இத்தனை மலைகள், குன்றுகள்; சிக்கலான அமைப்புள்ள கணவாய்கள்; குடம்புகள். இந்த வசதிகள் பயன்படுத்தப்படாமல் இருக்கலாமா? பயன்படுத்தப்பட்டன. பல நூற்றாண்டுகளாகக் கள்ளர் கூட்டங்கள் அழகர்மலையில் இருந்தன. வரலாற்றில் பல சமயங்களில் அந்தக் கூட்டங்கள் பாண்டியர்களின் படைகளாக இருந்தன. வடக்கிலிருந்து படையெடுப்புகள் நிகழும். எதிரியின் படைகள் வரும் பாதைகள் சில இருந்தன. அவற்றில் ஒன்று அழகர் மலைக்குக் கிழக்கே இருக்கிறது. அங்கெல்லாம் ஒரு காலத்தில் பெரும் காடுகள் இருந்தன. எத்தனை பெரிய படை வந்தாலும் அழகர்மலையிலிருந்து தாக்குதல் நடத்தமுடியும். சிறிய படைகளை வைத்துப் பெரிய படைகளைத் தேக்கலாம். விரட்டிவந்தால் ஒளிந்து கொள்ளலாம். ஆனால் அவ்வப்போது கள்ளர்கூட்டம் கொள்ளையடிப்பில் ஈடுபட்டது. ஏராளமான எண்ணிக்கை. கரவடம் என்னும் கலை கைவந்தவர்கள். குதிரை முதலியவற்றில் ஏறிக்கொண்டு தீவட்டிகளை ஏந்திக்கொண்டு இரவில் ஊர்களைச் சூறையாடி, கொள்ளையடித்து, நெருப்பு வைத்துவிடுவார்கள். இவ்வகையான கொள்ளையைத் 'தீவட்டிக்கொள்ளை' என்பார்கள். சிறு சிறு கூட்டங்களாகச் சென்று வீடுகளில் கன்னம் வைத்தல், வழிப்பறி செய்தல் போன்ற பலமாதிரியான கொள்ளை, கொலை, திருட்டு ஆகியவற்றில் ஈடுபட்டார்கள். நாயக்கர்கள் காலத்தில் இவர்களில் தொல்லை அதிகம். அவர்களுக்கு திறமையான தலைவன் கிடைத்துவிட்டால் ரொம்பவும் Organised ஆகவும் Systematic ஆகவும் கொள்ளைகளை நடத்துவார்கள். கள்ளர்களின் தொல்லை திருமலை நாயக்கர் காலத்தில் மிக அதிகமாக இருந்தது. அவர்களின் தலைவன் மிகவும் திறமையும் மார்ஷியல் கலைகளும் கண்கட்டு வித்தைகள், மாயாஜாலம், செப்பிடுவித்தைகள் போன்றவையும் கைவரப்பெற்ற சங்கிலிக்கருப்பன். சங்கிலிக்கருப்பருக்கு இன்னும் பல கள்ளர் கூட்டங்களுடன் தொடர்பு இருந்தது. இந்தத் தொல்லையை ஒழிப்பதற்காக வீரன் என்னும் பெரிய வீரர் முன்வந்தார். அவர் மிக எளிய குடியைச் சேர்ந்தவர். ஆனால் தம்முடைய மார்ஷியல் கலை ஆற்றலால் பெரும் வீரராகத் திகழ்ந்தவர். அவருடைய பெருமுயற்சியால் சங்கிலிக்கருப்பனின் கூட்டத்தையும் ஒழித்து சங்கிலிக் கருப்பனையும் தாமே கொன்றுவிட்டார். ஆனால் பொறாமை கொண்ட திருமலை நாயக்கரின் நன்றி மறந்த தன்மையால் மாறுகால் மாறுகை வாங்கப்பட்டு தெய்வநிலையைத் தம் இரு மனைவியருடனும் எய்தினார். வண்டியூர் மாரியம்மனே நேரில் திருமலை நாயக்கரிடம் வந்து முருகனின் அம்சமாக உள்ளவர் வீரன் என்று அறிவுறுத்தினாள். அதன் பின்னர் மீனாட்சியம்மனுடைய சன்னிதிக்குப் போகும் வாயிலாகிய அஷ்டசக்தி மண்டபத்தின் வடக்குப் பக்கத்தில் தம் இரு மனைவியருடனும் ஒரு விசேஷ சன்னிதியில் வழிபடப்பட்டுவருகிறார். மதுரையைக் கள்ளர் தொல்லையிலிருந்து காத்த வீர்ரர் என்பதால் அவரை 'மதுரை வீரன்' என்றே அழைக்கலானார்கள். சங்கிலிக்கருப்பரும் தெய்வமாக வணங்கப் படுகிறார். அழகர்மலைக் கள்ளர்களின் தொல்லை ஒடுக்கப்பட்டாலும் அது அறவே ஒழியவில்லை. பிரிட்டிஷ் ஆட்சியில் அது கட்டுப்பாட்டிற்கு வந்தது. நத்தம் என்னும் ஊரிலிருந்து மதுரைக்கு வரும் பாதை ஒன்று இருக்கிறது. அது அழகர் மலைக் கணவாய்களில் ஒன்றின் வழியாக வரும். அந்த சாலை தரைமட்டத்திலிருந்து சில நூறு அடிகள் உயரத்திற்கு மலையின்மீது ஏறி இறங்கும். நத்தத்திலிருந்து வரும்போது அந்த சாலையிலிருந்து மதுரையும் அதன் சமவெளியும் நன்கு தெரியும். மீனாட்சியம்மன் கோயிலின் பதினான்கு கோபுரங்களும் பெருமாள் கோயிலின் கோபுரமும் திவ்வியமாகத் தெரியும். அது ஒரு மறக்கமுடியாத Panoramic View. இப்போதும் மனக்கண்ணில் தோன்றுகிறது. இப்பேற்பட்ட அழகர்மலையில் பல பிலங்களும் குகைகளும் குடம்புகளும் உண்டு என்று சொன்னேனல்லவா. அழகர்மலையில் எப்போதுமே சித்தர்களின் நடமாட்டம் உண்டு. பல சித்தர்களின் இருப்பு அதுதான். அதுமட்டுமல்லாது பல தெய்வங்களின் இருப்பிடமும் அது. யட்சிணிகள், யோகினிகள், முனிகள் போன்ற கணத்தாரும் நடமாடும் இடம். சித்தர்களின் இருப்பிடமாக அது திகழ்வதால் அங்கு சித்தபுருஷரான பாலய சுவாமிகள் தம் தர்மபத்தினியுடன் தங்கியிருந்தார். அன்புடன் ஜெயபாரதி http://www.treasurehouseofagathiyar.net/39600/39621.htm
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment