புலம்பெயர் தமிழர்களின் உதவிகள் தொடர்பாகப் பேச்சு வந்தபோது ஒரு நண்பர் சொன்ன தகவல் கவனத்திற்குரியதாக இருந்தது. புலிகளின் காலத்தில் போராட்டத்துக்கெனப் புலம்பெயர் தமிழர்கள் தாராளமாக உதவினார்கள். இவர்கள் அனைவரும்
விடுதலைப் புலிகளுக்கும் அவர்களுடைய போராட்ட வழிறைக்கும் ஆதரவாக இருந்தனர். இவர்கள் எண்ணிக்கையிலும் பெருந் தொகையினராகவும் இருந்தனர்.
இவர்கள் புலிகளின் போராட்டத்துக்கு செய்த உதவிகள் இரண்டு பிரதான வகையில் அமைந்தன. அல்லது அப்படிப் பயன்படுத்தப்பட்டது.
1.ஆயுதங்கள் வாங்குவதற்கான உதவிகள் மற்றும் இயக்கத்தின் தேவைகளுக்கான உதவிகள்.
2.புலிகள் மேற்கொண்ட மக்களுக்கான பணிகள் மற்றும் அவர்கள் மேற்கொண்ட நிர்வாக நடவடிக்கைகள், பொது மக்கள், பாதிக்கப்பட்டோருக்கான உதவிகள்.
இவர்கள் சமாதானப் பேச்சுகளின் போது நாட்டுக்கு வந்து தங்கள் உதவிகள் எப்படியான பங்களிப்பைச் செய்திருக்கிறது? என்று பார்த்தும் சென்றனர். அப்போது ஒரு குறிப்பிட்ட அளவு மக்களுக்கும் இவர்களுக்குமான உறவும் பேணப்பட்டது. குறிப்பாக போராட்டத்துடன் இணைந்து நின்றோர் என்ற வகையிலானவர்களின் உறவை இவர்கள் கொண்டிருந்தனர்.
இவ்வாறு நாட்டுக்கு வந்து பார்த்துச் சென்றதன் பின்னர், மேலும் இவர்களுடைய பங்களிப்பின் வீதம் கூடியிருந்தது. ஒரு தனியரசின் சாத்தியம் தங்களுக்குப் புலப்படுகிறது என்றும் அதை மேலும் வளர்த்தெடுப்பதற்கான பங்களிப்பாக தங்களுடைய உழைப்பும் உதவிகளும் அமையட்டும் என்றும் இவர்கள் கருதினார்கள்.
ஆனால், அரசியல் நிலைமை மாறிவிட்டது. எதிர்பார்ப்புகள் முற்றிலும் சிதைந்து விட்டன. இப்போது புலிகளின் வீழ்ச்சிக்குப் பின்னர் இவர்களுடைய உதவும் நிலை வீழ்ச்சியடைந்துள்ளது. தங்களுடைய உதவிகளை இலங்கையிலுள்ள தமிழ் மக்களுக்கு எடுத்துச் செல்ல நம்பிக்கையானவர்களும் பொருத்தமான வழிறைகளும் இல்லை என்று இவர்கள் சொல்கிறார்கள். அப்படியே நம்பவும் செய்கிறார்கள். இதேவேளை, இப்போது இலங்கையிலிருக்கும் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு உதவினால், அந்த உதவி இலங்கை அரசாங்கத்தையே சென்றடையும் என அச்சமடைகிறார்கள். அல்லது அப்படிச் சொல்லிக் கொள்கிறார்கள்.
இதையும் கடந்து இலங்கை அரசாங்கத்துக்கூடாக உதவிகளைச் செய்தால், அது தங்களுடைய கொள்கைக்குப் பொருத்தமானதல்ல. எப்படித் தங்களுடைய எதிரியை நம்பிக் காசைக் கொடுக்க முடியும் என்று இவர்கள் கேட்கிறார்கள். எனவே இந்தத் தரப்பினர்களின் உதவிகள் இப்போது மட்டுப்படுத்தப்பட்டு விட்டன.
அல்லது தடைப்பட்டு விட்டன. அதாவது இப்போது இந்தத் தரப்பினர் உதவுவதற்கும் பங்களிப்புகளைச் செய்வதற்கும் அரசியல் தடை என்று சொல்லப்படுகிறது
இதேவேளை, புலிகளை எதிர்த்தோர் என்று சொல்லப்படும் இன்னொரு தரப்பினர் இப்போது உதவத் தொடங்கியிருக்கிறார்கள். இவர்கள் முன்னர் பெரிய அளவில் உதவிகளைச் செய்ய வாய்ப்பின்றி இருந்தனர். அதற்கான அரசியற் சூழலும் இந்தத் தரப்பினர்களுக்கு இருக்கவில்லை. இவர்கள் எண்ணிக்கையிலும் சிறிய அணியினர்.
அதாவது அப்போது இந்தத் தரப்பினர் உதவுவதற்கும் பங்களிப்புகளைச் செய்வதற்கும் அரசியல் தடை என்று சொல்லப்பட்டது. ஆனால், இவர்கள் இப்போது உருவாகியிருக்கும் புதிய சூழ்நிலையில் அரசுக்கு ஊடாகவும் தனியாகவும் தங்களின் உதவிகளைச் செய்து வருகின்றனர்.
இதனால், இவர்களுக்கும் தமிழ்ப் பிரதேசங்களில் உள்ள மக்களுக்குமான தொடர்புகள் மெல்ல மெல்ல உருவாகத் தொடங்கியிருக்கின்றன. முன்னரையும் விட மிக மோசமான நிலையில் பாதிக்கப்பட்டிருக்கும் இந்தச் சந்தர்ப்பத்தில் யாராவது வந்து உதவ மாட்டார்களாக என்று எதிர்பார்த்திருக்கும் இந்தச் சந்தர்ப்பத்தில் இந்தத் தரப்பினர் செய்யும் உதவி என்பது பாதிக்கப்பட்ட மக்களுக்குப் பெரிய விசயமாகப் படுகிறது.
ஆனால், புலிகளின் காலத்தில் செய்யப்பட்ட உதவித்தொகையின் அளவுக்கும் அதன் பிரமாண்டத் தன்மைக்கும் ஏற்ப இந்த உதவிகள் இல்லை. ஆனாலும் மக்களுக்கு இந்தச் சிறிய உதவிகள் பெரிய விசயமாகவே படுகிறது.
காரணம் அவர்களுடைய நிலைமை அப்படியிருக்கிறது என்பதே. இந்த நிலையில் நாம் கவனிக்க வேண்டியது என்னவென்றால், உதவி செய்வோருக்கும் மக்களுக்குமான உறவு என்பது முக்கியமான ஒன்று. ஆபத்து வேளையில், உதவி தேவைப்படுகின்ற சந்தர்ப்பத்தில் எவரொருவர் உதவுகின்றாரோ அவரை மதிப்பதும் மறக்காமல் நினைவில் வைத்துக் கொள்வதும் மனிதப் பொது இயல்பாகும்.
முன்னர் புலிகளின் காலத்தில் உதவிகளைச் செய்தோரைக்கூட இன்னும் மறக்காமல் பலரும் இருக்கின்றனர் என்றால், அந்த உதவிகள் அவர்களுடைய மனதில் அப்படியான ஒரு பதிவை ஏற்படுத்தியிருக்கின்றன என்பதே பொருளாகும். அதைப்போலவே இன்றைய உதவிகளும் இன்றைய நிலையில் இந்த மக்களுக்குப் பெரியதொரு பதிவாக அமைகின்றது. உதவிகளைப் பெறும் மக்கள் தங்களுடைய இன்றைய இயலாமையை உதவி தேவைப்படும் நிலையைப்பற்றியே சிந்திக்கிறார்கள்.
இந்த நிலைமை முன்னரும் இருந்தது. பாதிக்கப்பட்ட மக்களின் தேவைகள் அப்படியானதொரு நிலைமையை உருவாக்குகிறது. இது பொது விதி.
இவர்கள் தங்களின் வாழ்க்கையையே முன்னிறுத்திப் பார்க்கிறார்கள். அரசியல் நோக்கங்கள், அரசியல் நிலைப்பாடுகளைப் பற்றியெல்லாம் இவர்கள் சிந்திப்பதேயில்லை. இதைப் பற்றியெல்லாம் சிந்திப்பதற்கு இவர்களுக்குச் சூழ்நிலை அமைவதில்லை.
உண்மையில் இதுவொரு பரிதாபகரமான நிலைமையே. இவர்கள் தங்களின் நாளாந்த வாழ்க்கையைப் பற்றியே தலை நிறையச் சிந்திக்கிறார்கள். அதற்கப்பால் தங்களுக்கு உதவியோருக்கு விசுவாசமாகவும் நன்றியாகவும் இருக்கிறார்கள்.
அவ்வளவுதான்.இப்போது பிரச்சினை என்னவென்றால், முன்னர் புலிகளின் காலத்தில் பங்களிப்புச் செய்த பலரும் இன்று தூர நிற்பதால், அவர்களுடைய தொடர்புகளும் செல்வாக்கும் மெல்ல மெல்லக் குறைந்து கொண்டே போகிறது என்பதே. இது ஒரு மோசமான நிலையே. தங்கள் உழைப்பின் பெரும்பகுதியைப் போராட்டத்துக்காகவும் மக்களின் வாழ்வுக்காகவும் செய்த புலம் பெயர் மக்கள், இப்போது மெல்ல மெல்ல மறக்கப்பட்டு வருகிறார்கள். இது துயரமான நிலைமை.
ஒரு அரசியல் வீழ்ச்சி என்பது அப்படியே இந்த நிலைமையைப் புரட்டிப் போட்டுவிட்டது.உண்மையில் இப்படியொரு நிலை ஏற்பட்டிருக்கக் கூடாது. ஆனால், ஏற்பட்டிருக்கிறது. வரலாற்றின் இந்த முரணை எப்படி விளங்கிக் கொள்வது? அல்லது இந்த முரணை எவ்வாறு விளக்குவது?
மக்களைப் பொறுத்தவரை நன்றி மறந்தவர்களாகவோ சந்தர்ப்பவாதிகளாகவோ அவர்கள் இல்லை என்பது முக்கியமானது. எவராவது வீசும் எலும்புத்துண்டுகளுக்குப் பின்னால் செல்பவர்களாகவே அவர்கள் இருக்கின்றார்கள் என்று விமர்சிப்பதும் குற்றம் சொல்வதும் பொருத்தமில்லாதது. போராட்டத்துக்காக இந்த மக்கள் எல்லாவகையான தியாகங்களையும் செய்தவர்கள். எல்லாவகையான பங்களிப்புகளையும் வழங்கியவர்கள்.
அதற்காகவே எல்லாத் துயரங்களையும் சுமந்தவர்கள், இன்னும் சுமந்து கொண்டிருப்பவர்கள். இவர்கள் பட்ட வடுக்கள் இன்னும் ஆறவேயில்லை.
ஆனால், அப்போதும் இப்போதும் இவர்கள் நிரந்தரப் பாதிப்புக்குள்ளே இருக்கின்றனர் என்பதே இங்கே அவதானத்திற்குரியதாகிறது. ஆகவே மக்களைக் குறைசொல்வதற்கு இடமில்லை. அவர்களுடைய நிலைமைதான் அவர்களை இப்படியான நெருக்கடிக்குள் தள்ளியிருக்கிறது. ஆனால், போராட்டத்துக்காகவே எல்லாவற்றையும் செய்தவர்கள் என்ற வகையில் இவர்களுக்கு உதவ வேண்டியது ஒரு பொதுப் பணி.
ஆபத்தில் உதவுவது என்பதே மிக முக்கியமானது. இதைச் செய்வதற்கான வழி முறைகள் சிலவேளை எல்லோருக்கும் வாய்க்காதிருக்கலாம். ஆனால், அதைக் கண்டு பிடிப்பதே இன்றைய அரசியல். ஏனெனில், ஒரு போராட்டத்தின் வீழ்ச்சி என்பது அந்தப் போராட்டத்தை முன்னெடுத்த அரசியற் தரப்பின் வீழ்ச்சியாக மட்டும் கருதப்படுவதில்லை. அந்த இயக்கத்தின் வீழ்ச்சியாகவோ அல்லது அந்தப் போராட்ட அமைப்பின் வீழ்ச்சியாகவோ அமைந்து விடுவதில்லை.
அந்த வீழ்ச்சியானது அந்தப் போராட்டத்துடன் சேர்ந்து நின்றோரைப் பாதித்து, அவர்களுடைய வாழ்க்கையையும் வீழ்ச்சிக்குள்ளாக்கி விடுகிறது. இதுவே இப்போது நடந்திருப்பது. ஆகவே இந்த வீழ்ச்சியை ஈடு செய்ய வேண்டிய பொறுப்பு இன்று அனைவருக்கும் முன்னாலுள்ள ஒரு முக்கிய பொறுப்பாகும்.
ஏனெனில் இந்த மக்கள்தான் முன்னரும் அரசியல் இலக்குக்காக மையத்தில் நின்று போராடியவர்கள். இப்போதும் இவர்கள் அத்ததகையதொரு மையத்தில் தான் இருக்கிறார்கள். அதாவது, இவர்களே தாயகத்தில் தொடர்ந்தும் இருப்பவர்கள்.
ஆகவே நண்பன் கூற்றுப்படி இப்போது அரசியற் தொடர்பாடலில் இருப்பவர்களே மக்களால் விரும்பப் படுவோராகவும் மக்களின் ஆதரவைப் பெற்றோராகவும் இருக்கப்போகிறார்கள். மக்களுடைய வாழ்க்கைத் தேவைகளான இருப்பிட வசதி, கல்வி, மருத்துவம், வாழ்க்கைத்தரத்தை உயர்த்தவேண்டிய பொறுப்பு உள்ளிட்ட அனைத்துத் தேவைகளையும் நிறைவேற்றும் தரப்புகள் யார் என்றே மக்கள் பார்க்கின்றனர்.
என்றபடியால்தான் ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு தரப்புக்கான அங்கீகாரம் அரசியல் வாய்ப்பும் கிட்டுகிறது.
ஒரு காலத்தில் இங்கே ஐரோப்பிய வருகை ஒடுக்கப்பட்ட வறிய மக்களிடத்தில் பெரும் செல்வாக்கைச் செலுத்தியது. இதன்விளைவாக இலங்கையில் கிறிஸ்தவர்களாக மாறியவர்களின் தொகை இதற்குச் சாட்சி. இது தவறென்று இன்று வாதிடலாம். அது முக்கியமானதல்ல. அந்த நிலைமையை நாம் புரிந்து கொள்வதே முக்கியமானது.
மக்களின் மனநிலை என்பது பல வகையானது. அவர்களுடைய நிலையில் நின்று பார்க்கும்போதே அதை அறியலாம். அந்த அறிவே மக்களுக்கான அரசியலாகவும் மக்களை அறிந்த அரசியலாகவும் இருக்கும்.
thanks to
http://akkinikkunchu.com/new/
http://www.yarl.com/forum3/index.php?showtopic=88658
No comments:
Post a Comment