அனந்தபத்மநாபனின் களஞ்சியம்,

திருவிதாங்கூர் மட்டுமல்ல இந்தியாவின் எல்லா அரசுகளும் வளமான அரசுகளாகவே இருந்திருக்கின்றன என்பதே வரலாற்று உண்மை. அதை நான் பலமுறை சொல்லியிருக்கிறேன்.  பருவமழையை நம்பி இருக்கும் இந்தியாவில் அரசுகளும் மக்களும்கூட சேமிப்பை ஒரு வழக்கமாக கொண்டிருந்தார்கள். தங்கம் அந்த சேமிப்புக்கான நாணயமாக இருந்தது. ஆலயங்கள் சேமிப்பு மையங்கள். அவை மாபெரும் பஞ்சம்தாங்கும் அமைப்புகள். அந்த ஒட்டுமொத்த அமைப்பே 1750களுக்கு பின் பிரிட்டிஷாரால் இருநூறாண்டுக்காலம் கொள்ளையிடப்பட்டது. அதன் விளைவே இந்தியாவை சூறையாடிய மாபெரும் பஞ்சங்கள்.


இந்தியாவை பிரிட்டிஷார் எந்த அளவுக்கு சூறையாடிக் காலியாக்கினார்கள் என்ற வரலாற்று உண்மை இன்னமும் பேசப்படாத ஒன்றாகவே உள்ளது. ஐரோப்பியச் சார்புள்ள வரலாற்றாசிரியர்களே நமக்குள்ளனர். அவர்களே இங்கே நிறுவனங்களை ஆள்கின்றனர். அவர்கள் எப்போதுமே பிரிட்டிஷாருக்கு நற்சான்றிதழ் அளித்தே வரலாற்றை எழுதுகிறார்கள். இந்தியாவுக்கு நவீன வளர்ச்சித் திட்டங்கள் மூலம் நிதிவளர்ச்சியை பிரிட்டிஷார் கொண்டுவந்தார்கள் என்று சொல்லும் அடிமை வரலாற்றாய்வாளர்களும் இருக்கிறார்கள்.

என்ன வருத்தம் என்றால் பிரிட்டிஷ் குடிமகனாக இருந்தவரும் அடிப்படையில் ஐரோப்பியமையநோக்கு கொண்டவருமான கார்ல் மார்க்ஸ் கூட பிரிட்டிஷார் வருவதற்கு முந்தைய இந்தியா அரைபப்ழங்குடி நிலையில் எந்தவிதமான செல்வச்செழிப்பும் இல்லாத நிலையில் இருந்தது என்ற சித்திரத்தையே கொடுக்கிறார்.  நாகரீகம் என்பதெல்லாம் சில நகரங்களில் மட்டுமே இந்தியாவில் இருந்தன என்பது அவரது எண்ணம். அதற்கு பிரிட்டிஷ் ஆதிக்கவாதிகளும் , பாதிரிமார்களும் எழுதிய மோசடியான பதிவுகளே அவருக்கு ஆதாரம். அவரது சீடர்களும் இதுகாறும் இந்த கருத்தையே சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்.  ஏனென்றால் மார்க்ஸ் அவர்களின் மெஸையா- அவர் சொன்னால் அதில் பிழை இருக்காது என்பதே அவர்களின் அறிவியல்.

உண்மையில் பிரிட்டிஷ் ஆட்சி இந்தியாவின் உபரியை முழுக்க உறிஞ்சிக்கொண்டு சென்று இந்நாட்டு மக்களில் கால்வாசிபேரை அகதிகளாக பிஜித்தீவு முதல் கிழக்கிந்தியதீவுகள் வரை பூமியெங்கும் சிதறடித்தது என்பதே உண்மை.

திருவிதாங்கூர் மதுரை நாயக்கர் ஆட்சிக்கு கப்பம் கட்டிய சிற்றரசாகவே இருந்தது. அப்படியென்றால் மதுரையில் தஞ்சையில் இருந்த செல்வம் எப்படிப்பட்டதாக இருக்கும்! அவை எங்கே சென்றன! இருநூறாண்டுகளில் நாம் பிரிட்டிஷாருக்கு பறிகொடுத்த செல்வம் எவ்வளவு பெரிதாக இருக்கும்!

அந்தச்செல்வம் எப்படி வந்தது?  திருவிதாங்கூர் எக்காலத்திலும் பிற நாடுகள் மேல் படை எடுத்ததில்லை. மார்த்தாண்ட வர்மா காலகட்டத்தில் அது கொல்லம் வரை உள்ள பகுதிகளை மீட்டுக்கொண்டது.  காயக்குளம், கொச்சி அரசுகளை தன் கட்டுப்பாட்டுக்கு கொண்டுவந்தது.  ஆனால் படையெடுப்பு கொள்ளை ஏதும் நிகழ்ந்ததில்லை. ஆக இது முழுக்க முழுக்க திருவிதாங்கூருக்குள் இருந்த பணம் தான்.

அன்றைய அமைப்பில் வரிவசூல் ஆறில் ஒருபங்குமுதல் நான்கில் ஒரு பங்குவரை இருந்திருக்கிறது. திருவிதாங்கூர் மிக மிக வளம் மிக்க பூமி. இங்கே இன்று வாழ்பவர்களில் கிட்டத்தட்ட கால்வாசிப்பேர் பல்வேறு காலங்களிலாக இங்கே வந்தவர்கள். பிரிட்டிஷ் ஆட்சிவந்து தாதுவருஷ பஞ்சம் வந்தபோது தொடர்ந்து நூறாண்டுக்காலம்  தமிழ்நாட்டில் இருந்து குடியேற்றம் நிகழ்ந்ததைக் காணலாம்.  அவ்வாறு வந்தவர்களில் கலைஞர்களும் கைவினைஞர்களும் அதிகம்.

திருவிதாங்கூரின் வனப்பகுதிகள் எழுநூறுகளுக்கு பின்னர் பெரும் செல்வம் ஈட்டித்தர ஆரம்பித்தன. மலைவளங்களுக்கு சர்வதேச சந்தையில் பெரும் மதிப்பு இருந்தது . திருவிதாங்கூருக்குக் கொல்லம், அஞ்சுதெங்கு, ஆலப்புழா, குளச்சல் என முக்கியமான துறைமுகங்கள் இருந்திருக்கின்றன. சங்க காலம் முதலே தமிழ்நாட்டில்  பணமாகவும் பொன்னாகவும் மாறியது – மாற்ற முடிந்தது, வனவளம் மட்டுமே. சர். சி பி ராமசாமி அய்யர் திருவிதாங்கூரை இந்தியாவுடன் சேர்க்கக்கூடாதென்று வாதாடிய காரணமே இது வளமான நிலம், இங்கிருந்து பணம் வரிவடிவில்  மத்திய அரசுக்கு போகத்தான் செய்யும் , திரும்ப வருவது குறைவு என்பதனால்தான்.

இதேபோல கிட்டத்தட்ட 600 ஆண்டுகளாக பூட்டப்பட்டிருக்கும் ரகசியக் கல் அறை ஒன்று கொடுங்கல்லூர் பகவதி [கண்ணகி] ஆலயத்தில் உள்ளது. பிற ஆலயங்களிலும் இருக்கலாம். குறிப்பாக கொச்சி மன்னர்களுக்குரிய ஆலயங்களில்.

கடைசியாக, பத்மநாபசாமி கோயில் இன்னொரு அபாயகரமான சுட்டியை அளிக்கிறது.  நம்முடைய ஆலயங்கள் இன்றாவது பாதுகாப்பாக இருக்கின்றனவா? இரு உதாரணங்கள். ஒன்று பத்மநாபசாமி கோயிலுக்கு நிகரான, அதைவிட பழைமையான திருவட்டார் ஆதிகேசவ சாமிகோயில் தமிழகத்தில் உள்ளது. அதுதான் உண்மையில் திருவிதாங்கூர் மன்னர்களின் குலதெய்வம். அந்தக்கோயிலும் மூன்று நிலவறைகள் இருந்தன.   சுதந்திரம் பெற்றபின் தமிழக ஆலயநிர்வாகத்திற்குள் வந்ததுமே அவை  திறக்கப்பட்டு சூறையாடப்பட்டன. தொடர்ச்சியாக  இருபதாண்டுகளுக்கும் மேலாக நடந்த அந்தக்கொள்ளை அதில் சம்பந்தப்பட்ட ஒரு நம்பூதிரி மனசாட்சிக்கு பயந்து தற்கொலை செய்துகொண்டபோது 1991ல்  வெளிவந்தது. பெரிய பரபரப்பும் சர்ச்சையும் ஏற்பட்டது. அதன் பின் இன்றுவரை வழக்கு நாகர்கோயில் மாவட்ட நீதிமன்றத்தில் உள்ளது,  இருபதாண்டுக்காலமாக!.

அன்று அந்த நிதியில் வைரக்கிரீடம் , வைரக்கவசம் , பொன் ஆபரணங்கள் இருந்தன என அந்த நம்பூதிரியே கடிதத்தில் சொல்லியிருந்தார். அவற்றின் மதிப்பு பத்துகோடிக்கு மேல் என்று மக்கள் சொன்னபோது அதை மிகைப்படுத்தல் என ‘சிந்தனையாளர்’கள் மறுத்தார்கள். [நான் அப்போது எழுதிய ஒரு கட்டுரைக்கு அப்படி ஓர் எதிர்வினை வந்ததை நினைவுகூர்கிறேன்.] அந்த செல்வங்களின் மதிப்பு என்னவாக இருந்தது, எங்கே போயிற்று என யாருக்கு தெரியும்? அந்த வழக்கையே நேர்மையாக அமைக்கவில்லை. அதன் குற்றவாளிகள் கிட்டத்தட்ட அனைவருமே வயதாகி இறந்துவிட்டனர். அவர்களின் வாரிசுகள் மாபெரும் கோடீஸ்வரர்களாக இந்தியாவிலும் வெளிநாட்டிலும் வாழ்கிறார்கள். அந்த வழக்குகளை ‘பைசல்’ செய்ய அன்றைய  அறநிலை அமைச்சர்  பெரும் பங்கு வகித்ததாக ஊரில் சொல்லப்படுகிறது.

திருச்செந்தூரில் இதேபோல பாண்டியர்காலம் முதலே உள்ள செல்வங்கள் நிலவறையில் இருந்தன. அறங்காவலர்களும் கோயிலதிகாரிகளும் அரசியல்வாதிகளும் சேர்ந்து அவற்றைக் கொள்ளையடித்தார்கள் என்ற குற்றச்சாட்டும் விசாரணையும் முப்பதாண்டுக்காலம் முன்பு எழுந்து அப்படியே கரைந்து சென்றது.  1980ல் சுப்ரமணியபிள்ளை என்ற அதிகாரி கொலைசெய்யப்பட்டார். அதை பால் கமிஷன் என்ற அமைப்பு விசாரித்தது. என்ன நடந்தது மேற்கொண்டு?

சுப்ரமணியபிள்ளையின் உறவினர் ஒருவரைப் பத்து வருடம் முன்பு ஒரு ரயில்பயணத்தில் சந்தித்தேன். அங்கே திருட்டுப்போன நகைகள் உண்டியல்நகைகள் அல்ல, மன்னர்கால நகைகள், அவற்றின் மதிப்பு  ‘நினைக்கமுடியாத அளவுக்கு பெரிசு’ என்றார். அங்கிருந்த கோயில்பட்டக்காரர்களும் அதிகாரிகளும் எல்லாருமே அதில் பங்குபெற்றார்கள் என்றார்.  சுப்ரமணியபிள்ளையின் உறவினர்கள் எல்லாருமே கடுமையாக மிரட்டப்பட்டு அமைதியானார்கள் என்றார்.

சிதம்பரம், அழகர்கோயில், மதுரை , திருவண்ணாமலை, ஸ்ரீரங்கம் போன்ற கோயில்களில் இதேபோல ரகசிய அறைகள் உண்டு என்ற பேச்சைக் கேள்விப்பட்டிருக்கிறேன். இனி இந்தக்கோயில்களை முழுக்க நம் அரசியல்வாதிகள் தோண்டி மல்லாத்திவிடுவார்கள்.  அங்கே என்ன இருந்தது என நாம் அறியப்போவதே இல்லை. அதைத்தடுக்கவும் கண்காணிக்கவும் நம்மிடையே எந்த மக்கள் அமைப்பும் இல்லை.

ஜெ


Ref: அனந்தபத்மநாபனின் களஞ்சியம்:http://www.jeyamohan.in/?p=17058

No comments: