வருஷம், வருஷமாக அழகர் தாமதமாக வருவது ஏன்?

ஆற்றில் இறங்குவாரா அழகர்?
(புதனன்று (28.4.2010) மதுரையில் கள்ளழகர் திருவிழா நடைபெறுகிறதாம். இதன் யோக்கியதையைத் தெரிந்து கொள்ளவே இந்தக் கட்டுரை).
மதுரை மாநகரிலிருந்து 18 கி.மீ. தூரத்தில் உள்ளது அழகர் கோயில். அது அழகர்மலை என்றும் முன்னர் அழைக்கப்பட்டது. அங்கு ஓர் ஆட்சி நடந்ததற்கான ஆதாரங்களாக கோட்டையும், பெரிய மதில் சுவர்களும் இன்றும் உள்ளன!
அழகர் என்பவர் கடவுளோ, கடவுளின் அவதாரமோ கிடையாது. அவன் அப்பகுதியில் வாழ்ந்த கள்ளர் சமுதாய மக்களின் தலைவன் என்பதே உண்மை. பண்டைய பாண்டிய அரசர்களால், தொடர்ந்து கள்ளர் சமூக மக்கள் அடக்கப்பட்டும், ஒடுக்கப்பட்டும், நகர்ப்புறங்களில் வாழவும், மலைசார்ந்த விளை நிலங்களில் புகவும், அவர்கள் தொடர்ந்து தடுக்கப்பட்டும் வந்தே உள்ளார்கள். கள்ளர்கள் தங்கள் வாழ்வுரிமைக்காக அன்றைய அரசு அதிகாரத்துடன் பல்வேறு போர்களை நடத்தி வந்தனர். இதனால், கள்ளர்கள் முதன்முதலாக கொரில்லா முறை தாக்குதல்களை நடத்தி தங்கள் வாழ்வுக்காக கொள்ளையடித்தும்; தானியம், ஆடு, மாடுகளைக் கவர்ந்தும் மலைகளில் தலைமறைவு வாழ்க்கை நடத்தி வந்தனர்.
அழகர் மலைக்கு 3 கி.மீ. தூரத்தில் உள்ள கள்ளந்திரி கிராமம், கள்ளர்கள் அதிகமாக நடமாடும் இடம் என்பதால் அப்பெயர் பெற்றது. இப்போதும், கள்ளழகர் இவ்வூரிலிருந்து கள்ளன் வேடம் தரித்து மதுரை நோக்கிப் புறப்படுகிறார். இது ஆண்டு தோறும் நடக்கிற சித்திரைத் திருவிழாவின் ஒரு சடங்காகவே நடத்தப்படுகிறது.
திப்பு சுல்தான் கூட திண்டுக்கல் கோட்டையிலிருந்து கள்ளர்களுக்கு ஆதரவாக படை அனுப்பியதாக செய்திகள் உள்ளன.
இசுலாமிய மக்களும், கள்ளர்களும் ஒருவருக்கொருவர் இணக்கமாய் வாழ்ந்து வந்திருக்கிறார்கள்.
கள்ளர்களின் திருமண முறை கூட இசுலாமிய முறைப்படிதான் நடந்து வந்தன. திருமணம் இரவு நேரங்களில், இந்து வைதீக முறைப்படியின்றி மணப் பெண்ணுக்கு மணமகனின் அக்கா கருகமணி சூட்டுவார்கள்.
திருமணத்தின் போது, கிடா அடித்து சாப்பாடு! தற்போதும் கூட, இப்பகுதியில் உள்ள கள்ளர் சமூகத் திருமணங்களில், 10, 20, 50 வரை என ஆடுகள் வெட்டப்பட்டு, அவரவர் செல்வாக்கிற்கேற்ப திருமணங்கள் நிகழ்ந்து வருகின்றன. மேலூர் வட்டாரத்தில் சென்னகரம்பட்டி, கள்ளம்பட்டி ஆகிய கிராமங்களில் கள்ளர் பலர் இசுலாமியராக மதம் மாறியுள்ளார்கள். இதில் உள்ள சிறப்பு என்னவென்றால், இப்போதும் கூட இந்து எனக் கூறிக்கொள்கிற கள்ளர்கள் ரம்ஜான் நோன்பின்போது, முசுலிம்களுக்கு நோன்புக் கஞ்சி காய்ச்சி ஊற்றுகின்ற முறை, இங்கு நிகழ்ந்து வருகின்றது. இந்த நோன்புக் கஞ்சி காய்ச்சி ஊற்றுவதற்காக பரம்பரை, பரம்பரையாக நஞ்சை நிலம் ஒதுக்கப்பட்டு அந்தக் காரணத்திற்காக அதன் வருமானங்கள், பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
பிறமலைக் கள்ளர்கள் இசுலாமியார் போன்று சுன்னத் செய்வதும், முசுலிம்கள்போல சிய்யான் (தாத்தா) என்ற பொருள்பட அழைப்பதும் உதாரணங்-களாகும்.
ஜாதி, சமூக வேறுபாடுகளில்லாத இம் மக்களுக்கு, ஆட்சியாளர்களும், பாண்டிய நாட்டு உயர் குடி மக்களும் வைத்த பெயர்தான் கள்ளன் என்பது. இன்று தீவிரவாதிகள், போராளிகள் என்றழைக்கப்படுவது போன்ற ஒரு சொல்லே கள்ளர் ஆகும். அது ஜாதி ஆகாது.
சித்திரைத் திருவிழாவுக்கும், அழகர் ஆற்றில் இறங்குவதற்கும் இன்றுள்ள-படியான மத ரீதியான தொடர்பு ஏதுமில்லை. சொல்லப்போனால் இவ்விரண்டும், வெவ்வேறானவை. முரண்பட்டவை.
சித்திரைத் திருவிழா, மதுரை மீனாட்சி சொக்க நாதர் திருமணத்திலிருந்து தொடங்குகிறது. பண்டைய நாள்களில் இந்த விழாவிற்கு பக்கத்து நாட்டு மன்னர்கள், மந்திரிகள், ஜமீன்தார்கள், நிலப் பிரபுக்கள், திவான்கள், சிற்றரசர்கள் என பெருந்தனக்காரர்கள் கூடுவார்கள். இன்று போல அன்று சாலைகள், அவற்றைக் கடக்கும் பாலங்கள், விரைவாகச் செல்ல வாகனங்கள் இல்லாத காலம். பெரும்பாலும் இவர்கள் குதிரை பூட்டிய சாரட்டு வண்டிகளிலும், மாடு பூட்டிய கூண்டு வண்டிகளிலும், ஆட்கள் தூக்கும் பல்லக்குகளிலும் பயணம் செய்வர்.
பழைய மதுரை; அதாவது அன்றைய பாண்டிய நாடு வைகை ஆற்றுக்குத் தெற்காக இருப்பது மட்டும்தான்! ஆற்றின் வடக்கே இருந்த பகுதிகள் மருத மரங்கள் நிறைந்த பெரும் காடுகளாக விளங்கின.
வடபகுதியில் இருந்து வரக்கூடிய பயணிகள் இன்றைய ஆழ்வார்புரத்திற்கு வந்து ஆற்றைக் கடந்துதான் மதுரைக்குச் செல்லவேண்டும். இதைப் பயன்படுத்தி கள்ளர் படை ஆற்றுக்குள் இறங்கி தக்க தருணம் பார்த்து பயணிகளின் வருகையை எதிர் நோக்கி இருப்பர்.
மீனாட்சிசொக்கன் திருக்கல்யாணத்திற்கு வருகின்ற சீமான்களைத் தடுத்து நிறுத்தி கொள்ளையிடுவது கள்ளர்களின் திட்டமும் வழக்கமும் ஆகும்.
கள்ளர் தலைவன் அழகர் குதிரைகளுடன் தம் கூட்டாளிகள் துணையுடன் வைகை ஆற்றில் இறங்கி அங்கிருந்த புதர்களில் மறைந்திருந்து இத் தாக்குதல்களை நடத்தி வந்துள்ளான்.
கொள்ளையடிக்கப்பட்ட பொருள்களுடன் வண்டியூர் சென்று தனது வைப்பாட்டியான துலுக்க நாச்சியார் வீட்டில் தங்கியிருப்பதும், பின் பாதுகாப்புடன் மலையேறுவதும், அவன் வழக்கமாயின!
அழகர் மலைக் கொள்ளையர்களை, மதுரை வீரன் வரை போராடிப் பார்த்தும் அவர்களை அடக்கவும், ஒடுக்கவும் முடியாமல் இருந்து வந்துள்ளது. சங்கிலிக் கருப்பன் என்பவன் அழகரின் பின் தோன்றல் ஆவான். இந்த கள்ளர் படையின் தொல்லைகள் மதுரைப் பாண்டிய நாட்டில் மிகப்பெரிய பிரச்சினையாகக் கருதப்பட்டது. இன்றைக்கு சந்தனக் கடத்தல் வீரப்பனின் பிரச்சினைபோல அது மிகப்பெரிய அளவில் இருந்திருக்கலாம்.
பாண்டிய நாட்டு ஆட்சியை நாயக்கர்கள் கைப்பற்றிக் கொண்டபோது, கள்ளர்களை எதிர்த்து அமைதியான ஓர் ஆட்சியை நடத்த முடியவில்லை.
கள்ளர் வாழ்வில் நல்லதொரு மறுமலர்ச்சியை தோற்றுவித்தவர் திருமலை நாயக்கரே என்றால் அது மிகையாகாது! கள்ளழகர் சமூக மக்களும் மற்ற மக்களைப்போல தம் பகுதியில் வாழ வழிவகை செய்யப்பட்டது. அதன் விளைவாக அதன்பின் கள்ளர்கள் சித்திரைத் திருவிழா வின்போது கொள்ளையடிப்பது தடுக்கப்பட்டது. அரசருக்கும் ஆட்சிக்கும் விசுவாமாக இருப்பது; அதே நேரத்தில் மேலூர் வட்டாரப் பகுதியை 18 கிராமங்களுடன் கூடிய கள்ளர் சீமையை அமைத்து கள்ளர் தாமே சுயமாக ஆள்வது என அங்கீகரிக்கப்பட்டது. இதன் மூலம் கள்ளர்களின் தலைவர் அடக்கமான அழகர் மலையில் கோயில் எழுப்பி மன்னர் அழகரைப் பெருமானாகக் கருதி வணங்கினர். பின் அழகர் கள்ளழகர் ஆனார்.
கள்ளர்கள் எக்காரணம் கொண்டும் மதுரைக்குள் நுழைவது இதன் மூலம் தடுக்கப்பட்டது. என்றாலும், வழக்கம்போல அழகர் நினைவாக ஆற்றில் இறங்கி வண்டியூர் சென்று திரும்ப அழகர் மலை வந்து சேரும் நிகழ்வுகள் அரசு துணையுடன் நடத்தப்பட்டன. அவ்விழாவில் கலந்துகொள்ளும் கள்ளர்களுக்குத் தேவையான தானியங்கள், ஆடு, மாடுகள் இவற்றைத் தானமாக வழங்க அரசரால் ஆங்காங்கே மண்டபப்படிகள் அமைக்கப்பட்டு அரசரால் அவற்றிற்கு மானியங்கள் வழங்கப்பட்டன.
கள்ளர்கள் மலைகளில் தலைமறைவு வாழ்க்கை நடத்தியதால் தம்மோடு பெண்களை அதிகமாக வைத்திருக்கவில்லை.
நாயக்கர் காலத்தில் கள்ளர்கள் மீதிருந்த ஒடுக்கு முறை தளர்த்தப்-பட்டதால்மேலூர் வட்டாரப் பகுதியில் நல்ல கலாச்சாரத்துடன் பெரும்பான்-மையினராக இருந்த கோனார், வெள்ளாளர் சமூக மக்களை எதிர்த்து அவர்களிடமிருந்து ஆடு, மாடு இவற்றுடன் அவர்கள் வீட்டுப் பெண்களையும் சிறை பிடித்து, கள்ளர் சீமை அமைந்தது என்றே சொல்லலாம்.
அதைப் போல பிறமலைக் கள்ளர்கள் உசிலம் பட்டியை மய்யமாக வைத்து அங்கு வாழ்ந்த வடுகர்களை விரட்டிவிட்டு வடுகப் பெண்களுடன் கூடி வாழ்ந்தனர். வடுக மொழி என்பது கொச்சைத் தமிழாகும்! இன்றும் கூட பிறமலைக் கள்ளர்கள் பேசும் தமிழ் கொச்சையாக இருப்பதைக் காண்கிறோம்.
இந்த அடிப்படையில்தான் கள்ளழகர் கள்ளர் வேடம் பூண்டு வைகை ஆற்றில் ஆண்டு தோறும் இறங்கி விட்டு வண்டியூர் சென்று துலுக்க நாச்சியார் வீட்டில் தங்குவதும், தீட்டுப்படுவதும், அழகர் மலை சென்றதும், தீட்டு நீக்கப்பட்டபின் கோயிலுக்குள் அனுமதிப்பதுமான விழாக்கள் நடக்கின்றன.
திருக்கல்யாணத்தைக் காண, பார்ப்பனர்கள், உயர் ஜாதிக்காரர்கள் மற்றும் சற்சூத்திரர்களுடன் மீனாட்சி அம்மன் கோயில் செல்கிறார்கள். ஆனால் பிற்படுத்தப்பட்ட மக்களோ, அழகருடன் வந்து, அழகருடன் திரும்ப அழகர் கோயில்வரை செல்வதும், வணங்குதுமான முறைகளை இப்போதும் கூட பார்க்க முடிகிறது.
இந்த வரலாற்று உண்மைகளை மறைத்து சைவ வைணவ ஒற்றுமையை உருவாக்க நினைத்த சிலர் சம்பந்தமில்லாத அழகரை, மீனாட்சி சகோதரர் எனவும், அவர் வருவதற்குள் திருமணம் முடிந்து விட்டதால், அழகர் கோபித்துக் கொண்டு வண்டியூர் சென்று விட்டதாகவும் முடிச்சுப் போட்டுள்ளார்கள். பொய்யான பிரச்சாரம் பக்தியின் பெயரால் உண்டாக்கப்பட்டதை அதிநவீன காலத்திலும் பகுத்தறியாது, பக்திப் பரவசம் காண்கிற முட்டாள்களை என்னவென்பது?
தந்தை பெரியார் சொன்னது போல் அவர்களைக் காட்டு மிராண்டிகள் என்பதில் என்ன சந்தேகம்? நியாயம்தானே!
அக்காலத்தில் வாகன வசதி இல்லை. நல்ல சாலை வசதிகள் இல்லை. ஒப்புக்காக ஏற்றாலும்கூட, அப்போது, அழகரால் தன் தமக்கையின் திருமணத்துக்கு வந்து சேருவதில் தாமதம் உண்டாகியிருக்கலாம். இன்று அவ்வாறில்லை. வாகன வசதிகள் உள்ளன. ஹெலிகாப்டரைக்கூட அவசரத்திற்குப் பயன்படுத்தலாம். சாலை வசதிகளுக்கும், மேம்பாலங்களுக்கும் குறைவு இல்லை. மதுரை நகருக்குள் நுழைய 7,8 பாலங்கள் வரை கட்டப்பட்டுள்ளன.
வருஷம், வருஷமாக இந்த அழகர் தாமதமாக வருவது ஏன்? ஒருத்தருக்கு ஒரு முறைதானே திருமணம். நம்ம மீனாட்சி சொக்கநாதருக்கு ஆண்டுதோறும் திரும்பத் திரும்பத் திருமணமா? நல்ல தமாஷாக உள்ளது. இந்தப் பொம்மைக் கல்யாணத்தை நம் பெரியவர்கள் எப்போது விடப் போகிறார்களோ?
நம்ம மந்திரிகள், மாவட்ட ஆட்சித் தலைவர், காவல்துறை ஆணையாளர் சமூக முன்னேற்றத்தை அழகரிடம் எடுத்துச் சொல்லி, இந்த ஆண்டாவது முதல் நாளே புறப்பட்டு மதுரை வந்துவிடுங்கள். உங்கள் சகோதரியும் சந்தோஷமடைவாள். விரைவான சொகுசான வாகனங்கள் தயார் நிலையில் உள்ளன. இனி மேலாவது தாமதிக்காமல் திருமணத்திற்கு வரவேண்டும் என ஏன் சொல்லவும், செய்யவும் மறுக்கிறார்கள்.
அழகர் ஆற்றில் இறங்க வேண்டியதில்லை. ஆல்பர்ட் விக்டர் மேம்பாலம் வழியாக மதுரையம்பதி வரலாமே! செய்வார்களா நம் ஆட்சியாளர்கள்? பக்த கே()டிகள் இருக்கிறவரை, அழகர் ஆற்றைக் கடக்கமாட்டார்! அவர் மதுரையைத் திருமலை நாயக்கர் ஆள்வதாகவே நினைத்திருக்கலாம்! அழகரை வைத்து வைதீகக் கூட்டம் வயிறு நிறைப்பது... நிற்பது... எப்போது?
----------------------- “விடுதலை” 27-4-2010

thanks to  http://sd-10807.dedibox.fr/show_items-feed=a84ea0ab377d2734c98a90d897c36e66?page=1

No comments: