ஏக சந்த கிராஹி
பழனி
மாம்பழக் கவிச்சிங்க நாவலர்
பாகம் 1
டாக்டர் எஸ்.ஜெயபாரதி
கடாரம்
மலேசியா
பழனி
மாம்பழக் கவிச்சிங்க நாவலர்
பாகம் 1
டாக்டர் எஸ்.ஜெயபாரதி
கடாரம்
மலேசியா
மாம்பழக்கவிச்சிங்கத்தைப் பற்றி அகத்தியரில் எழுதப்பட்டிருக்கிறது.
'ஏகச்சந்தக்கிராஹி' என்ற தலைப்பில் ஆங்கிலத்தில் இண்டாலஜியில் இருமுறை எழுதியிருக்கிறேன்.
(நம்ம ஆட்களைப் பற்றியும் அவர்களின் சிறப்புகளைப் பற்றியும் உலகறியுமாறு ஆங்கிலத்தில் எழுதவேண்டுமென்று முழுமூச்சாக ஆங்கிலத்தில் எழுதிக்கொண்டிருந்தேன். Tamil Chauvinist என்று ஆசாமிகள் நினைத்துவிட்டார்கள்.)
கண்கள் இல்லாத நிலையில் முதுகின்மேல் தம் தந்தையார் விரலால் எழுத்தை எழுத எழுத, எழுத்தின் வடிவங்களை அப்படியே நினைவில் இருத்திக்கொண்டு எழுதக்கற்றுக்கொண்ட விதத்தைப் பற்றியும், எதையுமே படிக்கச்சொல்லி, அதனை உடனேயே மனதில் இருத்திக்கொண்டு எப்போது வேண்டுமானாலும் திருப்பிச் சொல்லும் ஆற்றலைப்பற்றியும் சொல்லியிருந்தேன்.
(வியப்புக்குரிய நினைவாற்றல் கொண்ட இன்னொருவர் இருந்தார். வன்றொண்டச் செட்டியார் என்ற பெயர்கொண்டவர்; மகாவித்வான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின் மாணவர்).
மெய்யெழுத்துக்களே இல்லாமலும் நெடில்கள் இல்லாமலும் உதடு ஒட்டாத நிரோட்டகமாகவும் அவர் பாடிய பாடல் ஒன்று உண்டு.
அவருடைய பரம்பரையில் வந்த ஒருவர், அவரைப் பற்றிய சிறுநூலொன்றை எழுதியிருக்கிறார்.
==========================
பழனி மாம்பழக்கவிச்சிங்க நாவலர்
அவர் பழனியில183்6-இல் பிறந்தவர். இவர்களின் குடிப் பெயராகிய 'மாம்பழம்' என்ற பெயரை இவர் தந்தையாகிய முத்தைய ஆச்சாரியாரும் தாய் அம்மணியம்மாளும் வைத்தனர்.
மூன்று வயதில் வைசூரி நோயால் மாம்பழத்தில் கண்பார்வை மறைந்துபோயிற்று.
ஆனாலும் அவர்க்கு மற்ற புலன்களின் ஆற்றல் மிக அதிகமாக இருந்தது. நினைவாற்றலும் அவதான ஆற்றலும் கூடுதலாக இருந்தன.
முத்தைய ஆசாரி எழுத்துக்களை மாம்பழத்தின் முதுகில் எழுதி அவற்றின் வரி வடிவத்தை அவர் உணர்ந்துகொள்ளுமாறு செய்தார். தன் முதுகின்மீது எழுத்துக்களை விரலால் எழுதச்செய்து, எழுத்துக்களின் வடிவங்களை நன்கு அறிந்து, அதன்பின்னர் ஓலையில் எழுத்தாணியால் எழுதப் பயின்றார். காதால் கேட்கும் எதனையும்அப்படியே நினைவில் இருத்திக்கொள்ளும் ஆற்றலும் அவருக்கிருந்தது.
மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகியவற்றில் கண்ணில் ஆற்றல் இல்லாதிருந்தபோதிலும் மற்ற நான்கு புலன்களும் பன்மடங்கு கூர்மையாவையாக இருந்தன. அத்துடன் ஞாபகசக்தியும் சேர்ந்து கொண்டது.
'ஏகச்சந்த கிராஹி' என்று சொல்வார்கள்.
ஒருவர் ஒருமுறை சொன்னமாத்திரத்தில் அதை அப்படியே ஞாபகத்தில் வைத்துக்கொள்ளும் ஆற்றல் உள்ளவர்களை அவ்வாறு குறிப்பிடுவார்கள்.
மாம்பழத்திற்கு இன்னும் அதிகப்படியான ஆற்றல் இருந்தது.
ஒரு வரியைச் சொன்னால் அதை அப்படியே நினவில் இருத்திக்கொள்வார். அதன் பின் அடுத்த வரியைச் சொன்னால் முதல் வரியுடன் சேர்த்து இருத்திக்கொள்வார். இப்படியே எத்தனை வரிகளைச் சொன்னாலும் அவற்றை ஞாபகத்தில் ஆழமாகப் பதித்துக்கொள்வார். திருப்பியும் சொல்வார். வரிசைக்கிரமமாகவும் சொல்வார். தனியாகவும் எந்த இடத்தில் இருக்கும் பாடலையோ வரியையோ கருத்தையோ கேட்டாலும்தாமதிக்காமல் யோசிக்காமல் சொல்லிவிடக்கூடிய பேராற்றல் அவருக்கு இருந்தது.
இவ்வாறு பல பெரிய நூல்களையும் மனதில் பதியவைத்துக்கொண்டார்.
யாப்பிலக்கணத்தையும் பிழையறக் கற்றார்.
அத்துடன் வடமொழியையும் இரண்டு ஆசிரியர்களிடம் கற்றார்.
ம ுருகனின் பேரருள் அவருக்கு இருந்தது.
இவரை முதலில் ஆதரித்தவர் பாப்பம்பட்டி என்னும் ஊரில் இருந்த பெருநிலக்கிழார். அவர் பேரால் பலவகையான பிரபந்தங்களை இயற்றினார். பொன்முடிப்பு, கெண்டை உருமால், சரிகைப் பட்டு வேட்டி, பெட்டிவண்டி சால்வை போன்ற மதிப்பும் கௌரவமும்கொண்ட பொருள்களைப் பெற்றார்.
அந்தக் காலத்தில் சேதுநாட்டைப் பொன்னுசாமித் தேவரும் அவர் தம்பியாகிய முத்துராமலிங்க சேதுபதியும் ஆண்டுவந்தனர். அவர்கள் அந்தக் காலத்தில் புலவர்களைப் பெரிதும் ஆதரித்து அவர்களின் தகுதிக்கேற்ற கௌரவத்தையும் சன்மானத்தையும் தந்தார்கள்.
பல நண்பர்களின் உதவியால் ராமநாதபுரத்துக்குச் சென்றார்.
பல நண்பர்களின் உதவியால் ராமநாதபுரத்துக்குச்சென்றார்.
அந்தக்காலங்களில் அங்கவீனர்கள் போன்றோரை மன்னர்கள் பார்க்கமாட்டார்கள்.
அந்தகராகிய மாம்பழத்தையும் பாராமலிருந்துவிட்டார்கள்.
பொறுமையாக மாம்பழம் காத்திருந்தார்.
ஒருநாள் மகாலட்சுமியைப் பற்றிய சமஸ்கிருதப்பாடல் ஒன்றைச் சொல்லி அத¨னாப்படியே பொருள் மாறாமல் தமிழில் யாத்துத் தருமாறு அவைப ்புலவர்களிடம் பொன்னுச்சமித் தேவர் கேட்டுக்கொண்டார்.
புலவர்களில் ஒருவர் மாம்பழத்திடம் வந்து உரிய கருத்துத் தோன்றும்படி பாடலை இயற்றித்தர வேண்டினார். மாம்பழமும் பாடிக் கொடுத்தார்:
அம்புயமென்றாது சகியாதுனது தாள்சகிமார்
அம்புநிகர் பார்வைசகியாது மெய்யவ் -வம்புயங்கை
தாங்கலமெய் மால்வலுரஞ் சார்தலரி தென்னிலென்வாய்
வீங்குரையாற்றுங்கொல் திருவே
உனது தாள் அம்புய மென் தாது சகியாது - மலர்ந்த தாமரையின்
மகரந்தத்தூள்களைக்கூட உன் திருவடிகள் தாங்கமாட்டா.
(உனது) மெய் (உனது)சகிமார் அம்புநிகர் பார்வை சகியாது -
உன்னுடைய பாங்கிமார்களுடைய பார்வைகளோ அம்புபோல
கூர்மையானவை; ஆகவே அந்தப் பார்வையையும் உன் மென்னுடல்
தாங்கமாட்டாது.
உன்னுடைய கைகளோ தாமரை மலரையும் தாங்கும் தன்மை
உடையவையல்ல
இவ்வளவு மென்மையானவள் நீ!
ஆகவேதான் திருமாலின் வலிமையான மார்பில் ஸ்ரீவத்ச மருவில்
இருந்துகொண்டு அந்த வலிமையான மார்பைச் சார்ந்திருக்கிறாய்.
இவ்வாறு இத்தனை மென்மையான உன்னுடைய மென்மையான செவி
என்னுடைய வன்மையான உரையைப் பொறுக்குமோ?
பாடலைக்கேட்ட பொன்னுசாமித்தேவர் அதன் அருமையை நன்கு உணர்ந்து அனுபவித்தார்.
உடனேயே தகுதிபடைத்தவர்களை அனுப்பி மாம்பழத்தைக் கூட்டிவரச் செய்தார்.
பொன்னுச்சாமித் தேவருடன் அவருடைய தம்பியாராகிய மன்னர் சேதுபதியும் அமர்ந்திருப்பதை உணர்ந்தார்.
Protocol என்று சொல்லப்படும் மரபை அனுசரித்து மாம்பழம் முதலில் சேதுபதியைக் குறித்து ராஜமரியாதையாக ஒரு பாடலைப் பாடிவிட்டு, அடுத்தபடியாகப் பொன்னுச்சாமித் தேவரைப் பாடினார்.
தக்க பரிசில்களைக் கொடுத்து அங்கேயே இருக்கச் செய்துகொண்டனர்.
அடிக்கடி அவர்களைச் சென்று பார்த்து வரலானார் புலவர்.
மாம்பழக்கவிராயர் ராமநாதபுரத்தில் இருந்த காலத்தில் பல பாடல்களைப் பாடியிருந்திருக்கிறார். அவற்றில் பல, மிகவும் சமயோசிதமாகப் பாடப்பட்டவை.
இன்னொன்றும் உண்டு.
அவருடைய பெருமையையும் அவருடைய அரிய ஆற்றலையும் மற்றவர்களும் நன்கு உணரவேண்டும் என்று மன்னரும் தமையனாரும் நினைத்தார்கள்.
ஆகவே மற்றவர்களால் முடியாது என்று நன்கு தோன்றச்செய்யும் பல பாடல்களையும் அவர்கள் மாம்பழத்தை நொடியில் பாடுமாறு சொல்லி அவ்வாறே ஆசுகவியாகப் பாடச் செய்தனர்..
ஒருமுறை 'கிரியில் கிரியுருகுங ்கேட்டு' என்ற வரியை ஈற்றடியாகக் கொண்டு வேண்பாவொன்றை இயற்றச் சொன்னார்.
"மாலாம் பொன்னுச்சாமி மன்னர்பிரான் தன்னாட்டில்
சேலாங்கண் மங்கையர் வாசிக்கும் நல்யாழ் - நீலாம்
பரியிற் பரியகொடும் பாலை குளிரும் ஆ
கிரியில் கிரியுருகும் கேட்டு"
திருமாலை நிகர்த்த பொன்னுச்சாமி மன்னரின் சேதுநாட்டில்
கயற்கண்கள் கொண்ட பெண்கள் நல்ல யாழை வாசிக்கும்போது,
அவர் வாசிக்கும் நீலாம்பரி ராகத்தைக்கேட்ட மாத்திரத்தில்
அதன் இனிமை ஆற்றலால் கொடிய பாலை நிலமும் குளிர்ந்துபோகும்.
ஆகிரி ராகத்தை கேட்டவுடன் மலையும் உருகிவிடும்.
இன்னொரு சமயம் இன்னொரு கடினமான விஷயத்தைக் கொடுத்தார்.
அருணகிரிநாதர் பாடிய முதற்பாட்டு:
'முத்தைத்தரு பத்தித்திருநகை
அத்திக்கிறை சத்திச்சரவண
முத்திக்கொரு வித்துக் குருபர வெனஓது
பொன்னுசாமித்தேவர் மாம்பழத்திடம் இந்த அடிகளை அப்படியே வெண்பாவாக அமையுமாறு பாடச்சொன்னார்.
மாம்பழம் சிறிதும் யோசிக்கவேயில்லை.
"அதற்கென்ன. பாடுவது மிக எளிதாயிற்றே. அந்த அடிகளுக்கு முன்னால் 'வரமுதவிக் காக்கு மனமே வெண்சோதி பரவிய' என்னும் சொற்றொடரைப் போட்டுக்கொண்டு படியுங்கள்; வெண்பாவாக மாறிவிடும்",
என்று சொன்னார்.
"வரமுதவிக் காக்கு மனமேவெண் சோதி
பரவியமுத் தைத்தரு பத்தித் - திருநகையத்
திக்கிறை சத்திச் சரவணமுத் திக்கொருவித்
துக்குருப ரன்னெனவோ து"
"ஏ மனமே! உனக்கு வரமும் தந்து உன்னைக் காக்கும்படியாக,
"வெண்மையான சோதி வீசும் முத்துக்களின் வரிசைபோல் விளங்கும்
பல்வரிசையுடன் திருநகை புரியும் தேவயானையின் தலைவனாகிய
சத்திச்சரவணன்; அவனே முத்திக்கு ஒரு வித்தாக விளங்கும் குருபரன்"
என்று ஓதுவாயாக!"
வெண்பாவாக மாறிவிட்டது.
No comments:
Post a Comment