உசிலம்பட்டி கவணம்பட்டி பண்டுக் கலவரம்
இந்தப்பகுதியில் வாழும் பிரமலைக் கள்ளர்களின் சமூக வரலாற்றைப் பார்க்கும் பொழுது எட்டுநாடு, இருபத்தியெட்டு உபகிராமம் என்ற கள்ள நாட்டுப் பகுதியில் கள்ளர்களுக்கும் தலித்துக்களுக்கும் இடையில் ஒரு மேம்பட்ட சமூக உறவு இருந்துள்ளதற்கான அடையாளங்களை நம்மால் பார்க்க முடிகிறது.
கள்ள நாட்டுப்பகுதியில் அமைந்துள்ள கோயில்களில் கள்ளர்கள் மற்றும் தலித்துக்களுக்கு இடையிலான உறவுகள் மற்றும் உமைகள் அவற்றில் முக்கிய பங்கு வகிக்கின்றன.
எட்டு நாட்டில் ஒரு நாடான கொக்குளத்தில் ஆதி தொட்டு இன்று வரை ஒரு தலித்தான் பூசாரியாக இருக்கின்றார். அவரிடம் தான் கொக்குளம் ஆறு ஊரைச் சேர்ந்தவர்களும், வாக்கு கேட்டு, திருநீறு வாங்கி பூசிக் கொண்டிருக்கின்றனர்.
கருமாத்தூர் கடசா நல்லகுரும்பன் கோயில் அய்யம் பிடுக்கி ஒரு தலித். மீனாட்சிபட்டி மதீச்சிய கருப்பு கோயில் பூசாரி தலித். வகூரணி பள்ளக்கருப்புப் கோயில் கொப்புற பூசாயும், கிடாவெட்டியும் கள்ளர்கள், கோடாங்கியும் உள் பூசாரியும் தலித்கள், இது தலித்தும் கள்ளரும் இணைந்து கும்பிடும் கோயில். கள்ளபட்டி வெண்டி கருப்புக்கோயில் பூசாரி தலித், கோடங்கி கள்ளர். புத்தூர் பூங்கொடி ஐய்யனார் கோயில் ஐய்யனார் தலித் மற்றும் கள்ளர்களின் குலதெய்வமாகும்.
எனவே இருவரும் பங்காளிகள் என்று இன்று வரை கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதே போல் உசிலம்பட்டி கள்ளர்கள் மத்தியில் பஞ்சாயத்து செய்யவும், சத்தியம் செய்யவும் முக்கியக் கோயிலாக இருப்பது வடுகபட்டி போயன் கருப்பு கோயில். இது தலித்துகளின் கோயில். தலித் தான் பூசாரி. உடமையற்றவர்களாகிய இரண்டு சமூகத்திற்கும் இடையில் கடந்த காலத்தில் நிலவிய பண்பாட்டு ஒற்றுமையின் அடையாளங்களே இவைகள்.
கள்ளர்கள் விவசாயப் பிரிவினர் அல்லர், காவல் மற்றும் களவு தொழினை செய்து வந்தவர்கள். சமவெளிப்பகுதியில் வாழ்ந்த பழங்குடியினர் என்றே இவர்கள் வரையறுக்கப்படுகிறார்கள். கடந்த இரு நூற்றாண்டாக பரவி வந்த இந்துமயமாக்கலுக்கு உட்படாத இனக்குழுவாக இவர்கள் இருந்து வந்துள்ளதை மதுரையின் வரலாற்றை எழுதிய என்.கெச்.நெல்சன் போன்றவர்களும் மற்ற பல ஆய்வாளர்களும் குறிப்பிடுகின்றனர்.
இதுமட்டுமல்ல இஸ்லாமியர்களின் பழக்கவழக்கங்களின் தாக்கம் அதிகமுள்ள ஒரு இனக்குழுவாகவும் இதுவுள்ளது. இஸ்லாமியர்களுக்கே உரிய ஒரு பழக்கமான சுன்னத் செய்யும் பழக்கம். இப்பொழுது வரை கள்ளர் இனத்தில் நடைமுறையில் உள்ளது. திருமணத்தின் பொழுது மாப்பிள்ளையை குதிரையின் மீது அமர வைத்து முகத்தை மூடி அழைத்துவரும் பழக்கம் சமீபகாலம் வரை இருந்து வந்துள்ளதை அறிய முடிகிறது. இஸ்லாமியப் பெண்களைப் போலவே காதில் கொப்பு, குருத்தட்டு, முருக்குச்சி, கழுத்தில் தாக்குப் பதில் கருப்புபாசி (பொட்டுமணி) ஆகியவற்றை கள்ளர் இனப் பெண்கள் அணிகின்றனர்.
இதுமட்டுமின்றி பெண்ணுரிமைப் பார்வையில் முற்போக்கான பண்புகளை இந்த இனக்குழு இன்று வரை கொண்டுள்ளது. விவகாரத்து பெறும் உரிமை பெண்களுக்கு உண்டு, எந்தப் பெண்ணும் விவகாரத்துப் பெற்றுக் கொள்ளலாம், அதற்கான வழிமுறைகள் மிக எளியது. அதுமட்டுமின்றி விவகாரத்திற்கான நஷ்ட ஈடும் உண்டு என்று, கள்ள நாட்டு சட்டங்களில் இருந்தும், பழக்க வழக்கங்களில் இருந்தும் அறிய முடிகிறது.
இதுமட்டுமின்றி, விவகாரத்து செய்து கொண்டவர்கள் மற்றும் விதவைகள் மறுமணம் செய்து கொள்ளும் உரிமை கொண்டவர்கள். இவ்வாறாக இந்து மதத்தின் சாயல்கள் பெரிய அளவு விழுந்து விடாத ஒரு இனக்குழுவாக போன நூற்றாண்டு வரை பிரமலைக் கள்ளர் இனக்குழு இருந்து வந்துள்ளது.
இந்தக் காரணங்களால் தான் இந்தப்பகுதியில் சுமார் 130 ஆண்டுகளாக செயல்பட்டு வருகின்ற கத்தோக கிருத்துவமதமானது தனது தேவாலயத்தில் ஒரு கிறித்துவ ஆணோ, பெண்ணோ, பிரமலைக் கள்ளர் இனத்தைச் சார்ந்த ஒரு ஆணையோ, பெண்ணையோ, திருமணம் முடித்துக் கொள்ள எந்த தடையும் விதிக்காமல் அனுமதி அளித்தது. அது இன்றுவரை நடைமுறையில் உள்ளது.
பிரிட்டிஸ் அரசு 19ஆம் நூற்றாண்டில் தனது நவீன காவல் கொள்கையை அறிமுகப்படுத்திய பொழுது ஏற்கனவே காவல் பணியில் இருந்த கள்ளர்களுக்கு எதிரான செயல்பாடாக அது அமைந்தது. கிராம காவல், குடிக்காவலை சட்ட விரோதமென அரசு அறிவித்ததைத் தொடர்ந்து, மாற்று ஏற்பாடு ஏதுவுமில்லாமல் கள்ளர்கள் நிர்கதியாக்கப்பட்டனர்.
இந்நிலையில் மறைமுகமாக காவல் மற்றும் துப்புக்கூ முறை உருவானது. இதனை தடுக்க நெடுங்காலம் வரை பிட்டிஸாரால் முடியவில்லை. எனவே கள்ளர்களுக்கு எதிராக பிற விவசாய சாதியினை மோத விடுவதில் அரசு முக்கிய பங்காற்றியது. இதன் விளைவு தான் 1895ல் திண்டுக்கல் பகுதியில் நடந்த பண்டுக் கலவரம். பிரிட்டிஸாரின் ஆட்சி காலத்தில் மிக நீண்ட காலம் நடைபெற்ற கலவரம் இது. அதற்கு காரணம் அரசின் மறைமுக ஆதரவு இந்த கலவரத்தை நடத்தியவர்களுக்கு இருந்தது. இதன் மூலம் திண்டுக்கல் சமவெளிப் பகுதி முழுவதிலும் கள்ளர்கள் தங்களின் காவலை இழக்க நேட்டது. இந்த கொள்கையின் தொடர்ச்சிதான் 1914ல் கொண்டு வரப்பட்ட குற்றப்பரம்பரைச் சட்டம்.
ஒரு குறிப்பிட்ட இனத்தில் பிறந்தாலே அவன் குற்றவாளியாகத்தான் இருப்பான் என்ற கொடூரமான சட்டம். 12 வயது முதல் அவன் அரசின் குற்றவாளி பட்டியல் ஏற்றப்பட்டு தொடர்ச்சியாக கண்காணிக்கப்பட்டு, நடவடிக்கைகள் கட்டுப்படுத்தப்பட்டவனாக இருப்பான். கட்டாயக் காவல் முகாம்களில் குடியேற்றப்படுவான். தேயிலை எஸ்டேட்டுகளுக்கு அனுப்பப்படுவான். கட்டாய இராணுவப் பணிகளுக்கு அனுப்பப்படுவான். எந்த நிமிடமும் கண்காணிப்புக்கு உட்படுத்தப்படுவான்.
இந்தியாவெங்கும் இந்த கொடூரமா ன அடக்குமுறைச்சட்டத்தில் சுமார் தொண்ணூறாயிரம் பேர் பதியப்பட்டார்கள் என்றால் அதில் பிரமலைக்கள்ளர்கள் மட்டும் முப்பத்தி ஐயாயிரம் பேர் ஆவர்.
அப்படி என்றால் இந்த அடக்குமுறையின் கொடுமை இந்தப்பகுதியில் எவ்வளவு இருந்திருக்கும் என்பதை நாம் புரிந்து கொள்ள முடியும்.
இந்தக் குற்றப்பரம்பரைச் சட்டத்திற்கு எதிராக ஜார்ஜ் ஜோசப், சுப்புராயன், ஜானகி அம்மாள், பி.இராமமூர்த்தி, ஜீவானந்தம் போன்றவர்கள் பாடுபட்டார்கள். ஆனால் இதில் முத்துராமலிங்கத் தேவர் பங்கு மிகவும் குறிப்பிடத்தக்கதாக இருந்தது. அவர் தொடர்ச்சியாக இதில் கவனம் செலுத்தி பிட்டிஸாருக்கு எதிரான இயக்கங்களை நடத்தினார்.
நாட்டு விடுதலைக்குப்பின் , குற்றப்பரம்பரைச் சட்டம் நீக்கப்பட்டபின் அவர் அரசியல் கட்சியான பார்வர்டு பிளாக்கை இந்த இனமக்கள் முழுமையாக தழுவினார். குற்றப்பரம்பரைச் சட்டத்திற்கு எதிராக திராவிட இயக்கம் எதையும் செய்யவில்லை. இந்த சட்டத்திற்கு எதிரான சில நடவடிக்கைகளை இடதுசாரி இயக்கம் செய்த போதிலும் அதில் தொடர் கவனம் செலுத்தவில்லை.
துவக்கத்தில் காங்கிரஸ் கட்சி சட்டத்தை எதிர்த்துப் போராடினாலும் 1939ல் ராஜாஜி மந்திரி சபை அமைந்தபின் இச்சட்டத்தை நீக்க முடியாது என்று காங்கிரஸ் வெளிப்படையாக சொன்னபின் இந்த பகுதிக்குள் அந்த இயக்கத்தால் நுழையவே முடியாத நிலை ஏற்பட்டது.
இதனால் தேசிய இயக்கத்தின் தாக்கமோ, இடதுசாரி இயக்கத்தின் தாக்கமோ, திராவிட இயக்கத்தின் தாக்கமோ இல்லாத பகுதியாக இதுமாறியது. இந்தக் குறிப்பிட்ட இனமக்கள் முழுவதும் ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சிக்குள் இருக்கும் நிலை உருவானது. ஒடுக்குமுறை எந்த வடிவத்தில் இருக்குமோ, அந்த வடிவத்தில் தான் அதற்கு எதிரான நடவடிக்கைகளும் அமையும். எனவே தான் ஒரு குறிப்பிட்ட சாதியின் மீது பயன்படுத்தப்பட்ட குற்றப்பரம்பரைச் சட்டத்திற்கு எதிராக அந்த குறிப்பிட்ட சாதியின் அடிப்படையிலான ஒற்றுமை உருவானது.
இந்த ஒற்றமையானது, சட்டம் வாபஸ் பெற்றபின், அச்சட்டத்திற்கு எதிராகப் போராடிய அரசியல் கட்சியின் அடித்தளமாக மாறியது. அந்த அரசியல் கட்சியானது 1950களுக்குப் பின் மேற்கொண்ட சாதிய பகைமையின் அடிப்படையிலான செயல்பாடு. இந்தப்பகுதியில் சாதீய மனோபாவத்தை, பெருமிதத்தை, வெறியை விஷம் போல ஏற்ற வாய்ப்பாக அமைந்தது.
அப்படி ஏற்றப்பட்டதன் முற்றிய வடிவங்கள் தான் இன்று நாம் காணுகிற பாப்பாபட்டி, கீரிப்பட்டி, நாட்டார்மங்கலம். இதற்கான பொருளியல் காரணிகள் மிக முக்கியமானவை. குறிப்பாக 1950களில் கட்டப்பட்ட வைகை அணையால் இந்த பகுதியில் புதிய விவசாய நிலங்கள் உருவாக்கப்பட்டது. இதனால் செல்லப்பட்டி ஒன்றியத்தில் கணிசமான பிரமலைக் கள்ளர்கள் சிறு விவசாயிகளாக மாறினர். நிரந்தர வருமானம், தொழில் என்று எதுவும் இல்லாத ஒரு வாழ்க்கை முறைமாறி உடமையாளர்களாக பரிமாணம் அடைந்தனர். அதுவரை விவசாயத் தொழிலை பார்த்திராத ஒரு சமூகம், அரசால் விவசாயத்திற்குள் புகுத்தி விடும் பொழுது இரண்டு விளைவுகள் ஏற்பட்டன. இதனை மேலூர் கள்ளர்களின் வாழ்விலும் பார்க்க முடிகிறது, உசிலம்பட்டிப் பிரமலைக் கள்ளர்களின் வாழ்விம் பார்க்க முடிகிறது. அதுவரை அரசுக்கு வரிகட்டாத, சட்ட ஒழுங்கைக் கடைபிடிக்காத, நில அளவைக்குக் கூட அனுமதி அளிக்காத பகுதியாக இருந்த மேலூரில் பெரியார் அணை கட்டப்பட்ட தண்ணீர் வந்தவுடன், ஒவ்வொரு ஊராக அரசுக்கு கட்டுப்படுவோம், சட்ட ஒழுங்கை மதிப்போம் வரிகட்டுவோம், என்று எழுதி வாங்கி தண்ணீர் கொடுத்தது பிரிட்டிஸ் அரசு. இதன் விளைவாக பத்தே ஆண்டுகளில் விவசாய சாதியினராக மேலூர் கள்ளர்கள் மாறினர்.
போலீஸ்துறை சாதிக்காததை பொதுப்பணித்துறை சாதித்தது என பிரிட்டிசார் புகழ்ந்தனர். இதனால் தான் குற்றப்பரம்பரை சட்டம் இங்கு அமுல்படுத்தப்படவில்லை. இது இரண்டு விளைவுகளை உருவாக்கியது. ஒன்று நில உடமையாளனாக மாறி அதை காப்பாற்ற அரசின் மேலதிகாரத்தை ஏற்று முறையாக வரி செலுத்தி சட்ட ஒழுங்கிற்கு கட்டுப்பட்டது. இரண்டு, உடமையாளராக மாறியவுடன் தான் சமூகத்தின் மேல் சாதி என்ற மனோநிலையும், பெருமிதமும் தனக்கு கீழ் உள்ளவர்களின் மீதான கட்டுப்பாடற்ற தீண்டாமையை நிலை நிறுத்துவது. இதற்கான உதாரணங்கள் தான். அம்பேத்கார் நடத்திய பத்திரிக்கையில் 1940 களில் மேலூர் பகுதி பற்றி வந்த எண்ணற்ற கடிதங்கள் முதல் மேலவளவு வரை. இதே அனுபவம் தான் 1950களுக்குப்பின் இன்றுவரை உசிலம்பட்டி பகுதியில் ஏற்பட்டுள்ளது. '''
உடமையற்ற வர்க்கமாக இருந்தபொழுது கள்ளர்களுக்கும், தலித்துக்களுக்கும் இடையில் நிலவிய சமூக உறவுகள், கள்ளர் சமூகம் உடமைவர்க்கமாக மாறியபின் தலைகீழானது. கடந்த காலங்களில் நடந்துள்ள இந்த சமூக அரசியல், பொருளியல் காரணங்கள் இந்தப்பகுதியில் சாதீயக் கருத்துக்கள் கெட்டிப்படவும் விஷம் போல் உச்சத்திற்கு ஏறவும் வாய்ப்பாக அமைந்துள்ளது. இதன் கொடூரத்தை த்தான் இன்று நாம் சந்தித்துக் கொண்டிருக்கிறோம்.
thanks to http://www.lankahermes.com/2005_07_01_archive.html
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment