0 c
ஒரு ஜாயன்வாலாபாக்!

First Published : 01 Jan 2012 12:00:00 AM IST


ஊர் பிரமுகர்களுடன் சா. கந்தசாமி, ரோகிணி கந்தசாமி
1911-ஆம் ஆண்டில் சென்னை, மாகாணத்தில் குற்றப் பரம்பரைச் சட்டம் அமுல் செய்யப்பட்டது. அதன்படி பிரமலை கள்ளர், மறவர், வலையர், கேப்மாரி... எனச் சில சாதியினர் குற்றப் பரம்பரையினர் என அறிவிக்கப்பட்டனர்.1920-ஆம் ஆண்டில் குற்றப் பரம்பரைச் சட்டத்தின்படி பிரமலை கள்ளர்களிடம் கைரேகை எடுப்பதற்காக போலீஸ் முற்பட்டது. அதனை அவர்கள் தீவிரமாக எதிர்த்துக் கிளர்ச்சி செய்தார்கள். போலீஸôர் துப்பாக்கி சூடு நடத்தி ஒரு பெண்மணி உட்பட பதினாறு பேர்களைக் கொன்றனர்.தமிழ்நாட்டில் குற்றப் பரம்பரைச் சட்டம் அமலுக்கு வந்த நூற்றாண்டில் அதனை எதிர்த்து உயிர்த் தியாகம் புரிந்தவர்களின் நினைவிடத்திற்குச் சென்று எழுத்தாளர் சா.கந்தசாமி, அவர் துணைவியார் ரோகிணி, பேராசிரியர் சுபாசு ஆகியோர் அஞ்சலி செலுத்தினார்கள்.குற்றப் பரம்பரைச் சட்டத்தை எதிர்த்து பெருங்காம நல்லூரில் நடந்த சம்பவம் குறித்து இங்கே சா.கந்தசாமியுடன் நிகழ்த்திய நேர்காணல்:* குற்றப் பரம்பரைச் சட்டம் என்றால் என்ன?19-ஆம் நூற்றாண்டில் இந்தியாவின் பெரும் பகுதி ஆங்கிலேயர்களின் ஆட்சிக்குக் கீழ் வந்துவிட்டது. விக்டோரியா, இந்தியாவின் மகாராணியாகப் பட்டம் கட்டிக் கொண்டுவிட்டார்.பள்ளிக்கூடங்களில் கல்லூரிகளில் ஆங்கில மொழி கற்பிக்கப்பட்டது. ஏராளமானவர்கள் ஆங்கிலம் படித்து ரயில்வே, தபால் தந்தி, நிர்வாகம், சட்டம், நீதி எனப் பல்வேறு துறைகளில் வேலைக்குச் சேர்ந்து சம்பளம் வாங்கிக் கொண்டு சந்தோஷமாக அடிமை வாழ்வு வாழ்ந்து கொண்டிருந்தார்கள்.ஆனால் வனப் பகுதிகளிலும் கிராமப் பகுதிகளிலும் வாழ்ந்த ஆதி, பழங்குடி மக்கள் ஆங்கிலேயர் அரசாங்கத்தை மதிக்காமல் சுதந்திரமாகத் தங்களின் பாரம்பரிய முறையில் வாழ்ந்து கொண்டிருந்தார்கள். அவர்களிடம் போரிடவும், வேட்டையாடவும் விவசாயம் செய்யவும் ஆயுதங்கள் இருந்தன. அவர்களில் பலர் அரசுக்கு எதிராகக் கலவரங்கள் செய்தார்கள். சிலர் திருட்டு, கொள்ளை, கொலைச் செயல்கள் புரிந்தார்கள். அவர்களை ஒடுக்க, சீர்திருத்த 1871-ஆம் ஆண்டில் குற்றப் பரம்பரைச் சட்டம் கொண்டு வரப்பட்டது.* குற்றப் பரம்பரைச் சட்டம் என்ன சொல்லியது?குற்றப் பரம்பரைச் சட்டத்திற்குள் கொண்டுவரப்பட்ட சாதி ஆண்கள் குறிப்பாக 16 வயதிற்கும் 60 வயதிற்கும் இடைப்பட்டவர்கள் போலீஸ் கண்காணிப்பில் இருக்கவேண்டும். அவர்களிடம் கைரேகை பதிவு செய்யப்படும். அவர்கள் மாலை 6 மணிக்கு போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்து ஆஜர் கொடுக்க வேண்டும். இரவு முழுவதும் காவல் நிலையம் முன்பாக தங்கி இருக்கவேண்டும். இரவில் குற்றம் நிகழாமல் தடுக்க அந்த முறை அவசியம் என்று அரசு கூறியது.* தமிழகத்தில் குற்றப் பரம்பரைச் சட்டம் அமல்படுத்தப்பட்டதால் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் யார்?1911-ஆம் ஆண்டில் தமிழகத்தில் குற்றப் பரம்பரைச் சட்டம் அமல்படுத்தப்பட்டது. அதில் அதிகமாகப் பாதிக்கப்பட்டவர்கள் பிரமலை கள்ளர்கள். காவல் என்பதைத் தொழிலாகக் கொண்டு இருந்தவர்களில் சிலர் திருடரானார்கள். அதனால் மொத்தமாக பிரமலை கள்ளர்களைக் குற்றப் பரம்பரைக்குள் கொண்டுவந்துவிட்டார்கள்."ஒரு திருடனுக்குப் பிறந்த குழந்தையின் ரத்தத்தில் திருட்டு உணர்வும் குற்றம் செய்யும் மனப்பான்மையும் அந்தக் குழந்தையின் மூன்று வயதிலேயே வந்துவிடுகிறது..' என்னும் ஐரோப்பிய ஆய்வுகளை வைத்துக் கொண்டு சொன்னார்கள்.தமிழ்நாட்டில் எந்தெந்த ஊர்களில் குற்றப் பரம்பரைச் சட்டத்திற்கு எதிர்ப்பு கிளம்பியது?அது அமல் செய்யப்பட்ட எல்லா ஊர்களிலும் எதிர்ப்பு இருந்தது. ஆனால் பெருங்காம நல்லூரில் பெரும் கிளர்ச்சியே நடந்தது.* பெருங்காமநல்லூரில் அப்படி என்னதான் கிளர்ச்சி நடந்தது?1920, ஏப்ரல்-3. பெருங்காமநல்லூரை ஒரு போலீஸ் படை சுற்றி வளைத்தது. ஊரில் உள்ள வயது வந்த எல்லா ஆண்களும் ரேகை வைத்து குற்றப் பரம்பரையினர் என்று பதிவு செய்து கொள்ள வேண்டுமென உத்தரவு போட்டது.பெருங்காமநல்லூர் மக்கள் உத்தரவுக்குப் பணிய மறுத்தார்கள். நாங்கள் எல்லோரும் குற்றப் பரம்பரை இல்லை. எங்களில் சிலர் திருடலாம். அதற்காக எல்லோரையும் திருடர்கள் என்று சொல்வது அரசாங்கத்திற்கே அவமானம். எந்த மனிதனும் குற்றவாளியாகப் பிறப்பது இல்லை. பிறப்பிற்கும் குற்றத்திற்கும் சம்பந்தம் கிடையாது. எனவே நாங்கள் குற்றப் பரம்பரை என்று கைரேகை வைத்துப் பதிவு செய்து கொள்ள மாட்டோம் என்று அரிவாள், கத்தி, ஈட்டியை எடுத்துக் கொண்டு போலீஸôரை எதிர்த்தார்கள். கலவரம் ஏற்பட்டது. போலீஸôர் துப்பாக்கி சூடு நடத்தினர்.  அதில் பதினாறு பேர்கள் இறந்து போனார்கள். அதில் ஒருவர் பெண். பெயர் - மாயக்கா. வயது 43. குண்டடி பட்டு உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தவர்களுக்குத் தண்ணீர் கொண்டு போய் கொடுத்தார். அவர் கூடையில் கற்கள் கொண்டு போய் கொடுத்ததாக போலீஸ் சொல்லியது. பெருங்காமநல்லூரில் துப்பாக்கிச் சூட்டில் உயிர் இழந்தவர்கள் பெயர் பெற்ற பெரிய மனிதர்கள் இல்லை. ஆனால் மனிதநேயத்தின் மகத்துவம் அறிந்தவர்கள். எந்த மனிதனும்  பிறப்பின் வழியாகக் குற்றவாளியில்லை என்பதைத் தங்கள் உயிரைக் கொடுத்தே நிலைநாட்டினார்கள்.* பெருங்காமநல்லூர் தியாகிகளுக்கு ஏதாவது நினைவு மண்டபம் இருக்கிறதா?பெருங்காமநல்லூர் தியாகிகள் அளப்பறிய தியாகம் அறியப்படாமல்தான் இருந்தது. அவர்கள் உசிலம்பட்டியில் ஒன்றாகப் புதைக்கப்பட்டார்கள். ஆனால் உண்மையான தியாகம் ஒருநாள் அறியப்படும் என்பது போல, 1981-ஆம் ஆண்டில், தமிழ்நாட்டில் விவசாயிகள் சங்கத் தலைவராக இருந்த நாராயணசாமி நாயுடு, பெருங்காமநல்லூரில் மனித உரிமைக்காக உயிர்த் தியாகம் புரிந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் முறையைத் தொடங்கிவைத்தார். அது கனலாக மக்களைப் பற்றிக் கொண்டுவிட்டது.ஊர் மக்களில் இருவர் நினைவு மண்டபம் எழுப்ப ஆறேமுக்கால் செண்ட்  நிலத்தை அன்பளிப்பாக வழங்கினார்கள். அதில் ஒரு நினைவுத் தூணில் உயிர்த்தியாகம் புரிந்த பதினாறு பேர்களின் பெயர்கள் பொறிக்கப்பட்டுள்ளன.* பெருங்காமநல்லூர் தியாகிகள் நினைவு மண்டபம் எவ்வாறு காக்கப்படுகிறது?பெருங்காமநல்லூர் தியாகிகள் நினைவுத் தூண் இருக்கும் இடம் புனிதமானது. அது ஜாலியன் வாலாபாக் படுகொலை நினைவிடம் போல காக்கப்பட வேண்டியது. எளிய சாதாரணமான மக்கள் இயல்பாக உயிர்த் தியாகம் புரிந்து மனித உரிமைகளைக் காத்த அசாதாரணமான நிகழ்வின் உச்சம். சுதந்திரம், சுயமரியாதை, மனித மாண்பு ஆகியவற்றின் குறியீடாக உள்ள அது புனிதமானது. மக்கள் விரோதமான எந்தச் சட்டத்தையும் ஏற்கமாட்டோம் அதை எதிர்த்து உயிர் துறப்போம் என்று எழுந்த மக்களின் மாண்பைச் சொல்வதாகும். ஆனால் அதில் ஒரு சமுதாய கூடம் எழுந்திருக்கிறது. இப்போது அந்த சமுதாயக் கூடத்தை நினைவு மண்டபமாக மாற்றி தியாகிகளின் வாழ்க்கைக் குறிப்பு - நூலகம் போன்றவற்றை அமைக்கலாம்.பெருங்காமநல்லூர் தியாகிகள் நினைவிடம் பொது மக்கள் மனித உரிமை, ஆர்வலர்கள் சமூகநீதிப் போராளிகள் கூடும் இடமாகவும், கருத்துப் பரிமாற்றத்திற்கான இடமாகவும் அமையவேண்டும்.1871-ஆம் ஆண்டில் ஆங்கிலேய அரசு இந்தியா முழுவதிலும் உள்ள 150 சாதிகளைக் குற்றப் பரம்பரை என்று அறிவித்தது. அதை எதிர்த்து போரிட்டு உயிர்த் தியாகம் செய்தது, மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த பிரமலைக் கள்ளர்கள்தான். அவர்களின் இடைவிடாத போராட்டத்தால் 1947-ஆம் ஆண்டில் கொடுமையான குற்றப் பரம்பரைச் சட்டம், சுதந்திரத்திற்குப் பின்னர் நீக்கப்பட்டது.பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர், ஜார்ஜ் ஜோசப், ப. ஜீவானந்தம், பி.ராமமூர்த்தி உள்பட சில தலைவர்கள் மக்களோடு சேர்ந்து குற்றப் பரம்பரைச் சட்டத்திற்கு எதிராகப்   போராடினார்கள்.
thanks to http://www.dinamani.com/edition/Story.aspx?SectionName=Kadhir&artid=530376&SectionID=146&MainSectionID=146&SEO=&Title=%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%20%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D!