உடையாண்டியம்மா சங்கரக்குட்டி தேவர்


கோவில்பட்டியிலிருந்து ஏழாயிரம்பண்ணை செல்லும் வழியில் அமைந்துள்ள ஊர் வெம்பக்கோட்டை என்னும் கிராமம். இங்கு தேவர் சாதியினரால் வழிபடப்படும் உடையாண்டியம்மா, சங்கரக்குட்டித்தேவர் கோவில், ஊரின் கிழக்குப் பகுதியில் வைப்பாற்றங்கரையில் அமைந்துள்ளது.
வெம்பக்கோட்டையில் வாழ்ந்த வளமிக்க குடும்பப்பெண்ணான உடையாண்டியம்மாவை சங்கரக்குட்டி என்ற வளம் குறைந்த தேவர் குடும்பத்து இளைஞன் விரும்பினான். இவன் கிழக்குகேயிருந்து மாட்டு வண்டியில் வெற்றிலைப் பொதி கொண்டு வந்து வெம்பக் கோட்டையில் வியாபாரம் செய்து வந்தான்.
இவ்விருவருக்குமிடையே ஏற்பட்ட நெருக்கமான பழக்கத்தின் விளைவாக உடையாண்டியம்மா கர்ப்பமடைந்தாள். அதனையறிந்து ஆத்திரமுற்ற அவளது ஐந்து சகோதரர்களும் அவளைக் கொலை செய்யத் திட்டமிட்டனர். முதலில் ஒப்புக் கொண்டாலும் ஐவரில் ஊனமுற்ற மூத்த சகோதரன் அத்திட்டத்தைக் கைவிட்டுவிடும்படி வேண்டினான். ஆனால் இதை மற்றவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.
ஊனமுற்ற சகோதரனுக்குத் தெரியாமல் உடையாண்டியம்மாளை வைப்பாறு ஆற்றுக்கு வடக்குப்புறம் அழைத்து வந்து தலை மட்டும் வெளியே தெரியும்படி வைத்து சமாதி கட்டினர்.
மறுநாள் ஆடுமேய்க்க வந்த ஊனமுற்ற சகோதரன், தங்கையின் குரலைக்கேட்டு அந்த திசைநோக்கிச் சென்று பார்த்தபொழுது அவள் உயிருடன் சமாதி ஆக்கப்பட்டிருந்தாள். அவள் தனது சகோதரனிடம் குடிக்கத் தண்ணீர் கேட்டாள். உடனே தலையில் கட்டியிருந்த துண்டை அவிழ்ந்து ஆற்றில் நனைத்து தங்கைக்கு தண்ணீர் கொடுத்தான். அவள் மரணமடையும் முன்பு நீ கிழக்கு நோக்கி சென்று பிழைத்துக்கொள், மேற்கே செல்லாதே என்று கூறி மரணமடைந்தாள்.
உடையாண்டியம்மாள் மரணத்தைக் கேள்வியுற்ற சங்கரக்குட்டித் தேவர் தற்கொலை செய்து கொண்டார். காலப்போக்கில் கிழக்கே பிழைக்கச் சென்ற மூத்த சகோதரனின் உறவினர்கள் உடையாண்டியம்மாளை வழிபடத் தொடங்கினர். இன்று பத்திரகாளிபுரம், சங்கம்பட்டி, தூத்துக்குடி ஆத்தூர், புளியங்குளம் பகுதியிலுள்ள தேவர் சாதியினர் வழிபடுகின்றனர். மாசி சிவராத்திரியில் சிறப்பாக வழிபடுகின்றனர். வழிபாட்டின் போது பேறுகாலமான (கர்ப்பிணி) பெண்ணுக்குத் தரும் நாட்டு மருந்துப் பொருட்களைப் படையலாகப் படைக்கின்றனர்.
     கருவுற்ற நிலையில் உடையாண்டியம்மா கொல்லப்பட்டதன் அடிப்படையில் இப்படையல் இடம்பெறுகிறது
thanks to http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=15076:2011-06-10-08-46-02&catid=1333:2011&Itemid=580

No comments: