அறுத்துக்கட்டிய " அகமுடையார்கள்"...

thanks to   http://krpsenthil.blogspot.com/2010/11/blog-post_25.html
 
தேவர் இனமக்கள் பொதுவாக மூன்று உட்பிரிவுகளில் அடங்குவார்கள் முக்குலத்தோர் என அழைக்கப்பட்ட கள்ளர், மறவர், அகமுடையார் என இம்மூன்றும் அதன் உள்ளடக்கங்களும் கொண்ட இவர்களைப்பற்றி உங்களுக்கு தெரிந்திருக்கும், இந்த இனத்தின் திருமணங்கள் அதன் தனிபிரிவுகளுக்கு உள்ளேதான் பெரும்பாலும் நடக்கும் என்றாலும் கொஞ்சம் நகர வாழ்க்கைக்கு பழகிய பிறகு மற்ற பிரிவுகளிலும் இப்போது பெண் கொடுத்து, எடுக்கிறார்கள், தென் தமிழகம் முழுவதும் பரவலாக வாழும் இம்மக்களில் கள்ளர்கள் தஞ்சை, திருச்சி மாவட்டங்களில், மிகுதியாகவும், அகமுடையார்கள் திருவாரூர், புதுக்கோட்டை , மதுரை மாவட்டங்களில் மிகுதியாகவும், மறவர்கள் திருநெல்வேலி பகுதிகளில் மிகுதியாகவும் வசிக்கின்றனர். இவர்கள் ஜாதி ரீதியாக தங்கள் சார்ந்த ஜாதியின் மீது ஆழ்ந்த பற்றுகொண்டவர்கள். இந்த ஜாதியில் மறுமணங்கள் பரவலாக நடைபெறும், ஆனால் எங்கள் ஊரில் மறுமணம் என்பது மிக அதிகம். அதனால் எங்கள் ஊர்க்காரர்களை மட்டும் சில வருடங்கள் முன்புவரைக்குமே அறுத்துகட்டிய ' அகமுடையார்கள்' என்றுதான் சுற்றுவட்டாரத்தில் அழைப்பார்கள்.

திருவாரூர் மாவட்டத்திலேயே அதிக மக்கள் தொகை கொண்ட கிராமம் எங்கள் ஊரான பரவாக்கோட்டை கிராமம். சிங்கபூர்வரை தன் புகழை பரப்பியுள்ள இக்கிராம வாசிகள் அதன் சுற்றுவட்டார மக்களாலும் சற்று பயத்துடன் பார்க்கபடுகிறவர்கள். இதற்க்கு பலமான காரணம் ஒரு ஆளை கைவைத்தால் அவனுக்காக அந்த ஊரே திரண்டு வரும். அதனால் இந்த ஊர் ஆட்கள் என்றால் யாரும் வம்பு வைத்துக்கொள்ள மாட்டார்கள். ஆனால் மிகவும் பாசக்கார மக்கள் மிகுந்த ஊரும் இதுதான். இருபது வருடங்களுக்கு முன்புவரைக்கும் இத ஊர்காரர்கள் வெளியூர்களில் பெண், கொடுத்து எடுப்பது என்பது வெகு அபூர்வமான விசயம் அதிலும் அப்படி நடந்த திருமணங்களும் எங்கள் ஊரில் இருந்து வேறு ஊருக்கு சென்று குடியேறியவர்கள், அல்லது அப்படி குடியேறியவர்கள் பார்த்துவைத்த மணமக்கள் என்கிற மாதிரிதான் இருக்கும். எல்லோரும் எங்கள் ஊருக்குள்தான் சம்பந்தம் வைத்துகொள்வார்கள். பெண் பெரியவளானவுடன் மாப்பிள்ளை முடிவு செய்யப்பட்டுவிடும். காதல் திருமணங்களும் அதிகம் நடக்கும் இதுவும் உறவு முறைக்குள்தான் என்பதால் பெரிய எதிர்ப்பெல்லாம் இருக்காது. நான் திருமணம் செய்ததும் என் மூத்த சகோதரியின் மகளைத்தான், என் மனைவி கர்ப்பம் அடைந்தபோது நான் அவளை மருத்துமனைக்கு அழைத்து சென்றேன், அங்கு மருத்துவர் படிச்சவங்க நீங்களே நெருங்கிய உறவில் திருமணம் செய்து கொள்ளலாமா? எனக்கேட்டார். நான் எங்கள் ஊரில் தலைமுறை தலைமுறையாக இப்படிதான் நடக்கிறது, ஆரோக்கிய குறைபாடுள்ள குழந்தைகள் பிறப்பது வெகு அபூர்வம் என்றேன். இப்போது எங்களுக்கு இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். இன்றுவரைக்கும் அவர்தான் மருத்துவர்.

பெரியாரின் கொள்கைகளை மிகத்தீவிரமாக பின்பற்றியவர்கள் எங்கள் கிராம மக்கள், அதுவும் பெரியார் பிறப்பதற்கு முன்பிருந்தே. விதவைகள் என்பது வெகு அபூர்வம், அதுவும் பிள்ளைகள் நிறைய பிறந்தபின் கணவர் இறந்தால் மட்டுமே. மற்றபடி சிறிய வயதில் கணவர் இறந்துவிட்டால் உடனே மறுமணம் செய்து வைத்துவிடுவார்கள், பெரும்பாலும் இறந்த கணவரின் தம்பி, அப்படி தம்பி இல்லையென்றால் கணவரின் பங்காளி வீட்டில் உள்ள ஒரு ஆண் என எல்லோர் சம்மதத்துடன் திருமணம் நடக்கும். இது ஒரு பிரச்சினையாக அங்கு இன்றுவரைக்கும் இல்லை. ஐந்து வருடங்களுக்கு முன் என் பள்ளிதோழனுக்கு திருமணம் நடந்தது, திருமணமான ஒரு மாதத்திலேயே மனைவியுடன் பிணக்கு ஏற்ப்பட்டு தற்கொலை செய்துகொண்டான், ஆனால் மருமகள் பக்கம் இருந்த நியாயத்தை புரிந்து கொண்ட நண்பனின் குடும்பத்தினர், சிங்கப்பூரில் வேலை பார்த்துகொண்டிருந்த நண்பனின் தம்பியை வரவழைத்து திருமணம் செய்து வைத்தனர்,. இருவரும் மிக சந்தோசமாக வாழ்ந்துகொண்டு இருக்கின்றனர். இப்போதும் அங்கு அய்யர் வைத்து மந்திரம் சொல்லி நடக்கும் திருமணங்கள் வருடத்திற்கு ஐந்துக்கும் குறைவாகத்தான் நடக்கும். எல்லாத் திருமணங்களும் தலைவர்கள் வைத்துதான் நடக்கும், தலைவர்களும் உறவு முறைக்கரர்களே, அரசியல் சார்ந்த சிலர் மட்டும் கட்சித் தலைவர்களை வைத்து நடத்துவார்கள். இப்படி ஒரு  விதவைத்திருமணம் செய்வது என்பது ஒரு சமுதாய புரட்சி என்பது அவர்களுக்கு தெரியாமலே இதனை செய்துவந்தார்கள். அதேபோல விவாகரத்து செய்வதும் எளிது பங்காளிகள் உள்ளடக்கிய பஞ்சாயத்தில் கூப்பிட்டு வைத்து பேசுவார்கள், பெரும்பாலும் வழக்கு சுமூகமாக தீர்த்து வைக்கப்பட்டுவிடும். மீண்டும் ஒன்று சேர்த்து வைத்து விடுவார்கள். முந்தய காலத்தில் விவாகரத்து செய்வதற்கு இரண்டு வீட்டுக் கூரையிலும் கொஞ்சம் பிய்த்து எடுத்துவந்து அதனை துண்டுகள் ஆகிவிட்டால் பிரிந்துவிட வேண்டியதுதான். சொத்துக்களும் சூழநிலைக் கேற்ப பிரித்து கொடுத்துவிடுவார்கள், அது அனைவரும் ஏற்றுக் கொண்ட தீர்ப்பாகவே எப்போதும் இருக்கும். ஆனால் சமீப வருடங்களாக ஒரு சில விவாகரத்து பிரச்சினைகள் நீதிமன்றம் வரைக்கும் சென்றிருக்கிறது.

அதேபோல் ஓடிப்போய் திருமணம் செய்துகொள்வது, சாதி மாறி திருமணம் செய்து கொள்வது என்பது சமீப காலமாகத்தான் எப்போதாவது நடக்கிறது. சாதி மாறிய திருமணங்களை இப்போதுதான் லேசாக அங்கீகரிக்க துவங்கினாலும், அப்படி திருமணம் செய்து கொண்டவர்கள் ஏனோ நகரங்களுக்கு நகர்ந்துவிட்டார்கள். இப்போதெல்லாம் எங்கள் ஊர்ப் பெண்களை பக்கத்து ஊர்களுக்கு திருமணம் செய்து கொடுக்கிறார்கள். பெண் எடுப்பதில் மட்டும் கொஞ்சம் சிக்கல் இருக்கும் காரணம் மொரட்டு பசங்க நம்ம புள்ளைய அடிப்பானுகன்னு கொஞ்சம் பயம்தான். வரதட்சினை என்பதும் கட்டாயமாக இதுவரை இல்லை, பெண் வீட்டார் என்ன கொடுத்தாலும் ஏற்றுகொள்வார்கள். அதே போல இப்ப படிச்ச பொண்ணுங்க அதிகமா இருக்காங்க, ஆனா குறைந்த படிப்பு மாப்பிளை படிச்சிருந்தா அதனையும் பெரிதாக கவனிக்க மாட்டார்கள்.  அவர்களைப் பொறுத்தவரை பையனின் குடும்பமும், பையனின் திறமையும்தான் அளவுகோலே. முன்பெல்லாம் பத்தாம் வகுப்பு வரைக்கும்தான் பெண்களை படிக்க வைப்பார்கள் ஆனால் இப்போது கல்லூரி வரைக்கும் அனுமதி தருகிறார்கள், படிப்பு முடிந்து சில பெண்கள் சென்னைவரைக்கும் வந்து வேலை பார்கிறார்கள். இப்படி வெளியில் அனுப்புகிறவர்களிடம் கட்டாயம் வாங்கபடும் சத்தியம் போகிற இடத்தில் காதல், கத்தரிக்கானு எதுவும் இருக்ககூடாது, ஒருவேளை யாரையாவது புடிச்சிருந்தா அவன் தேவர் சமூகத்தில் பிறந்தவனா இருக்கணும் என்பதுதான். ஆனால் இந்தக் கட்டுப்பாடுகள் இன்னும் எத்தனை வருடம் தாங்கும் எனத் தெரியவில்லை.

நான் காதலித்த பெண் வேளாளர் வகுப்பை சேர்ந்தவள், அவள் விபத்தில் இறந்தபின் திருமணமே வேண்டாம் என்று இருந்த என்னை மிகவும் கட்டயபடுத்திதான் என் சகோதரியின் மகளை திருமணம் செய்து வைத்தார்கள். என் மனைவியிடம் என் கடந்த கால வாழக்கை பற்றி விபரமாக எடுத்து சொல்லி அவள் சம்மதம் பெற்றபின்தான் திருமணம் செய்துகொண்டேன். ஆனால் தாலி கட்ட மாட்டேன் என சொன்னேன். அதனால் மிகுந்த எதிர்ப்புக்கு மத்தியில்தான் பதிவுத்திருமணம் செய்து கொண்டோம். அன்றைக்கு மாலை மட்டும் மாற்றிக்கொண்டோம். தாலி கட்டவில்லை, இன்றுவரைக்கும் என் மனைவி மெட்டி கூட அணிவதில்லை . என் வீட்டின் பூஜையறை தேவையற்ற பொருட்களை போட்டுவைக்கும் இடமாகத்தான் இருக்கிறது. என் பிள்ளைகளுக்கு சாமி, கோவில், கடவுள், பூஜை இந்த விசயமெல்லாம் மேலோட்டமாக மட்டுமே தெரியும், மத சம்பந்தமான சடங்குகள் எதுவுமே நான் செய்வதில்லை. நாங்கள் கொண்டாடும் ஒரே பண்டிகை பொங்கல் திருநாள் மட்டுமே. இன்றுவரைக்கும் ஆன்மிகம் சம்பந்தமான அத்தனை விசயங்களையும் தேடித்தேடி படிக்கிறேன், அடிக்கடி திருவண்ணாமலை போவேன், நமக்கு மேலே ஒரு சக்தி நம்மை இயக்குகிறது என்று கூட நான் நம்பவில்லை. இன்றிவரைக்கும் அந்த சக்தி மற்றும் கடவுள் பற்றி எனக்கு சரியான விளக்கம் தெரியவில்லை, எல்லாமே போலியாக கட்டமைக்கப்பட்டு இருக்கிறது ஆனால் இங்கு போலியாக வாழ்வதைதான் அத்தனை பேரும் விரும்புகின்றனர். அப்படி வாழாதவர்களை கடவுள் தண்டிப்பான் என சாபம் விடுகின்றனர். தங்களுக்கு மாறான கொள்கை உடையவர்களை தாங்களே கடவுள் பெயரில் சாபம் விடும் அறியாமைக்காரர்கள் அவர்கள்.

நான் பெரியாரிஸ்ட்டுதான், கம்யூனிசத்தை ஆதரிக்கும் கேப்பிடலிஸ்ட்டுதான் ஆனால் இந்த சமுதாய ஒழுங்கில் இருந்து நான் ஒருபோதும் வெளியில் சென்றதில்லை.  அதன் உள்ளேயே இருந்துகொண்டுதான் அதனை விமர்சிக்கவும், ஒழுங்குபடுத்தவும் செய்கிறேன். என் வேர்களின் ஆழம்தான் என் கிளைகளின் நீளமும். தலைமுறைகளாக விதவைத் திருமணத்தை ஆதரித்த  ஒரு சமூகத்தின் கிளையே நானும்..

மாற்றுக் கருத்துகளையும் வரவேற்கிறேன்..

No comments: