சோழர்கள் ஆட்சியில் தென்னிந்தியாவுக்குத் தலைநகராக விளங்கியது தஞ்சை: குடவாயில் பாலசுப்பிரமணியன்

thanks to http://www.dinamani.com/edition/Story.aspx?SectionName=Edition-Trichy&artid=373865&SectionID=13

First Published : 09 Feb 2011 12:19:10 PM IST


தஞ்சாவூர், பிப். 8: ராஜராஜசோழன், ராஜேந்திரசோழன் ஆகியோரது ஆட்சிக் காலத்தில் தென்னிந்தியாவுக்கே தலைநகராக விளங்கியது தஞ்சாவூர் என்றார் வரலாற்று ஆய்வாளர் குடவாயில் பாலசுப்பிரமணியன். 
 
 தஞ்சாவூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மாவட்ட மூத்தக் குடிமக்கள் பேரவைக் கூட்டத்தில் வரலாற்றில் தஞ்சாவூர் என்ற தலைப்பில் அவர் மேலும் பேசியது:  குளிர்ந்த நிலப்பரப்பை உடைய இடம் என்பதால் தஞ்சை என்ற பெயர் ஏற்பட்டது. வரலாற்றில் முதல்முறையாக கி.பி. 550-ல் வெட்டப்பட்ட கல்வெட்டில் தஞ்சையின் பெயர் காணப்படுகிறது.
 
திருச்சி மலைக்கோட்டை தாயுமானவர் கோயிலின் பின்பகுதியில் சீராமுனிவர் என்ற சமண முனிவர் உயிர்த்திறந்த குகையில் இந்தக் கல்வெட்டு காணப்படுகிறது.  சிம்மவிஷ்ணு பல்லவன், சோழநாட்டை கைப்பற்றியது குறித்த இந்தக் கல்வெட்டில் தஞ்சையை வெற்றிகொண்டான் என்ற பொருள் தரும் பட்டப் பெயரான தஞ்சகரக என்று பொறிக்கப்பட்டுள்ளது. பின்னர், 
 
அப்பர் சுவாமிகள் திருவீழிமிழலையில் பாடிய பாடலில் தஞ்சை தளிக்குளத்து மகாதேவர் என்று பாடியுள்ளார். இந்தக் கோயில் சீனிவாசபுரம் பகுதியில் இருந்துள்ளது.  பூதத்தாழ்வார், திருமங்கை ஆழ்வார் பாடல்களிலும் தஞ்சையைப் பற்றி கூறப் பட்டுள்ளது. ஆழ்வார்கள் பாடல் பெற்ற மாமணிக்கோயில் பெருமாள் கோயில், நீலமேகப் பெருமாள் கோயில் ஆகியவை தஞ்சையில் இருந்துள்ளன. நகரின் பல்வேறு பகுதிகளில் இருந்த இந்தக் கோயில்கள் பின்னர் நாயக்கர்கள் காலத்தில் வெண்ணாற்றங் கரையில் அமைக்கப்பட்டன.  சோழர்களுக்கு முன்னர் முத்தரையர் காலத்திலேயே தஞ்சை தலைநகராக விளங்கியது. 
 
பின்னர், விஜயாலய சோழன் தஞ்சையை கி.பி. 850-ம் ஆண்டில் மீட்டான். அப்போது முதன் முதலில் கீழவாசல் பகுதியில் தற்போது ராகுகால காளி, வடபத்ர காளி என அழைக்கப்படும் நிசும்பசூதனிக்கு கோயில் கட்டினான். இதுதான் சோழர் களின் குல தெய்வம்.  ராஜராஜசோழன், ராஜேந்திரசோழன் ஆட்சிக் காலத்தில் தஞ்சாவூர், தென்னிந்தியாவுக்கே தலைநகராக விளங்கியது. அவர்கள் தற்போதைய ஒரிசா வரை அரசாண்டனர். ராஜராஜசோழன் மறைவுக்குப் பிறகு 10 ஆண்டுகள் தஞ்சையை தலைநகராகக் கொண்டுதான் ராஜேந்திரசோழன் ஆட்சி செய்தார். 
 
 பின்னர் குதிரை, யானைப் படைகள் உள்ளிட்டவை பல ஆறுகளைத் தாண்டிச் செல்வதில் இருந்த சிரமத்தைக் குறைப்பதற்காக கங்கைகொண்ட சோழபுரத்துக்கு தலைநகரை மாற்றினான். சோழர்களின் அரண்மனை தற்போதை சீனிவாசபுரத்தில் இருந்ததற்கான சான்றுகள் கிடைத்துள்ளன.  மாறவர்மசுந்தரபாண்டியன் இந்த அரண்மனையை அழித்தார். பின்னர் பாண்டிய மன்னரின் தளபதியான சாமந்தநாராயணன் தஞ்சையில் மீண்டும் ஓர் ஊரை உருவாக்கினார். இவர்களைத் தொடர்ந்து, நாயக்கர்கள், மராட்டியர்கள் தஞ்சையை தலைநகராகக் கொண்டு தஞ்சையை ஆட்சி செய்தனர் என்றார் குடவாயில் பால சுப்பிரமணியன்.  கூட்டத்தில் பேரவைத் தலைவர் தங்கராஜன், பொருளாளர் கலியமூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.



No comments: