கண்டதேவி தேரோட்ட சிக்கல்

நாம் கண்டதேவி என்ற குக்கிராமத்தின், மிகச் சிக்கலான பின்னணியை முழுமையாகத் தெரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது...

மதுரை தேவகோட்டை சாலையில், ராம் நகரிலிருந்து மூன்று கிலோ மீட்டர் உள்ளே தள்ளி இருக்கிறது கண்டதேவி. இங்குள்ள சொர்ணமூர்த்தீஸ்வரர் கோயில், வரலாற்றுச் சிறப்புமிக்கதாக கருதப்பட்டு வருகிறது. அய்நூறுக்கும் குறைவான குடும்பங்களே வசிக்கும் சிறு கிராமம்தான் என்றாலும் சாதி இவ்வூருக்கு ‘சிறப்புத் தகுதியை' பெற்றுத் தந்திருக்கிறது. முன்னூறுக்கும் மேற்பட்ட கள்ளர் குடும்பங்கள் வசிக்கும் கண்டதேவியில் பள்ளர், பறையர், நாடார், பார்ப்பனர், பிள்ளை, ஆசாரி, வேளார், வளையர் எனப் பல சாதியினர் மிகக் குறைந்த எண்ணிக்கையில் இருக்கின்றனர்.

கண்டதேவி மக்களின் முக்கியமான தொழில் விவசாயம். குறிப்பாக, தலித் மக்களின் வாழ்வாதாரம் விவசாயத்தை மய்யமாகக் கொண்டது. விவசாயம் சார்ந்த வேறு சில தொழில்களில் தலித் மக்கள் ஈடுபட்டு வந்தாலும், பொருளாதார ரீதியாக அவை பெரிதளவு உதவவில்லை. அதே வேளை, கள்ளர்களின் வியாபாரத் தளம் மிகவும் பலமிக்கது. தேவகோட்டையில் இருக்கும் அத்தனை பெரிய கடைகளும் கள்ளர்களுக்கானது என்ற வகையில் அவர்களின் பொருளாதார நிலை பற்றி சொல்வதற்கு எதுவுமில்லை.கண்டதேவியிலும் அதைச் சுற்றிலும் உள்ள நிலங்கள் 65 சதவிகிதத்திற்கும் மேல் கள்ளர்களிடமே இருக்கிறது. அவர்களுக்கு அடுத்ததாக தலித் மக்களிடம் 25 சதவிகித நிலங்கள் உள்ளன. நிலம் பற்றி பேசும்போது, இங்கு கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம்: கோயில் பெயரில் இருக்கும் சுமார் முன்னூறு ஏக்கர் நிலத்தில் ஒரு பகுதியை இப்போது கள்ளர்கள் கையகப்படுத்தியுள்ளனர்.

விடுதலை பெற்று நம் நாடு ஜனநாயகமானதாக மாறி இத்தனை ஆண்டுகள் ஆகிவிட்ட பிறகும் இன்னும் அங்கு ‘நாடு' முறை நடைமுறையில் இருப்பதுதான் கண்டதேவியின் தனித்துவ பிரச்சனை

நிர்வாக வசதிக்காக இந்தியாவை கிராமம், பஞ்சாயத்து, ஒன்றியம், வட்டம், மாவட்டம், மாநிலம் என்று பிரித்திருப்பது போல மன்னராட்சியில் நிர்வாக வசதிக்காக, 22 1/2, 32 1/2, 42 1/2, 64 1/2, 96 1/2 என்று கிராமங்களை ஒன்றிணைத்து நாடுகளாகப் பிரித்தனர். இதற்கு வாரிசு முறையில் ஒரு அம்பலம் நியமிக்கப்பட்டிருந்தார். மன்னரின் சார்பாக வரி வசூல் செய்வதும், ஊர் பஞ்சாயத்து செய்வதும், அரசுக்கு தேவைப்படுகிறபோது படைக்கு ஆள் அனுப்புவதும் இவர்களுடைய வேலை. தலித் மக்கள் அம்பலங்களாக இருந்ததில்லை. பெரும்பாலும் கள்ளர்கள்தான்.

கண்டதேவியைச் சுற்றி உஞ்சனை, செம்பொன்மாரி, தென்னிலை, இரவுசேரி என நான்கு நாடுகள் உள்ளன. இந்திய துணைக் கண்ட அரசின் சமஸ்தானங்கள் இணைக்கப்பட்ட பிறகு, எல்லா பகுதிகளும் இந்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் வந்துவிட்டன. ஆனாலும் விடுதலைக்குப் பிறகு காலாவதியாகிப் போன ‘நாடு' நிறையை கள்ளர்கள் இன்னும் கைவிட்ட பாடில்லை. காரணம், அம்பலங்களாக இருந்து அனுபவிக்கும் அதிகார சுகத்தைத் துறப்பதற்கு அவர்கள் தயாராக இல்லை. நாடு அதிகாரம் இருப்பதால், அம்பலங்கள் அரசர்களைப் போல வலம் வருகிறார்கள். அவர்களை மீறி அங்கு ஒரு அணுவும் அசையாது.

http://oomaiyinkural.blogspot.com/2009/09/blog-post_4517.html

No comments: