டாலரின் சுழற்சிக் கதை.

டாலரின் சுழற்சிக் கதை.
கேள்விகள்

"1.அமெரிக்க அரசு இப்படி டாலர் அளவக்கு அதிகமாக அடித்து வெளிவிடுகிறதே,இதற்கு எதுவும் வரைமுறை (அ)கட்டுப்பாடு இல்லையா?

2.இப்படி டாலர் அளவக்கு அதிகமாக அடித்து புழக்கத்தில் விட்டும் டாலர் மதிப்பு 48.25 யாக இருப்பது எப்படி? 2007ல் இதன் மதிப்பு 38 ரூபாய் தானே இருந்தது.

3.இப்படி டாலர் அளவக்கு அதிகமாக அடித்து புழக்கத்தில் விடுவதால் டாலர் மதிப்பு குறையும் என்று கூறிகிறார்கள் ஆனால் அவ்ர்கள் டாலரை மற்ற நாட்டு பங்குசந்தைலும், மற்ற நாட்டு பொருட்களை வாங்கி குவித்தால் டாலர் மதிப்பு எப்படி குறையும்? இது மற்ற நாட்டு பொருளாதாரத்தை பாதிக்காதா ? "

இந்த கேள்விகளுக்கு சற்று விளக்கமாக பதில் சொல்ல வேண்டியிருக்கிறது.

உதாரணத்திற்கு சீனாவை எடுத்துக் கொள்வோம். சீனா ஏராளமான பொருட்களை உற்பத்தி செய்கிறது. அந்த பொருட்களில், உள்ளூர் உபயோகம் போக மீதியை அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்கிறது. அந்த பொருட்களுக்கு ஈடாக அமெரிக்கா ஏராளமான டாலர் பணத்தை தருகிறது.

இங்கு ஒரு விஷயத்தை கருத்தில் கொள்ளவும். ஒரு நாட்டின் கரன்சி வேறு ஒரு நாட்டில் ஒருபோதும் செல்லுபடி ஆகாது. (கரன்சி மாற்றுபவர்களும் இறுதியாக அந்த கரன்சியை அச்சடித்த நாட்டுக்குத்தான் அனுப்பி வைப்பார்கள்) எனவே அமெரிக்காவிடம் இருந்து பெற்ற கரன்சியினால் சீனாவிற்கு உள்நாட்டில் உபயோகம் ஏதும் இல்லை.

எனவே ஏற்றுமதி மூலம் தான் பெற்ற டாலர் பணத்தை சீனா மீண்டும் அமெரிக்க நாட்டிலேயே முதலீடு செய்கிறது. (வேறென்ன செய்ய முடியும்?) சீனா முதலீடு செய்ய ஏதுவாக அமெரிக்கா பல கடன் பத்திரங்களை அச்சடிக்கிறது. (அவ்வாறு கடன் மூலம் பெற்ற பணத்தைத்தான் அமெரிக்கா தன் இறக்குமதிக்கு ஈடாக கொடுக்கிறது) தான் பெற்ற கடனுக்கு வட்டியாகவும் (மிகவும் குறைவு) டாலர் பணத்தை சீனாவிற்கு அமெரிக்கா அளிக்கிறது. அந்த பணத்தையும் சீனா அமெரிக்காவிலேயே மீண்டும் முதலீடு செய்கிறது. இப்படி அமெரிக்காவில் இருந்து உருவாக்கப் படும் டாலர் பணம் அமெரிக்காவில்தான் இறுதியில் தஞ்சமடைகிறது.

ஒருவேளை, சீனா தான் பெற்ற டாலர் பணத்தை, தனது சொந்த இறக்குமதி தேவைக்காக இந்தியா போன்ற இன்னொரு நாட்டிடம் வழங்கலாம். ஆனால் அந்த பணமும் அங்கு சுற்றி இங்கு சுற்றி இறுதியில் சென்றடைவது அமெரிக்காவில்தான்.




இந்த டாலர் சுழற்சி முறையில், சில சமயங்களில் அமெரிக்க அரசாங்கம் ஏராளமான கடனை வாங்கி வட்டி கட்ட முடியாமல் நிதிப் பற்றாக்குறையில் தடுமாறும் போது, அந்நாட்டின் மத்திய வங்கி புதிய நோட்டுக்களை உருவாக்குகிறது. அந்த பணம் மீண்டும் உலகம் சுற்ற ஆரம்பிக்கிறது.

இப்படி ஏராளமான டாலர் பணம் புழக்கத்தில் வரும் போது டாலர் மதிப்பு சர்வதேச சந்தையில் குறைந்து விடுகிறது. மற்ற நாணயங்களின் மதிப்பு உயர்கிறது.

அதே சமயத்தில், மற்ற நாடுகளும் இதே போன்ற ஒரு பாணியை (Monetization of Fiscal Deficit), சிறிய அளவில், பின் பற்றுவதால், டாலர் மதிப்பு மிகவும் பெரிய அளவில் குறைந்து போவதில்லை. குறிப்பாக இந்தியாவில் கூட (அரசு கடனை சந்தையில் இருந்து வாங்குவதன் மூலம்)ஏராளமான புதிய பணம் மத்திய வங்கியினால் உருவாக்கப் படுகிறது.

இந்தியா மற்றும் சீனா போன்ற நாடுகளின் அந்நிய செலவாணி (குறிப்பாக டாலர்) கையிருப்பு பெரிய அளவில் உள்ளன. இந்த பணம் பெரும்பாலும் மிகக் குறைந்த வட்டிக்கு அமெரிக்காவிலேயே முதலீடு செய்யப் படுகின்றன. இந்த முதலீட்டினால் ஏராளமான நஷ்டத்தையும் (வட்டி குறைவு மற்றும் நாளுக்கு நாள் டாலர் மதிப்பு குறையும் அபாயம்) சந்திக்கின்றன.

தனது அந்நிய செலவாணி கையிருப்பை டாலரிலிருந்து யூரோ நாணயத்திற்கு மாற்றியதாலேயே சதாம் ஹுசைன் அமெரிக்காவின் கோபத்திற்கு ஆளானார் என்று சொல்லப் படுகிறது. இப்போது சீனா தனது கையிருப்பை யூரோ நாணயத்திற்கு மாற்றி வருகிறது. டாலருக்கு மாற்றாக ஒரு புதிய உலக கரன்சியை உருவாக்க வேண்டும் என்றும் கூட சீனா சொல்லி வருகிறது. சீனாவும் ஒரு வல்லரசு என்பதால் அமெரிக்கா ராஜரீக நிர்பந்தங்களை மட்டும் ஏற்படுத்தி வருகிறது.
இந்தியா போன்ற நாடுகளின் கரன்சிகள், பொதுவாக, மற்ற நாடுகளால் அங்கீகரிக்கப் படுவதில்லை. எனவே தமது இறக்குமதி தேவைக்கும் வெளிநாட்டுக் கடன்/வட்டி திருப்பி செல்வதற்கும் இந்தியா போன்ற நாடுகளுக்கு டாலர் உதவி தேவைப் படுகிறது. இந்தியாவைப் பொறுத்த வரை டாலர் என்பது வெளிநாட்டு வர்த்தகம் மற்றும் முதலீட்டிற்கு உதவும் ஒரு முக்கிய சாதனம் (vehicle) ஆகும். இந்த சாதனத்தின் சந்தை விலை, தேவை மற்றும் வழங்குதல் (Demand and Supply) ஆகிய சந்தை விதிகளின் அடிப்படையில் மாறுபடுகிறது. (ஆனால் முழுக்க முழுக்க என்று சொல்ல முடியாது. ஏனென்றால் ரூபாய் நாணய மாற்று வீதம் (Capital Account Convertiblity) முழுமையானதல்ல) கடந்த இரண்டு வருடங்களில் அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் (FIIs) தங்கள் முதலீடுகளை திரும்பப் பெற்றதாலேயும், இந்தியாவின் ஏற்றுமதியை விட இறக்குமதி மிகவும் அதிகமாக இருப்பதாலேயும் சந்தையில் டாலர் தேவை அதிகமாக ரூபாய் மதிப்பு குறைந்து போனது.

என்னுடைய கற்பனையில் மேற்சொன்ன டாலர் சுழற்சி முறை எப்படி இருக்கிறது தெரியுமா?

ஒரு நாட்டில் ஒரு "கொழுத்த" பணக்காரன் இருந்தான். அவனுக்கு சாப்பிடுவதை தவிர வேறு வேலையில்லை. அவனிடம் இருந்த காகிதத்தில் இவ்வளவு காசு என்று எழுதி அவனுக்கு சேவை செய்தவர்களுக்கெல்லாம் கொடுத்து வந்தான். அந்த காசு ஊர் முழுக்க செல்லுபடியானது.

அந்த ஊரின் பொருளாதாரமே அவனை நம்பித்தான் இருந்தது.

உழவன் அவனுக்கு சாப்பிட உணவளித்தான். நெசவாளி உடையளித்தான். ஒருவன் அவன் வீட்டில் வேலை செய்தான். ஒருவன் அவனுக்கு வைத்தியம் பார்த்தான். ஒருவன் அவனிடம் கடன் வாங்கினான். இன்னுமொருவன் அவனுக்கு கடன் கொடுத்தான்.

மேற்சொன்ன கணக்கு வழக்குகளை இன்னுமொருவன் சரி பார்த்தான்.

இன்னுமொருவன் அந்த காகிதத்தை (காசு என்று எழுதப் பட்ட அந்த காகிதத்தை சம்பளமாக வாங்கிக் கொண்டு) தயாரித்துக் கொடுத்தான்.

மேற்சொன்ன அனைவருமே தமது எதிர்காலம் அந்த "கொழுத்தவனை" நம்பித்தான் இருக்கிறது என்று நம்பியிருந்தனர். அவனுக்கு மட்டும்தான் தெரியும் அவனுடைய எதிர்காலம் மற்றவர்களின் ஒற்றுமையின்மையிலும் முட்டாள்தனத்திலும்தான் உள்ளது என்று.

ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு பேராதிக்கம் உலக நாடுகளை ஒவ்வொரு வகையில் சுரண்டித்தான் வந்திருக்கிறது. தற்போதைய காலகட்டம் அமெரிக்காவிற்கு சாதகமாக அமைந்துள்ளது. அமெரிக்காவின் பேராதிக்கத்திற்கு டாலர் ஒரு மிகப் பெரிய ஆயுதமாகவே அமைந்திருக்கிறது.

thanks to http://sandhainilavaram.blogspot.com/2009/07/blog-post_29.html

No comments: