கத்தின் கீழ் பாண்டியன் புத்தகசாலை என்னும் நூல் நிலையமும் சேதுபதி செந்தமிழ்க் கலாசாலை என்னும் தமிழ்க் கல்லூரியும் செந்தமிழ் என்னும் மாத இதழும் நிறுவப்பெற்றன.
இந்தத் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் பிரவேச பண்டிதர், பால பண்டிதர், பண்டிதர் ஆகிய தனித்தமிழ்த் தேர்வுகளும் நடத்தப் பெற்றுள்ளன. ஒவ்வொரு தேர்விற்கும் இக்கலாசாலையில் இரண்டு ஆண்டுகள் படிக்கவேண்டும் என்ற விதியிருந்தது. இக்கலாசாலையில் படிக்காதோர், வெளியிலிருந்தும் தேர்வு எழுதலாம் என்ற விதிவிலக்கு இருந்தது.அதைப் பயன்படுத்தி நாட்டார் திருச்சியிலிருந்து தேர்வு எழுதினார்.
ஆண்டுக்கு ஒரு தேர்வு எழுதி மூன்றே ஆண்டுகளில் மூன்று தேர்வுகளிலும் முதல் மதிப்பெண்ணில் தேர்ச்சி அடைந்துள்ளார். அதன் பிறகு இவர், ‘பண்டித’ ந.மு.வேங்கடசாமி நாட்டார் என அழைக்கப்பெற்றுள்ளார்.
திருச்சி எஸ்.பி.ஜி.கல்லூரியில் தமிழாசிரியராகப் பணிபுரிந்தார். பின்னர் கோவையில் பணியாற்றிவிட்டு, மீண்டும் எஸ்.பி.ஜி. கல்லூரியில் தலைமைத் தமிழாசிரியராகப் பணிபுரிந்தார். திருச்சியில் பணியாற்றிய பின், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் ஆசிரியர் பணியில் சேர்ந்துள்ளார். பின்னர் கரந்தைப் புலவர் கல்லூரியின் முதல்வராகவும பணிபுரிந்துள்ளார்.
1912இல் மகாகவி சுப்பிரமணிய பாரதியார், நாட்டாரின் வீட்டுக்கு வந்துள்ளார். சிலப்பதிகாரத்தில் சில இடங்களில் பொருள் விளங்கவில்லை என்று கேட்டு விளங்கிக்கொண்டார். தொல்காப்பியத்திலும் சில ஐயங்களைத் தீர்த்துக்கொண்டார்.
அ.ச.ஞானசம்பந்தன் அவர்களின் தந்தையார் அ.மு.சரவண முதலியார், நாட்டாரின் நண்பர். இருவரும் இணைந்து கழகத்தின் வேண்டுகோளின் பேரில் திருவிளையாடற்புராணத்திற்கு உரை எழுதியுள்ளனர். (இந்நூலாசிரியர் வே. நடராஜனும் அ.ச.ஞானசம்பந்தனும் நெருங்கிய நண்பர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.)
சென்னை மாகாணத் தமிழ்ச் சங்கத்தார், 1940ஆம் ஆண்டு நாட்டாருக்கு நாவலர் என்னும் பட்டம் அளித்துள்ளனர்.
இவருக்கு 60 ஆண்டு நிறைவதை ஒட்டி இவருக்கு மணிவிழா ஏற்பாடுகள் செய்துள்ளனர். அதற்கென மணிவிழாக் குழு ஒன்றும் அமைத்துள்ளனர். அதைக் கேள்வியுற்ற நாட்டார், ‘மணிவிழாக் குழு அமைத்திருக்கிறார்கள். கா.நமச்சிவாய முதலியார் போல எப்படி ஆகப் போகிறதோ’ எனக் கூறியிருக்கிறார். பெரும்புலவர் கா.நமச்சிவாய முதலியார், தம் மணிவிழா முடிவதற்கு முன்னரே மறைந்துவிட்டார்.
நாட்டாரின் மணிவிழாவை 8-5-1944 அன்று நடத்துவதாக மணிவிழாக் குழு முடிவு செய்திருந்தது. ஆனால், 28-3-1944 அன்றே நாட்டார் மறைந்தார். அவர் மணிவிழாவுக்காக வசூலித்த 1712-4-0(ரூ-அணா-பைசா) தொகையை அவருடைய நினைவு விழாவுக்குப் பயன்படுத்தினர்.
அவர் சமாதி வைத்த இடத்தில் ஒரு கோயில் எழுப்பியுள்ளனர். ( 1944ஆம் ஆண்டு ஒரு மூட்டை சிமெண்டு விலை 3 ரூபாய் 12 அணா. 1000 செங்கற்கள் விலை ரூ.18. கொத்தனார் கூலி ரூ.5.)
1984இல் நாட்டாரின் நூற்றாண்டு விழா கொண்டாடப்பெற்றது. தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் துறை ரூ.25ஆயிரம் செலவு செய்து 21-4-84 அன்றும் 22-4-84 அன்றும் கரந்தைத் தமிழ்ச்சங்க வளாகத்தில் தமிழவேள் உமாமகேசுவரனார் நூற்றாண்டையும் (ஓர் ஆண்டுக்கு முன்பே நடந்திருக்க வேண்டியது) நாவலர் வேங்கடசாமி நாட்டார் நூற்றாண்டையும் நடத்தியது.
நாட்டாரின் கனவுகளில் ஒன்றான திருவருள் கல்லூரியை 1992ஆம் ஆண்டு பி.விருத்தாசலம் தொடங்கினார். இதற்குப் பாரதிதாசன் பல்கலைக்கழகம் இசைவு வழங்கியுள்ளது. இதில் தேர்ச்சியடைந்தோர், இளமுனைவர், முனைவர் பட்டங்களுக்குத் தகுதியுடையவர் என்று இப்பல்கலை தெரிவித்துள்ளது.
தமிழில் பெரும்புலமை பெற்றவர்கள் இக்காலத்தில் மிகவும் அருகிவிட்டார்கள். பண்டைய நூல்கள் பலவற்றைப் பெயரளவில் அறிந்திருப்பதே இப்பொழுது வியப்பைத் தருவதாய் உள்ளது. ஆயினும் நாட்டார் அவர்கள், தமிழின் பழைய நூல்களை மிகவும் ஆழ்ந்து கற்றுள்ளார். சிக்கலான பாடல்களுக்கும் பொருளுணர்த்தியுள்ளார். முக்கியமாகத் தனி ஆசிரியரிடம் கல்வி பயிலாமல் தாமே முயன்று தமிழ் பயின்றுள்ளார். கடும் உழைப்பாளியான இவர், எளிய வாழ்க்கை நடத்தியுள்ளார். நாள்தோறும் நாட்குறிப்பும் எழுதியுள்ளார். அதில் பல முக்கிய நிகழ்வுகளைக் குறித்துள்ளார். மாணவர்களிடம் அன்புடன் பழகி, கற்றலின் மேல் ஆர்வம் மிகச் செய்துள்ளார்.
நமக்கு முந்தைய தலைமுறைகளின் வாழ்க்கையிலிருந்து நாம் கற்றுக்கொள்ள எவ்வளவோ இருக்கின்றன.
நாட்டாரின் படைப்புகளை நாட்டுடைமை ஆக்கியதன் மூலம், தமிழக அரசு ஒரு நற்பணியைச் செய்துள்ளது. இந்த வாய்ப்பினைப் பயன்படுத்திக்கொண்டு பதிப்பக வல்லோர், நாட்டாரின் படைப்புகளை மக்கள் அறியச் செய்திடல் வேண்டும். நாட்டாரின் உழைப்பையும் உயர் கருத்துகளையும் தமிழ்ச் சமுதாயம் சிந்திக்க வேண்டும்.

No comments: