ராஜராஜசோழன்




பல்லாண்டு! பல்லாண்டு! பலகோடி நூறாயிரம்!

First Published : 24 Sep 2010 12:00:00 AM IST

ராஜராஜசோழன்...! இந்தத் திருப்பெயரைக் கேட்டாலே தமிழர்களின் நெஞ்சம், பெருமித உணர்வால் நிறையும். "செயற்கு அரிய செய்வார் பெரியர்' என்று பெருஞ் சாதனையாளர்களுக்கான இலக்கணத்தை வகுத்தார் திருவள்ளுவர். அவ்வகையில் பல அரிய சாதனைகளை நிகழ்த்திய பெரியோன், ராஜராஜசோழன் ஆவார்.தனது ஆட்சிக் காலத்தில் சோழ சாம்ராஜ்ய எல்லைகளை விரிவுப்படுத்திப் பெரியதாக்கினார். பெரும் வீரனாக விளங்கினார்! இன்றளவும் உலகமே வியக்கும் அளவு மிகப் பெரிய சிவாலயத்தை தஞ்சையில் உருவாக்கினார். வடமொழி, தென் மொழி வல்லுநர்களை ஆதரித்த பெரிய மனம் படைத்தவராக விளங்கினார். பெருவுடையார் கோயிலில் மிகப் பெரும் கருவறை விமானத்தை அமைத்தார். பிரம்மாண்டமான பெரிய லிங்கத்தை கருவறையில் பிரதிஷ்டை செய்தார். தனது குருநாதராகிய கருவூர் தேவரிடம் பெரும் பக்தி உடையவராகத் திகழ்ந்தார்.முடியாட்சியிலும் "குடவோலை' முறையில் தக்கோரைத் தேர்வு செய்த சீர்திருத்தப் பெரியவராய்த் திகழ்ந்தார். சைவத் திருமுறைகளில் பெரும்பற்று கொண்டிருந்தார். தில்லையில் இருந்த தேவாரப் பதிகங்களை ராஜராஜ சோழ மாமன்னர் மீட்டெடுத்தார் என்றொரு கர்ண பரம்பரைக் கதையுண்டு. ஆனால் இதைச் சில அறிஞர்கள் மறுத்துரைக்கின்றனர். எது எவ்வாறாயினும், தான் கட்டிய சிவாலயத்தில் தேவாரப் பதிகங்கள் பாட நாற்பத்தெட்டு ஓதுவார்களை இம்மாமன்னர் நியமித்ததாகக் கல்வெட்டொன்று தெரிவிக்கின்றது. இதனால் இவர் பெரும் சிவ பக்தர் என்பதும் நிரூபணமாகிறது.அரசியல், ஆன்மீகம் தாண்டி கலைகளை வளர்ப்பதிலும் பேரார்வம் காட்டியவர் ராஜராஜ சோழன். முத்தமிழில் மூன்றாம் தமிழான நாடகக் கலையையும் வளர்ப்பதில் பெரு விருப்பம் காட்டினார் இப்பேரரசர்.பெருவுடையார் ஆலயத்தின் சுற்றுப்புறத்தில் நானூறு வீடுகளைக் கட்டி, "தளிச்சேரி பெண்கள்' எனப்பட்ட நாட்டிய நங்கைகளைக் குடியமர்த்தினார். இந்தப் பகுதிகளுக்கு "தளிச்சேரிகள்' எனப் பெயரிட்டு, பரத நாட்டியக் கலையை ஊக்குவித்தார்.இவ்வாறு பற்பல விஷயங்களை அடுக்கிக்கொண்டே போக ஆதாரங்கள் நிறையவே உள்ளன. மொத்தத்தில் செயற்கரிய பெரும் சாதனைகளைப் படைத்த பேரரசர் ராஜராஜ சோழன் என்பதில் ஐயமே இல்லை.மக்கள் தலைவர்!பராந்தக சுந்தர சோழரின் மூன்றாவது மகனாகப் பிறந்தவர் ராஜராஜன். இவரது இயற்பெயர், "அருள்மொழி வர்மன்' என்பதாகும். அன்றைய அரசியல் முறைப்படி இவரது அண்ணனாகிய, "இரண்டாம் ஆதித்தன்' என்பவரே பட்டத்து இளவரசராக இருந்தார். ஆதித்தனும் வீரத்தில் சளைத்தவரல்லர்! அக்காலத்தில் பாண்டிய நாட்டை ஆண்ட வீரபாண்டிய மன்னரின் தலையைப் போர்க் களத்தில் ஆதித்த சோழர் கொய்ததாக வரலாறு கூறுகின்றது. பின்னர் இவர் வீரபாண்டியனின் மெய்க்காப்பாளர்களால் கி.பி. 969ல் மர்மமான முறையில் கொல்லப்பட்டார் என்கின்றனர். அதன் பின்னர் தனது மகளான குந்தவை பிராட்டியாரிடமும், மூன்றாவது மகனான அருள்மொழி வர்மனிடமும் பெரும் நம்பிக்கை வைத்து வாழ்ந்தார் சுந்தர சோழர். "சோழ சாம்ராஜ்யத்தின் எதிர்காலமே அருள்மொழியால் வளப்படும்' என்றவர் உறுதியாக நம்பியதாக வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.ஆனால் எதிர்பாராத விதமாக கண்டராதித்த சோழரின் மகனான உத்தமசோழர் என்பவர் வசம் சோழ நாட்டை ஒப்படைக்கும் சூழ்நிலை உருவானது. "ராஜராஜனை அரசாளும் மோகம் ஆட்டிப் படைக்கவில்லை' என்றே அவரது வரலாற்றினை நுட்பமாக ஆராய்ந்த வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். ஆனால் காலம், அவரை தலைமை ஏற்க வைத்தது.இங்கே ஒரு முக்கியமான விஷயத்தையும் குறிப்பிட்டாக வேண்டும். சுந்தர சோழரின் மூத்த மகனான ஆதித்த சோழரும் - கண்டராதித்த சோழரின் வாரிசான உத்தம சோழரும் வாழ்ந்த காலத்திலேயே அருள்மொழி வர்மருக்கு, மக்கள் செல்வாக்கு மகோன்னதமாக இருந்தது. அருள்மொழி வர்மரை "திருமாலின் அவதாரம்' என்றே அன்று சோழ அரசின் குடிமக்களில் பெரும்பாலானோர் கருதினர். திருவதிகையில் கிடைத்த கல்வெட்டொன்று, ""அருள்மொழியின் அங்கத்தில் காணப்படும் "சாமுத்ரிகா லட்சணங்கள்' அவரை மூவுலகும் ஆளும் திருமாலின் அம்சம் என்பதைத் தெளிவுப்படுத்துவதாய் உள்ளன'' என்றும் கருத்துபடப் பேசுகின்றது.மக்களின் மகத்தான ஆதரவினால் சோழ சாம்ராஜ்யத்தின் அரசராக முடி சூட்டிக் கொண்டார், அருள்மொழி வர்மர் என்னும் முதலாம் ராஜராஜ சோழன். மக்கள், தன் மீது காட்டிய பேரன்பை மனதில் கொண்டே "குடவோலைத் தேர்தல்' முறையைத் தனது ஆட்சிக் காலத்தில் செயல்படுத்தினார் போலும் இந்தப் பேரரசர்!மும்முடிச் சோழர் :பதவிக்கு வந்ததும், சோழ வம்சத்தின் பழம் புகழை மீண்டும் நிலைநாட்டி, அதை மேலும் வளர்த்திட வேண்டும் என்று உறுதி பூண்டார் ராஜராஜ சோழன். தங்களது அரச பரம்பரைக்கு எதிரிகளாக இருந்த சேர, பாண்டிய, சிங்கள மன்னர்களை வென்றொழிக்க முடிவு கட்டினார். இவர் நடத்திய "காந்தளூர் சாலைப் போர்' வரலாற்று பிரசித்தி பெற்றது. இப்போரில்தான் பாஸ்கர ரவி வர்ம சேரனின் கோட்டையைத் தகர்த்தெறிந்து, அந்நாட்டை தனது அரசாட்சியின் கீழ் கொணர்ந்தார். அன்றைய பாண்டிய மன்னன் அமரபுஜங்கனையும் வென்று புகழ் பெற்றார். சேர-பாண்டிய-சோழ மணிமுடிகளின் ஒரே உரிமையாளனாக மாறி, "மும்முடிச் சோழர்' எனப் போற்றப்பட்டார்.தெற்கே இலங்கை, வடக்கே கங்க நாடு என்று தெற்கு பாரதத்தின் முக்கால்வாசி பிரதேசங்களையும் வென்றெடுத்து - குமரி முனை முதல் கலிங்க தேசம் வரை சோழ சாம்ராஜ்யத்தை விரிவுப்படுத்தினார். கடற்படையமைப்பதில் இம்மன்னருக்கிருந்த திறமை அளவிடற்கரியது. இத்தகைய பேரரசரே பக்தி நெறியிலும் தலை சிறந்தவராகத் திகழ்ந்தார். அதன் தலையாய வெளிப்பாடே தஞ்சைப் பெருவுடையார் கோயில்.கேரளாந்தகன்:தென்னிந்தியாவுக்கு வரும் வெளிநாட்டவர்கள் விரும்பித் தேடி வரும் இடங்களில் ஒன்றாக தஞ்சைப் பெருவுடையார் கோயில் உள்ளது. வீரத்தில் ஒப்பாரும் மிக்காரும் இல்லாதவராய் ராஜராஜன் விளங்கியதை ஏற்கெனவே குறிப்பிட்டுள்ளோம். தான், கேரள அரசன் ரவிவர்மனை போரில் வென்றதை மனதில் கொண்டு, பெருவுடையார் கோயிலின் முகப்புக் கோபுரத்துக்கு, "கேரளாந்தன் வாயில்' என்றே பெயரிட்டார் ராஜராஜன்."அந்தகன்' என்ற சொல்லுக்கு, "பார்வையற்றவன்' என்பது பொருள். உயிர்களைப் பறிப்பதில் பாரபட்சம் காட்டாததால் யமதர்மனுக்கும் "அந்தகன்' என்ற பெயர் உண்டு. பார்வையற்றோர் எங்கும் இருளையே காண முடிவது, இயற்கை செய்த சதி! அப்படி இருள் மயமாயிருந்த "அந்தகாசுரன்' என்பவனையும், அந்தகனாகிய யமனையும் சம்ஹாரம் செய்தவர் சிவபெருமான் என்று புராணங்கள் கூறும். அதனால் முறையே "அந்தகாசுர மூர்த்தி' என்றும், "கால சம்ஹார மூர்த்தி' என்றும் பரமசிவத்துக்கு திருநாமங்கள் உள்ளன.சிறந்த சிவபக்தராகிய ராஜராஜ சோழனும் தனது இஷ்ட தெய்வத்தின் திருப்பெயர்களின் சாயலிலே, "கேரளாந்தகன்' எனப் போற்றப்படுவதை உளப்பூர்வமாக ஏற்றுக் கொண்டார். "சிவபாத சேகரன்' என்பதும் இவருடைய பக்தியையும், அடக்கவுணர்வையும் பறை சாற்றும் புகழ்ப் பெயர்களில் ஒன்று! ஆயினும் தனது வீரத்தை உறுதிப்படுத்தும் விதத்தில், பெருவுடையார் கோயிலின் முகப்புக் கோபுரத்துக்கு "கேரளாந்தகன் வாயில்' என்று பெயரிட்டார்.பெருவுடையார் கோயில்:கி.பி. 985-ல் பெருவுடையார் கோயிலைக் கட்ட ஆரம்பித்து, கி.பி. 1010-ல் நிறைவு செய்தார் ராஜராஜ சோழன். "கேரளாந்தகன் கோபுரம்' தாண்டி உள்ளே சென்றால், "ராஜராஜன் வாயில்' என்ற பெயரில் மற்றொரு ராஜ கோபுரத்தைக் காணலாம். அதனுள்ளே நுழைந்தால் பிரம்மாண்ட நந்தியெம்பெருமான் மண்டபமும், வலது புறத்தில் ஸ்ரீபிருஹன் நாயகி சந்நிதியும், நேரே 216 அடி உயரமுள்ள விண் முட்டும் கருவறை விமானத்துடன் கூடிய ஸ்ரீபிரகதீஸ்வரர் சந்நிதியும் காட்சியளித்து, நம்மை மெய் சிலிர்க்க வைக்கின்றன.கருவறை விமானத்துக்கு, "தட்சிண மேரு' என்று பெயரிட்டுள்ளார் ராஜராஜ சோழன். வடக்கே மேருமலை உள்ளதாகப் புராணங்கள் கூறுகின்றன. அதனால் இக்கருவறை விமானத்தை, "தெற்கில் உள்ள மேரு' என்றழைத்துள்ளார் பேரரசர். தட்சிண மேரு முழுவதற்கும் பொன் பூசிய தகடுகளை ராஜராஜ சோழன் வேய்ந்திருந்ததாகச் சொல்கின்றனர். இதை நினைத்துப் பார்க்கவே நெஞ்சம் பூரிக்கின்றது. ஆனால் பிற்காலப் படையெடுப்புகளில் இத்தகடுகள் களவாடப்பட்டிருக்கலாம்.கருவறையில் பதிமூன்றடி உயரமும், அதற்கேற்ற ஆவுடையாரும் உடைய பிரம்மாண்டமான சிவலிங்கத்தை தரிசிக்கின்றோம். கருவறையின் பக்கவாட்டில் உள்ள புறச்சுவர்களும் பிரமிப்பூட்டும் வண்ணம் அமைந்துள்ளன. அவற்றில் அமைந்துள்ள பெரும் சிற்பங்களும், கீழ்ச்சுற்று அறையின் சுவரில் காணப்படும் சோழர் கால ஓவியங்களும், "தட்சிண மேரு'வில் உச்சியில் காணப்படும் 12 அடி உயர கலசமும், ஏன் ஆலயத்தின் அனைத்து அம்சங்களுமே ராஜராஜ சோழனின் பெரும் புகழை உள்ளத்தில் பதியும்படி உணர்த்துகின்றன.இக்கோயிலில் தற்போது காணப்படும் சில கோட்டங்கள், நாயக்க மன்னர்கள் காலத்தில் அமைக்கப்பட்டவை என்பது வரலாற்று அறிஞர்களின் கருத்து. ஆனால், "எல்லாப் புகழும் இறைவனுக்கே' என்பது போல், பொதுமக்கள், அனைத்தையும் ராஜராஜ சோழனின் அரும்பணியாகவே மதித்து ஆராதிக்கின்றனர்.ஆயிரமாண்டு நிறைவு விழா: தஞ்சைப் பெருவுடையார் கோயிலின் ஆயிரமாவது ஆண்டு நிறைவு விழா, இன்றிலிருந்து துவங்கி, நாளது 26ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. சிறப்புக் கண்காட்சி, ஆய்வரங்கம், நாட்டியாஞ்சலி, ராஜராஜ சோழன் வரலாற்று நாடகம், ஓதுவார்களின் திருமுறை நிகழ்ச்சி என அற்புதமான அம்சங்களோடு இப்பெருவிழா கொண்டாடப்படவுள்ளது.தமிழர்களின் பெருமையை தரணி அறியச் செய்த ராஜராஜ சோழனின் திருப்புகழ், மேலும் பல்லாயிரம் ஆண்டுகள் நிலைத்திருக்கும் என்பதில் ஐயம் இல்லை. வாழிய செந்தமிழ்! வாழிய மும்முடிச் சோழர்!(படங்கள் - நன்றி : டாக்டர் குடவாயில் பாலசுப்பிரமணியன்)
thanks to http://www.dinamani.com/edition/story.aspx?&SectionName=Vellimani&artid=307534&SectionID=147&MainSectionID=147&SEO=&Title=

No comments: