0 c

ஒட்டுமொத்த உலகமே எதிர்ப்பார்த்திருந்த படம்தான் 2012. இப்போது வெளிவந்து உலகத்தையே கதிகலங்க வைத்துக்கொண்டிருக்கிறது.இப்படியொரு பேரழிவு பூமிப் பந்தைப் புரட்டிப்போட்டுவிடுமா? என்ற ஒரு மெல்லிய அச்சத்தைப் படம் பார்ப்பவர் உள்ளத்தில் விதைத்துவிட்டுப் போகிறது 2012.


உலகின் முதன் மாந்தன் தோன்றிய மண் குமரிநாடு. அதுவே தமிழரின் முதலாவது தாய்மண். அங்கு பழந்தமிழர்கள் 49 நாடுகளைக் கட்டியெழுப்பி ஆட்சி செய்தனர். குமரிக்கண்ட மாந்தன் பேசிய மொழிதான் தமிழ்.இறையனார் களவியலுரையிலும் இளம்பூரனார் தொல்காப்பிய உரையிலும் இன்னும் பிற இலக்கியங்களிலும் குமரிக்கண்டம் பற்றிய குறிப்புகள் காணக்கிடைக்கின்றன. குமரிநாடு பற்றிய வரலாற்றுக் குறிப்புகளுள் ஒன்று இது:-“முதன்முதலில் குளிர்ந்தது உலகின் மேற்பரப்பே. அந்நிலம் தமிழ் நிலமே. அப்பகுதி அப்படி முதல் நிலமாக அமையக்காரணம் உலகின் நடுக்கோட்டிற்கு அணித்தாய் இருந்தமையே. அம்முதல் நிலமே குமரிக்கண்டம். குமரிமைல ஆறுகொண்டு குமரிநாடு என்று பெயரிட்டனர். இதன் வடக்கே குமரியாறு தெற்கே பஃறுளியாறு என்பவற்றின் இடையே கீழ்மேலாக எழுநூறு காவதம் பரப்பாக நீண்டு கிடந்தது. இது நாற்பத்தொன்பது நாடுகளாகப் பிரிக்கப்பெற்றிருந்தது. ஏழ்மதுரை நாட்டுக்குத் தென்பால் இருந்த காரணத்தால் மதுரை ‘தென்மதுரை’ எனப்பட்டது. இதனை அரசிருக்கையாகக் கொண்டு ஆண்டவன் ஆழிவடிவம் பலம் நின்ற பாண்டியன் என்ற முதலாம்நிலம் தரு திருவிற்பாண்டியன்....” (தமிழ் இலக்கிய வரலாற்றுக் களஞ்சியம், தொகுதி2, ஐந்தினைப் பதிப்பகம், சென்னை. 1987.ப.1670.)“பஃறுளி ஆற்றுடன் பன்மலை அடுக்கத்துக்குமரிக் கோடும் கொடுங்கடல் கொள்ள” என்று குமரிநாட்டைப் பற்றி கூறப்பட்டுள்ள வரிகளுக்கு 2012 படமே சரியான விளக்கவுரையாக எனக்குப் பட்டது. இந்தப் படம் குமரிக்கண்ட வரலாற்றுப் பேரழிவுக்கு நல்ல பாடமாக இருக்கிறது என்பது என் கருத்து.இன்றைய இந்திய பெருநிலப்பரப்புக்குக் கீழே இருந்ததாகச் சொல்லப்படும் குமரிநாடு அல்லது குமரிக்கண்டம் அல்லது கோண்டுவானா அல்லது லெமூரியா கண்டமும் இப்படிதான் மாபெரும் பேரழிவுக்கு உள்ளானதாக வரலாற்று ஆசிரியர்கள் சொல்லுகின்றனர். அங்கு மூன்று முறை பாரிய கடற்கோள்கள் (சுனாமி) ஏற்பட்டதாகத் தமிழ் இலக்கியம் சான்று சொல்லுகிறது.
மூன்று கடல்கோள்களுள் முதலாவது கடல்கோள் கி.மு. 2387 இல் நிகழ்ந்தது. இரண்டாவது கடல்கோள் கி.மு. 504 இல் நிகழ்ந்தது. மூன்றாவது கடல்கோள் கி.மு. 306 இல் ஏற்பட்டதாக குறிப்புகள் சொல்லுகின்றன. (The Date of Tolkappiyam, Annals of Oriental Research, University of Madras, Vol.XIX part II, 1964, Reprint p. 16-17)நீங்கள் 2012 படத்தைப் பார்த்தவரா? கொஞ்சம் மெனக்கெட்டு குமரிகண்ட வரலாற்றை தேடிப் படியுங்கள். தமிழரின் வரலாறு தெளிவாகத் தெரியும்.நீங்கள் குமரிக்கண்ட வரலாற்றைப் படித்தவரா? அருகிலுள்ள பட அரங்கிற்குச் சென்று 2012 படத்தைப் பாருங்கள். தமிழரின் வரலாறு தெளிவாகப் புரியும்.பழந்தமிழரின் தாயகமாகச் சொல்லப்படும் குமரிக்கண்டம்,பழந்தமிழின் பிறப்பிடமாகக் கருதப்படும் குமரிநாடு,தொன்மை மாந்தனின் தோற்றுவாயாக நம்பப்படும் கோண்டுவானா,குரங்கினத்திலிருந்து மாந்தரினம் பரிணாமம் அடைந்த நிலமாக இருந்து கடலுக்குள் மூழ்கிப்போன லெமூரியா கண்டத்தின் வரலாற்றைத் தமிழர்கள் கண்டிப்பாக அறிந்துகொள்ள வேண்டும்.அதற்குக் கீழ்க்காணும் சில வலைமணைகள் துணையாக இருக்கும்.http://www.tamilcc.org/thamizham/ebooks/5/468/468.pdf
0 c
இஸ்லாமியப் படையெடுப்பும் இந்துப் படையெடுப்பும்.

ஆ.சிவசுப்பிரமணியன். (மதுரை பாரதி புக் ஹவுஸ்,

'இஸ்லாமியர் குறித்த வரலாற்றுத் திரிபுகள்' என்ற தலைப்பில் இக்கட்டுரையாசிரியரின் நூல் . அந்நூலிலிருந்து ஒரு பகுதியை இங்கு கட்டுரையாக இடம்பெற்றுள்ளது.) நன்றி : தட்ஸ் தமிழ் நாடாளும் மன்னனுக்குத் தேவையான ஆறு உறுப்புக்களுள் முதலாவதாகப் படையைக் குறிப்பிடுவார் வள்ளுவர். பிற்காலச் சோழர் காலத்தைச் சார்ந்த சீவகசிந்தாமணிக் காப்பியம் படையினால் விளையும் நன்மைகளைப் பின்வருமாறு குறிப்பிடுகிறது. "பொன்னின் ஆகும் பொருபடை யப்படைதன்னில் ஆகுந் தரணி தரணியிற்பின்னை யாம் பெரும்பொருள் அப்பொருள்துன்னுங் காலைத் துன்னாதன இல்லையே "(செய்யுள்: 1923)பொன் இருந்தால் போரிடும் படையைத் திரட்டலாம். படை இருந்தால் ஆட்சி கிடைக்கும். ஆட்சி கிடைத்தால் கிடைக்காதன என்று எவையும் இல்லை என்பது இச்செய்யுளின் பொருளாகும். ஆட்சிப் பரப்பை விரிவுபடுத்துவதே மன்னர்களின் குறிக்கோள். இதனால்தான் இடைக்குன்றூர்க்கிழார் என்ற கவிஞர்,"ஒருவனை ஒருவன் அடுதலும் தொலைதலும்புதுவதன்று இவ்வுலகத்து இயற்கை" (புறம் 76: 12)என்று பாடியுள்ளார். இவ்வாறு போர் என்பது மன்னர்களுக்கிடையில் மிக இயல்பாக நடைபெறும் நிகழ்வாக இருந்தது. ஆயினும், மன்னர்கள் அவர்களது படைவீரர்கள் ஆகியோருடன் இது நின்று விடவில்லை. குடிமக்களையும் பாதிக்கும் ஒன்றாகவே போர் அமைந்தது. இதைச் சங்க நூல்கள் சுட்டுகின்றன. பாண்டியன் பல்யாக சாலை முதுகுடுமிப் பெருவழுதியின் வீரச்செயல் நெட்டிமையார் என்ற புலவரால் இவ்வாறு புகழப்படுகிறது,"பகைவர் நாட்டில் தேர் செல்லும் தெருக்களைக் கழுதை பூட்டிய ஏரால் உழுது பாழ்படுத்தினாய். பறவைகள் ஒலிக்கும் புகழமைந்த வயல்களில் குதிரைகள் பூட்டிய தேரைச் செலுத்தி விளைபயிர்களை அழித்தாய்". (புறநானூறு 15). இதே மன்னனைக் காரிகிழார் என்ற புலவர் வாழ்த்தும் பொழுது,"வாடுக இறைவநின் கண்ணி யொன்னார்நாடுசுடு கமழ்புகை யெறித்தலானே" (புறம் 6)என்று வாழ்த்துகிறார். பகைவருடைய நாட்டினைச் சுட்டெரிப்பதால் எழும் புகையால் உன் தலைமலை வாடட்டும் என்பது இதன் பொருளாகும்.சோழன் கரிகால் பெருவளத்தான் பகலும் இரவும் கருதாது பகைவரது ஊரைத் தீயிட்டு அந்த ஒளியில் பகைவர்களின் புலம்பலோசையுடன் கொள்ளையிடுதலை விரும்புபவன் என்பதனை,"எல்லையும் இரவும் எண்ணாய் பகைவர்ஊர் சுடு விளக்கத் தழுவிளிக் கம்பலைக்கொள்ளை மேவலை யாகலின்"என்ற புறநானூற்றுப் பாடலால் (7) அறிகிறோம். சோழன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி பகைவரது நெல் விளையும் வயல்களைக் கொள்ளையடித்து வீடுகளைக் கொளுத்திய செயல் போற்றப்படுகின்றது.பகைவர் நாட்டை எரிக்கும் இக்கொடுஞ்செயல் அடிக்கடி நிகழ்ந்தமையால்தான் சேரமான் பாலை பாடிய பெருங்கடுங்கோ, வற்றிய பாலை நிலத்திற்கு "செருமிகு சினவேந்தன் சிவந்திறுத்த புலம்போல" என்ற உவமையைப் பயன்படுத்துகிறார்.பகைவர் நாட்டைத் தீயிட்டு அழிக்கும் கொடுமை மட்டுமல்லாது போரில் தோற்றவர்களைக் கொடூரமாகப் பழிவாங்கும் செயல்களும் நிகழ்ந்துள்ளன. நன்னன் என்ற குறுநில மன்னன் தன்னுடைய பகைவர்களை வென்ற பிறகு அவர்களின் உரிமை மகளிரின் தலையை மழித்து அக்கூந்தலைக் கயிறாகத் திரித்து, அக்கயிற்றால் அப்பகைவரின் யானையைப் பிணித்தான் (நற்றிணை 270).வேல்கெழு குட்டுவன் என்ற சேர மன்னன் பழையன் என்ற மன்னனை வென்று அவன் மனைவியாரின் கூந்தலைக் கொண்டு திரிக்கப் பெற்ற கயிற்றினால் யானைகளை வண்டியில் பூட்டி அவ்வண்டியில் வெட்டப்பட்ட பழையனது காவல் மரத்தை ஏற்றிச் சென்றான் (பதிற்றுப் பத்து 5ம் பத்து) கணைக்கால் இரும்பொறை என்ற சேர மன்னன் மூவன் என்பவனைப் போரில் வென்று அவனது பற்களையெல்லாம் பிடுங்கித் தொண்டி நகர் கோட்டைக் கதவில் பதித்தான்.மத்தி என்ற பரதவர் தலைவன் எழினி என்ற குறுநில மன்னனின் பற்களைப் பிடுங்கி தனது வெண்மணிக் கோட்டைக் கதவில் பதித்து வைத்தான். (அகம் 211).இத்தகையக் கொடுமைகள் தமிழ் மன்னர்களுக்கிடையில் நிகழ்ந்துள்ளன என்பதனையும் தமிழ் மக்களின் சொத்துக்களே அழிவுக்கு ஆளாயின என்பதனையும் நினைவிருத்திக் கொள்ளுவது அவசியம். எல்லாவற்றிற்கும் மேலாகத் தனி மனிதர்களின் நாடு விரிவாக்கும் கொள்கையால் தமிழ்ச் சமுதாயம் அவலத்திற்காளானது. இவையெல்லாம் இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன்பு நடந்த கொடுமைகள் என்றால் பதினொன்றாவது நூற்றாண்டில் படையெடுப்பின்போது நிகழ்ந்த கொடுமைகள் இவற்றை விஞ்சுவதாகவே உள்ளன.ராஜ ராஜ சோழனின் மெய் கீர்த்திகளில் அவனது வெற்றிச் சிறப்புகளில் ஒன்றாக "இரட்டைபாடியும், ஏழரை இலக்கமும் வென்று" என்ற தொடர் இடம்பெறுகிறது. ராஜ ராஜன் தன் மகன் முதலாம் இராசேந்திரனை அனுப்பி இவ்வெற்றியைப் பெற்றான்.முதலாம் இராசேந்திரன் தலைமையில் சென்ற சோழர் படை சத்யாசிரையன் என்ற மேலைச் சளுக்கர் மன்னனுடன் போரிட்டு வென்று இரட்டைபாடியைக் கைப்பற்றியது இப்போரில் இராசேந்திரன் மேற்கொண்ட பழி செயல்களை சத்தியாசிரையனின் கி.பி. ஆயிரத்தி ஏழாம் ஆண்டு காலத்திய கல்வெட்டு பின்வருமாறு குறிப்பிடுகிறது. (சாஸ்திரி 1989: 23940).நாட்டை சூறையாடி பாழ்படுத்தினான். நகரங்களைக் கொளுத்தினான். இளங்குழவிகள் அந்தணர் என்றும் பாராமல் அவர்களைக் கொன்றும் கன்னியரைக் கைப்பற்றி மனைவியராக்கினான். அந்தணச் சாதியை அழித்தும் அளவற்ற பொருள்களைக் கவர்ந்து கொண்டும் தன் நாட்டிற்குத் திரும்பினான்.இவ்வாறு சூறையாடி வந்த செல்வத்தின் ஒரு பகுதியைத் தஞ்சை பெருவுடையார் கோவிலுக்கு வழங்கினான். சத்தியாசிரயனின் கல்வெட்டுச் செய்தி குறித்து தமிழ்நாட்டின் இரு பெரும் வரலாற்றுப் பேராசிரியர்கள் பின்வருமாறு கருத்துத் தெரிவித்துள்ளனர்.(இண்) பகைவனின் கல்வெட்டில் காணப்படும் பெரும் நாச வேலைகளையும் கற்பழிப்புகளையும் சோழ இளவரசன் ராஜேந்திரன் செய்திருக்கக் கூடுமா? என்ற வினா எழுந்தாலும் . . . (நீலகண்ட சாஸ்திரி 1989: 240).(இண்) பகையரசன் நாட்டிய கல்வெட்டாகையால் இது கூறும் செய்திகளை உண்மையென்று நம்பலாகாது. நீதியிலும், நேர்மையிலும் சிவத்தொண்டிலும் மேம்பட்டிருந்த சோழ மன்னனின் படைகள் இத்தகையக் கொடுமைகளை மக்களுக்கு இழைத்திருக்க முடியாது. (கே.கே. பிள்ளை 1981: 272) இராஜேந்திரன் இத்தகைய செயல்களைச் செய்திருக்கக்கூடுமா? என்று சாஸ்திரியார் ஐயப்பட, கே.கே. பிள்ளையோ அப்படிச் செய்திருக்க முடியாது என்று சான்றிதழ் வழங்கிவிடுகிறார்.இராஜேந்திரனின் கரந்தைச் செப்பேட்டின் மெய்கீர்த்திப் பகுதி " . . . யானைகள், குதிரைகள், ரத்தினங்கள், பெண்கள், குடைத் தொகுதிகள்" ஆகியனவற்றை சத்தியாசிரயனிடமிருந்து ராஜராஜன் பறித்துக் கொண்டதாகக் குறிப்பிடுகிறது (தந்தையாகிய இராஜராஜனால் அனுப்பப்பட்டமையால் இராஜேந்திரனின் வெற்றிச் சிறப்பு இராஜ இராஜனின் வெற்றிச் சிறப்பாகக் குறிப்பிடப்படுகிறது).இராஜேந்திரன் பட்டத்திற்கு வந்த பிறகு (1012-1044) நிகழ்த்திய போர்களில் அவன் செயல்பாடு எத்தகையது? என்பதைக் கண்டால் மேற்கூறிய கல்வெட்டுச் செய்திகள் உண்மையா? பொய்யா? என்பது புலனாகும். கி.பி. 1017-18இல் இவன் நடத்திய ஈழப் போரில் ஈழ மன்னனை இவன் வெற்றி கண்டு கைப்பற்றிய பொருள் குறித்து இவன் வெளியிட்ட கரந்தைச் செப்பேடு (செய்யுள் 58-59) பின்வருமாறு குறிப்பிடுகிறது."அவனுடைய நாட்டையும், அவனுடைய முடியையும், அவனுடைய அரச பத்தினியையும், அவளுடைய முடியையும், அவனுடைய மகளையும், மற்றப் பொருட் குவியல்களையும் . . . கைப்பற்றினான். "சிங்கள நூலான மகாவம்சம் சிங்கள மன்னன் காட்டுக்குள் ஓடிப்போனதாகவும், உடன்பாடு செய்து கொள்ளுவதாகச் சொல்லிய சோழப்படை அவனை உயிரோடு பிடித்துக் கொண்டு, மேற்கொண்ட செயல்களை பின்வருமாறு குறிப்பிடுகிறது."தாங்கள் பிடித்த அரசனையும் தங்கள் கைக்குள் சிக்கிய கருவூலங்களையும் உடனே சோழ மன்னனுக்கு அனுப்பி வைத்தனர். பாதுகாப்பாக பல இடங்களில் இலங்கை முழுவதும் வைக்கப்பட்டிருந்த நினைவுச் சின்ன அறைகளை உடைத்து அவற்றிலிருந்த பொன்னாலான உருவங்களை அவர்கள் எடுத்துச் சென்றனர். அவர்கள் கண்பட்ட இடங்களிலெல்லாம் பெளத்த சமயத்து மடங்களை அழித்து இரத்தத்தை உறிஞ்சும் அரக்கர்களைப் போல் இலங்கையின் செல்வங்கள் அனைத்தையும் கொள்ளையடித்தனர்" (சாஸ்திரி, 1989: 272). வங்காள தேசத்து மன்னன் மகிபாலனை வென்று யானைகள், பெண்கள், செல்லம் எல்லாவற்றையும் கைப்பற்றிக் கொண்டான் (மேலது: 281).முதல் இராஜேந்திரனின் மூத்த மகனான ராஜாதிராஜன் (1018- 1054) இலங்கையின் மீது படையெடுத்து, வீரசாலமேகன் என்ற சிங்கள மன்னனை வென்றான். சிங்கள மன்னன் ஓடி ஒளிய அவனது தமக்கையையும், மனைவியையும் சிறை பிடித்ததுடன் அவனது தாயின் மூக்கை அறுத்தான் (ளு11 111; 5056).ராஜாதிராஜன் சாளுக்கியர்களுடன் 1048இல் நிகழ்த்திய போரில் கிருஷ்ணா ஆற்றங்கரையில் உள்ள பூண்டூர் என்ற ஊரில் குறுநில மன்னர்களுடன் எண்ணற்ற பெண்களும் சிறைபிடிக்கப்பட்டனர்.பூண்டூர் நகர் அழித்துத் தரைமட்டமாக்கப்பட்டது. கழுதைகள் பூட்டிய ஏரால் உழுது வரகு விதைக்கப்பட்டது. மாளிகை தீக்கிரையாக்கப்பட்டது. சோழர் கல்வெட்டுக்கள் கூறும் இச்செய்திகள் மிகைப்படுத்தப்பட்டன என்று கூறும் சாஸ்திரியார் (1989; 346), இத்தகைய செயல்கள் சோழர் காலக் கல்வெட்டுக்களில் பரவலாக இடம்பெற்றுள்ளன என்பதை மறந்துவிடுகிறார். 1894ம் ஆண்டுக்கான கல்வெட்டு ஆண்டறிக்கையில் (எண். 172) ஆகவமல்லன் அனுப்பிய தூதுவர்கள் இருவரில் ஒருவனுக்கு ஐங்குடுமி வைத்து ஆகவல்லமன் என்று பெயரிட்டும் மற்றொரு தூதுவனுக்கு பெண்களுக்கு உரிய ஆடையை உடுக்க வைத்து ஆகமவல்லி என்று பெயரிட்டும் ராஜராஜன் அனுப்பியதாக குறிப்பிடுகிறது. (சாஸ்திரி 1989: 347).சாளுக்கியர்களின் பழமையான நகரான கல்யாணபுரத்தைக் கைப்பற்றி அதை இடித்துத் தரைமட்டமாக்கி அங்கிருந்த ஒரு தூவாரபாலகர் உருவத்தைக் கொண்டு வந்தான். தஞ்சை மாவட்டம் தாராசுரம் கோவில் இடம்பெற்ற அப்படிமத்தின் பீடத்தில் "ஸ்ரீ விஜய ராஜேந்திரத் தேவர் கல்யாணபுரம் எரித்து கொண்டு வந்த துவார பாலர்" என்று குறிக்கப்பட்டுள்ளது.முதல் குலோத்துங்கச் சோழன் (1070---1120) இரண்டாம் கலிங்கப் போரில் (கி.பி. 1110) வென்று குதிரைகள், யானைகள், ஒட்டகங்கள் மற்றும் செல்வங்களுடன் மகளிரையும் கைப்பற்றி வந்தான். மூன்றாம் குலோத்துங்கன் (கி.பி. 1178- 1218) மதுரையின் மீது படையெடுத்து வென்ற பின்னர் அவன் செய்த செயல்களாக அவனது மெய்கீர்த்திகள் பின்வருபவனற்றைக் குறிப்பிடுகின்றன.1. பெண்கள் அடிமைகளாகக் கொண்டு செல்லப்பட்டனர்.2. தோற்றவர்களின் மூக்கு அறுக்கப்பட்டது.3. பாண்டியனின் கூட மண்டபத்தை (முடி சூட்டும் மண்டபம்) இடித்து கழுதை ஏரைப் பூட்டி உழுதனர். திருவாரூர்த் தலைவனாக இருந்த கங்கை கொண்டான் உத்தம சோழராயனின் படையதிகாரியான கூத்தன் கணபதி என்பவனை "பகைவர்களின் மனைவியர்க்குக் கணவன்" என்று ஒரு கல்வெட்டு குறிப்பிடுகிறது (ARE 1913 ப. 97).கி.பி. 1219இல் சோழ நாட்டின் மீது படையெடுத்த முதல் மாறவர்மன் சுந்தரபாண்டியன் (1216 -1238) தனது வீரச்செயல்களை, செய்யுள் வடிவிலான மெய்கீர்த்தியாக கல்வெட்டில் பொறித்துள்ளான் (I.P.S; 290, 323) புதுக்கோட்டை மாவட்டம் குடுமியான் மலையில் உள்ள அக்கல்வெட்டின் உரைநடை வடிவம் வருமாறு:கொடுங் கோபமுடைய குதிரைகளையும், யானைகளையும் செலுத்திச் சென்று சோழர்களின் தஞ்சை நகரையும் செந்தழலிட்டுக் கொளுத்தினான். அழகிய குவளை மலர்களும், நீல மலர்களும் தம் அழகை இழக்கும்படி குளங்களையும் ஆறுகளையும் கலக்கினான்.கூடம், மதில், கோபுரம், ஆடல் நிகழும் அரங்கங்கள், மாட மாளிகைகள், கருவூலங்கள் ஆகியனவற்றை இடித்துத் தள்ளினான்.தன்னை வந்து அடிபணியாத பகை மன்னர்களின் மனைவியர்கள் அழுத கண்ணீர் ஆறாக ஓடும்படிச் செய்தான்.பகைவரது நிலத்தை, கழுதை பூட்டிய ஏர் கொண்டு உழுது வெள்வரகை விதைத்தான். சோழர் தலைநகராக விளங்கிய முடிகொண்ட சோழபுரம் சென்று "விஜயாபிஷேகம்" எனனும் சடங்கை இவன் செய்தான். அதன் பொருட்டு சோழ அரசியும், அந்தப்புரத்துப் பெண்களும் தண்ணீர்க்குடம் முதலிய மங்கலப் பொருள்களை சுமந்து வரும்படி கட்டாயப்படுத்தப்பட்டனர் (சாஸ்திரி, மேலது, 579).பல்லவ மரபைச் சேர்ந்த கோப்பொருஞ்சிங்கன் என்பவன் வைதீக சமயத்தைச் சேர்ந்தவன். சிறந்த சிவ பக்தன். சிதம்பரம் நடராசர் மீது பெரும்பற்று உடையவன் என்று இவனது வரலாற்றை எழுதிய எஸ்.ஆர். பாலசுப்பிரமணியன் (1965: 117) குறிப்பிடுகிறார். சைவர்களின் முக்கிய புண்ணியத் தலங்களுள் ஒன்றான சிதம்பரத்தில் உள்ள நடராஜர் கோவிலில் தெற்குக் கோபுரம் கட்ட தானம் செய்துள்ளான். இதனால் இவனது பட்டப் பெயர் ஒன்றின் பெயரால் "சொக்கசீயன் திருநிலை எழுகோபுரம்" என்று இக்கோபுரம் அழைக்கப்பட்டது. சிதம்பரத்தின் கீழைக் கோபுரத்தை எழுநிலைக் கோபுரமாக உயர்த்திக் கட்டினான். தன் பகை மன்னர்களின் தங்கக் கிரீடங்களை உருக்கி இக்கோபுரத்தின் தங்கக் கலயங்களைச் செய்தான். திருவண்ணாமலை, காஞ்சி ஏகாம்பரநாதன் கோவில், திருவீரட்டாணம், ஜெம்புகேஸ்வரம், மதுரை, காளகஸ்தி ஆகிய சிவத்தலங்களில் திருப்பணிகளும் தானங்களும் செய்தான்."திருப்பதிகளெல்லாம் கும்பிட்டருளி தேவதானங்களும் திருவிடையாட்டங்களும் இறையிவி விட்டருளி திருப்பணியெல்லாம் செய்தருளி" என்று ஆக்கூர் சாசனம் (SI XII; 129) இவனது பக்தி உள்ளத்தைச் சுட்டிக் காட்டும்.இத்தகைய சிவபக்தனான கோப்பெருஞ்சிங்கனுக்குரிய பட்டயங்களுள் "பரராஜ அந்தப்புர பந்திகாரன்" என்பதும் ஒன்று என இவனது ஆற்றூர் சாசனம் கூறும் (SII XII; 120). பிற மன்னர்களின் அந்தப்புரத்தை சிறைபிடிப்பவன் என்பதே இப்பட்டத்தின் பொருளாகும்.தன் பகை நாடான சோழ நாட்டின் மீது படையெடுத்த இக்கோப்பெருஞ்சிங்கன் மூன்றாம் ராஜராஜனை சிறை பிடித்தான். கோப்பெருஞ்சிங்கனுடன் போரிட்ட போசல நாட்டு மன்னன் மூன்றாம் ராஜராஜனை சிறை மீட்டான்.இவ்விரு நிகழ்வுகளையும் 'திருவய்ந்திரபுரக் கல்வெட்டு' குறிப்பிடுகிறது. இக்கல்வெட்டில் கோப்பொருஞ்சிங்கன் சோழநாட்டுக் கோவில்களை இடித்தசெயலும் அவனுடன் போரிட்டு வென்ற போசல நாட்டு மன்னன் செய்த கொடுஞ் செயல்களும் இடம் பெற்றுள்ளன. அக்கல்வெட்டு வருமாறு: (கல்வெட்டு வரிகளில் அழுத்தம் எமது) ஸ்வதி ஸ்ரீ திரிபுவன சக்கரவர்த்திகள் ஸ்ரீ ராஜராஜதேவர்க்குயாண்டு 15 ஆவதின் எதிராம் ஆண்டு பிரதாப சக்கரவர்த்திஹோய்ஸண ஸ்ரீ வீரநரசிம்மதேவன் சோழசக்கரவர்த்தியைக்கோப்பெருஞ்சிங்கன் சேந்தமங்கலத்தில் பிடித்துக்கொடு இருந்து தன் படையை இட்டு ராஜ்யத்தை அழித்துத் தேவாலயங்களும்விஷ்ணு ஸ்தானங்களும் அழிகையிலே இப்படித்தேவன் கேட்டருளி,சோழமண்ல பிரதிஷ்டாசாரியன் என்னும் கீர்த்திநிலை நிறுத்தி அல்லது எக்காளம் ஊதுவதில்லை என்று தோரசமுத்திரத்தினின்றும் எழுந்துவந்து, மகாராஜ்ய நிர்மூலமாடிஇவனையும் இவன் பெண்டு பண்டாரமும் கைக்கொண்டுபாச்சூரிலே விட்டு கோப்பெருஞ்சிங்கன் தேசமும் அழித்துச்சோழச் சக்கரவர்த்தியையும் எழுந்தருளிவித்துக்கொடு என்றுதேவன் திருவுளமாய் ஏவ,விடை கொண்டு எழுந்த ஸ்வஸ்தி ஸ்ரீமான் மகாபிரதானி பிரம விசுவாசி தண்டினகோபன் ஜகதொப்பகண்டன் அப்பண தன்னக்கனும்,சமுத்திரகோபய்ய தன்னக்கனும் கோப்பெருஞ்சிங்கன்இருந்த எள்ளேரியும், கள்ளியூர் மூலையும், சோழகோன்இருந்த தொழுதகையூரும் அஷ்த்து வேந்தன் முதலிகளில்வீரகங்க நாடாள்வான், சீனத்தரையன் ஈழத்து ராஜா பராக்கிரமபாகு உள்ளிட்ட முதலி 4 பேரையும் கொன்று இவர்கள் குதிரையும் கைக்கொண்டு, கொல்லி சோழகோன் குதிரைகளையும் கைக்கொண்டு,பொன்னம்பல தேவனையும் கும்பிட்டு எதுத்துவந்த தொண்டைமாநல்லூர் உள்ளிட்ட தமக்கூர்களும் அழித்து . . . .வெட்டிவித்து திருப்பாதிரிப்பூலியூரிலே வீற்றிருந்து,திருவதிகை திருவெக்கரை உள்ளிட்ட ஊர்களும் அழித்து, வாரணவாசி ஆற்றுக்குத் தெற்கு,சேந்த மங்கலத்துக்கும் கிழக்கு கடலிலே அழியூர்களும், குடிக்கால்களும் சுட்டும் அழித்தும் பெண்டுகளைப் பிடித்தும் கொள்ளை கொண்டும்சேந்தமங்கலத்தே எடுத்து விடப்போகிற அளவிலே கோப்பெருஞ்சிங்கன் குழைந்து சோழ சக்கரவர்த்தியை எழுந்தருளிவிக்கக் கடவதாகதேவனுக்கு விண்ணப்பம் செய்ய, இவர் விட்டு, நமக்கும்ஆள்வரக் காட்டுகையிலே, சோழ சக்கரவர்த்தியைஎழுந்தருளுவித்து கொடு போந்து ராஜ்யத்தே புகவிட்டது " சோழ மன்னர்கள் பாண்டிய நாட்டின் மீதும் இலங்கையின் மீதும் படையெடுத்தபோது பகை மன்னர்களின் மகன், மனைவி, தாய் ஆகியோரின் மூக்கை அறுத்ததை ஏற்கனவே கண்டோம். மதுரையை ஆண்ட திருமலை நாயக்கர் (1623-1659) காலத்தில் பகை நாட்டுக் குடிமக்களின் மூக்கை அறுக்கும் பழக்கமாக இது வளர்ச்சியுற்றது.கந்திருவ நரசராஜன் (1638-1659) என்ற மைசூர் மன்னன் திருமலை நாயக்கருடன் போரிட, தன் படையை அனுப்பினான். அப்படை மதுரை நோக்கி வரும்போது வழியிலுள்ள ஊர்களை எல்லாம் கொள்ளையிட்டும், நெருப்பிட்டும் அழித்தது. ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என்ற வேறுபாடு இன்றி எதிர்பட்டோர் மூக்குகளையெல்லாம் அறுத்தது. அறுபட்ட மூக்குகள் சாக்கு மூட்டைகளில் மைசூருக்குச் சென்றன.நாட்டுத் துரோகிகளுக்கு வழங்கப்பட்ட தண்டனையாகவே மூக்கறுத்தல் இருந்தது. மைசூர் மன்னன் எதிரி நாட்டு மக்களுக்கு வழங்கும் தண்டனையாக இதை மாற்றினான். மூக்கறுப்பதற்கென்றே ஓர் இரும்புக் கம்பியை மைசூர்ப்படை வீரர்கள் வைத்திருந்தனர். இக்கருவியின் துணையால் மூக்கையும் மேலுதட்டையும் அறுத்துவிடுவார்கள். அறுத்த மூக்குகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப அவர்களுக்குப் பரிசு வழங்கப்பட்டது. மீசை உள்ள மேலுதட்டுக்குப் பரிசு அதிகம் (சத்தியநாதய்யர் 1956; 50-52).இதற்குப் பழிவாங்கும் முறையில் தன் தம்பி குமாரமுத்துவின் தலைமையில் ஒரு படையை திருமலை நாயக்கர் மைசூருக்கு அனுப்பினார். மைசூர்ப் படைவீரர்கள் தமிழ்நாட்டில் நிகழ்த்திய மூக்கறுத்தலை மைசூரில் நாயக்கர் படை மேற்கொண்டது. இறுதியில் மைசூர் மன்னனைக் கைது செய்து அவன் மூக்கையும் அறுத்தனர். (மேலது)ஃரையர் என்ற ஆங்கில அறுவை மருத்துவர் 1673க்கும் 1681க்கும் இடைப்பட்ட காலத்தில் மைசூர்ப் பகுதியில் சுற்றுப்பயணம் செய்துள்ளார். மூக்கறுக்கும் செயல் குறித்து அவர் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார். ஸ்ரீரங்கப்பட்டணத்தின் மன்னர் தன் படைவீரர்களுக்கு, பகைவர்களின் மூக்கை அறுக்கும் பயிற்சி கொடுத்துள்ளார். ஒரு கோணிப்பை அளவிலான மூக்குகள் மன்னரின் காலை உணவுக்கு வழங்கப்பட்டன. உயிர்களைக் கொல்வது அவரது சமய நம்பிக்கைக்கு மாறானது என்பதால் அவர் இவ்வாறு செய்கிறாராம் (மேலது). கி.பி. எட்டாம் நூற்றாண்டில் ஆதிசங்கரரால் நிறுவப்பட்ட சிருங்கேரி மடம் கருநாடகத்தில் உள்ளது. பரசுராமபாகு என்ற மராட்டிய இந்துத் தளபதி கருநாடகத்தின் மீது படையெடுத்தபோது இந்து மடம் என்று சிருங்கேரி மடத்தைக் கொள்ளையடிக்காமல் விட்டுவிடவில்லை.60 லட்சம் பெருமானம் உள்ள அணிகலன்கள் யானை, குதிரை, பல்லக்கு ஆகியவற்றை அங்கிருந்து கொள்ளையடித்தான். சிருங்கேரி மடாதிபதிகள் வணங்கி வந்த சாரதா தேவியின் விக்ரகத்தைப் புரட்டிப் போட்டான்.பல பிராமணக் குருக்களைக் கொன்றான். உயிருக்குப் பயந்து போய் சங்கராச்சாரியார் காஞ்சிலா என்ற இடத்திற்கு ஓடி ஒளிந்தார்.அங்கிருந்தபடியே மைசூரில் இருந்த திப்பு சுல்தானுக்கு உதவி வேண்டி கடிதம் எழுதினார். திப்புவும் சாரதா பீடத்தை மீண்டும் நிறுவ பணமும் தானியங்களும் தந்துதவினான். சாரதா பீடத்தைக் காக்க படைகளையும் அனுப்பினான். இச்செய்திகளை சிருங்கேரி சாரதா மடத்திலுள்ள ஆவணங்களால் அறிகிறோம் (சிவண்ணா, 1999 : 4142). தஞ்சையை ஆண்ட மராத்திய இந்து மன்னன் ஹாஜி (16851712) ராணி மங்கம்மாளின் ஆளுகையில் இருந்த திருச்சி பகுதிக்கு தன் படைகளை அனுப்பிக் கொள்ளையடித்தான்.ஆர்.எஸ்.எஸ். நிறுவனரான ஹெட்கேவார் காலமான பிறகு அவரையடுத்து அதன் தலைவராக விளங்கியவர் கோல்வல்கர். ஆர்.எஸ்.எஸ்.க்காரர்களால் ஸ்ரீகுருஜி என்றழைக்கப்படும் அவர் இந்தியாவின் மீது படையெடுத்த முஸ்லீம் படையெடுப்பாளர்கள் குறித்து அந்தப் படையெடுப்பாளர்கள் நமது நாட்டுப் பெண்கள் பலரைக் கற்பழித்தனர். நமது கோவில்களையும், யாத்திரைத் தலங்களையும் தகர்த்துத் தரைமட்டமாக்கியவர்கள். சுகபோகங்களைத் தருவதாக ஆசை காட்டியோ அல்லது வாள்முனையில் மிரட்டியோ பெரும் எண்ணிக்கையினரைத் தமது மதத்திற்கு மாற்றினார்கள். என்று எழுதியுள்ளார் (கோல்வல்கர், 1992 : 8) . ஸ்ரீ குருஜி' குறிப்பிடும் கொடுமைகள் இந்திய நாட்டு வரலாற்றில் புதிய செய்திகளல்ல என்பதை இதுவரை நாம் பார்த்த வரலாற்றுச் சான்றுகள் உணர்த்துகின்றன. இஸ்லாமிய படையெடுப்பாளர்கள் செய்த கொடுஞ்செயல்களை சைவ, வைணவ, பெளத்த, சமணத்தைப் பின்பற்றிய இந்திய மன்னர்களும் நிகழ்த்தியுள்ளனர். இதனடிப்படையில் சைவமும், வைணவமும் கொள்ளையடித்தல், கோவிலிடித்தல், பெண்களைக் கவர்தல் ஆகிய சமூக விரோதச் செயல்களை வலியுறுத்துகின்றன என்று பொதுப்படையாக கூறிவிட முடியுமா? படையெடுப்பு என்ற பெயரில் கொடூரமான, அநாகரிகமான செயல்களை மேற்கொள்வோர் மதங்கடந்து நிற்பவர்கள் என்பதுதான் உண்மை. அவர்களுக்கு வேண்டுவன எல்லாம் தங்கமும், வெள்ளியும், வெண்கலமும்தான். முதலாம் இராஜேந்திரன் தனது வடஇந்தியப் படையெடுப்பின் போது வடஇந்தியாவிலுள்ள மதுரா, என்ற நகரைக் கைப்பற்றினான். இந்நகர்தான் கஜினி முகம்மதுவின் தாக்குதல்களுக்கு அடிக்கடி ஆளான நகரமாகும். இது குறித்து கே.கே. பிள்ளை (1981; 278, 279) பின்வருமாறு அவதானிப்பார்.அந்நகர் அக்காலத்தில் செல்வமும் புகழும் பொதிந்து காணப்பட்டதால் அந்நகரின் மேல் கஜினி முகம்மது பன்முறை தாக்குதல் தொடுத்தான். பன்முறை அதைக் கொள்ளையிட்டான். இவ்வட மதுரையை இராசேந்திரனும் வென்று கைப்பற்றினான். இவ்விரு மன்னரின் போர்களுக்கிடையே ஒரு தொடர்பு காண விழைவதில் வழுவேதுமில்லை. தனது இலங்கைப் படையெடுப்பின்போது இலங்கைக்கு ராஜேந்திரன் நெருப்பூட்டியதை அவனது திருவாலங்காட்சுச் செப்பேடுகள் குறிப்பிடுகின்றன. மேலும் ஈழ நாட்டு கிராமங்களை தஞ்சைப் பெருவுடையார் கோவிலுக்குத் தானமாக ராசேந்திரன் வழங்கினான்.பொலனறுவை என்ற ஊரை, ஜனநாதமங்கலம் என்று பெயர் மாற்றியதுடன் அங்கு சிவன் கோவில் ஒன்றைக் கட்டுவித்தான். ஆதிக்கத்தை நிலைநாட்டவும் பொருளைக் கவரவும் மன்னர்கள் நிகழ்த்தும் போர்களில் அறநெறிகள் பார்க்கப்படுவதில்லை என்பதே வரலாற்று உண்மை. இவ்வுண்மைக்கு கோரி முகம்மது, கஜினி முகம்மது, மாலிக்கபூர் போன்ற இஸ்லாமிய படையெடுப்பாளர்கள் மட்டுமின்றி இராஜராஜன், இராஜேந்திரன் என இந்து மன்னர்களும் எடுத்துக்காட்டாக அமைகின்றனர். இதனால்தான் ஜார்ஜ் ஸ்பன்சர் என்பவர் சோழ மன்னர்களின் இலங்கைப் படையெடுப்பு குறித்து, தாம் எழுதிய கட்டுரைக்கு ‘The Politics of Plunder�, �The Cholas in the 11th Century Ceylon� (அரசியல் கொள்ளை பதினோறாவது நூற்றாண்டு இலங்கையில் சோழர்கள் என்று தலைப்பிட்டுள்ளார். சோழ மன்னர்களின் இலங்கைப் படையெடுப்பை வீரச்செயல் என்று தமிழர்கள் கருதினால் சோழ மன்னர்கள் நிகழ்த்திய கொள்ளையென்று சிங்களவர் அதைக் கருதுகின்றனர். உணர்ச்சி வயப்படாமல் சிந்தித்தால் அவ்வாறு அவர்கள் கருதுவதில் நியாயம் உள்ளது என்பது புலனாகும். thanks :http://meiyeluthu.blogspot.com/2009/11/blog-post_14.html

இ.எம்.எஸ், எழுதிய இந்திய வரலாறு, என்னும் புத்தகத்தில்

0 c
இந்திய சமூக பொருளாதார அடிப்படைகள் - சில விவாதங்கள்
ரிக் வேதத்தை இயற்றிய ஆரியர்கள் முதல், மொகலாய சக்கரவர்த்திகளின் சரித்திரக் காலம் வரை நிலைத்து நின்றதும், பிரிட்டிஷாரால் தகர்க்கப்பட்டதுமான இந்திய சமூகத்தின் அடிப்படை அமைப்பு என்ன? அதனுடைய விசேஷத் தன்மைகளை நிலைநாட்டவும் வளர்க்கவும் செய்ததில் இந்து, இஸ்லாமிய சாம்ராஜ்யங்கள் ஆற்றிய பங்கு என்ன? இரண்டாயிரம் ஆண்டுகளின் முன்னேற்றத்தின் விளைவாக உருவாகிய இந்த பாரதீய சமூகப் பொருளாதார அமைப்பின் அடிப்படையைத் தகர்க்க இறுதியில் பிரிட்டிஷாரால் எப்படி முடிந்தது? இந்தக் கேள்விகளுக்கான பதில்கள்தான் கீழே தரப்படுகிறது.
1. ஆக்கிரமிப்பாளர்களாக இந்தியாவுக்கு வந்த ஆரியர்கள் ஆரியர்களல்லாத சமூகத்தவருடன் இணைந்து உருவாக்கிய புதிய உற்பத்தி முறையின் (விவசாயம்) விளைவாக ஆரியர்களல்லாத கோத்திர வர்க்கங்கள் ஒன்றன்பின் ஒன்றாகத் தகர்ந்தன. இந்த ஆரியர்களல்லாத, ஆரிய சமூகத்தவரும் இணைந்தும் புதிய சமூகங்கள் உருவாகின.
2. கோத்திர வர்க்க அமைப்பின் அறிவினாலும் உற்பத்தி முறை வளர்ச்சியின் காரணமாகவும், சமூகம் முழுவதின் உற்பத்தித் திறன் அதிகரித்தது. இதன் விளைவாக உற்பத்தி ரீதியான பணிகள் விரிவடைந்தன. வெவ்வேறு வேலைகள் செய்கின்ற வெவ்வேறு பகுதியினர் என்கிற நிலையில் வேலைப் பிரிவினைகள் ஏற்பட்டது. அத்துடன் உற்பத்தித் திறன் அதிகரித்ததைத் தொடர்ந்து உற்பத்தி செய்யப்பட்ட செல்வத்தின் அளவும் அதிகரித்தது. இவையெல்லாம் சேர்ந்து ஆரம்ப வடிவிலுள்ள சுரண்டலை அடிப்படையாகக் கொண்ட ஒரு உற்பத்தி உறவை (நான்கு வர்ணங்கள்) தோற்றுவித்தது. இது படிப்படியாக உற்பத்தி முறையின் வளர்ச்சிக்கும், உற்பத்தித்திறனின் முன்னேற்றத்திற்கு மேற்ப விரிவடைந்து, மேலும் மேலும் சிக்கலான ஒரு ஜாதி முறையாக மாறியது.
3. புராதன கிரீஸ், ரோம், சில மேற்காசிய நாடுகள் ஆகியவைகளில் உருவான அடிமைமுறை அமைப்புக்கும், இந்தியாவில் உருவான இந்த வர்ண, ஜாதி அமைப்புக்கும் இடையில் அடிப்படையான வேற்றுமைகள் ஒன்றும் இல்லை. அடிமை முறையைப் போலவே வருணா, ஜாதி முறையினுடையவும் முக்கியமான அம்சம் சுரண்டுவோர் சுரண்டப்படுவோரிடையேயுள்ள முரண்பாடுதான். ஒன்றில் அடிமைகள் என்று பகிரங்கமாக அழைக்கப்பட்ட பெரும்பான்மையான மக்கள் சுரண்டலுக்கு இரையாக்கப் படுகிறார்கள், மற்றொன்றில் ஜாதி என்ற திரையைப் பிடித்துக் கொண்டுள்ளார்கள். இந்த வித்தியாசம்தான் உள்ளது.
4. ஆனால், வருண, ஜாதி முறை அமலுக்கு வந்தபோது அதனை நிலைநாட்டவும், நியாயப்படுத்துவதற்குமாக மத நம்பிக்கைகளுடையவும் தத்துவச் சிந்தனைகளுடையவும் ஒரு சிறப்பான கட்டுக்கோப்பு சுரண்டல் அமைப்பைச் சுற்றிலும் கட்டப்பட்டது. இவ்வாறு அடிமை முறையின் வடிவிலுள்ள சுரண்டலினுடையதான மத, தத்துவ சிந்தனை முதலியக் கட்டுக்கோப்புகளிலிருந்து மாறுபட்ட வேறு ஒரு கட்டுக்கோப்பு இந்தியாவில் உருவாகியது. அதுதான் இந்து மதமும், இந்து தத்துவ ஞானமும், இந்துக் கலாச்சாரமும் மற்றுமாகக் காட்சியளித்தது. அதைத்தான் இந்த வகுப்புவாதிகள் “பரிசுத்தமான பாரதீயக் கலாச்சாரம்’’ என்றழைக்கின்றனர்.
5. அடிமைமுறை, வருண ஜாதி முறை ஆகிய இரண்டு சுரண்டல் முறைகள்தான் அமலில் இருந்ததென்றாலும், புராதன வரலாற்றுக் காலகட்டத்தில் இந்தியாவிலும் மேற்காசிய நாடுகளிலும் உற்பத்திக்கு ஒரு பொதுத்தன்மை இருந்தது. பொதுவாகக் கூறினால், இரண்டிலும் உற்பத்தியாளர்கள் உற்பத்திச் செயலில் ஈடுபட்டது சொந்த உபயோகத்திற்காகத்தான், உற்பத்தி செய்யப்படுகிற பொருட்களில் மிகச் சிறிய பகுதி மட்டுமே மற்றவர்களுக்கு விற்கப்பட்டது. அது போலவே சொந்த உபயோகத்திற்குத் தேவைப்பட்ட பொருட்களில் சிறு பகுதி மட்டுமே மற்றவர்களிடமிருந்து வாங்கப்பட்டது. “சரக்கு உற்பத்தி’’ என்றழைக்கப்படுகிற உற்பத்தி முறை இரண்டிலும் பலவீனமாகவே இருந்தது என்று பொருள்.
6. ஆனால், வருண, ஜாதி முறை, சரக்கு உற்பத்தியின் வளர்ச்சியை அடிமை முறையிலுள்ள வளர்ச்சியைவிட நிதானப்படுத்தியது. ஒவ்வொரு கிராமத்திலும் அதனதனுடைய மக்களின் சாதாரண வாழ்க்கைத் தேவைகளுக்கான பொருட்களையெல்லாம் உற்பத்தி செய்வது, அது ஒவ்வொன்றும் உற்பத்தி செய்வதற்கு குறிபிட்ட ஒரு ஜாதியினர் இருப்பது, இந்த அடிப்படையில் சுயதேவைப்பூர்த்தி கிராமங்களும், அவைகளின் பிரிக்க முடியாத பாகமாக ஜாதி முறையும் உருவாகியது, தான் இந்தியாவின் சிறப்பு. இந்த அமைப்பில் கிராமத்தினுடைய உற்பத்திப் பொருளை வெளியே எடுத்துச் சென்று விற்பதோ, கிராமத்தின் தேவைக்கான பொருட்களை வெளியிலிருந்து வாங்குவதற்கான தேவையோ அநேகமாக இல்லையென்று ஆகிவிட்டது.
7. நேர்மாறாக, அடிமை முறையில், அடிமைகளைச் சுரண்டிப் பெறுகின்ற உபரிப் பொருட்களை விற்கவும் அதன் மூலம் கிடைக்கின்ற பணத்தைப் பயன்படுத்தி ஆடம்பர வாழ்க்கை நடத்தக்கூடிய போக்கும் சுரண்டும் வர்க்கத்திற்குண்டு. ஆகவே, சுயதேவை பூர்த்திக் கிராமங்களும் ஜாதி முறைகளும் இருந்து வந்த இந்தியாவைக் காட்டிலும் அதிக சரக்கு பரிவர்த்தனை அடிமை முறை வழக்கிலிருந்த மேற்காசியாவில் நடந்தது. சரக்காக மாற்றக்கூடிய செல்வத்தை ஏராளமாகக் கொள்ளையடிப்பது இந்த நாடுகளின் சுரண்டும் வர்க்கங்களின் தேவையாக இருந்தது. அவர்கள் பெருமளவில் இந்தியாவிற்குள் ஆக்கிரமித்து நுழைந்தனர். அதனைத் தோற்கடிக்க சுயதேவைப் பூர்த்தி கிராமங்களை அடிப்படையாகக் கொண்ட இங்குள்ள சுரண்டும் வர்க்கங்களால் முடியவில்லை.
8. ஆனால், ஜாதி முறையினுடைவும், சுயதேவைப் பூர்த்தி கிராமங்களுடையவும் அடிப்படையில் உருவான சமூக அமைப்பின் அடிப்படையைத் தகர்க்க இந்த ஆக்கிரபிப்பாளர்களாலும் முடியவில்லை. முகமது நபிக்குப் பிறகு வளர்ந்து வந்த புதிய இஸ்லாம் மதத்தின் ஆவேசத்தை உட்கொண்டு, முஸ்லிம் அல்லாத மத நம்பிக்கைகளுக்கெதிராக “ஜிஹாத்’’ (போர் முழக்கம்) செய்ய முயற்சித்தவர்களால்கூட ஜாதி முறையையோ சுயதேவைப் பூர்த்தி கிராமங்களையோ அழிக்க முடியவில்லை. இந்துக்களுடையதான பல்வேறு ஜாதிகளுக்கு மேலாக ஒரு “முஸ்லிம் ஜாதி’’ கூட உருவாகவே செய்தது.
9. உற்பத்தி முறையில், சரக்கு உற்பத்தி முன்பிருந்ததைவிடப் பெருக, இந்த ஆக்கிரமிப்புகள் உதவின. ஆனால், அது சமூகம் முழுவதும் பரவவில்லை. சுரண்டும் வர்க்கங்களுடைய அன்றாட உபயோகத்திற்கான ஆடம்பரப் பொருட்களைத்தான் சரக்குகள் என்ற முறையில் அதிகமாக வாங்கத் தொடங்கினர். அதைப் போன்ற உற்பத்தி அதிகரிக்கின்ற அளவுக்கு சுரண்டும் வர்க்கங்கள் அதிக செல்வத்தைக் கொள்ளையடித்து சொந்தமாக்கத் தொடங்கியபோது அவர்கள் சந்தையில் விற்பதும் அதிகரித்தது. இவ்வாறு சுரண்டும் வர்க்கங்களின் மட்டத்தில் சரக்குகளை வாங்குவதும் விற்பதும் அதிகரித்தது. ஆனால், இது சமூகத்தின் மேல் தட்டில் மட்டுமாக ஒதுங்கி நின்றது. அடித்தட்டில் சரக்கு உற்பத்தியும் உபயோகத்திற்காக சந்தையிலிருந்து வாங்குவதும் மிக மிகக் குறைவாகவே இருந்து வந்தது.
10. இவ்வாறு ஒரு சிறுபான்மையோர் மட்டுமான சுரண்டும் வர்க்கங்களைத் தவிர்த்து இந்திய சமூக அமைப்பு, சுய தேவைப் பூர்த்தி கிராமங்களின் அடிப்படையிலேயே இருந்து வந்தது. இதனைத் தகர்க்க முகமது நபியின் காலத்திற்கு முன்போ, பிறகோ மேற்காசியாவிலிருந்து வந்த ஆக்கிரமிப்பாளர்கள் யாராலும் முடியவில்லை. இந்த ஆக்கிரமிப்பாளர்களுடையவும் சக்கரவர்த்திகளுடையவும் படைத் தளபதிகளுடையவும், ராணுவ முன்னேற்றங்கள், கிராமப் பகுதிகளில் உற்பத்தி உறவுகளிலோ, அதனுடைய சமுதாய அமைப்பிலோ எவ்வித மாற்றத்தையும் ஏற்படுத்தப் பயன்படவில்லை என்பது பொருள்.
11. இங்குதான் ஐரோப்பிய வியாபாரிகளின் வருகை முதல் பிரிட்டிஷ் ஆட்சி அமைவது வரை நடைபெற்ற நிகழ்ச்சிகள், பழைய நிகழ்ச்சிகளிலிருந்து வேறுபடுவது, ரிக் வேதத்தை இயற்றிய ஆரியர்கள் முதல், மொகலாயச் சக்கரவர்த்திகள் வரையான அன்னியர்களுக்கு மாறாக இந்தப் புதிய பகுதி ஐரோப்பிய வியாபாரிகள் இந்தியாவிற்கு முற்றிலும் “அன்னியமான’’ ஒரு சமூகப் பொருளாதார அமைப்பின் கருவுடன்தான் இங்கு கடந்து வந்தனர். “பாரதீயக் கலாச்சாரத்’’தின் அஸ்திவாரத்திற்கு கிராம சுய தேவைப் பூர்த்திக்கும், ஜாதி முறைக்கும் வேட்டு வைக்கின்ற சரக்கு உற்பத்தி முறையின் ஏஜென்ட்டுகளாகத்தான் இவர்கள் இந்தியாவிற்கு வந்தனர்.
(தோழர் இ.எம்.எஸ், எழுதிய இந்திய வரலாறு, என்னும் புத்தகத்தில் மேற்படி விவரங்களை விரிவாக விளக்கி இருக்கிறார். 13வது அத்தியாயத்தில், ஆரியர் துவங்கி ஆங்கிலேயர் வருகை வரையான வரலாற்றுத் தொகுப்பை 11 அம்சங்களாக சுருக்கி இ.எம்.எஸ் எழுதியிருப்பது, அற்புதமானது. மேலும் இந்தக் கண்ணோட்டத்தில் நிகழ்வுகளைச் சுருக்கமாக விளக்குவதற்கு பயன்படும் என்பதனால், இளைஞர் முழக்கம், மேற்படி பகுதியை மறுபதிப்பு செய்கிறது
thanks to http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=1159:2009-11-10-04-42-08&catid=943:09&Itemid=196