தமிழக தொழிலாளர்

தமிழர்கள் நாம் எங்கினும் தொப்புள்கொடி உறவுகளே.
மலேசிய தமிழர்கள் கவனத்திற்கு:
மலேசியாவில் பாதிப்புக்குள்ளான தமிழக தொழிலாளர்களில் பெரும்பாலோர் மலேசிய தமிழ் முதலாளிகளினாலேயே பாதிப்புகளை எதிர்கொண்டுள்ளனர் என்று செய்திகள் வருகின்றன.. பிற இன முதலாளிகளினால் தமிழக தொழிலாளர்கள் பாதிப்புக்குள்ளான சம்பவங்கள் இருப்பினும் அது சந்தைக்கு வராது காரணம் அவர்கள் நமது உறவுகள் இல்லை.
பேராசை காட்டி தமிழ் நாட்டில் பணம் பிடுங்கும் முகவர்களிடம் பணத்தை இழந்ததும் அல்லாமல், அவர்கள் வழங்கிய திருட்டு விசாவில் வந்து சிக்கிக் கொண்டு வாழ்வை தொலைத்துவிட்டு தவித்து நிற்கும் அப்பாவிகளும் சரி, சட்டபூர்வமாக நுழைந்து சுரண்டும் முதலாளி வர்க்கத்தின் நடவடிக்கைகளால் சட்டவிரோதமான தொழிலாளர்களாக மாறியவர்களும் சரி, அனைத்தும் இழந்து இறுதியில் தடுப்பு முகாம்களிலேயே மாதக்கணக்கில் தவிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டு விடுகின்றனர். இவர்களுக்கு நண்பர்களோ, உறவினர்களோ, வேறு யாராவது நலன்விரும்பிகளோ அவர்களது செலவில் பயணசீட்டு வாங்கித் தரும் பட்சத்தில் அவர்கள் விரைவில் நாடு திரும்பலாம். இல்லையெனில் மலேசிய அரசாங்கமோ, இந்திய தூதரகமோ ஏற்பாடு செய்யும் வரைக்கும் மாதக்கணக்கில் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை. நமது மலேசிய தமிழர்கள் , நமது தமிழக உறவுகளை பாதிப்பின் எந்த சூழ்நிலையில் கண்டாலும் உடனே உதவி செய்யுங்கள் காரணம் நமக்கு அல்லது உலகின் தமிழர்களுக்கு ஏதாகினும் தமிழகத்தில் அவர்கள் மட்டுமே துடிக்கிறார்கள்.
இந்திய தூதரகத்தின் பாரபட்ச்சம்;
பொதுவாக இவ்வாறான சம்பவங்களில் பாதிக்கப்படும் தமிழக தொழிலாளர்கள் இந்திய தூதரகத்தில் இறுதியாக தஞ்சம் புகும் தருணத்திலும், அங்கும் தமிழர்கள் பாரபட்சமாக நடத்தப்பட்டு புறக்கணிக்கப்படுகின்றனர். பாதிக்கப்படுவது வடஇந்திய தொழிலாளர்களாக இருந்தால், அவர்களிற்கான தூதரகத்தின் அணுகுமுறை ஒரு மாதிரியாகவும், தென்னிந்திய தொழிலாளர்களுக்கான அணுகுமுறை ஒரு மாதிரியாகவும் இருப்பதாக புகார்கள் பத்திரிகையில் செய்திகளாக வந்துள்ளன. அந்நிய தொழிலாளர்கள் எந்த நாட்டை சேர்ந்தவர்களாக இருப்பினும், அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் பொதுவானது. இங்கே தமிழக தொழிலாளர்களை முதன்மைப்படுத்தியதன் காரணம் இந்த நாட்டில் வேலை பார்க்கும் பதினேழு இலட்சம் இந்திய தொழிலாளர்களில் பெரும்பான்மையோர் தமிழர்கள் என செய்திக் குறிப்பொன்று கூறுகின்றது. மலேசியாவில் தமிழர்களே பெரும்பான்மை என்பதால் இந்திய அரசாங்கம் அதன் தூதரக அதிகாரிகளாக தமிழர்களையே அதிகமாக நியமனம் செய்ய வேண்டும்.
மலேசிய அரசாங்கம்;
தேவைக்கு அதிகமாகவே சட்டரீதியான, சட்டவிரோதமான அந்நிய தொழிலாளர்கள் பணியாற்றும் மலேசியாவில் அந்நிய தொழிலாளர்கள் நலன் பேணும் விதிமுறைகள் கடுமையாக்கப்படவில்லை. மலேசிய அரசாங்கம், அந்நிய தொழிலாளர்கள் இஷ்டம் இருந்தால் வேலை செய்யலாம், அல்லது நாடு திரும்பலாம் என சட்டம் இயற்ற வேண்டும்.
தாயக உறவுகள் கவனிக்க;
தமிழக உறவுகள் தமிழகத்தில் தங்களுடைய வெளிநாட்டு அனுபவகங்களை தமிழ் பூமியில் விதைத்து சிறப்பாக அறுவடை செய்யலாம். சிறிய முதலீடுகள் தான் பின்னர் பெரிய நிறுவனங்களாக மாறி இருக்கின்றன. சிறிய பெட்டிகடை, பால் வியாபாரம், கடல் தொழில், என்றெல்லாம் முயற்சியுங்கள். தீய பழக்கம் இன்றி சொந்தங்களுடன் நம் பூமியில் வாழும் வாழ்க்கையே வசந்தம்.
மலேசியா செய்திகள்

No comments: