'லண்டன் புள்ளியியல் கழகம்

காலனி நாடுகளை பிரித்தானிய ஏகாதிபத்தியம் தனது ஆளுகைக்குள் ஒடுக்கிவைக்க வளர்த்தெடுத்த ஒரு துறையே புள்ளியியல். 

பிரித்தானிய காலனிய அரசானது 1834-ல் பலதுறை சார்ந்த அறிஞர்களைக் கொண்டு 'லண்டன் புள்ளியியல் கழகத்தை' துவக்குகிறது. இக்கழகத்தை ஆரம்பித்தவர்களில் முக்கியமானவர்கள் பொருளியலாளர் ரிச்சர்ட் ஜோன்ஸ், 
மக்கள்தொகை கோட்பாட்டால் புகழ்பெற்ற தாமஸ் மால்தூஸ் மற்றும் 
கணிப்பொறியின் தந்தை எனப்படும் முதல் கணிப்பொறி எந்திரம் மற்றும் கணக்கிடும் எந்திரத்தை உருவாக்கிய சார்லஸ் பாப்பேஜ் போன்றவர்கள். இந்த மூவரின் பின்னணி இதன் பல்துறை முக்கியத்தவத்தை உணர்த்தும். 
 
புள்ளியியல் ஆய்வினால் எதிர்கொண்ட பெரும் தரவுகளை கணித அடிப்படையில் ஆய்வு செய்வதற்கான தேவைதான் இன்றைய கணிப்பொறி உருவான அடிப்படையாக இருந்துள்ளது. அறிவும் அதிகாரமும் இணையும் இப்புள்ளி முக்கியமானது. அறிவியல் வளர்ச்சி என்பது அதிகாரத்தின் தேவைக்கான திட்டமாகவே உருவாகுகிறது. பின் அது பொதுமக்களின் நலனுக்கானது என்பதான கதைகள் வடிவமைக்கப் படுகின்றன. இந்த வடிவமைப்புகள் அந்த அறிவியல் கண்டுபிடிப்பின் அரசியலை மறைக்கின்றன. சான்றாக கணிப்பொறியின் உச்ச வளர்ச்சியாக இன்று உள்ள இணையம் என்பது அமேரிக்க இராணுவத் தேவைக்காகவே உருவாக்கப்பட்டது என்பது பரவலாக அறியப்பட்டதே.
தொழிற்புரட்சிக்கு பிந்தைய பிரித்தானிய ஏகாதிபத்தியம் காலனிய நாடுகளை ஆள்வதற்கான அறிவை உருவாக்கும் தனது அதிகாரத்தின் ஒரு திட்டமாகவே புள்ளியியலை உருவாக்குகிறது.  வரலாற்ற அறிஞர் நிக்கோலஸ் டிரிக்ஸின் வார்த்தையில் சொன்னால் 'கட்டுப்படுத்துவதற்கான கலாச்சாரத் திட்டம்' (culture project of control) என்பதன் ஒரு பகுதியாக இதனைப் பார்க்கலாம். எனவேதான் ஜனநாயக அரசுகள் புள்ளியியல் அடிப்படையில் தங்களது திட்டங்களை அமைத்துக் கொண்டுள்ளன. 

புள்ளியியலின் அடிப்படை கணக்கெடுப்பு (census) ஆகும். இக்கணக்கெடுப்பு என்பது ஒரு சில கோட்பாடுகள் மற்றும் முன் அணுமானங்களைக் கொண்டே துவக்கப்படுகிறது. மக்களை ஒரு நிலப்பரப்பிற்குள் வைத்து ஆவணப்படுத்துவதே  இதன் முதல் பணியாக உள்ளது. மக்கள் நிலப்பரப்புடன் பிணைக்கப்பட்ட பிறகு அவர்களது மத, தேசிய, இன, மொழி மற்றும் சாதிய அடையாளங்கள் அட்டவணைப்படுத்தப்பட்டு ஆள்வதற்கான தொழில்நுட்பம் அறியப்படுகிறது. இவ்வாறு எண்ணப்பட்டு, அட்டவணைப்படுத்துவதன் மூலம் மக்களை ஆய்விற்கான தரவுகளாக மாற்றுதலும், மக்களை 'புறவயப்படுத்தும்' செயலும் நடைபெறுகிறது.  அரசுகள் மக்களை எண்ணி கணக்கிட்டு அவர்களது நிகழ்கால வாழ்நிலை, எதிர்காலப் போக்கு என அனைத்தையும் முறைப்படுத்தப்பட்ட ஆய்விற்கு உட்படுத்தி தனது திட்டங்கள், ஆளுகைக்கான விதிமுறைகளை தீர்மானிப்பது புள்ளியியல் என்கிற அறிவியல் வழியாகத்தான். அல்லது எண்ணப்பட்ட உடல்களைக் கொண்டு தனது அதிகார இறையான்மைக்கான கதைகளை கட்டமைத்துக் கொள்கின்றன.   

கணக்கெடுப்புகள் வழியாகவே மனிதர்கள் வகைப்படுத்தப்பட்டு குழுக்களாக கட்டுமைக்கப் படுகிறார்கள். அல்லது மனிதர்கள் குழுக்களாக இயங்கி வருவதை ஒரு வகையினமாக இது மாற்றுகிறது. சாதி, மதம் போன்றவை வாழ்வியல் தளங்களிலிருந்து அரசு அதிகார தளத்திற்கு மாற்றப்பட இது ஒரு காரணமாக உள்ளது. ஒருவகையில் இது கீ்ழ்தட்டில் ஒடுக்கப்பட்டுக் கிடந்த மக்களிடம் ஒருமித்த அடையாளத்தை உருவாக்கி பன்னெடுங்காலமாக ஆதிக்கம் வகி்த்துவந்த மேல்சாதியினரின் அதிகாரத்தை கேள்வி கேட்கக்கூடிய ஜனநாயகத் தளத்தை திறந்துவிட்டுள்ளது. பிறிதொருவகையில் பரந்துபட்ட மக்களை ஆள்வதற்கான நுடபங்களையும் இது கற்றுத் தந்துள்ளது. பிராந்தியரீதியாக செயல்பட்டு வந்த சாதியத்தை இந்தியா முழுவதற்குமானதாக ஒருமுகப்படுத்தியது. பிராந்தியங்களை இந்தியா என்கிற குடியாண்மை அமைப்பிற்குள் கொண்டுவந்தது. பிறகு சாதி, மத, பிராந்தியங்களை கையாள்வதற்கான ஆளுகை முறையை தந்தது. இது பரவலாக பிரித்தானிய ஏகாதிபத்தியத்தின் தொழில்நுட்பமான 'பிரித்தாளும் ஆளுகை' (divide and rule) முறையாக அறியப்பட்டுள்ளது. ரோமானிய பேரரசின் தொடர்ச்சியாகத் தன்னைக் கருதிக்கொண்ட பிரித்தானிய ஏகாதிபத்தியம் இந்தத் தொழில்நுட்பத்தை, தனது காலனிய நாடுகளின் மீது பிரயோகிக்க இந்த கணக்கெடுப்புகள் அவசியப்பட்டது. மக்களிடம் குழு அடையாளங்கள் உருவாக இது ஒரு காரணியாக உள்ளது. அல்லது சாதிய மற்றும் மதம்சார்ந்த மன அமைப்பைக் கட்டமைக்க இது காரணமாக உள்ளது.
மக்கள்தொகைக் கணக்கெடுப்புகளை அடிப்படையாகக் கொண்ட புள்ளியியல் ஆய்வுகள் ஒரு ஆளுகைத் தொழில் நுட்பமாக (technology of governmentalizing) செயல்படுகிறது. மக்களை குடிமக்களாக்குவது அந்த அரசின் அல்லது அந்த மக்கள் கூட்டத்தின் தேசியக் கருத்தியல் என்றால் அந்த குடிமக்களை ஆளுகைக்கு உட்படுத்தவது இந்த புள்ளியியல் அறிவியல்தான். அதாவது இந்தியன் என்கிற குடிமக்களை உருவாக்குவது இந்திய தேசியக் கருத்தியல் என்றால் அவர்களை கணக்கிட்டு அரசின் ஆளுகைக்குள்  ஆணாக, பெண்ணாக, சாதியாக, மதமாக, இனமாக, தொழில்ரீதியாக, படித்தவராக, நிறமாக. கிராமத்தவராக இப்படி பல காரணிகளாக வகைப்படுத்தி எண்களால் ஆன செய்தியாக (information) தரவுகளின் அட்டவணைகளாக மாற்றுவது புள்ளியியல்தான். இந்தியாவி்ல் கணக்கெடுப்பு பற்றிய வரலாறு பிரித்தானியரால் துவங்கப்படுகிறது. இந்தியர்களை புரிந்துகொள்ளவும் தங்களது ஆளுகையை உறுதிப்படுத்திக் கொள்ளவும் அதற்கான நுட்பதிட்பங்களை வரையறுப்பதற்கும் மட்டுமின்றி வரிவசூல் என்கிற மக்களின் உழைப்பை உறிஞ்சி தனது பொருளியல் நலனை காப்பதற்குமான ஒரே வழி மக்கள்தொகைக் கணக்கெடுப்புத்தான். முதல் குடிமகன் துவங்கி இறுதிக் குடிமகன் வரை எண்ணப்பட்டு அரசின் கண்காணிப்பு வலயத்தை கட்டமைக்கிறது இது.
உலக நாட்டார் இலக்கியங்களை ஆய்வு செய்த சர். ஜேம்ஸ் பிரேசர் பண்டைய காலத்தில் ஆப்ரிக்க, பசிபிக் மற்றும் ஐரோப்பிய பண்பாட்டில் மக்களை எண்ணினால் கெட்ட ஆவிகளின் காதுகளில் அவை விழுந்து மரணத்தை வரவழைக்கும் என்கிற நம்பிக்கை இருந்ததை சுட்டிக்காட்டுகிறார். (The sins of the census -Ernest Neufeld-BNET.com). எண்ணுதல் என்பது பாவமாக கருதப்பட்டது பண்டைய ஹீப்ருக்களிடம். இக்கருத்தை மாற்ற பழைய ஏற்பாட்டில் 'மோசஸிற்கு தனது இன மக்களை எண்ணவும் அவர்களிடம் இறைவனுக்காக (யஹோவா அல்லது லார்ட்) ஒருகுறிப்பிட்ட ஈட்டுத்தொகையை பெறும்படி' கட்டளை இடப்பட்டது பழைய ஏற்பாட்டில்.  மேலும், அதில் இராணுவத்திற்காகவும் இந்த கணக்கெடுப்பு செய்யப்பட்டுள்ளதை அறிய முடிகிறது (மேற்படி கட்டுரை).  இக்கருத்திலிருந்து கணக்கெடுப்பு இறையாட்சியோ அல்லது மானுட அரசாட்சியோ எதுவாக  இருந்தாலும், அதன் கீழான சமூகத்தினை பொதுமைப்படுத்தி ஆள்வதற்கான ஆட்சியமைப்பின் அடிப்படையாக இருந்து வந்துள்ளதை புரிந்து கொள்ளலாம்.   

கெளடில்யரின் அர்த்தசாஸ்திரத்தில் மக்கள்தொகை கணக்கெடுப்பு ஒரு அரசின் கொள்கைகளை வகுப்பதற்கும், வரிவசூல் செய்வதற்கும் அவசியமானது என்று சொல்லப்பட்டுள்ளது (History of Indian Census, Office of the Register General & Census Commisioner, India-HIC). மேலும் அர்த்தசாஸ்திரம் அரசு கணக்கீட்டு முறையில் குறிப்பாக புள்ளியலின் பிறிதொரு துறையான கணக்குப்பதிவியலின் (accounts)  முக்கியத்துவம் பற்றி விரிவாகப் பேசுகிறது.   கணக்குப்பதிவில் இரட்டைப் பதிவுமுறையை அறிமுகப்படுத்துகிறது. கணக்குப்பதிவில் உள்ள சரியான கணக்குகளும், துல்லியமும்தான் ஒரு அரசைச் சிறப்பாக வழிநடத்த முடியும் என்றும் கருவூலங்களில் இந்தப் பதிவேட்டுகளை முறையான கணக்குப்பதிவு தெரிந்த கணக்காயர்களைக் கொண்டு காலவாரியாக பதிப்பிக்க வேண்டும் என்றும் அதனைக் குறிப்பிட்ட இடைவெளிகளில் அரசு முறையான ஆட்களைக்கொண்டு நம்பகமான முறைகளில் தணிக்கை செய்ய வேண்டும் என்றும் கூறுகிறது. கணக்கில் ஏற்படும் குளறுபடிகள் ஒரு அரசையே திசை திருப்பி சீரழித்துவிடும் என்கிறது. (Kautilya on the scope and methodology of accounting, organizational design and the role of ethics in Ancient India - Sihag, Balbir S).  இந்த அளவிற்கு கணக்கின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் அர்த்தசாஸதிரம் அறிவும் அதிகாரமும் இணையும் புள்ளிகள் குறித்து நுட்பமாக அறிந்துள்ளதை அறியமுடிகிறது.  மக்களைக் கணக்கிடுவது, மக்களை ஆள்வதற்கான அரசின் அடிப்படை பணிகளில் ஒன்றாக உள்ளது. ஆக, புள்ளியியல் அரசுடன் பிரிக்க முடியாத ஒன்றாக உள்ளது. 
முகலாயர் காலத்திலும் இந்தக் கணக்கெடுப்புகள் நடந்துள்ளதற்கான ஆதாரங்கள் அயனி-அக்பரியில் உள்ளது (HIC). இக்கணக்கெடுப்புகளில் தொழில், சொத்து, மக்கள்தொகைப் போன்ற பல முக்கிய காரணிகள் எண்ணப்பட்டுள்ளன. இவைகள் மக்களை ஆள்வதற்குப் பயன்பட்ட போதிலும் பிரதான நோக்கம் வரிவசூல் மற்றும் மக்களை பொதுநோக்கில் பராமரித்தல் என்பதாகவே இருந்துள்ளது. அதாவது ஒரு பொதுநோக்குத் தொழில்நுட்பத்திற்கான (general purpose technologies-GPT) அடிப்படையாக இருந்து வந்துள்ளது. ஆற்றல் மூலங்களைக் கணக்கிடல், வருமானத்தைக் கணக்கெடுத்தல் ஆகிவற்றால் பொது நலன் அடிப்படையிலான சாலை வசதி, கொள்ளை நோய் தற்காப்பு போன்றவற்றிற்கான திட்டமிடலுக்கானதாக நடத்தப்பட்டுள்ளது. இது மக்கள் நல அரசுகளின் (welfare state) அடிப்படை பணியுமாகும். 'கோண் உயர குடி உயரும்' என்பதைப்போல அரசின் மக்கள் பராமரிப்புடன் உறவு கொண்டது. ஒரு அரசின் இருத்தலுக்கும், மக்கள் அரசை ஏற்பதற்கும் இவை அவசியமாகின்றன.
ஆனால், பிரித்தானிய ஏகாதிபத்தியத்தின் மக்கள்தொகைக் கணக்கெடுப்பில் ஒரு பண்புரீதியான மாற்றம் இருந்தது. அது மக்கள் பராமரிப்பு என்கிற பொதுநோக்கு தொழில்நுட்பத்திற்கானது என்பதைவிட தனது காலனிய நாடுகளின் மக்களை புரிந்து கொள்வதற்கும் தனது அதிகார அமைப்பை கட்டமைக்கவும் மக்களை ஆளுகை செய்வதற்கான நுட்பங்களை படிக்கவுமான ஒரு அறிவுக் கட்டமைப்பாகச் செய்யப்பட்டது.  britemp5இச்செயலானது மூன்று முக்கிய அடிப்படைகளைக் கொண்டிருந்ததை காணமுடிகிறதுமுகலாயர் காலத்திலும் இந்தக் கணக்கெடுப்புகள் நடந்துள்ளதற்கான ஆதாரங்கள் அயனி-அக்பரியில் உள்ளது (HIC). இக்கணக்கெடுப்புகளில் தொழில், சொத்து, மக்கள்தொகைப் போன்ற பல முக்கிய காரணிகள் எண்ணப்பட்டுள்ளன. இவைகள் மக்களை ஆள்வதற்குப் பயன்பட்ட போதிலும் பிரதான நோக்கம் வரிவசூல் மற்றும் மக்களை பொதுநோக்கில் பராமரித்தல் என்பதாகவே இருந்துள்ளது. அதாவது ஒரு பொதுநோக்குத் தொழில்நுட்பத்திற்கான (general purpose technologies-GPT) அடிப்படையாக இருந்து வந்துள்ளது. ஆற்றல் மூலங்களைக் கணக்கிடல், வருமானத்தைக் கணக்கெடுத்தல் ஆகிவற்றால் பொது நலன் அடிப்படையிலான சாலை வசதி, கொள்ளை நோய் தற்காப்பு போன்றவற்றிற்கான திட்டமிடலுக்கானதாக நடத்தப்பட்டுள்ளது. இது மக்கள் நல அரசுகளின் (welfare state) அடிப்படை பணியுமாகும். 'கோண் உயர குடி உயரும்' என்பதைப்போல அரசின் மக்கள் பராமரிப்புடன் உறவு கொண்டது. ஒரு அரசின் இருத்தலுக்கும், மக்கள் அரசை ஏற்பதற்கும் இவை அவசியமாகின்றன.
ஆனால், பிரித்தானிய ஏகாதிபத்தியத்தின் மக்கள்தொகைக் கணக்கெடுப்பில் ஒரு பண்புரீதியான மாற்றம் இருந்தது. அது மக்கள் பராமரிப்பு என்கிற பொதுநோக்கு தொழில்நுட்பத்திற்கானது என்பதைவிட தனது காலனிய நாடுகளின் மக்களை புரிந்து கொள்வதற்கும் தனது அதிகார அமைப்பை கட்டமைக்கவும் மக்களை ஆளுகை செய்வதற்கான நுட்பங்களை படிக்கவுமான ஒரு அறிவுக் கட்டமைப்பாகச் செய்யப்பட்டது.  britemp5இச்செயலானது மூன்று முக்கிய அடிப்படைகளைக் கொண்டிருந்ததை காணமுடிகிறது

1.தனக்கு அயலான ஒரு சமூகத்தை புரிந்துகொள்ள முயல்வது 
2. அதனை ஆள்வதற்கான அதிகார விதிகளைக் கண்டறிவது 3.தனது அதிகார அமைப்பிற்கேற்ப காலனிய சமூகத்தை மறுகட்டமைப்பு செய்வது. 

இநத முக்கிய பணிகளை பிரித்தானிய அரசு 10-ஆண்டுகளுக்கு ஒருமுறை கணக்கெடுப்பதன் மூலம் சாத்தியமாக்கிக் கொண்டது. ஒவ்வொரு கணக்கெடுப்பிலும் வெவ்வேறு தரவுகளை இனம், மதம், சாதி, மொழி, பிராந்தியம் என்பதாக முக்கியத்துவப்படுத்தி இந்தக் கட்டமைப்பை சாத்தியப்படுத்தியது. கணக்கெடுப்பிற்கென தனியான நிர்வாக அமைப்புகளை ஆய்வறிஞர்களைக் கொண்ட ஒரு தனித்துறையை உருவாக்கியது. பகுதிவாரியாக மக்கள் ஆவணப்படுத்தப்பட்டார்கள். இந்த ஆவணங்கள் புள்ளியியல் ஆய்வின்படி கணக்கிடப்பட்டு இந்தியா முழுவதற்குமான அட்டவணைகளாக வகைப்படுத்தப்பட்டன.
britemp7 1858-ல் பிரித்தானிய அரசு இந்தியவை தனது நேரடி ஆளுகைக்குள் கொண்டு வந்தவுடன், முதலில் செய்த பணிகளில் ஒன்று மக்கள்தொகைக் கணக்கெடுப்பு ஆகும். 1857-ற்கு முந்தைய மக்கள்தொகைக் கணக்கெடுப்புகளில் பிரித்தானியரின் கிழக்கிந்திய கம்பெனி பயன்படுத்திய முறை ஏகதேசமானதாகவே இருந்தது(HIC). மக்கள் நெருக்கமான நகரங்களை கணக்கில் கொண்டு  வீட்டிற்கு ஏழு பேர் வீதம் வீடுகள் எண்ணப்பட்டு கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது. அத்தகைய கணக்கெடுப்புகள் மிகை மதிப்பீடுகளாக இருந்ததை பின்னாளைய புள்ளிவிபரங்கள் காட்டின (KH). மக்களை வீடுவீடாகச் சென்று கணக்கிடும் முறை முதன்முதலாக 1865-ல் துவங்கி 1872-ல் முடிக்கப்பட்டது. இக்கணக்கெடுப்பில் பிரித்தானிய அரசும் அதன் கணக்கெடுப்புப் பணியாளர்களும் எதிர்கொண்ட சிக்கல்கள் குறித்து இந்த கணக்கெடுப்பி்ற்குப் பின் வெளியிடப்பட்ட அறிக்கையில் விவாதிக்கப்பட்டுள்ளது. (Henry Waterfield , ( 1875 ), Memorandum on the Census of British India 1871-72 , London , Eyre and Spottiswoode). இக்கணக்கெடுப்பு இந்தியா முழுமைக்கும் நடத்தப்படவில்லை என்றாலும், இதுதான் துவக்கமாகும். இக்கணக்கெடுப்பில் ஆரிய-நால்வர்ணமுறையை அடிப்படையாகக் கொண்டு, மக்கள்தொகை நான்கு வாணப்பிரிவுகளான பிராமணர், சத்திரியர், வைசியர் மற்றும் சூத்திரர்களாக பிரித்துணரப்பட்டு வகைப்படுத்தி பட்டியலிடப்பட்டது. (மேற்படி அறிக்கை மற்றும் Race, Caste and Tribe in Central India:The Early Origins of Indian Anthropometry - Crispin Bates - RCT).
அடுத்து 1881-ல் நடத்தப்பட்ட கணக்கெடுப்பு இந்தியா முழுவதும் முதன்முதலாக எடுக்கப்பட்டது.  இந்த கணக்கெடுப்பு வருணமுறையிலிருந்து ஒரு படி மேலாக தொழிலையும், சாதியையும் அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டதை அதன் அறிக்கையிலிருந்து அறியமுடிகிறது. (W.Chichele Plowden , ( 1883 ), Report on the Census of British India taken on the 17th February 1881 , London , Eyre and Spottiswoode)  டேனியல் இபுட்சன் என்கிற பிரித்தானிய அதிகாரி வர்ணமுறை தற்காலத்தில் முக்கியத்துவம்  வாய்ந்தவை அல்ல என்றும் தொழில் அடிப்படையில் சாதியத்தை வகைப்படுத்தும் வண்ணம் இந்த கணக்கெடுப்பை நடத்தினார் (RCT). 1891-கணக்கெடுப்பு வர்ணத்திற்கு பதிலாக சாதியை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டது. 1901-கணக்கெடுப்பு மூன்று அடிப்படைகளில் நடத்தப்பட்டதாக கணக்கெடுப்பிற்கான தீர்மாணம் கூறுகிறது (Appendix-1 RCT).  1. இனவியல் 2. உடலை அளவிட்டு பிரிக்கு மானுட-உடல்-அளவியல் (Anthropometry). தோலின் நிறம், மண்டையோட்டு அளவு, மூக்கின் அளவு ஆகியவற்றின் அளவீடுகளைக் கொண்டு செய்யப்பட்டது.  3. புகைப்படங்கள் - அதிக செலவு என்று இது கைவிடப்பட்டது (அறிக்கை1901). இதில் மானுட-உடல்-அளவியல் அடிப்படை  சாதியை இனவரையறைக்குள் கொண்டு சென்ற கணக்கெடுப்பாகும். (H.H. Risley and E.A. Gait , ( 1903 ), REPORT ON THE CENSUS OF INDIA, 1901 , Calcutta , Superintendent of Government Printing). இந்த மானுட-உடல்-அளவியல் முறை என்பது குற்றவியலுடன் உருவாகி இன்று உடல் உறுப்புகளைக் கொண்டு அடையாளப்படுத்தும் பயோமெட்ரிக் என்கிற கண்காணிப்பு எந்திரமாக வளர்ந்துள்ளது என்பது வேறுகதை. இப்படியாக இக்கணக்கெடுப்புகள் படிப்படியாக இந்தியாவின் மையமாக சாதியை வந்தடைந்தன. அதன்பின் 1931-கணக்கெடுப்பு சாதியை அடிப்படையாகக் கொண்டு இந்தியாவெங்கும் முழுமையாக எடுக்கப்பட்டது.
சாதி என்பது இந்திய சமூகத்தின் ஒரு பிரத்யேக முறையாக இருந்ததைக் கண்டு முதன்முதலாக 19-ஆம் நூற்றாண்டில் britemp4போர்த்துகீசியர்தான் caste என்கிற சொல்லை பயன்படுத்தினர். இச்சொல் இனம், பிறப்பு, வம்சாவழி என்கிற மூலத்திலிருந்து பெறப்பட்ட சொல் ஆகும்.(KH) இந்த caste-ஐ அதாவது 'சாதி'-யை பிரித்தானியர் எப்படி அணுகினர் என்பதை புரிந்துகொள்வது அவசியம். சாதிகுறித்த பார்வைகளை பிரித்தானிய அரசு இரண்டு மூலங்களிலிருந்து பெற்றது 1. கிறித்துவ மிஷனரிகளிடம் இருந்து. அவர்கள் சாதி தங்களது மத சுவிசேஷப் பிரச்சாரத்தை பலவீனப்படுத்தக் கூடியதாக இருப்பதால் சாதியை வெளிப்படையாக விமாசித்தவர்கள் 2. இந்திய சமூகத்தை புரிந்துகொள்வதற்கான ஒரு தொழில்நுட்பமாக இயங்கிய கீழ்திசைப்பள்ளிகள் (Oriental schools), தங்களது பிரதிகளிலிருந்து உருவாக்கி வைத்திருந்த இந்தியர்கள் பற்றிய ஒருபடித்தான கற்பிதங்களான  'கீழ்த்திசை ஏதேச்சாதிகாரம்' மற்றும் 'கிராம குடியரசுகள்' என்பவையே. (Castes in Minds - Nicholas Dirks).  இவை ஏற்படுத்தியப் பார்வைகளை பிரித்தானியர்கள் தங்களது இனவியல் வரையறைகள் வழியாகவே புரிந்து கொண்டனர்.

பொதுவாக மனித குல வரலாற்றை பிரித்தானியர்கள் இன (race) அடிப்படையிலேயே வரையறுத்து வந்தனர். 1844-ல் "எல்லாமே இனம்தான், அதற்கப்பால் வேறு உண்மையே இல்லையா" என்று பிரித்தானிய அரசின் பார்வையை எதிர்த்துக் கேள்வி எழுப்பிய டிஸ்ரிலி, 1872-ல் பிரித்தானிய பிரதமரான பின், 1880-ல் 'இனம்தான் வரலாற்றின் திறவுகோல்' என்றார் (KH). பிரித்தானியர்களின் அடிப்படை பார்வை இனவாத அடிப்படையிலானது என்பதற்கு இது ஒரு சான்று.  இனவாத கற்பிதங்களான உயர்வு, தாழ்வு மற்றும் தூய்மைவாதம்  இந்தியாவில் வர்ணாசிரம வடிவில் நடைமுறையில் இருந்ததால் ஒரு பொதுமைப்படுத்தப்பட்ட பார்வை அவர்களிடமும் உருவாகுகிறது. இந் நடைமுறையி்ல் பார்ப்பனியர்கள் தங்களது ஆதிக்கத்தை தக்கவைத்துள்ளதை காண்கின்றனர். இதில் இனஆதிக்க கருத்தியலின் அடிப்படையான தூய்மைவாதம், “பிறரை“ ஒதுக்கல் ஆகியவை இருப்பதை காணும் அவர்கள் சாதியின் மத அடிப்படைகளையும், இந்தியர்களின் மதம் மற்றும் உலகு பற்றிய பார்வைகளின் வித்தியாசத்தையும் உணராமல் இனவாத அடிப்படையில் சாதியை மறுசங்கேதப்படுத்திக் கொள்கிறார்கள். இந்திய சாதிமுறை கர்மக் கோட்பாட்டுன் இணைந்து சாதிய கர்மத்தை சரியாகப் பின்பற்றுவதே மோட்சத்திற்கான வழி என்கிற மதம் மற்றும் ஆன்மீகம் சார்ந்த கண்ணோட்டத்தை தங்களது இனவாத தூய்மை அடிப்படையில் புரிந்துகொண்டு மறுவரையறை செய்கிறார்கள். அதாவது தங்களது அரசாட்சிக்கு ஏற்ப அதன் நிர்வாகப் பணிக்குத் தேவையான ஆட்களை எடு்ப்பதற்கு சாதியம் அல்லது வர்ணமுறை தடையாக இல்லாமல் வீரமரபு சாதிகள், வீரமரபற்ற சாதிகள் என்பதாக பிரித்து வீரமரபுள்ள சாதிகளாக உள்ள சத்ரியப் பின்னணி சாதிகளிலிருந்து தனது இராணுவத்திற்கு ஆள் எடுக்கிறார்கள். அதேபோல் மற்ற நிர்வாகங்களுக்கு வீரமரபற்ற, அதேசமயம் திறனுள்ளவர்களாக குறிக்கப்பட்டு மேல் தட்டில் உள்ள பார்ப்பனர்களை நிர்வாகத்திற்கு கொண்டுவருகிறார்கள்.
 
இதிலிருந்து நாம் ஒரு கருத்தைப் பெறலாம். சாதி என்பது நிலவுடமையின் அடிப்படையில் நிலத்துடன் கட்டப்பட்டிருந்த உடல்களை (territorialize) பிரித்தானிய காலனிய அரசானது வெளி-நீக்கம் (deterritorialization) செய்து தனது அதிகார வெளிக்குள் மறு-வெளியாக்கம் (reterritorialization) செய்கிறது. அல்லது பிரித்தானிய அரசிற்கு இராணுவ சேவை செய்வதற்கான மன அமைப்பை இந்தியரது மதம் சார்ந்த உணர்வைத் தாண்டி கட்டமைக்கிறது. இதன் ஒரு பக்கவிளைவையே 1857- எழுச்சிக்குப் பிறகு எதிர்கொள்கிறது. இவ்வெழுச்சிக்குப்பின் இந்திய சமூகத்தை தனது நேரடி ஆளுகைக்குள் கொண்டுவருகிறது. இதன் விளைவாகவே 1857-ற்கு பிறகு நடத்திய 1872 மக்கள்தொகைக் கணக்கெடுப்பில் வயது, பாலினம், மதம், சாதி, இனம், கணக்குழு, தொழில் என அனைத்தும் தொகுக்கப்பட்டதின் பின்னணியை நோக்க வேண்டி உள்ளது. இந்த முதல் கணக்கெடுப்பில் ருசிகரமான விஷயம் இராஜபுத்திரர்கள், சத்திரியர்கள் 5.6 மில்லியன் அவர்களைவிட பிராமணர்கள் எண்ணிக்கை 10.1 மில்லியன் இருமடங்காக இருந்தது என்பது (அறிக்கை 1872). 
 
வங்காள கமிஷனராக இருந்த பிவர்லியால் நடத்தி முடிக்கப்பட்ட 1872-ஆம் ஆண்டு  கணக்கெடுப்பில் எடுக்ப்பட்ட தேவையற்ற இந்த விபரங்கள் ஏன்? என்கிற கேள்விக்கு பிரித்தானிய அரசு முன்வைத்த பதில் பேரிடர்கள் நிகழும்போது மக்களை காப்பாற்றவே என்பதுதான். இந்த பதில் மேலோட்டமானது என்பது புரிந்து கொள்ளக்கூடியதே. உண்மையில் பிரித்தானியரின் நோக்கம் மத, இன, சாதி அடிப்படையில் சமூகத்தை பட்டியலிட்டுவிட்டால், சாதி அடிப்படையிலோ மத அல்லது இன அடிப்படையிலோ வரக்கூடிய அரசு  எதிர்ப்புகளைப் புரிந்து கொள்வதும் அதை அடக்குவதற்கான வழிமுறைகளை கண்டடைவதும்தான்.(KH) அதாவது சிப்பாய் கலகம் அல்லது இந்திய ராணுவ எழுச்சி இந்த கணக்கெடுப்பிற்கான கருத்தியல் கட்டுமானத்தை அல்லது வழிகாட்டுதலை தந்துள்ளது எனலாம். அதாவது சிப்பாய் எழுச்சி ஒருவகை அரசியல் நனவிலியாக (political unconcious) செயல்பட்டிருக்கிறது எனலாம்.
The Gleaners சமூகத்தின் யதார்த்த நிலமைகளை இக்கணக்கெடுப்புகள் மாற்றின. சான்றாக, பெங்காலில் நடத்தப்பட்ட கணக்கெடுப்பில் முஸ்லிம்கள் தாழ்சாதி இந்துக்களாக பதியவைக்கப்பட்டனர். 1895-ல் பாசல்-இ-ராப் என்பவர் இத்தவறைச் சுட்டிக்காட்டி விமர்சித்துள்ளார். முக்கியமான விஷயம் என்னவென்றால், குழு அடையாளம் கட்டமைக்கப்பட்டதை இது சொல்கிறது என்பதுதான் (KH). அதேபோல் 1901 ஆம் ஆண்டு கணக்கெடுப்பில் மாஹ்தான் என்கிற சாதியினர் ஒரு  விவசாயம் சார்ந்த சாதியாக கணக்கில் பதியவைக்கப்பட்டனர். இராணுவத்தில் சேர ராஜபுத்திரர்களாக இருக்க வேண்டும் என்கிற காலனிய சட்டத்தினால் தங்களையும் ராஜபுத்திரர்களாக பதியவைக்க கோரிக்கை விடுத்தனர். இதில் தங்களது சாதிகளை உயர்சாதி மரபில் அடையாளம் காண விளைவதைக் காண்கிறோம். இவ்வாறாக, ஒவ்வொரு சாதியும் தனது அடையாளத்தை உருவாக்க, வரலாற்றுப் பெருமிதம் என்கிற தனது மரபைத் தேடும் “வேர் தேடி அரசியல்“ கட்டமைக்கப்பட்டது. இதன் ஒரு தொடர்ச்சியே இன்றும் வேர் தேடிச் சென்று  தங்களது பெருமித வரலாற்றைக் கட்டமைக்கும் குழு அடையாள அரசியலாக உள்ளது. இது மேற்-திசைவாதத்தின் அடிப்படையான 'வரலாற்று உணர்வை' இந்திய மக்களிடம் கட்டமைக்க முயன்றது. அல்லது இந்தியாவில் வரலாறு என்கிற ஒரு அறிவுத்துறையைக் கட்டமைத்தது என்றால் மிகையாகாது? இந்தியர்களுக்கு வரலாற்று உணர்வு இல்லை என்கிற வாதம் இந்த அடிப்படையிலேயே கட்டமைக்கப்பட்டது.    
 
மக்கள்தொகைக் கணக்கெடுப்பின் வழியாக தங்களை ஒரு குறிப்பிட்ட அடையாளத்திற்குள் திணித்துக் கொள்ளாமல் இருந்த மக்கள், தரவுகளாக அட்டவணைப்படுத்தி அரசின் நேரடி கண்காணிப்பிற்குள்ளும், அடையாள அரசியலுக்குள்ளும், இதில் பங்குபெற்றதன் மூலம் அரசின் அதிகார வெளிக்குள்ளும் இடமாற்றம் செய்யப்படுகிறார்கள.  இதில் மற்றொரு கருத்தையும் சுட்டிக்காட்டுகிறார் கெவின் அதாவது பிரித்தானியர் தங்களுக்கு சேவகம் செய்வதற்கான மக்கள் பிரிவினைரைப் பெறுவதற்காக சாதியரீதியான திறமை, குணங்கள் ஆகியவற்றை வகைப்படுத்தவும் இது பயன்பட்டது (KH).  அதாவது, அரசின் நிர்வாக எந்திரத்தை கட்டமைப்பதற்கான நிர்வாகிகளை பெற இந்த சாதியரீதியான பிரிவினை பயன்பட்டது. இந்திய சமூகத்தில் தகுதி, திறமை போன்ற மதிப்பீடுகள் பிறப்பின் அடிப்படையிலானவை என்பதை பிரித்தானிய அரசு அப்படியே ஏற்றுக்கொண்டது என்பதுதான்.

  அதாவது, காயாஸத்தர்கள் கிளரிக்கல் மற்றும் எழுத்தராக பணிபுரிவதற்கும் ராஜபுத்திரர்கள இராணுவப் பணி புரிவதற்கும் அவர்களது பிறப்பு அடிப்படையிலான சாதியே காரணமாக சமூக மனத்தில் எழுதப்பட்டது. சாதியின் உடலரசியல் மறுவரையறை செய்யப்பட்டது. வீரமரபும் குற்றமும் ஒன்றாக அடையாளப்படுத்தப்பட்டு காலனிய அரசிற்கு விசுவாசமாக இல்லாத சாதிப் பிரிவினரான கள்ளர், மறவர் மற்றும் பிஹில்ஸ் (bhils) என்பவர்களை குற்றப்பரம்பரையாக வரையறுத்ததை டிரிக்ஸ் சுட்டிக்காட்டுகிறார். இதன் விளைவாக குற்றப்பரம்பரை தடை சட்டத்தை (Criminal Tribal Acts) 1871-ல் கொண்டு வருகிறது பிரித்தானிய அரசு. வர்ணமும் சாதியும் பிறப்பை அடிப்படையாகக் கொண்டவை என்கிற மனுதர்ம வாதம் (1881-அறிக்கை பக்கம் 18-ல் மனுவை சுட்டிக்காட்டி இதனை விவாதிக்கிறது) அப்படியே மண்டையோட்டியல் (phrenology) மற்றும் புள்ளியியல் என்கிற அறிவியல் ஆய்வுகள் வழியாக காலனிய அரசால் உள்வாங்கப்படுகிறது. நால்வர்ண முறையானது சாதிகளின் கணக்கெடுப்பில் மூவர்ணமாக சுருங்குகிறது. இடைப்பட்ட சத்ரிய மற்றும் வைசிய வர்ணம் இடைசாதிகளாகவும் பிரமணர்கள் உயர்சாதியாகவும் தலித்துகள் தாழ்சாதியாகவும் ஒரு பொதுமைப்படுத்தப்பட்ட அடையாளத்திற்குள் கொண்டுவரப்படுகின்றனர்.

  http://jamalantamil.blogspot.com/2008/05/1.html

  

No comments: