-தொண்டைமான் கட்டபொம்மனைக் காட்டிக்கொடுத்தாரா?
Friday, January 25, 2008 thanks to http://blog.mohandoss.com/2008/01/blog-post_25.htmlமுன்னமே கூட ஒரு முறை கட்டபொம்முவும் உண்மையும்என்ற தலைப்பில் ஒரு விவாதம் ஓடியது. அதற்கும் இந்த பதிவிற்கும் சம்மந்தம் பெரிய அளவில் இல்லையென்றாலும் லிங்க் கொடுக்கிறென்.
நான் விவாதம் செய்யும் பொழுது பல தடவை சொல்லும் வார்த்தைகள் தான், இன்னிக்கு இருக்கிற விஷயங்களை வைத்து தான் எதையும் தீர்மானிக்க முடியும் நாளைக்கு நடக்கப்போகும் ஒரு விஷயத்தை கன்ஸிடரேஷனில் வைத்துக் கொண்டு எதையும் செய்யமுடியாதென்று. ஆனால் இந்த வார்த்தைகள் புரிந்துகொள்ள கொஞ்சம் கஷ்டமாகயிருக்கலாம் ஆனால் இதற்கு ஒரு அற்புதமான உதாரணம் என்று இந்த விவாதத்தைக் கூறலாம்.
என் விவாதத்தில் இந்த விஷயம் வரும் இடம் எதுவாகயிருக்குமென்றால் கடவுள் மறுப்பைப் பற்றிய வரிகளின் பொழுது, சுஜாதா அடிக்கடி சொல்லும் உலகத்தின் தோற்றம் பற்றிய அத்தனை விஷயங்களையும் அறிவியல் விவரித்து விடும் எதிலிருந்த்து என்றால் பிக் பேங்கிலிருந்து ஆனால் பிக் பேங்கிற்கு முந்தயதையும் பிங் பேங் நிகழ்ந்ததையும் தான் இனி அறிவியல் கண்டுபிடிக்க வேண்டும் என்று. இதை விவாதத்தின் பொழுது சொன்னால் உடனேயே நாளைக்கு அறிவியல் இன்றைக்கு உள்ளது என்று சொல்வதை நாளை இல்லை என்று சொல்லும் என்பார்கள். அப்பொழுது சொல்வேன் இன்றைக்கு நிரூபிக்கப்பட்ட விஷயத்தை வைத்து தான் பேசமுடியும் நாளைக்கு நிரூபிக்கப்படக்கூடிய விஷயத்தை கணக்கில் கொண்டு பேசமுடியாதென்றும். சரி என் ஜல்லியை இத்துடன் முடித்துக் கொண்டு பதிவின் விஷயத்திற்கு வரலாம்.
கட்டபொம்மன் பாஞ்சாலங்குறிச்சியிலிருந்து தப்பி புதுக்கோட்டைக்கு வந்து தங்கி இருந்ததாகவும், அவரை ராஜா விஜயரகுநாதத் தொண்டைமான் நயவஞ்சகமாக ஆங்கிலேயரிடம் காட்டிக்கொடுத்தார் என்றும் சொல்லப்படுகிறது.
புதுக்கோட்டைக்கு "காட்டிக்கொடுத்த ஊர்" என்று பாமர மக்கள் பேசுவதைக் கேட்கிறோம். நாடங்களிலும் கதைகளிலும் பள்ளிப் பாடப்புத்தகங்களிலும் "காட்டிக்கொடுத்தான் தொண்டைமான்" என்று பேசப்பட்டும் எழுதப்பட்டும் வருவதைக் காண்கிறோம்.
'காட்டிக்கொடுத்தான்' என்னும் சொல் வரலாற்று ஏடுகளில் சமீபகாலத்தில் திணிக்கப்பட்ட சொல்லாகும்! கட்டபொம்மன் பிடிபட்டது புதுகோட்டையில்தான் என்பதையும் அவரை ராஜா விஜயரகுநாத தொண்டைமான் ஆங்கிலேயரிடம் ஒப்படைத்த விவரங்களையும் எள்ளளவும் மறுப்பதற்கில்லல. ஆனால் கட்டபொம்மனை தொண்டைமான் காட்டிக் கொடுத்தார் என்று சொல்வது சரிதானா?
காட்டிக் கொடுத்தல் என்னும் சொல்லுக்கு இணையான ஆங்கிலச்சொல் 'Betrayal' என்பதாகும். இச்சொல்லுக்கு ஆங்கில அகராதி கீழ்க்கண்டவாறு பொருள் தருகிறது. 'To deliver into the hands of an enemy by treachery in violation of trust' அதாவது "அடைக்கலம் என்று அண்டிவந்தவரை" தனது லாப நோக்கங்களுக்காக நயவஞ்சகமாக அவரது எதிரியிடம் ஒப்படைக்கும் செயல் எனப் பொருள் கொள்ளலாம். கட்டபொம்மன் தொண்டைமானிடம் அடைக்கலம் கேட்டு வரவில்லல. அப்படி நிகழ்ந்ததாக எந்த வரலாற்றுக் குறிப்பும் இல்லை. அப்படி நடந்திருக்கவும் வாய்ப்பும் இல்லை. தொண்டைமான் ஆங்கிலேயரின் மேலாண்மைக்குக் கட்டுப்பட்ட அவர்களின் ஆதரவாளர் என்பது அப்போது நாடறிந்த செய்தி. இது கட்டபொம்மனுக்கு தெரிந்திருக்குமல்லவா? இந்நிலையில் அவர் எப்படித் தொண்டைமானிடம் பாதுகாப்பை நாடியிருக்க முடியும்? தொண்டைமானிடம் கட்டபொம்மன் அடைக்கலம் கேட்டுவந்தார் என்று சிலர் எழுதியிருப்பது அவர்களுடைய கற்பனைக் கதை!
கட்டபொம்மன் ஆங்கிலேயருக்கு எதிரி. ஆங்கிலேயர் தொண்டைமானுக்கு நண்பர்கள். எதிரிக்கு எதிரி நண்பன். நண்பனுக்கு எதிரி எதிரி என்பது காலம் காலமாக நாம் கண்டுவரும் அரசியல் ராஜதந்திர சித்தாந்தம் அல்லவா? முடியுடைய மூவேந்தர் காலந்தொட்டு இன்றைய நாள் அரசியல் வரை, அரசியல்-பதவிப் போட்டிகள் காரணமாக தந்தையும் மகனும் சகோதரனும் சகோதரனும், உறவினரும் உறவினரும் தங்களுக்குள் சண்டையிட்டுக்கொண்டு ஒருவரையொருவர் அழித்துக்கொண்ட நிகழ்ச்சிகள் ஏராளமாக உண்டல்லவா? இவற்றிற்கெல்லாம் அரசியல் ரீதியான அங்கீகாரம் கிடைத்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
தொண்டைமான் ஆங்கிலேயரின் மேலாதிக்கத்திற்குக் கட்டுப்பட்டவர். கட்டபொம்மன் புதுக்கோட்டை எல்லையில் ஒளிந்திருப்பது, கலெக்டர் லூசிங்க்டன் கடிதம் எழுதிய பிறகே தொண்டைமானுக்குத் தெரியவருகிறது. (ஆங்கிலேயரின் கடிதங்கள் கூட கட்டபொம்மன் தொண்டைமானிடம் அடைக்கலம் புகுந்திருந்தான் என்று குறிப்பிடவில்லை என்பதும் இங்கு நோக்கத்தக்கது) மேலாண்மை வகிப்பவருக்கு கட்டுப்பட்டு கட்டபொம்மனைக் கண்டுபிடித்து(ஆங்கிலேயரிடம்) ஒப்படைத்தது எப்படிக் காட்டிக் கொடுத்ததாகும் ஏனெனில் இது போன்ற நிகழ்ச்சிகளெல்லாம் அப்போதைய அரசியலில் சர்வ சாதாரணமானவை!
இதற்குப் பிறகும் ஒரு கேள்வி எழக்கூடும், கோரிக்கை விடுத்தவன் அந்நிய நாட்டான், நம்மவனை - கட்டபொம்மனைத் தொண்டைமான் பிடித்துக் கொடுக்கலாமா?
இதுபற்றி விருப்பு வெறுப்பு இன்றி சிந்திக்க வேண்டியது அவசியமாகும்! அக்கால அரசியல் சூழ்நிலை, வரலாற்றுப் பின்னணி தமிழகத்தை ஆண்டுவந்த சிற்றரசர்கள் மற்றும் பாளையக்காரர்களின் அரசியல் நடவடிக்கைகள், அவர்களுக்குள் இருந்த உறவு மக்களுக்கும் இதுபோன்ற ஆட்சியாளர்களுக்கும் இருந்த உறவு ஆகிய அனைத்தையும் ஒப்பிட்டுப் பார்த்தபின்பே இந்தச் செயலின் தன்மையை எடை போட முடியும்.
புதுக்கோட்டை ஒரு சுதந்திரமான அரசு அல்ல, ஆங்கிலேயரின் மேலாதிக்கத்திற்கு உட்பட்டிருந்த ஒரு சிற்றரசு. மேலாண்மைக்கு கட்டுண்டு கிடப்பதுதானே அரசியல் சித்தாந்தம்! ராஜா விஜயரகுநாதத் தொண்டைமானின் அப்போதைய நிலையும், அவர் வாழ்ந்த காலத்தின் அரசியல் சூழ்நிலையையும் பார்க்கிற போது கட்டபொம்மன் விஷயத்தில் அவர் செயல்பட்டவிதத்தில் எவ்விதத் தவறும் இருப்பதாக கூற முடியாது என்று ஒரு ஆய்வாளர் கூறூகிறார்.(சிரஞ்சீவி - புதுக்கோட்டை சமஸ்தான வரலாறு 1980. பக்கம் 105)
தற்போதைய அரசியல் விழிப்புணர்ச்சிகளை வைத்து இன்றைக்க்கு 200 ஆண்டுகளுக்கு முன் நடந்த நிகழ்ச்சிகளை ஒப்பிட்டு கூறுவது ஏற்புடையதாகாது. சுதந்திரம் தேசியம் நம்நாடு நம்மவர் போன்ற உணர்வுகளெல்லாம் அறியாத காலம் அது. கட்டபொம்மன் காலத்தில் ராஜா விஜயரகுநாத தொண்டைமான் காலத்தில் தென்னாட்டில் இருந்த பெரும்பாலான சுதேச மன்னர்களும் பாளையக்காரர்களும் ஆங்கிலேயரின் நன்மதிப்பைப் பெற எதுவும் செய்யத் தயாராக இருந்தனர். ஆங்கிலேயரைக் பிடிக்கவில்லை என்றால் டச்சுக்காரரையோ பிரெஞ்சுக் காரரையோ அண்டி உதவி வேண்டிய பரிதாபமான சூழ்நிலையுந்தான் அக்கால சுதேச மன்னர்களிடமும் பாளையக்காரர்களிடமும் காண்கிறோம். ஆகவே ஐரோப்பிய நாட்டினரின் தலைமையில் கீழேயே நமது நாட்டு மன்னர்களும் சிற்றரர்களும் அணி திரண்டு நிற்கவேண்டிய கட்டாய சூழ்நிலை இருந்தது. ஜெகவீரபாண்டிய கட்டபொம்மனுக்கும் பூலித்தேவருக்கும் கூட ஆங்கிலேயரை எதிர்க்க டச்சுக்காரர்களின் உதவியை நாடினர் என வரலாற்றுக் குறிப்புகள் தெரிவிக்கின்றன(yusufhkhan letter to Madras Council 15.6.1760 MCC. Vol 8. P 194 - 195, 205 - 218) பேயை விரட்ட பிசாசை துணைக்கு அழைத்த கதையல்ல இது? இருப்பினும் இது போன்ற அரசியல் சூழல் அப்போது தவிர்க்க முடியாததாக இருந்தது என்பதையும் நாம் ஒப்புக்கொண்டேயாக வேண்டும்.
சில உண்மை நிகழ்ச்சிகளையும் நாம் இங்கு கவனத்தில் கொள்ள வேண்டும். இதே காலகட்டத்தில் புதுக்கோட்டையை அடுத்துள்ள தஞ்சாவூரை ஆண்ட மராட்டிய மன்னர்களும் ஆங்கிலேயருக்கும் நிலவிய அரசியல் மேலாண்மைத் தொடர்பை சற்று காண்போம். கட்டபொம்மன் பிடிபட்டபிறகு, கட்டபொம்மனின் சகோதரர் சிவத்தையா தஞ்சாவூர் மன்னர் சரபோஜிக்கு கடிதம் எழுதி தமக்கு ஆதரவளிக்கும் படி கோருகிறார். சிவத்தையாவின் கடிதத்தைக் கொண்டுவந்த தூதுவன் அந்தக் கடிதத்தை சரபோஜியின் மந்திரியான தத்தாஜியிடம் கொடுக்க, தத்தாஜி கடிதம் கொண்டு வந்தவனை சிறையில் தள்ளிவிட்டு அக்கடிதத்தை ஆங்கிலேயருக்கு அனுப்பி வைக்கிறார். "ஆங்கிலேயருடன் தஞ்சாவூர் மராட்டிய மன்னர்கள் பல ஒப்பந்தகளை செய்துகொண்டனர். ஒவ்வொரு ஒப்பந்தத்தாலும் மராட்டிய மன்னர்கள் சுய உரிமையை இழத்தல், படைக்குறைப்பு, ஆங்கிலேயப் படைகளை தஞ்சாவூரில் இருக்கச்செய்து அவற்றின் பராமரிப்பிற்குப் பெருந்தொகை அளித்தல், நவாபுடன் தொடர்புகொள்ளுங்கால் ஆங்கிலேயரின் வழியே தொடர்பு கொள்ளுதல், வெளிநாட்டுக் கொள்கையை ஆங்கிலேயரின் சொற்படியே அமைத்துக் கொள்ளுதல் ஆங்கிலேயரின் நண்பர்க்கும் பகைவர்கட்கும் இவர்களும் நண்பரும் பகைவருமாதல் ஆகிய கட்டுப்பாடுகளுக்கு இடையே அகப்படலாயினர். நேரிடையாகவொ மறைமுகமாகவோ இங்ஙனம் ஆங்கிலேயருக்கு அடங்கி அவர் வழி ஒழுகவேண்டி வந்தது(கே. எம் வெங்கடராமையா. தஞ்சை மராட்டிய மன்னர்கால அரசியலும், சமுதாய வாழ்க்கையும் - தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர் - 1984 பக்கம் 59). இப்படி ஆங்கிலேயரின் நன்மதிப்பைப் பெற சுதேச மன்னர்கள் தங்களுக்குள் போட்டியிடக் கொண்டு செயல்பட நிகழ்ச்சிகள் பலவாகும்.
மருது சகோதர்கள் ஆங்கிலேயரை முழு மூச்சாக எதிர்ப்பதாகக் கூறி திருச்சி பேரறிக்கையை (16.6.1801) வெளியிட்ட பின்னும்(Revenue Sundries Vol. 26/16.6.1801. pp 441 - 70) 24.7.1801ல் கவர்னர் கிளைவுக்கு அவர்கள் எழுதியுள்ள கடிதத்தில் (Revenue Consultation Vol. 110 p. 1861 - 1869) தாங்கள் ஆங்கிலேயருக்கு கட்டூப்பட்டு கிஸ்தி செலுத்திவந்த வரலாற்றையெல்லாம் நினைவுகூர்ந்து, ஆங்கிலேயரின் நட்பை நடும் பாணியில் எழுதி இருப்பதோடு பாஞ்சாலங்குறிச்சி பாளையக்காரர்களையும் குறைகூறி எழுதியுள்ளனர். அவர்களது ஆங்கிலேய எதிர்ப்பு இயக்கத்தில் ஏன் இந்த முரண்பாடு என்பதை ஆராய வேண்டாமா?
பாஞ்சாலங்குறிச்சியிலிருந்து தப்பிய கட்டபொம்மனைப் பிடிக்க எட்டயபுரம் பாளையக்காரரின் படைகள் பின் தொடர்ந்து சென்றதாகவும் முதலில் கட்டபொம்மன் சிவகங்கைக்குச் சென்றதாகவும் பின்பு அங்கிருந்து புதுக்கோட்டை காட்டுப் பகுதிக்கு வந்ததாகவும் தெரியவருகிறது(Radhakrishna Iyer S. - A General History of Pudukkottai State- P.304) இச்செய்தி ஆராயப்பட வேண்டியதாகும். புரட்சிப் பாளையக் காரர்களின் கூட்டணியில் கட்டபொம்மனும் இருந்தார். ஆகவே அவர் மருது சகோதரர்களின் ஆதரவைத் தேடி சிவகங்கை சென்றிருக்க வாய்ப்புண்டு ஆனால் முதலில் சிவகங்கை சென்று பின் அங்கிருந்து புதுக்கோட்டைக் காட்டு பகுதிக்கு வந்து ஏன் ஒளிந்து கொள்ள வேண்டும் அப்படியானால் அவருக்கு அங்கு (சிவகங்கையில்) ஆதரவு கிடைக்கவில்லையா?
அக்கால இந்திய அரசியலில் ஐரோப்பிய நாட்டினரின் ஆதிக்கப் போட்டிகளில் ஆங்கிலேயர் தங்களது சக்தியை நிலைநாட்டி, நாட்டையே தங்களது ஏகபோக சொத்தாக பிரகடனப் படுத்திக் கொண்ட நிலையில், நமது நாட்டு(சுதேச) மன்னர்களும் சிற்றரசர்களும் பாளைக்காரர்களும் தங்களது பாதுகாப்பிற்கும் தங்களது குடிகளின் நலன் பாதுகாக்கப்படவும் நிலையானதொரு நேச சக்தியை நாடுவது இயற்கையே இந்த வகையில் புதுக்கோட்டை ஆங்கிலேயரை தனது நட்புக்குத் தேர்ந்தெடுத்துக் கொண்டிருக்கிறது.
இங்கு ஒன்றை நன்றாக நினைவில் கொள்ள வேண்டும். தொண்டைமான் மன்னர்களுக்கும் ஆங்கிலேயருக்கும் கட்டபொம்மன் தொடர்பான நிகழ்ச்சிகள் நடந்த காலத்தில்(1799) தொடர்பு ஏற்படவில்லை என்பதும், அதற்கு முன்பே அதாவது 1755லேயே இவர்களுக்கிடையே ஒரு அரசியல் உடன்படிக்கை அடிப்படையில் உறவு ஏற்பட்டுவிட்டது என்பதுதான் அது. கட்டபொம்மனைப் பிடித்துக் கொடுப்பதற்காக, புதிதாக ஆங்கிலேயர்களுடன் உறவு வைத்துக் கொள்ளவில்லை. கட்டபொம்மனை பிடித்துக் கொடுத்ததினாலேயே தொண்டைமானுக்குப் பல சலுகைகள் வழங்கப்பட்டன என்று கூறுவது வரலாற்றை சரியாக படிக்காதவர்களின் கூற்றாக அமைகிறது. இதற்கு முன்பே இந்தியாவில் வேறெந்த சமஸ்தானங்களும், சிற்றரசுகளும் இல்லாத பல சலுகைகள் தொண்டைமானுக்கு வழங்கப்பட்டிருக்கின்றன. 1755ம் ஆண்டுக்கு முன்பே ஆற்காடு நவாபின் மேலாண்மையை ஏற்று ஆட்சி செலுத்திய தொண்டைமான் மன்னர்கள் ஆற்காடு நவாப் ஆங்கிலேயரின் பக்கம் சேர்ந்து கொண்டபோது, தொண்டைமானும் ஆங்கிலேயர் பக்கம் சேர்ந்தார் என்பது தெரியவருகிறது. இந்நிலையில்(அக்கால அரசியல் சூழ்நிலையில்) மேலாதிக்கம் வகித்த ஆங்கிலேயரின் வேண்டுகோளுக்கு இணங்க கட்டபொம்மனை பிடித்துக் கொடுத்தது அரசியல் ரீதியாக ஏற்புடையதுதான் என்பது விளங்கும்.
ஆகவே புதுக்கோட்டை தொண்டைமான் - கட்டபொம்மன் வரலாற்று நிகழ்வுகளை அக்காலச் சூழலையும் அரசியல் ஆதிக்க போராட்டங்களையும் கருத்தில் கொண்டு ஆராய்ந்தால் 'காட்டிக்கொடுத்தான்' தொண்டைமான் என்பது வரலாற்ற்றுச் சான்றுகளுக்கு முரணானது என்பது அரசியல் சிந்தாந்தங்களுக்கு ஒவ்வாதது என்பதும் விளங்கும். கட்டபொம்மனை மிகைப்பட உயர்த்திக் காட்டுவதற்க்காக கதை, நாடகங்கள் எழுதப்போந்த சில புத்தக ஆசிரியர்கள் அரைகுறைச் செய்திகளின் அடிப்படையில் "தொண்டைமான் காட்டிக் கொடுத்தான்" என்றும் புதுக்கோட்டையைக் "காட்டிக் கொடுத்த ஊர்" என்றும் எழுதிவருவது நல்ல வரலாற்றுச் செய்தியாகுமா? இது போன்ற ஆதாரமற்ற வாசகங்கள் வரலாற்று ஏடுகளிலிருந்து எடுக்கப்பட வேண்டும் என்பதே நடுநிலை வரலாற்று ஆய்வாளர்களின் எண்ணமாக இருக்க முடியும்.
PS: மேற்சொன்ன பத்தியை எழுதியவர் 'புதுக்கோட்டை மாவட்ட வரலாறு' புத்தகத்தை எழுதிய டாக்டர் ஜெ. ராஜாமுகமது. பதிவை முழுவதுமாகப் படித்துவிட்டு அவர் சொல்லும் விஷயத்தை எதிர்த்து பின்னூட்டம் போடலாம். அந்தப் புத்தகம் படித்திருக்கிறியா இதில் இப்படி எழுதியிருக்கிறது என்று சொல்லாதீர்கள். எடுத்துப் போட்டு எழுதி லிங்க் கொடுத்தால் நன்றாகயிருக்கும், சும்மா அங்க இங்க என்று சொல்லவேண்டாம்.
No comments:
Post a Comment