THANKS TO http://tamilartsacademy.com/journals/volume7/articles/article8.xml
டாக்டர் இரா. நாகசாமி
டாக்டர் இரா. நாகசாமி
காசுகளில் கண்ணனும் பலராமனும்
சுமார் முப்பது ஆண்டுகளுக்கும் முன்பு ஆப்கனிஸ்தானத்தைத் தாண்டி வடமேற்கில் "காணூம்" என்ற இடத்தில் பல காசுகள் அகழ்வாய்வில் கிடைத்தன. இவ்விடம் பாக்டீரியா என்று அக்காலத்தில் அழைக்கப்பட்டது. கிரேக்கர்களின் ஆட்சியில் இருந்தது. இங்கு கிடைத்த காசுகளில் பல காசுகள் சதுர வடிவில் இரு மொழிகளில் பெயர் பொறிக்கப்பட்டு காணப்பட்டன.
ஒரு புறம் கிரேக்க மொழியிலும் மறுபுறம் சம்ஸ்கிருத மொழியிலும் எழுதப்பட்டு காணப்படுகின்றன. வரலாற்றுக்கு 180 ஆண்டுகளுக்கு முன் வெளியிடப்பட்டவை. அங்கு அக்காலத்தில் ஆண்ட பாக்டீரிய மன்னன் "அகதாக்லியஸ்" என்பவனால் இவை வெளியிடப்பட்டவை. இவற்றில் தான் பலராமனின் உருவம் பொறிக்கப்பட்டு காணப்படுகிறது.
அதாவது அக்காசின் தலையில் நின்ற வடிவிலே பலராமர் கையிலே கலப்பை தாங்கி காணப்படுகிறார். கிரேக்க ஆடை அணிந்து காணப்படுகிறார். விளிம்பில் "அகதாக்லியைனுடைய" என கிரேக்க எழுத்துக்களில் பொறிக்கப்பட்டுள்ளது. அக்காசின் பின்புறம் நின்ற நிலையில் "வாசுதேவன்" ஆன "கண்ணனின்" உருவம் பொறிக்கப்பட்டுள்ளது. கண்ணனும் கிரேக்க உடையில் தான் காணப்படுகிறான். கண்ணன் கையில் பெரிதாக சக்கரம் தரித்துள்ளான். மற்றொரு கரத்தில் சங்கு வைத்துள்ளான். அதன் விளிம்பில் பிராம்மி எழுத்துக்களில் "ரஞோ அகதுக்லியேஷஔ" என்று எழுதப்பட்டுள்ளது. பலராமர் கண்ணன் உருப்பொறித்த காசுகளில் இதுவே தொன்மையானது. ஆப்கனிஸ்தானத்தையும் கடந்து பாக்டீரிய நாட்டில் வரலாற்று ஆண்டுக்கும் (கி.மு) 180 ஆண்டுகட்க்கும் முன்பே கண்ணன் உருவும் பலராமன் உருவும் காசுகளில் வெளியிடப்பட்டுள்ளன எனில் இந்திய பண்பாடு எவ்வளவு பரந்து திகழ்ந்த்தது என அறியலாம்.
காசுகளில் முருகப்பெருமானும் சிவபெருமானும்
இதே சம காலத்தில் பஞ்சாபில் சட்லெஜ் நதிக்கரையை ஒட்டி ஒரு குழுவினர் ஆண்டு வந்தனர். அவர்களுக்கு "யௌதேயர்கள்" என்று பெயர். அவர்கள் தங்கள் குழுவில் ஒருவரைத் தலைவராக தேர்ந்தெடுத்து ஆண்டு வந்தனர். இந்திய நாட்டில் மிகவும் பழ்ங்க்காலத்திலேயே சுயாட்சி நடத்தியவர்கட்க்கு இவர்களே சான்று என வரலாற்று ஆசிரியர்கள் கூறுவர். இவர்களும் பல காசுகளை வெளியிட்டுள்ளனர். "யௌதேயர்களுடைய (காசு)" என இவர்களது காசுகளில் எழுத்து பொறிக்கப்பட்டு காணப்படுகிறது. இவர்கள் வெளியிட்ட காசுகளில் ஒரு வகைக் காசுகளை குறிக்க வேண்டும்.
அவற்றில் தலைப்புறம் ஆறுமுகமும் கையிலே நெடுவேலும் ஏந்தி நிற்கும் முருகப்பெருமானின் உருவமும் பின்புறம் சிவபெருமானின் உருவமும் காணப்படுகின்றன. பிராம்மி எழுத்துக்களில் "யௌதேயர்" என்ற பெயரும் பொறிக்கப்பட்டுள்ளது.
சங்கத்தமிழில் நாற் பெருந்தெய்வங்கள்
வரலாற்று ஆண்டுகட்கு 180 ஆண்டுகட்கும் முன்னர் நான்கு ஹிந்து தெய்வங்கள் பொறிக்கப்பட்டுள்ள இக்காசுகள் எதைக்குறிக்கின்றன? காசுகளில் அரசர்கள் தங்களது சிறப்பை ஆற்றலைக் குறிக்கும் பெயரோ உருவோ வெளியிடுவது மரபு.
சோழமன்னர்கள் தமது காசுகளில் வில்-மீன்-புலிஔ மூன்றும் ஒருகுடைக்கீழ் உள்ளதைக்காட்டுவது அவர்களது ஆற்றலைக் குறிக்கவே என்பதில் ஐயமில்லை. ஆதலின் இக்காசுகளில் இத்தெய்வங்களின் தனிச்சிறப்பே உருபொறிக்க காரணம் என்பதில் ஐயமிருக்கமுடியாது. ஆதலின் இவர்களின் சிறப்பு யாது என அறிதல் வேண்டும்.
அதை அறிவதற்கு சங்கத்தமிழ் நமக்குப் பெரிதும் உதவுகிறது. சங்கப் பாடல்கள் வரலாற்று ஆண்டின் தொடக்க காலத்தில் பாடப்பட்டவை. இவற்றில் புறநானூற்றில் ஒரு பாடலில் புலவர் பாட்டுடைத்தலைவனைப் பாடுகிறார். "தலைவ. நீ மாற்றார்களை அழிக்கும் போது நின் சீற்றம் ருத்ரனாகிய சிவபெருமானைப்போல் தோன்றுகிறது. உன்னுடைய பலமோ பலதேவனுடைய பலத்தை ஒத்துள்ளது. கண்ணன் இகழ்ந்தோரை அழித்து உலகெலாம் புகழ் நிறுத்திய கண்ணனை ஒத்து விளங்குகிறாய். எண்ணியதை நிலை நிறுத்துவதில் முருகப்பெருமானுக்கு ஈடாக காட்சி தருகிறாய்" என இந்த நான்கு பெருந் தெய்வங்களும் எதனால் புகழப்பட்டன எனக்கூறுகிறது சங்கப்பாட்டு.
பாக்டீரியாவை ஆண்ட மன்னர்கள் பலராமனைப்போல் கண்ணனைப்போல் தாங்களும் புகழ் நிறுத்தியவர்கள் என்பதைக் காட்டவும், அதே போல் "யௌதேயர்கள்" முருகனைப்போலும் சிவபெருமானைப்போலும் சிறந்தவர்கள் என வெளிப்படுத்தவும் இவ்வுருக்களை வெளியிட்டுள்ளனர் எனலாம். இதன் வாயிலாக அக்காலத்தே நிலவிய சமயச்சிறப்பும் அறிய இயல்கிறது.
மாலிருஞ்சோலையில் கண்ணனும் பலதேவனும்
இங்கு மேலும் ஒன்று அறியலாம். ஈராயிரம் ஆண்டுகட்கு முன்னர் பலதேவரும் கண்ணனும் சேர்ந்தே போற்றப்பட்டனர் என அறிகிறோம். இக்காசுகளில் இரண்டு உருவங்களும் காணப்படுவது இதைக் குறிக்கிறது. சங்க காலத் தமிழகத்திலும் இவ்விரு தெய்வங்களும் ஒரே இடத்தில் போற்றப்பட்டனர் என்பதை சங்கப்பாடல்கள் காட்டுகின்றன,
சங்கத்தொகையில் ஒன்றான பரிபாடலில் மதுரைக்கு அருகில் உள்ள திருமாலிருஞ்சோலை என்னும் அழகர்கோயிலில் மூலதெய்வமாக கண்ணனும் பலதேவனும் அமர்ந்துள்ளதை சிறப்பாக குறித்துள்ளதைக் காண்கிறோம். அதே போன்று மதுரைக்கு அருகில் இருந்தையூர் என்ற ஊரில் கண்ணனும் பலதேவனும் வணங்கப்பட்டதை பரிபாடல் கூறுகிறது.
நாகர்கோயிலில் நாகராஜாவாக பலதேவரும், கண்ணனும் ஒரே கோயிலில் இன்றும் வணங்கப்படுவதைக் காண்கிறோம். நாகர்கோயில் என்னும் ஊரப் பெயரே பலராமனின் பெயரால் வந்தது தான். அரசமரத்தடியில் நாகராஜனை பிரதிட்டை செய்து மகப்பேறு வேண்டி வணங்குவதும் பலதேவ வழிபாட்டின் தொடர்ச்சியே. பலதேவனும், கண்ணனும் திருமாலின் அவதாரமே ஆதலின் இருவரையும் இணத்துத் திருமாலாகவே வணங்குதலும் மரபாயிற்று.
2007ம் ஆண்டு ஏப்ரல் திங்கள் 14ம் தேதி தினமலர் நாளிதழில் வெளிவந்த கட்டுரை.
No comments:
Post a Comment