வல்லம்பர்

எங்கள் பக்க கிராமங்களில் (சிவகங்கை,புதுக்கோட்டை,இராமநாதபுர மாவட்ட கிராமங்கள்)


வல்லம்பர் சமூக மக்கள் அதிகம் வசிக்கும் பகுதி 'பாலையநாடு' என்றும்
கள்ளர் சமூகம் பெரும்பான்மையாக வசிக்கும் கிராமங்கள் 'கள்ள நாடு' என்றும்,
மறவர் சமூகம் வசிக்கும் கிராமப்பகுதிகளை 'மறவர் சீமை' என்றும் பிரிவுகள் உண்டு.

இதில் எங்கள் வல்லம்பர் சமூக மக்களில் மேலின வல்லம்பர், கீழின வல்லம்பர் என்ற இரு பிரிவுகள் உண்டு. இதன் பொருள் மேற்கத்திய கிராம மக்கள்,கிழக்கத்திய கிராமமக்கள் என்பது.எங்கள் மேலின வல்லம்பர் மக்கள் வாழும் பதினாறு கிராமங்களை பாலைய நாடு என்கின்றனர்.நாங்கள் கொள்ளக்,கொடுக்க என்று எல்லா உறவுகளையும் இந்தப் பதினாறு ஊர்களுக்குள் தான் வைத்துக்கொள்வோம். இந்தப் பதினாறு ஊர் மக்களும் உலகின் எல்லா இடங்களிலும் பல்கிப் பெருகி உள்ளனர்.இப்போது சில ஆண்டுகளுக்கு முன் கீழின,மேலின மக்கள் ஒன்று கூடி உறவுகளை வளர்த்துக்கொள்ளத் தொடங்கியுள்ளனர்.

           எங்கள் கிராமங்களில் நகரத்தார் மக்களின் கொடையால் தடுக்கி விழுந்த இடமெல்லாம் மேல்,உயர் நிலைப்பள்ளிகள்,மகளீர்,இருபாலரும் படிக்கும் கல்லூரிகள். அதனால் 1950க்குப் பிறகு எங்கள் ஊரில் படித்த மக்கள் அதிகம்.எங்களின் பதினாறு கிராமங்களில் நான் பிறந்த ஊர் பாலையூர் - கண்டனூர்.(நடுவண் அமைச்சர் திரு.ப.சிதம்பரம் அவர்களின் ஊர்) இந்த ஊரில் ஒரு வருடம் விளையும். ஒரு வருடம் விளையாது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் பிழைப்புத் தேடி எங்கள் மக்களும் புலம் பெயரத்தொடங்கினர்.புலம் பெயர்ந்தவர்களுக்கு அவர்கள் கற்ற கல்வி கைகொடுத்தது.நகரத்தார் மக்களுடன் எங்கள் மக்களும் அவர்களோடு உதவியாளர்களாக,கணக்குப்பிள்ளைகளாக அன்னிய தேசங்களுக்கு பொருளீட்டச் சென்றனர்.ஊரில் எஞ்சியிருந்த மக்கள் விவசாயம்,ஆடுகள்,மாடுகள்,கோழிகள் வளர்ப்பில் ஈடுபட்டு இருந்துள்ளனர்.இத்தோடு குழந்தைகளைப் பள்ளியனுப்பி படிக்கவைத்துள்ளனர்.வீடு,தோட்டம்,வயல்,கட்டுத்தறி தான் எங்கள் பெண்களின் உலகம்.மாலை நேரம் திரைப்படம்.திரையரங்கம் முன் கூடும் கூட்டம், அதை நம்பி தேநீர்,உணவு விடுதிகள்,பத்திரிக்கை,வார,மாத இதழ்கள்,நாவல்கள்,திரைப்படப்பாடல் புத்தகங்கள் விற்பனை செய்யும் ஒரு புத்தகக்கடை இப்படி ஊரே களையாக இருக்கும். நாங்களும் பிழைப்பிற்காக வேற்று ஊரில் இருந்து, அவ்வப்போது வயல் வேலைக்காகவும்,திருவிழா,உறவுகளில் திருமணங்கள் இப்படி வந்து போவதுண்டு.அப்போதெல்லாம் எங்களைக்கவரும் விசயங்கள் மூன்று.1.கண்மாய்,2.வயல்,3.திரையரங்கம்.நாங்கள் இருந்த ஊரில் திரையரங்கம் இருந்தாலும் கட்டுப்பாடு அதிகம். சொந்த ஊரில் சொந்தங்களின் சலுகை. இப்படி எங்களின் குழந்தைப்பருவ சொர்க்கம்.எல்லா சமூக மக்களும் குறிப்பறிந்து உதவி,இயைந்து வாழ்ந்தார்கள்.

  காலம் மாறியது.மாற்றங்களுக்கு எங்கள் கிராமங்களும் விதிவிலக்கல்ல.எங்கள் ஊரில் எல்லா சமூகத்திலும் கற்றவர்கள் அதிகமாகி,பணப்புழக்கம் அதிகமாகி வாழ்க்கை வசதிகள் பெருகின.தோட்டங்கள் தரிசாகிப் போயின. பசுக்கள் நிறைந்தன.கண்மாய் மழைக்காலத்திலும் நிறையாது போனது. காரணம் கண்மாய்க்கு நீர் வரத்து குறைந்தது.காடு,மேடுகள் மனைகளாகிய காரணம்.கண்மாயில் நீர் குறைந்ததால் ஊரில் இரு சமூக மக்களின் வேறுபாடுகளால் வயலுக்குத் தண்ணீர் பாய்ச்சுவதில் தகராறு.மற்ற சமூக மக்களுக்கு யார் பக்கம் சேருவது என்ற குழப்பம்.இப்படி வயல் வரப்புகளும் தரிசாகி கருவேலமரம் மண்டி முள் காடாய்க் கிடக்கிறது.பசுக்களுக்கு வைக்கோல்,புல் கிடைக்காது கட்டுத்தறிகளும் வெறுமையாயின. இந்த வெறுமைகளை நிரப்ப தொலைக்காட்சிப் பெட்டிகள் வீட்டுக்கு வீடு வருகை தந்தன.திரையரங்கம் நஷ்டத்தில் ஓடுகிறது என்று அதன் உரிமையாளர் அதையும் இழுத்து மூட அதை நம்பியிருந்த உணவகம்,புத்தகக்கடைகளும் தன் கதவுகளை அடைக்க நம்மைப்போல் வெளியூரில் இருந்து சொந்த ஊர் திரும்பும் மக்களுக்கு வெறுமையான ஊரைப்பார்த்து துக்கத்தில் தொண்டை அடைக்கிறது.கூடிக்களித்திருந்த,உறவுகளாய் இருந்த எல்லா சமூக மக்களும் பழைய இணக்கமில்லாது அவரவர் வேலை அவரவர்க்கு.

              இந்த வேறுபாடுகளைக் களைய, எங்கள் ஊர் மறுபடி பசுமை பெற எந்த அவதாரத்தை இறைவன் அனுப்புவாரோ? காத்திருக்கிறோம்.

thanks
http://gandhiyagramangal.blogspot.com/2009/12/blog-post_27.html            

No comments: