இந்தியாவுக்கு வந்த மிஷனரிகளிலேயே பலர் அத்தகையவர்கள். உதாரணம், ஜி.யு.போப், ஹெர்மன் குண்டர்ட். ஆனால் பலர் அந்த உளவுத்தொழிலை தங்களை அறியாமலேயே செய்து இந்திய சமூகங்கள் மீது காலனியாதிக்கம் வேர்விட்டெழுவதற்குக் காரணமாக அமைந்தார்கள் என்பதே வரலாறு.
இந்த சினிமாவில் ஜாக் நாவிகளுக்குள் செல்வதை அப்படியே ஒத்திருக்கிறது சு.வெங்கடேசனின் ‘காவல் கோட்டம்’ காட்டும் ஒரு நிகழ்வு.. பிறமலைக்கள்ளர்களை ஒடுக்கவோ வெல்லவோ முடியாத வெள்ளைய ஆட்சி பிறமலைக்கள்ளர்களில் இருந்து எடுத்து வளர்க்கபப்ட்டு கிறித்தவ பாதிரியாராக ஆக்கப்பட்ட ஒரு ஜேசுசபை உறுப்பினரை அனுப்புகிறது. அவருக்கு அந்த மக்கள் மீது பிரியம்தான். தன் சொந்த முன்னோர்களை அறியும் ஆர்வத்துடன்தான் அவர் அந்த மக்களை ஆய்வுக்கு உட்படுத்துகிறார். ஆனால் அந்த ஆய்வேடு வெள்ளையர்களுக்கு மாபெரும் ஆயுதமாக ஆகிறது. பிறமலைக்கள்ளர்களின் எல்லா குலரகசியங்களும் அவர்களுக்கு தெரிந்துவிடுகின்றன. அவர்களை குற்றபரம்பரை என்று முத்திரை குத்தி வேருடன் கெல்லி எறிகிறார்கள்!
ஐரோப்பாவில் பதினெட்டாம் நூற்றாண்டுமுதல் ‘உலகைவெல்லும்’ இலக்கியங்கள் எழுதப்பட ஆரம்பித்தன. உலகம் என்பது ஐரோப்பியனுக்கான புதையலை ஒளித்து வைத்திருக்கும் மர்மவெளி என்று சித்தரிக்கப்பட்டது. ‘புதியஉலகத்தின்’ ஆச்சரியங்கள் களியாட்டங்கள் அபாயங்கள் விதந்து எழுதப்பட்டன. அங்குள்ள ‘பண்படாத’ ‘மூர்க்கமான’ ‘மனிதத்தன்மை குறைவான’ மக்களுக்கு அங்குள்ள செல்வங்களால் பயனில்லை. அவர்களை வென்று, கொன்றழித்து, அச்செல்வங்களை எடுத்துக்கொள்வதே ஐரோப்பிய வெள்ளையனின் அறம். அவனுடைய சாகசத்திற்கான பரிசு அது.
thanks to http://www.jeyamohan.in/?p=6018
No comments:
Post a Comment