ஒட்டுமொத்த உலகமே எதிர்ப்பார்த்திருந்த படம்தான் 2012. இப்போது வெளிவந்து உலகத்தையே கதிகலங்க வைத்துக்கொண்டிருக்கிறது.இப்படியொரு பேரழிவு பூமிப் பந்தைப் புரட்டிப்போட்டுவிடுமா? என்ற ஒரு மெல்லிய அச்சத்தைப் படம் பார்ப்பவர் உள்ளத்தில் விதைத்துவிட்டுப் போகிறது 2012.
உலகின் முதன் மாந்தன் தோன்றிய மண் குமரிநாடு. அதுவே தமிழரின் முதலாவது தாய்மண். அங்கு பழந்தமிழர்கள் 49 நாடுகளைக் கட்டியெழுப்பி ஆட்சி செய்தனர். குமரிக்கண்ட மாந்தன் பேசிய மொழிதான் தமிழ்.இறையனார் களவியலுரையிலும் இளம்பூரனார் தொல்காப்பிய உரையிலும் இன்னும் பிற இலக்கியங்களிலும் குமரிக்கண்டம் பற்றிய குறிப்புகள் காணக்கிடைக்கின்றன. குமரிநாடு பற்றிய வரலாற்றுக் குறிப்புகளுள் ஒன்று இது:-“முதன்முதலில் குளிர்ந்தது உலகின் மேற்பரப்பே. அந்நிலம் தமிழ் நிலமே. அப்பகுதி அப்படி முதல் நிலமாக அமையக்காரணம் உலகின் நடுக்கோட்டிற்கு அணித்தாய் இருந்தமையே. அம்முதல் நிலமே குமரிக்கண்டம். குமரிமைல ஆறுகொண்டு குமரிநாடு என்று பெயரிட்டனர். இதன் வடக்கே குமரியாறு தெற்கே பஃறுளியாறு என்பவற்றின் இடையே கீழ்மேலாக எழுநூறு காவதம் பரப்பாக நீண்டு கிடந்தது. இது நாற்பத்தொன்பது நாடுகளாகப் பிரிக்கப்பெற்றிருந்தது. ஏழ்மதுரை நாட்டுக்குத் தென்பால் இருந்த காரணத்தால் மதுரை ‘தென்மதுரை’ எனப்பட்டது. இதனை அரசிருக்கையாகக் கொண்டு ஆண்டவன் ஆழிவடிவம் பலம் நின்ற பாண்டியன் என்ற முதலாம்நிலம் தரு திருவிற்பாண்டியன்....” (தமிழ் இலக்கிய வரலாற்றுக் களஞ்சியம், தொகுதி2, ஐந்தினைப் பதிப்பகம், சென்னை. 1987.ப.1670.)“பஃறுளி ஆற்றுடன் பன்மலை அடுக்கத்துக்குமரிக் கோடும் கொடுங்கடல் கொள்ள” என்று குமரிநாட்டைப் பற்றி கூறப்பட்டுள்ள வரிகளுக்கு 2012 படமே சரியான விளக்கவுரையாக எனக்குப் பட்டது. இந்தப் படம் குமரிக்கண்ட வரலாற்றுப் பேரழிவுக்கு நல்ல பாடமாக இருக்கிறது என்பது என் கருத்து.இன்றைய இந்திய பெருநிலப்பரப்புக்குக் கீழே இருந்ததாகச் சொல்லப்படும் குமரிநாடு அல்லது குமரிக்கண்டம் அல்லது கோண்டுவானா அல்லது லெமூரியா கண்டமும் இப்படிதான் மாபெரும் பேரழிவுக்கு உள்ளானதாக வரலாற்று ஆசிரியர்கள் சொல்லுகின்றனர். அங்கு மூன்று முறை பாரிய கடற்கோள்கள் (சுனாமி) ஏற்பட்டதாகத் தமிழ் இலக்கியம் சான்று சொல்லுகிறது.
மூன்று கடல்கோள்களுள் முதலாவது கடல்கோள் கி.மு. 2387 இல் நிகழ்ந்தது. இரண்டாவது கடல்கோள் கி.மு. 504 இல் நிகழ்ந்தது. மூன்றாவது கடல்கோள் கி.மு. 306 இல் ஏற்பட்டதாக குறிப்புகள் சொல்லுகின்றன. (The Date of Tolkappiyam, Annals of Oriental Research, University of Madras, Vol.XIX part II, 1964, Reprint p. 16-17)நீங்கள் 2012 படத்தைப் பார்த்தவரா? கொஞ்சம் மெனக்கெட்டு குமரிகண்ட வரலாற்றை தேடிப் படியுங்கள். தமிழரின் வரலாறு தெளிவாகத் தெரியும்.நீங்கள் குமரிக்கண்ட வரலாற்றைப் படித்தவரா? அருகிலுள்ள பட அரங்கிற்குச் சென்று 2012 படத்தைப் பாருங்கள். தமிழரின் வரலாறு தெளிவாகப் புரியும்.பழந்தமிழரின் தாயகமாகச் சொல்லப்படும் குமரிக்கண்டம்,பழந்தமிழின் பிறப்பிடமாகக் கருதப்படும் குமரிநாடு,தொன்மை மாந்தனின் தோற்றுவாயாக நம்பப்படும் கோண்டுவானா,குரங்கினத்திலிருந்து மாந்தரினம் பரிணாமம் அடைந்த நிலமாக இருந்து கடலுக்குள் மூழ்கிப்போன லெமூரியா கண்டத்தின் வரலாற்றைத் தமிழர்கள் கண்டிப்பாக அறிந்துகொள்ள வேண்டும்.அதற்குக் கீழ்க்காணும் சில வலைமணைகள் துணையாக இருக்கும்.http://www.tamilcc.org/thamizham/ebooks/5/468/468.pdf
No comments:
Post a Comment