"ஆசியப் பண்பாட்டு வளர்ச்சியில் தமிழர்களின் பங்களிப்பு'

ஆசியவியல் நிறுவனம் சார்பாக "ஆசியப் பண்பாட்டு வளர்ச்சியில் தமிழர்களின் பங்களிப்பு' என்ற தலைப்பில் 3 நாள் கருத்தரங்கு சென்னையில் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. இதைத் தொடங்கி வைத்து நிதியமைச்சர் க.அன்பழகன் பேசியதாவது:  இந்திய மொழிகளில் தமிழ் போல உலகின் பெரும்பான்மையான மொழிகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய மொழி வேறு எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. 

தமிழர்கள் அளவுக்கு உலகம் முழுவதும் பரந்து வாழும் இனமாக வேறொரு இனத்தையும் குறிப்பிட முடியாது.  ஆசிய மொழிகள், பண்பாடு ஆகியவற்றின் வளர்ச்சியில் தமிழ் மொழியும் தமிழினமும் எந்த அளவுக்குத் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன என்பதை ஆராய்ந்து, அறிந்து எடுத்துக்காட்டும் ஓர் அரிய முயற்சியாக இந்த அனைத்துலகக் கருத்தரங்கம் அமைந்துள்ளது. தமிழர்களின் கடல் கடந்த அயலகத் தொடர்புகளையும் அதன் சமுதாய வரலாற்றுப் பின்னணிகளையும் இந்தக் கருத்தரங்கு விரிவாக எடுத்துரைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.  

ஜப்பானிய அறிஞர்களான சசுமு சிகா, அகிரா ஃபியூஜிவாரா, மினோரு கோ ஆகிய மூவரும் இணைந்து பல ஆண்டு ஆராய்ச்சிகளுக்குப் பிறகு - ஜப்பானிய மொழி, திராவிட மொழிகளோடு நெருங்கிய தொடர்பு கொண்டுள்ளது என்பதை ஆதாரப்பூர்வமாக 1973-ல் உலகுக்கு அறிவித்தனர்.  

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பேராசிரியர் சண்முகதாஸ், அவருடைய மனைவி மனோன்மணி ஆகியோர் 10 ஆண்டுகளுக்கு மேல் ஜப்பானில் தங்கியிருந்து அரிய ஆய்வுப் பணி நடத்தி தமிழ்-ஜப்பானிய மொழி, இலக்கியம், பண்பாடு தொடர்பான வியப்புக்குரிய பல ஆய்வு முடிவுகளை உலகுக்கு அறிவித்தனர். இந்த ஆய்வு முயற்சிகளின் ஒரு பகுதி நூல் வடிவம் பெற்று ஆசியவியல் நிறுவனத்தால் இன்று வெளியிடப்படுவது மகிழ்ச்சியளிக்கிறது.  இதுபோல தமிழோடு பிற ஆசிய மொழிகள் கொண்டிருக்கும் தொடர்பு தமிழர்களின் கடல் வாணிகம் மூலம் தெளிவாகிறது. 

தமிழகப் பேரரசர்கள் அனைவரும் தத்தம் அரசின் தலைநகரோடு - வணிகத் தலைநகர் ஒன்றையும் கடற்கரை ஓரங்களில் பெரிய துறைமுகப் பட்டினங்களாக நிறுவி பொருளாதார வளர்ச்சிக்கு அடித்தளம் அமைத்தனர்.  பட்டினப்பாலையும் பதிற்றுப்பத்தும் சிலப்பதிகாரமும் மணிமேகலையும் தமிழர்களின் கடல் வணிகத்தைப் பற்றிய சான்றுகளாகும்.  பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொண்டு  பாவாணர் எழுதினார்.  உலக மொழிகளின், குறிப்பாக ஆசிய மொழிகளின் முதல் மொழி தமிழே என்ற பாவாணரின் முடிவு பலரையும் வியப்பில் ஆழ்த்தியது. 

 கடந்த 40 ஆண்டுகளாக கொரிய மொழி, ஜப்பானிய மொழி போன்றவற்றில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் பாவாணரின் கூற்று உண்மைதான் என்பதை உலகுக்கு உணர்த்தியுள்ளது.  இந்த நிலையில் செம்மொழியாக தமிழ் ஏற்றுக்கொள்ளப்பட்டது நமக்குப் பெருமை.

பல்வேறு காரணங்களால் கடந்த 300 ஆண்டுகளில் தமிழர்கள் உலகெங்கும் புலம்பெயர்ந்து வாழத் தொடங்கினர். இன்று 58-க்கும் மேற்பட்ட உலக நாடுகளில் அந்த மண்ணின் மைந்தர்களாக வாழ்ந்து அந்தந்த நாட்டின் பொருளாதாரம், கலை, பண்பாட்டு வளர்ச்சிக்கு நல்ல பங்களிப்பை ஆற்றி வருகின்றனர். 20 நாடுகளைச் சேர்ந்த வெளிநாட்டு அறிஞர்களோடு 100-க்கும் மேற்பட்ட நமது அறிஞர்களையும் ஒருங்கிணைத்து நடைபெறும் இந்தக் கருத்தரங்கு மூலம் தமிழர் பண்பாட்டின் முழு பரிமாணமும் உலகம் முழுவதும் ஒளிரும் என்பதில் ஐயமில்லை என்றார் க.அன்பழகன்.  ஞாயிற்றுக்கிழமை தொடங்கிய இந்தக் கருத்தரங்கு ஜனவரி 17, 18 ஆகிய இரு நாள்களும் செம்மஞ்சேரி, சோழிங்கநல்லூரில் அமைந்துள்ள ஆசியவியல் நிறுவனத்தில் நடைபெறுகிறது. 

இங்கு களரி முதல் கராத்தே வரை என்ற தலைப்பில் கலை நிகழ்ச்சிகள் உள்ளிட்ட ஏராளமான நிகழ்ச்சிகளும் தமிழின் தொன்மை குறித்த அரிய தகவல்களுடன் கூடிய கண்காட்சியும் நடைபெறுகின்றன.
thanks to http://dinamani.com/edition/story.aspx?Title=%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF:+%E0%AE%95.%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D&artid=362197&SectionID=129&MainSectionID=129&SEO=&SectionName=Tamilnadu

No comments: