எஸ். இராமச்சந்திரன்
கேரள மாநிலத்தில் பிரபலமான ஐயப்பன் கோயில் அமைந்துள்ள மலை சபரிமலை என வழங்கப்படுகிறது. சபரி என்ற பெயர் கொற்றவையின் பெயர்களுள் ஒன்றாகும். இவள், ‘சபரர்’ எனப்பட்ட பாலை நில எயினர்களின்1 தெய்வமாவாள். இவளை நக்ன சபரி, கொட்டவி, கொட்டாரா என்ற பெயர்களை உடைய துர்க்கையாகவும், மகாபலியின் தாயாகவும் வடமொழிப் புராணங்கள் சித்திரிக்கின்றன.2 மகாபலியைத் துளுமொழி வழங்கிய கன்னட – கேரளப் பகுதி மக்களின் மூதாதையாகக் கருதும் வழக்கமுள்ளது. எனவே, கேரள மாநிலத்திலுள்ள சபரி மலையைக் கொற்றவை மலை எனக் குறிப்பிடுவதில் தவறில்லை எனக் கருதுகிறேன். சபரிமலை ஐயப்பன் வழிபாட்டின் வெகுஜனத் தன்மை பற்றியும் அதன் பெளத்த மூலம் பற்றியும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. எடுத்துக்காட்டாக, பள்ளிக்கட்டு, தர்மசாஸ்தா போன்ற வழக்குகளும், “புத்தம் சரணம் கச்சாமி” என்பதையொத்த “சாமியே சரணம் ஐயப்பா” முதலிய சரண கோஷங்களும் சாதி அந்தஸ்து ஏற்றத்தாழ்வுகளைப் பாராட்டாமல் பயண அனுபவ மூப்பு அடிப்படையில் ஒருவரைக் குருசாமியாக ஏற்கும் மரபும் பெளத்தத் தொடர்புகளை வலியுறுத்தும் கூறுகளாக அமைந்துள்ளன என்பதை ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். வழிபாட்டு நெறிகளிலும் வாழ்வியல் முறைகளிலும் வெகுஜனங்களின் பங்கேற்பு மூலமாகவே முடிவுகள் எடுக்கப்படும் பழங்குடிச் சமூகக் குடியரசு நெறிமுறைகளின் அடிப்படையில் தோன்றிய பெளத்த சங்கத்தின் தன்மைகளை ஜீரணித்து வளர்ந்ததே சபரிமலை ஐயப்பன் வழிபாட்டு மரபு என்பதை இவ்வழக்கங்கள் உணர்த்துகின்றன. கேரள மாநிலத்தைப் பொருத்தவரை, பெளத்த சமய மரபுகள் வைதிக இந்து சமய வழிபாட்டு நெறிகளுக்குள் ஈர்த்துத் தன்மயமாக்கிக் கொள்ளப்பட்ட நடைமுறை கி.பி. 12-13ஆம் நூற்றாண்டுகளில் நிகழ்ந்ததாகத் தெரிகிறது. தென்கேரளப் பகுதியைச் சேர்ந்த வேணாட்டு ஆய் மன்னர்களின் 9ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பாளையத்துச் சாசனம் பெளத்த சமயத் தொடர்புடையதாகும்.3 இச்செப்பேடு, “சுத்தோதனன் மகனான புத்த பகவான் மூன்று உலகங்களையும் குறைவின்றிக் காப்பாற்றுவாராக” என்றும், “பெளத்த தர்மம், பெளத்த சங்கம் என்பவை பூமிதேவியின் கண்களாகத் திகழ்க” என்றும், “அமுதைப் பொழியும் நிலவொளிக்கு ஒப்பான அவலோகித போதிசத்வரின் கருணைப் பார்வை குறைவற்ற செல்வத்தை அருளட்டும்” என்றும் துதிக்கிறது. இச்செப்பேடு திருமூலபாதத்து படாரர் எனப்பட்ட இறைவனுக்கு வழங்கப்பட்ட நிலக்கொடையைப் பதிவுசெய்துள்ளது. திருமூல பாதத்து படாரர் என்பது ஸ்ரீமூலவாஸம் என்ற தலத்தில் எழுந்தருளியிருந்த, லோகநாதர் என அழைக்கப்பட்ட போதிசத்வ அவலோகிதேஸ்வரரைக் குறிக்கும். சுத்தோதனனுக்கும் மாயாதேவிக்கும் பிறந்த கெளதம சித்தார்த்தர் என்பவர் மானுஷி புத்தர் (புத்தரின் மனித வடிவம்) ஆவார் என்றும், அவலோகிதர் என்பது அவருடைய போதிசத்வ வடிவம் ஆகுமென்றும் அமிதாபர் என்பது அவருடைய தியானி புத்தர் வடிவம் ஆகுமென்றும் புத்த சமயத்தவர் கருதுகின்றனர். கி.பி. 10-11ஆம் நூற்றாண்டுகளில் சோழப் பேரரசின் விரிவாக்கம் நிகழ்ந்தது. பாண்டிய நாடு சோழ அரசின் அங்கமாக ஆக்கப்பட்டது. குறுகிய காலத்திற்குச் சேரநாடும் சோழர்களின் ஆளுகையின்கீழ் வந்தது. சோழர்கள், சேர, சோழ, பாண்டிய நாடுகளின் அதிபதி என்று பொருள்படும் வகையில் ‘மும்முடிச் சோழன்’ எனப் பட்டம் சூடினர். ஆயினும், சேரநாட்டுப் பெருமாக்கோதை மன்னர்கள் ஆட்சிதான் வீழ்ச்சியடைந்ததே தவிரச் சேர நாடு முழுமையாகச் சோழப் பேரரசுக்குள் அடங்கிவிடவில்லை. இக்காலகட்டத்தை “நூறாண்டு போர்க் காலம்” எனக் கேரள வரலாற்றாசிரியர்கள் குறிப்பிடுவர். இப்போரின் விளைவாகச் சேர நாட்டின் ஆட்சியமைப்பிலும் சமூக அமைப்பிலும் பெரும் மாற்றங்கள் நிகழ்ந்தன. கி.பி. 12-13ஆம் நூற்றாண்டுகளில் பெருமாக்கோதை மன்னர்களின் ஆட்சி முழுமையாக வீழ்ச்சியடைந்தது. அவ்வீழ்ச்சி கி.பி. 14ஆம் நூற்றாண்டில் கண்ணனூர்க் கோலாதிரி (கோலத் திருப்பாதம்), பெருந்தலமன்ற வள்ளுவக் கோனாத்திரி (வள்ளுவக் கோன் திருப்பாதம்), கோழிக்கோடு சாமூதிரி (சாமிதிருப்பாதம்), ஆற்றிங்கல் வேணாட்டுத் திருவடி போன்ற சிற்றரசர்களின் எழுச்சிக்கு வழிவகுத்தது. இச்சிற்றரசர்களின் பட்டப் பெயர்கள் திருப்பாதம் அல்லது திருவடி என்று அமைந்திருப்பது பெளத்த மரபின் தொடர்ச்சியையே காட்டும். மிகப் பழமையான ஹீனயான பெளத்தத்தில் புத்தருடைய திருவடிகளைக் குறிக்கின்ற பாத பீடிகையே வழிபடப்பெற்றது. இந்து சமயத்தில் நிலவுகிற ஸ்ரீபாத வழிபாடு என்பது ஹீனயான பெளத்த மரபினை மூலமாகக் கொண்டதே ஆகும். கடவுளையும் கடவுளர் என அழைக்கப்பட்ட முனிவர்களையும் அடிகள் எனக் குறிப்பிடும் வழக்கம் இம்மரபின் தொடர்ச்சியே. சிலப்பதிகார ஆசிரியர் இளங்கோவடிகள் என்று குறிப்பிடப்படுவது நாம் அறிந்ததே. இன்றும் வடகேரளப் பகுதியில் துளு மொழியைத் தாய்மொழியாகக் கொண்ட பிராம்மணர்களிடையே இப்பொருளுடைய அடிகா என்ற குடும்பப்பெயர் வழக்கிலுள்ளது. இதுபோன்றே நம்பிதிருப்பாதம் (இன்றைய வழக்கில் நம்பூதிரிபாத்) என்ற பட்டப் பெயர் கொண்ட பிராம்மணர்கள் கேரளச் சமூக அமைப்பில் முதன்மையான ஆதிக்க சக்தியாக உருவெடுத்தனர். இத்தகைய நிகழ்வுகளின் விளைவாகச் சேரநாடு கேரள ராஜ்ஜியமாகவும், பரசுராம க்ஷேத்திரமாகவும் மாறுகிற சூழல் உருவாயிற்று. பெளத்த சமயத்தின் நிர்வாக அமைப்பு, வெறும் கூடாக மட்டுமே நீடித்தது. இதனையடுத்து, கி.பி. 14ஆம் நூற்றாண்டில் மதுரைப் பாண்டிய அரசினை வீழ்த்தி உருவான மதுரை சுல்தானிய அரசாட்சி, கர்நாடக மாநிலம் வரை வியாபித்த டில்லி, பாமினி சுல்தான்களின் ஆட்சி ஆகியவற்றின் தாக்கத்தால் கேரளக் கடற்கரை இஸ்லாமிய மரக்கல நாயர்களின் ஆதிக்கத்தின்கீழ் வந்தது. இவற்றின் ஒட்டுமொத்த விளைவாகக் கேரளக் கடற்கரையிலும், தமிழகத்தின் நாகப்பட்டினம், இராமேஸ்வரம் போன்ற சில கடற்கரை நகரங்களிலும் ஓரளவு உயிர்ப்புடன் இருந்த பெளத்த சமயத்தின் இறுதிமூச்சும் நின்றுபோனது. பெளத்த சமயம் அது தோன்றிய இடமாகிய இந்திய நாட்டிலேயே பின்பற்றுவாரின்றி மறைந்துபோனது. இந்நிகழ்வுப் போக்கின் விளைவாகவே சபரிமலை ஐயப்பன் முற்றிலும் இந்து சமய வழிபாட்டு முறையில் வழிபடப்பெறும் தெய்வமாக மாறிப்போனார். இஸ்லாமியர்களுடனான இணக்கத்தை வெளிப்படுத்தும் வண்ணம் சபரிமலை ஐயப்பன் வழிபாட்டில் வாவர் (பாபர்) சமாதி வழிபாட்டுக்கும் இடமளிக்கப்பட்டது. சபரிமலை ஐயப்பனைப் பற்றிய இத்தகைய ஆய்வு முடிவுகள் அறிஞர்களால் பரவலாக விவாதிக்கப்பட்டுள்ளன.4 ஆனால், சபரிமலை ஐயப்பனின் பழங்குடி மூலத்தைப்பற்றி ஆழமான ஆய்வு ஏதும் நடைபெற்றதாகத் தெரியவில்லை. ஐயப்பன் வன்புலி வாகனனாக இன்றுவரை வழிபடப்படுவது, ராமாயணத்தில் இடம்பெறும் சபரி என்ற வேடர் குலப் பெண் அப்பகுதியில் வாழ்ந்ததாகவும் வன வாசத்தின்போது ராமன் அவளைச் சந்தித்ததாகவும் பம்பை திரிவேணி சங்கமத்தில் ராமன் தன் தந்தை தசரதனுக்குரிய சிராத்தச் சடங்குகளைச் செய்ததாகவும் நிலவுகின்ற நம்பிக்கை, போன்றவற்றின் அடிப்படையில் இம்மலை சபரர் என அழைக்கப்பட்ட எயினர்களின் வாழ்விடமாகவே முற்காலத்தில் இருந்துள்ளது என்று முடிவு செய்வது எளிது. ஆயினும், இதில் ஒரு சிக்கல் இருக்கிறது. சபரர் என்ற பழங்குடிகள் பற்றி இந்தியப் புராணங்களில் இடம்பெற்றுள்ள விவரங்களை ஆராய்ந்தால் அவர்களுடைய வாழ்க்கை முறை குறிஞ்சி நிலப் பூர்வகுடிகளான குறவர்களைப் போன்று தினை முதலான மலைப்பயிர் விவசாயம் சார்ந்ததன்று எனத் தெரியவருகிறது. குன்றக் குறவர்கள் வடமொழிப் புராணங்களில் கிராதர் எனக் குறிப்பிடப்படுகின்றனர்.5 முற்றிலும் வேட்டையும் ஆனிரை கவர்தலுமே சபரர்களுடைய வாழ்க்கை முறை. காட்டு எருமைகள், மலை ஆடுகள் போன்றவற்றை வேட்டையாடி உண்டு வாழ்ந்தவர்கள் சபரர் ஆவர். பிற்காலத் தமிழிலக்கியங்கள் கள்ளர் - மறவர் குலத்தவரைச் சபரர் என்றே குறிப்பிடுகின்றன. கள்ளர் - மறவர்களுடைய வழிபடு கடவுளான கொற்றவை ஆனிரை கவரும் வெட்சிப் போர்த் தெய்வமாகும். சபரர் குலத்தவர்களின் வழிபாட்டு எச்சங்களாகச் சபரிமலைப் பெருவழிப் பாதையில் அமைந்துள்ள எருமைகொல்லி (எருமேலி), காளைகட்டி போன்ற ஊர்ப் பெயர்களையும், மஹிஷி என்ற எருமை வடிவப் பெண் தெய்வத்தை ஐயப்பன் கொல்வது, மஹிஷியைப் புதைத்த இடமாகிய கல்லிடு குன்றில் பக்தர்கள் இன்றும் கற்களை இடுவது போன்ற வழக்கங்களையும் குறிப்பிடலாம். ‘உவலிடுபதுக்கை’ என்றும் “மறவர்களின் அம்புபட்டு வீழ்ந்தோரின் வம்பப்பதுக்கை” என்றும் சங்க இலக்கியங்கள் இவ்வழக்கத்தைக் குறிப்பிடுகின்றன. சபரர்களைப் பழங்கற்காலத்தின் இறுதிப் பகுதியைச் சார்ந்த குடியினராகவே தொல்லியலாளர்கள் அடையாளம் காண்பர்.
கொற்றவையின் ஆயுதமாகப் பிற்காலச் சிற்பங்களில் சித்திரிக்கப்படும் சக்கரத்தின் பூர்வ வடிவம் பழங்கற்கால வேட்டைக் கருவியாகிய வட்டு (disc) ஆகும். பழங்கற்காலப் பண்பாட்டு நிலைச் சமூகத்தவர் ஆப்பிரிக்க நிக்ராய்டு இனக் கூறுகளைக் கொண்டவர்களாவர். இவர்கள், தொல்பழங்காலத்திலேயே குன்றக் குறவர் போன்ற பிற பழங்குடிகளைச் சேர்ந்த மகளிரைச் சிறையெடுத்து மணம்புரிந்ததன் மூலம் குறவர் குலத்தவரின் மானிடவியல் பண்பாட்டுக் கூறுகள் சிலவற்றை உள்வாங்கியிருக்கக்கூடும். கொற்றவை வழிபாட்டுச் சமூகத்தின் அடுத்தகட்ட வளர்ச்சி நிலையைப் பிரதிநிதித்துவம் செய்தவர்கள் இடப்பெயர்வு விவசாய வாழ்நிலையைச் சார்ந்தவர்கள் ஆவர்.
இச்சமூகத்தவரைப் புதிய கற்காலக் குடியினர் என நாம் அடையாளம் காணமுடியும். புதிய கற்காலக் குடியினரின் வழிபடு தெய்வமாக அல்லது வேட்டையின்போதும் போர்களின்போதும் வழிநடத்துகிற தளபதியாகச் சங்க காலக் கூற்றுத் தெய்வத்தை நாம் அடையாளம் காணமுடியும். கூற்று என்ற சொல் பொதுப்பாலில் அமைந்திருப்பினும் இத்தெய்வத்தைக் கொற்றவையின் ஆண் வடிவமாகவே அடையாளம் காணமுடிகிறது. இத்தெய்வம் விரும்பிச் சூடும் மலர் கொன்றை ஆகும். கூற்று என்ற இத்தெய்வம் புலித்தோலை ஆடையாக உடுத்த தெய்வம் என்று கலித்தொகைக் கடவுள் வாழ்த்துப்பாடல் (“கொலையுழுவைத் தோலசைஇக் கொன்றைத்தார் சுவல் புரள”) கூறுகின்றது. சைவ சமயம் பல்வேறு சமூகங்களின் வழிபாட்டு அம்சங்களையும் பொருத்தமாக உள்ளடக்கிச் சிவனென்ற பெருந்தெய்வமாக வடிவமைத்தபோது கூற்று என்ற இத்தெய்வம் காரி என்ற பெயரிலும், பைரவர் என்ற பெயரிலும் போற்றப்படும் சிவமூர்த்தமாகச் சித்திரிக்கப்பட்டது. கன்னட வீரசைவ நெறியின் தலைமைத் தெய்வமாகிய வீரபத்திரர் பைரவக் கடவுளின் வடிவமே ஆவார். அடிப்படையில் இத்தெய்வம் முல்லை நில வேட்டுவர்களின் தெய்வமாகும்.
முல்லை நிற வேட்டுவர்கள் கருத்த நிறமுடைய முன்னிலை ஆஸ்திரலாய்டுப் பழங்குடிகள் என அடையாளம் காண இயலும். சபரிமலையில் வன்புலி வாகனனாகக் காட்சியளிக்கும் ஐயன், பெளத்த சமயத்தவரின் தர்மசாஸ்தாவாக உருவெடுக்கும் முன்னர், கூற்றுத் தெய்வத்தின் தன்மைகள் கொண்ட காரியாகவே இருந்திருக்க வேண்டும் என நாம் முடிவு செய்யலாம். காரி என்ற பெயர் சாத்தனுக்கும் உரியதென்றும் தமிழ் நிகண்டுகள் குறிப்பிடுகின்றன. பைரவரைச் சிவபெருமானின் பிள்ளை எனப் பெரியபுராணம் குறிப்பிடுவது போன்றே சிவபிரான், “சாத்தனை மகனா வைத்தார்” என அப்பர் பெருமான் தமது தேவாரத்தில் குறிப்பிடுகிறார். இத்தகைய ஒப்புமைகள் காணப்பட்டாலும், ஐயனார் அல்லது ஐயப்பன் என்ற பெயர் தகப்பனைக் குறிக்குமே தவிரப் பிள்ளையைக் குறிக்காது. கூற்று வழிபாடு என்பது பைரவ வடிவம், யமன் என்ற தென்புலக் காவல்காரன் வடிவம் ஆகியவற்றோடுதான் நெருக்கமுடையதாகும். யமன் என்பது இறந்து, மீண்டும் பிறக்கும் தன்மையின் உருவகமே. ஆனால், ஐயன் (பித்ரு) என்பதோ சிவபதம் என்றும், சாயுஜ்யம் என்றும் பிற்காலச் சைவ சித்தாந்தத்தில் குறிப்பிடப்படுவது போன்று, மீண்டும் பிறவாத உலகுக்குச் சென்றுவிட்ட தென்புலத் தலைவன் வடிவமாகும். தென்புலத் தெய்வம் என்பது netherworld எனக்குறிப்பிடப்பட்ட நெய்தல் உலகின் தலைவனாகிய வருணனையே குறிக்கும்.
இன்றைய நிலையில் சபரிமலைப் பயணத்திலோ, ஐயப்பன் வழிபாட்டிலோ பருவ வயதடைந்த பெண்டிர் அனுமதிக்கப்படாமல் இருப்பது ஆராயத்தக்கதாகும். இது ஒரு பழங்குடி நம்பிக்கையாகவே தோன்றுகிறது. குஹ்யகர்கள் எனப்படும் குள்ள வடிவக் குலக்குழுவினர் குருதியின் மணத்தை விரும்பி வருவரென்றும், அவர்களின் தலைவனாகிய குகன் (முருகன்) மாதவிடாய்க் காலத்துப் பெண்டிரை ஈர்த்து அவர்களை மனநோய்க்கு ஆளாக்கிவிடுவான் என்றும் பழங்குடி மக்கள் அஞ்சினர். புறநானூற்றில் (பா. 299) அணங்குடை முருகன் கோட்டத்தில் கலம்தொடா மகளிர் (உணவு சமைக்கும் கலங்களைத் தொடுவதற்கு அனுமதிக்கப்படாத மாதவிடாய்க் காலப் பெண்டிர்) புகுந்தால் சுருண்டு விழுந்துவிடுவர் என்ற குறிப்பு காணப்படுகிறது. இது மேற்குறித்த குஹ்யகர்கள் தொடர்பான நம்பிக்கையின் பதிவே எனலாம். குறிஞ்சி நிலத்தில் அமைந்துள்ள சபரிமலைச் சாத்தன் கோயிலுக்கு நீண்ட நெடும் மலைப்பாதை வழியாக மகளிர் பயணம் செய்கின்ற அவசியம் நேரும்பட்சத்தில் அவர்களுக்கு மாதவிடாய்க் காலம் வந்துவிட்டால் ஐயப்பனின் வாகனமான புலியினாலேயே ஊறு நேர்ந்துவிடலாம் என்ற அச்சமும் இத்தடைக்குக் காரணமாக இருந்திருக்கலாம். எவ்வாறாயினும், இந்நம்பிக்கை சபரர்களிடையே நிலவிய நம்பிக்கை எனக் கொள்வதைவிட, குறிஞ்சி நிலக் குடிகளான குறவர்களிடையிலும், முல்லை நில வேட்டுவர்களிடையிலும் நிலவிய நம்பிக்கையாகவே நாம் கருதலாம்.6 மலபார்ப் பகுதியிலுள்ள வயநாடு வட்டத்தில் அமைந்துள்ள எடக்கல் மலையில் கி.பி. 5ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த தமிழ் பிராமிக் கல்வெட்டு ஒன்று பொறிக்கப்பட்டுள்ளது. அக்கல்வெட்டில் ”பல்புலி தாத்தகாரி” என்ற வாசகம் இடம்பெற்றுள்ளது.7 இக்கல்வெட்டு உள்ள குகையினை அப்பகுதிப் பழங்குடியினர் மிகவும் புனிதமாகக் கருதி வழிபட்டு வருகின்றனர் என்ற செய்தியும் அறிஞர்களால் பதிவுசெய்யப்பட்டுள்ளது. இக்கல்வெட்டில் இடம்பெறுகிற தாத்தகாரி என்பதற்கு மூதாதையாகிய ஐயனார் என்று பொருள்கொள்ள வாய்ப்புள்ளது. பல்புலி என்பது பல புலிகளை வசப்படுத்தியவன் என்ற நேர்ப்பொருளும் புலிவாகனன் என்ற குறிப்புப் பொருளும் கொண்ட அடைமொழியாக இருக்கலாம்.
எனவே, தென் கன்னடத்தைச் சேர்ந்த, முல்லை நில வேட்டுவர்களின் தெய்வமாகிய வைரவர், யக்ஷர் குலக் கலப்பில் தோன்றிய, குறிஞ்சிக் கிழவனாகிய முருகன், யக்ஷர் தலைவனாகிய குபேரன் ஆகியோரின் தன்மைகளை உள்ளடக்கிய தாத்தகாரியைக் குறிக்கின்ற கல்வெட்டாக இதனைக் கருதலாம். ஐயப்பன் வழிபாட்டில் நீடித்து வருகின்ற மூதாதையர் வழிபாட்டுக்கூறுகளை இன்றும் நாம் எளிதில் அடையாளம் காணமுடியும். மழைக் காலத்தையடுத்து வருகிற சரத் காலம் (மார்கழி, தை, மாசி, பங்குனி மாதங்கள்) மூதாதையர் வழிபாட்டிற்குரிய காலமாகும். குறிப்பாகப் பாரசிக ஜொராஸ்ட்ரிய சமயத்தில் மாசி மாதத்திற்குச் சமமாக வருகின்ற பிர்தெளஸ் மாதம் மூதாதையர் வழிபாட்டு மாதமாகக் கருதப்படுகிறது சைவ சமயத்தில் தை மாத அமாவாசையும், மாசி மாதத் தேய்பிறை சதுர்தசியும் (மகா சிவராத்திரி) முன்னோர் வழிபாட்டுக்குரிய நாள்களாகும். பாரசிக ஜொராஸ்ட்ரிய சமயம் சார்ந்த மரணச் சடங்குகளில் உறவினர்கள் கூடி சக்தித் என்ற பெயரில் விருந்துண்பது ஓர் அம்சமாக இடம்பெறும்.8 இறந்தவர் ஆவி வடிவில் வந்து உண்பதற்காக ஓர் இருக்கையும் உணவும் அவருக்கென்று ஒதுக்கிவைக்கப்படும். சபரிமலை யாத்திரையின்போது ஐயப்ப சத்யா என்ற பெயரில் பம்பை நதிக்கரையில் பித்ரு தர்ப்பணத்துடன் விருந்து படைப்பது ஐயப்ப பக்தர்களிடையே இன்றும் நடைமுறையில் உள்ளது. ஐயப்பனும் பக்தர்களுடன் சேர்ந்து உணவருந்துவதாகக் கருதப்படும். சத்யா என்பதும் சக்தித் என்ற பாரசிக மரபும் ஒன்றே என்பதில் ஐயமில்லை. முன்னோர் வழிபாட்டு மரபுகளோடு இத்தலத்துக்கு உள்ள தொடர்பினை உள்ளடக்கும் வகையிலும், இராமாயணக் கதையுடன் இந்திய நாட்டு வழிபாட்டுத் தலங்களைத் தொடர்புபடுத்தும் மனப்பாங்கின் வெளிப்பாடாகவும், ராமன் தசரதனுக்குரிய சிராத்தச் சடங்கினை இங்கு நிறைவேற்றியதாகக் கதை புனையப்பட்டிருக்க வேண்டும்.
பாரசிக ஜொராஸ்ட்ரிய மதத்தின் ஒரு பிரிவாகிய மாகி (magi) என்பது இன்றும் கேரள நாட்டில் மந்திரவாதிகளைக் குறிக்கின்ற பெயராக வழக்கில் உள்ளது மாகி என்ற சொல்லிலிருந்துதான் magic என்ற சொல் தோன்றியுள்ளது. முதன்முதலில் இறந்து, மரணம் என்பது இத்தகையது என மனிதர்களுக்கும் தேவர்களுக்கும் உணர்த்திய வழிகாட்டி யமன் ஆவான். (இது அமாவாசைப் பட்சத்து நிலவைக் குறிக்கும்.) யமன், பாரசீக சமய வழக்கில் ‘யிமா’ எனப்படுவான். மரணச் சடங்கைக் குறிப்பிடுவதற்குப் பயன்பட்ட சங்கத் தமிழ்ச் சொல்லாகிய ‘ஈமம்’ என்பது யிமா என்ற சொல்லுடன் நெருக்கம் உடையதாகத் தெரிகிறது. முதுமக்கள் தாழி என்பது ஈமத் தாழி எனப் புறநானூற்றில் (பா. 256:5) குறிப்பிடப்படுகிறது. தாழிகளில் உடலை அடக்கம் செய்யும் மரபு என்பது பாரசீகச் சமய மரபுகளுடன் ஒப்புமையுடையதாகும். ஐயனார் வழிபாடு என்பதே வேத கால வருணன் வழிபாட்டுடனும் ஜொராஸ்ட்ரிய சமய அஹுரமஸ்தா வழிபாட்டுடனும் மிக நெருங்கிய உறவுடைய வழிபாடாகும். அஹுரமஸ்தா என்ற சொல் அசுரர் தலைவன் எனப் பொருள்படும். அதாவது, சுரா பானம் அருந்தாத, பிரபஞ்ச ஒழுங்கைக் காக்கும் தலைவன் என பாரசீகத்தின் கிளை மொழியாகிய குஜராத்திப் பார்சி மொழியில் வருணன் குறிப்பிடப்பட்டான். ‘பாசண்டம்’ என்ற பெயருடையது. பாசண்டம் என்ற சொல், வைதிக மரபுக்கு மாறானது என்ற பொருளில் இந்திய மொழிகளில் வழங்கிற்று. ஐயனாரைத் தொண்ணூற்றறு வகைப் பாசண்டச் சாத்தன் எனச் சிலப்பதிகாரம் குறிப்பிடுகிறது. தொண்ணூற்று வகைப்பட்ட அவைதிகத் தத்துவ மரபுகளுக்கும் தலைவன் என்பது இதற்குப் பொருள். ஜொராஸ்ட்ரிய சமயத்தின் தலைமைத் தெய்வமாகிய அஹுரமஸ்தாவின் மகன் ஆதர் எனப்பட்ட நெறிப்பட்ட நெருப்புக் கடவுள் ஆவான். ஆதர் வழிபாட்டுப் பூசாரி ‘அத்ரவன்’ எனப்பட்டான். இது, அதர்வண வேதம் என்ற பெயரில் இடம்பெறும் ‘அதர்வண’ என்ற சொல்லுடன் தொடர்புடையதாகும். இச்சொல் பாசண்ட மொழியில் ‘அத்ரணன்’ என வழங்கிற்று. கர்நாடகக் கடற்கரைப் பகுதியாகிய துளு மொழி வழங்குகின்ற பகுதியில் அதர்வண வேதத்துடன் தொடர்புடைய அத்ருணோ என்ற சொல் பில்லி சூனியம் வைப்பவன், ஏமாற்றுக்காரன் என்ற பொருளில் வழங்குகிறது. அதர்வண வேத சடங்குகள் மாகி மந்திரவாத வழக்குகள் தோன்றுவதற்கு அடிப்படையாக அமைந்திருக்கவேண்டும் என்பதில் ஐயமில்லை. எனவே, துளு மொழி பேசிய மக்கள் தொகுதியின் குடியேற்றத்துடன் உடன் நிகழ்ச்சியாக இத்தகைய வழிபாட்டு நெறிகள் சபரிமலை ஐயப்ப வழிபாட்டில் ஊடுருவி இருக்கலாம். அடிக்குறிப்புகள் 1. சபரர், புளிந்தர், புளிஞர் என்ற சொற்கள் எயினர்களைக் குறிக்கும். (பெருங்கதை உஞ்சைக்காண்டம் : 55 ; மகாவம்சம் VII : 68.) திவாகர நிகண்டு இவர்களைப் பாலை நிலக் குடிகளாகக் குறிப்பிடுகிறது. (கம்ப ராமாயணம், வாலி வதைப்படலம், பா. 124.) 2. கிருஷ்ண – வாணாசுர யுத்தம் தொடர்பான கதைக் குறிப்புகளில் இவ்விவரங்கள் இடம்பெற்றுள்ளன. ஸ்ரீமத்பாகவதம் 10:63:20-21. p. 164, The Students Sanskrit English Dictionary, Vaman Shivram Apte, Motilal Banarsidass, New Delhi, 1969. 3. கோக்கருநந்தடக்கனின் பாலியத்துச் சாசனம், பக். அ24-அ34, பாண்டியர் செப்பேடுகள் பத்து, பதிப்பு: உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை-600113, 1999. 4. கண்ணகி கோயில் எனக் கருதப்படும் (சுருளிமலை) திருப்பூரணமலை படாரியார் கோயிலில் பொறிக்கப்பட்டுள்ள கி.பி. 13ஆம் நூற்றாண்டுக் கல்வெட்டுகளில் பூர்ணியாற்றுச் சாத்தன், பெரியாற்றுச் சாத்தன் என்ற இரு சாத்தன் கோயில்கள் குறிப்பிடப்படுகின்றன. இவற்றுள் ஒன்று, சபரிமலை பொன்னம்பலமேட்டிலிருந்து கி.பி. 14ஆம் நூற்றாண்டில் இஸ்லாமியர் ஆதிக்கத்தின்போது அழிந்துபோன கோயிலாக இருக்கலாம் என்றும், அதன் பின்னரே இப்போதைய இடத்தில் ஐயப்பன் கோயில் உருவாகியிருக்க வேண்டுமென்றும் கருதப்படுகின்றன. பார்க்க: திரு. கோவிந்தசாமி அவர்கள் கட்டுரை, கேரளப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறைப் பொன்விழா மலர், திருவனந்தபுரம். 5. வடமொழி இலக்கியங்களில் பல இடங்களில் சபரர், கிராதர், நிஷாதர் போன்ற சொற்கள் வேறுபாடின்றிப் பயன்படுத்தப்பட்டுள்ளன என்பது உண்மையே. எனினும், குன்றக் குறவர்களே கிராதர் என்ற பெயருக்கு உரியவர்களாவர். கிராதர் என்ற சொல் மலையெனப் பொருள்படும் கிரி என்ற சொல்லுடன் தொடர்புடையதாகும். கிராதர் என்ற சமஸ்கிருத வழக்கு, பிராகிருதத்தில் சிலாதர் என்றும் சங்கத் தமிழில் சிலதா என்றும் வழங்கிற்று. மலையைக் குறிக்கும் பிற சொற்களான சிலா, கிலா, சைலம், கைலம், கல் முதலான சொற்கள் சிலதருடன் தொடர்புடையவை. 6. வெகுஜன ஊடகங்களால் - குறிப்பாகத் தொலைக்காட்சி விவாதங்களில் - அறிவுஜீவிகளாக முன்னிறுத்தப்படும் சில ‘மாடம்பிகள்’, பழங்குடிகளின் இத்தகைய நம்பிக்கைகள் பற்றிய அடிப்படைப் புரிதல்கூட இல்லாமல், இந்நம்பிக்கையை வைதிக இந்து சமயத்துக்கு மட்டுமே உரியதாககச் சொல்லி, இவ்வழக்கத்தை வஹாபிய இஸ்லாம் போன்ற அரபு இனவாத - ஆபிரகாமிய அடிப்படைவாதங்கள் வலியுறுத்தும் பெண்ணடிமைத்தனத்தின் வெளிப்பாடுகளுடன் ஒப்பிட்டுப் பிரச்சாரம் செய்வது ஓர் அண்மைக் காலப் போக்காக உருவாகியுள்ளது. 7. ஐராவதம் மகாதேவன் தலைமையில் அமைந்த குழுவினரால் 1998ஆம் ஆண்டு இக்கல்வெட்டு கண்டறியப்பட்டு வாசிக்கப்பட்டது. ”பல்புலி தாத்தகாரி” என வாசிக்கப்பட்டுள்ளது. p. 476, Early Tamil Epigraphy, I. Mahadevan, Cre-A, Chennai, 2003. 8. The Zend-Avesta, F. Max Muller, Motilal Banarsidass, New Delhi. (நன்றி: தமிழினி, பிப்ரவரி 2009) sr@sishri.org
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
விளக்கமான பதிவு
Post a Comment