குழந்தைகள் கல்விக்காக அதிகம் செலவிடும் இந்தியர்கள்!

இந்தியக் குடும்பங்கள் தங்களது குழந்தைகளின் கல்வி மற்றும் உடல் நலத்திற்காக அதிக அளவில் செலவிடுவதாக ஆய்வறிக்கை ஒன்று தெரிவிக்கிறது.

இது தொடர்பாக NSSO எனப்படும் "தேசிய மாதிரி ஆய்வு அலுவலகம்" மேற்கொண்ட ஆய்வில், இந்தியக் குடும்பங்கள் தங்களது வருவாயில் உணவு போன்ற அத்தியாவசிய தேவைகளோடு, குழந்தைகளின் கல்விக்காக அதிக அளவில் செலவிடுவதாகவும், அதேப்போன்று அவர்களது சுகாதாரத்திற்காகவும் கணிசமாக கூடுதலாக செலவிடுவதாகவும் தெரியவந்துள்ளது.


கடந்த 1999 முதல் 2009 ஆம் ஆண்டு வரையிலான காலக்கட்டத்தில், உணவுக்கான செலவினம் கிராமப்புறங்களில் சுமார் 70 விழுக்காடும்,நகர்ப் புறங்களில் 78 விழுக்காடும் அதிகரித்துள்ளது.

அதே சமயம் கல்விக்கான செலவினம் கிராமப்புறங்களில் 378 விழுக்காடாகவும், நகர்ப்புறங்களில் 345 விழுக்காடாகவும் அதிகரித்துள்ளன.

பணவீக்கத்தை சரிசெய்த பின்னர் கூட கல்விக்கான செலவினம் கிராமப்புறங்களில் 162 விழுக்காடாகவும், நகர்ப்புறங்களில் 145 விழுக்காடாகவும் அதிகரித்துள்ளன.

அதே சமயம் இதனுடன் ஒப்பிடுகையில், பணவீக்கத்தை சரி செய்த பின்னர் வீட்டுச் செலவினங்கள் கிராமப்புறங்களில் 8 விழுக்காடும், நகர்ப்புறங்களில் 20 விழுக்காடு மட்டுமே அதிகரித்துள்ளதாக அந்த ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.

கடந்த 2004 -05 ஆம் ஆண்டுகளில் இதேபோன்ற ஆய்வு மேற்கொள்ளப்பட்டபோது, கிராமப்புறங்களை சேர்ந்த 40 விழுக்காட்டினரும், நகர்ப்புறங்களை சேர்ந்த 57 விழுக்காட்டினரும் தாங்கள் கல்விக்காக அதிகமாக செலவிடுவதாக தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் சமீபத்திய ஆய்வில் இந்த விழுக்காடு கிராமப்புறங்களில் 63 விழுக்காடாகவும், நகர்ப்புறங்களில் 73 விழுக்காடாகவும் உயர்ந்துள்ளது. 
thanks to http://tamil.webdunia.com/newsworld/news/currentaffairs/1108/01/1110801041_1.htm

No comments: