விலைவாசி உயர்வு

இந்தியாவில் உணவுப் பொருள் விலை ஏற்றத்துக்கு இரண்டு, மூன்று காரணங்கள் சொல்லப்படுகின்றன.

முதலாவது,       பணவீக்கம். அதாவது, இன்ஃப்ளேஷன். 

இரண்டாவது,  பற்றாக்குறை. 

மூன்றாவது  .   போக்குவரத்துச் செலவு.


 பணவீக்கம் மொத்தவிலைக் குறியீட்டெண்ணால்தான் அளவிடப்படுகிறது. கடந்த ஓராண்டில் மொத்த விலைக்குறியீட்டெண் - ஹோல் சேல்ஸ் பிரைஸ் இண்டக்ஸ் - 10 சதவீதம் உயர்ந்துள்ளது. உண்மையில் சில்லறை விலைக் குறியீட்டு எண் அடிப்படையில் கவனித்தால் பணவீக்கம் 30 சதவீதம் உயர வாய்ப்பு உள்ளது.

இலங்கைத் தமிழர் பிரச்னைகளுக்குக் கலைஞர், பிரதமர் மன்மோகன் சிங்குக்குக் கடிதங்கள் எழுதுவதுபோல் நமது பிரதமரும், ""இன்னும் ஒரே மாதத்தில் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவோம். விலைவாசியைக் கட்டுப்படுத்துவோம்'' என்று கி.பி. 2009-லிருந்து மாதம் ஓர் அறிக்கை விடுகிறார். பத்திரிகை நிருபர்களுக்குச் செய்திகள் வழங்கியவண்ணம் உள்ளார்.

இப்படி புதுதில்லியில் ஏ.சி. அறையில் உட்கார்ந்து கொண்டு தாகம் ஏற்பட்டால் பெப்சி வழங்கும் மினரல் வாட்டரைக் குடித்தவண்ணம் அடிக்கடி ஒன்றுகூடி அமைச்சர்களும் அரசுச் செயலர்களும் கோப்புகளைப் பார்த்து என்ன பயன்?

 உணவு உற்பத்தி உயர விவசாயம் செய்கிறார்களா? விவசாயம் செய்யப் போதிய நிலம் உள்ளதா? உற்பத்தி குறைவது ஏன்? மண்வளம் இழப்பது ஏன்? மண்ணை வளப்படுத்தி வளம்குன்றா விவசாயம் செய்ய என்ன செய்யலாம்? விவசாயிகளின் பிரச்னைகள் என்ன? வேலைக்கு ஆள்கள் கிடைக்காதது ஏன்? நிலம் இருந்தாலும் போதிய பாசன நீர் உள்ளதா? மேல்மட்டக் கிணறு, ஏரி, குளங்களை நிரப்புவது எப்படி? என்று பல கேள்விகளுக்கு அமைச்சர்களும் அதிகாரிகளும் பொறுப்புடன் பதில்களை வழங்க அவர்கள் களத்தில் இறங்கவேண்டும். நேரடியாகப் பல கிராமங்களுக்குச் சென்று கிராமங்களில் அதிக நேரம் செலவழிக்க வேண்டும்.

வாரம் ஒருநாள் மாவட்ட ஆட்சித்தலைவர் விவசாயிகளைச் சந்தித்துப் பேசுவது போதாது. விவசாயிகளைத் தேடி ஆட்சியாளர்கள் வந்து நேரில் பார்த்தால்தான் பிரச்னைகள் புரியும். நமது மத்திய விவசாய அமைச்சரைப் பொருத்தவரை விளைநிலங்கள் கிரிக்கெட் மைதானங்களாக மாறவேண்டும். விமானநிலையங்களாக வேண்டும். எண்வழிச் சாலைகளாக வேண்டும். ஆப்பிரிக்க நாடுகளுக்குச் சென்று நிலம் வாங்கி பருப்பு, புஞ்சை தானியங்களைச் சாகுபடி செய்யலாம் என்று அற்புத யோசனைகளைக் கூறுகிறாரே தவிர, உள்ளூரில் உற்பத்தி உயர வழி செய்வது இல்லை.

 இந்தியாவில் இப்போது அந்நியச் செலாவணி கணிசமாக உள்ளது என்பதால் என்ன பிரச்னை வந்தாலும், உணவு விலை சிகரத்தைத் தொட்டாலும் இறக்குமதி செய்து சரிசெய்து விடலாம் என்று தப்புக்கணக்குப் போட்டதால் வரும் வினைகள் இவை. வெங்காயம் பாகிஸ்தானில் விளைகிறது. தக்காளி அமெரிக்காவில் விளைகிறது. துவரை கென்யாவிலும் தான்சேனியாவிலும் விளைகிறது.

உளுந்து பர்மாவில் உண்டு. கபூலி சென்னா (வெள்ளைக்கடலை) காபூலில், ஆஸ்திரேலியாவில், துருக்கியில் விளைகிறது. (கருப்புக்கடலை இந்தியாவில்தான் விளைகிறது) பட்டாணிக்கு ஆஸ்திரேலியா, அமெரிக்காவில் கோதுமை, தாய்லாந்தில் அரிசி, பிலிப்பைன்ஸில் தேங்காய், பிரேசிலில் வேர்க்கடலை, சீனத்தில் எள், கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் சூரியகாந்தி கோப்புகளில் உள்ள விவரங்கள் இப்படித்தான் பேசும்.( நன்றி  தினமணி)

 எந்த நாட்டிலிருந்து எவ்வளவு இறக்குமதி செய்யலாம்? என்று படித்துவிட்டு அமைச்சர்கள் யோசிக்கிறார்கள். நிலைமை முன்பு மாதிரி இல்லை. ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் போன்ற நாடுகளில் வரலாறு காணாத வெள்ளம் உணவு உற்பத்தியைப் பாதித்துவிட்டது. அந்தந்த நாடுகளிலும் போதிய வழங்கல் இல்லை.

கிராமங்களில் மகாத்மா காந்தி தேசிய வேலைக்காப்புறுதித்திட்டம் - நூறு நாள் வேலைவாய்ப்புக்காக பணம் புழங்குகிறது. இரண்டாவதாக, மகளிர் சுயஉதவிக்குழு மூலம் உறுப்பினர்களுக்கு 1 வட்டிக்கடன் வழங்குவதன் மூலம் பணப்புழக்கம் உள்ளது. உண்மையில், இப் பணப்புழக்கத்தால் விவசாயத்தில் உற்பத்தி உயர வேண்டும். நூறு நாள் வேலைவாய்ப்புத் திட்டம் உண்மையில் விவசாயத்துக்கு வேலை இல்லாத் திண்டாட்டத்தை ஏற்படுத்திவிட்டது. வேலை செய்யாமலேயே நூறுநாள் சம்பளம் கிடைத்துவிடுகிறது.

 ஒரு மணிநேரம் உருப்படியாக வேலை செய்தால் பெரிய விஷயம். இந்த வேடிக்கையை தினம் பார்க்கிறேன். மகளிர் சுயஉதவிக்குழுவுக்கு வழங்கப்படும் "மைக்ரோ ஃபைனான்ஸ்'' கிராமங்களில் சிலர் மட்டுமே கந்துவட்டி செய்த காலம் போய், கந்துவட்டி பெரிய அளவில் பெண்களின் தொழிலாக மாறிவிட்டது. யாரும் விவசாயத்துக்கோ, வேறு தொழில் உற்பத்திக்கோ சுய உதவிக்குழுவின் பணம் முதலீடுகளாக மாறிப் பயன் தராமல், உபயோகமற்ற செலவுகளுக்கே உதவுகிறது. கந்துவட்டிப் பெண்களிடம் மாட்டுபவர்களுக்கு வேறு நரகம் வேண்டாம்.

 மேற்படி விஷயத்தை இங்கு நான் கூறுவதற்கு வேறு காரணமும் உண்டு. நூறு நாள் வேலைத்திட்டத்தில் ஏழைகள் பணக்காரர்களாகி அவர்கள் தேவை உயர்ந்துவிட்டதால் விலை உயர்ந்துவிட்டதாம். விலை ஏற்றத்துக்கும் நூறுநாள் வேலைத்திட்டத்துக்கும் நிபுணர்கள் இப்படி முடிச்சுப் போடுகின்றனர்.

 உண்மையில் அப்படிப் பெற்ற பணம் கந்துவட்டிக்குப் போகிறதே தவிர, வெள்ளைப்பூண்டும், வெங்காயமும், தக்காளிப் பழத்தையும் அப்போதும் வாங்கினார்கள். இப்போதும் வாங்குகிறார்கள்.

 பணம் எங்குதான் புழங்கவில்லை? திட்டமிடப்பட்ட பல செலவுகளுக்கும்தான் பணம் புழங்குகிறது. கருப்புப்பணம் எங்கெல்லாமோ புழங்குகிறது. பணப்புழக்கத்தால் பணமதிப்பு குறைந்து பொருள்விலை கூடுவது இயல்பு. அமைப்புரீதியான தொழிலாளர்கள், அலுவலர்கள், பணியாளர்கள் சம்பளம், டி.ஏ. உயர்வு காரணமாகவும் பணம் புழங்கி வீக்கமடையவில்லையா?

 ஆனால், அடிப்படையான விஷயம் தேவைக்கு ஏற்ப ஒரு பொருளின் வழங்கல் இல்லாததுவே. அதாவது பொருளின் பற்றாக்குறை. பொருளின் பற்றாக்குறையுடன் பணவீக்கமும் சேர்ந்து எட்டமுடியாதபடி விலைஉயர்வு விண்ணை நோக்கிப் போய்க் கொண்டுள்ளது.

பணவீக்கத்துக்கு நிகராகப் பொருள் உற்பத்தி உயர்ந்தால் விலை ஏறுவது கட்டுப்படும். உணவுப்பொருள் விஷயத்தில் அரிசி, கோதுமைபோல் மக்காச்சோளத்துக்கு விலைக்கட்டுப்பாடு இல்லை. மக்காச்சோளம் ஏற்றுமதியும் ஆகிறது. ஆனால், மக்காச்சோளத்தின் விலை ஏற்றம் குறைவு. 

சில்லறை விலை ரூ. 13 அல்லது ரூ. 14 தான். கடந்த ஆண்டு வரையில் ரூ. 12 தான். மக்காச்சோளத்தின் முக்கியத்தேவை கோழி - மாட்டுத்தீவனம். பின் மனிதத்தேவை. மக்காச்சோளம் உற்பத்தி பெருகியதைப்போல் வெள்ளைச்சோளம், கம்பு, ராகி, தினை, வரகு, உளுந்து, துவரை, கடலை, பாசிப்பயறு, மசூர், பட்டாணி உற்பத்திகள் ஏன் உயரவில்லை?

 பணவீக்கம் விலை ஏற்றத்துக்குரிய காரணம் என்றால் நோட்டு அச்சடிப்பதையும், கருப்புப்பணத்தையும் நிறுத்தினால் போதுமே. அமைப்புரீதியான பணக்காரத் தொழிலாளர்களாயினும், அமைப்புரீதியற்ற ஏழைத் தொழிலாளர்களும் சரி, வரக்கூடிய வருமானம் அனைத்தையும் உணவு வாங்கச் செலவழிப்பதில்லை. ஒருசாரார் டாஸ்மாக் கடைகளில் சாராயத்துக்குச் செலவழிக்கிறார்கள். ஒருசாரார் மருத்துவத்துக்குச் செலவழிக்கிறார்கள். மருத்துவத் தேவை, குடித்தேவை மற்றும் வேலை வாங்க லஞ்சம் கொடுக்கும் புதிய தேவைகளுக்காக ஒருசாரார் கந்துவட்டிக்குப் பணம் வழங்குகிறார்கள். சிலர் கல்வித் தேவைக்கும் கந்துவட்டிக்குப் பணம் வாங்கலாம்.

பணவீக்கத்தில் பணத்தின் தேவைதான் அதிகமாகிப் பணமே ஒரு பொருளானதே தவிர, உண்மையான வேளாண் உற்பத்தி உயரவில்லை. வேளாண் உற்பத்திக்குரிய வழிமுறைகளை நன்கு திட்டமிட வேண்டும். அதேசமயம், மண்வளத்தையும் காப்பாற்ற வேண்டும். அப்போதுதான் வழங்கல் பெருகி விலைவாசி குறையும்.
 
thanks to http://sakthistudycentre.blogspot.com/2011/02/blog-post_26.html

No comments: