ராஜராஜன் காலத்தில்

ராஜராஜன் காலத்தில் அரசுரிமை பொதுவாக மூத்த ஆண் வாரிசுக்கே வழங்கப்பட்டது. சில சந்தர்ப்பங்களில் அரசர்களின் தம்பிமார்கள் பட்டத்துக்கு வரும் வழக்கமும் காணப்பட்டது. பெரும்பாலும் அரசன் வாழும் காலத்திலேயே இளவரசர்களை நியமிக்கும் வழக்கம் இருந்தது. இதனால் வாரிசுப் போட்டிகள் பெருமளவு குறைவாகவே இருந்தன.

 சமூக வாழ்வில் முழுப்பங்கும் ஏற்க பெண்களுக்கு எவ்விதத் தடையும் இல்லை. ஆனால் அடக்கமே, பெண்களின் தலைசிறந்த அணிகலனாகக் கருதப்பட்டது. பொதுவாக சொத்து வைத்துக் கொள்வதற்கும் அந்தத் சொத்துக்களைத் தாங்கள் விரும்பியபடி அனுபவித்து வரவும் அவர்களுக்கு உரிமை இருந்துவந்தது. அரசர்கள் மீது அரச குடும்பத்துப் பெண்களுக்கு மிகுந்த செல்வாக்கு இருந்தது. அரசர்களும் செல்வந்தர்களும் பல மனைவியரைத் திருமணம் செய்து கொண்டனர். ஆனால் பொதுவக ஓர் ஆடவனுக்கு ஒரு மனைவி என்ற நியதியே பெருவாரியாக நடைமுறையில் இருந்து வந்தது. சிறந்த பயிற்சி தேவைப்படாத வேலைகளில் பெண்கள் அமர்த்தப்பட்டனர்.

சோழர் காலத்தில் தேவரடியார்கள் எனப்படும் ஆடல் மகளிர் பரதத்திலும் இசையிலும் நல்ல தேர்ச்சி பெற்று, திருக்கோயில்களில் தொண்டு புரிந்தாள். ஆடவர்களுடன் இன்முகத்துடன் பழகினாள். ஆனால், சிலருடன் மட்டும் நெருங்கிய நட்புக் கொண்டாள். தான் விரும்பியவரை மணம் புரிந்து கொண்டாள். தற்காலத்தில் நகரத்தில் தோன்றியுள்ள விலைமாதர்களை மனத்தில் கொண்டு அக்காலத்திய ஆடற்பெண்டிரை நாம் மதிப்பிடுவது பெரும் தவறு என்பதற்கு அக்காலத்துக் கல்வெட்டுக்களையும் இலக்கியங்களையும் படிப்பவர்களுக்கு நன்கு விளங்கும்.

சோழர் காலத்தில் தேவரடியார்கள் மதிப்பான இடம் பெற்றிருந்தனர் என்பது, சோழர் அவர்களுக்கு வழங்கியுள்ள ஏராளமான தானங்களைப் பற்றிய கல்வெட்டுக்களைப் பார்த்தால் விளங்கும். சதுரன் சதுரி என்னும் ஒரு தேவரடியாள் நாகன் பெருங்காடான் என்பவரின் மனவி(அகமுடையாள்) என்று திருவொற்றியூர்க் கல்வெட்டு, கி.பி. 1049-ம் ஆண்டில் கூறுகிறது. அவ்வாறே தஞ்சை மாவட்டத்தில் உள்ள ஒரு கோயிலில் பணிபுரிந்த தேவரடியாள் மணமானவள் என்பதை மூன்றாம் குலோத்துங்கன் கல்வெட்டு தெரிவிக்கிறது.
 சோழர்கள் சாதிய அடுக்கமைவையும் அமைப்பையும் ஏற்று, அதற்கு கட்டுப்பட்டு ஆட்சிபுரிந்தார்கள். இவர்கள் காலத்துக்கு முன்னரேயே தீட்டுக் கோட்பாடு தமிழ்ச் சமூகத்தில் வழங்கியதானாலும், இதை அமுல்படுத்துவதில் சோழரின் பங்கும் குறிப்பிடத்தக்கது. "முதலாம் இராசராசனுடைய கல்வெட்டொன்று ‘தீண்டாச்சேரி’ என ஒரு ஊர்ப் பகுதியைச் சுட்டுகிறது என்றும், பாகூரில் உள்ள திருமூலநாதர் திருக்கோவில் கல்வெட்டொன்று (முதலாம் இராசராசன் காலத்தைச் சேர்ந்தது – கி.பி. 10 ஆம் நூற்றாண்டு) ஓர் ஊரில் வாழ்ந்த ஒரு மக்கள் பிரிவினரைத் ‘தீண்டாதார்’ எனக் குறிப்பிடுகின்றது என்றும் பேராசிரியர் கோ. விசயவேணுகோபால் விளக்குகிறார். மேலும் சோழர் காலத்தில்தான் இந்தத் தீண்டத்தகாதவர் ‘சேரிகள்’, அரசாணையின்படி அமைக்கப்பட்டுள்ளன. மேடான இடத்தில் மேல் சாதியினரும் பள்ளமான இடத்தில் கீழ்ச் சாதியினரும் குடியிருக்க வேண்டும். அப்பொழுதுதான் முற்றத்தில் வரும் மழைத்தண்ணீர் கூடத் தீட்டுப்படாததாய் இருக்கும். மேலும் குனிந்து போகும்படியாகத்தான் குடிசை கட்ட வேண்டும். ஜன்னல் வைத்துக் கட்டக் கூடாது. சுவருக்கு வெள்ளையடிக்க கூடாது. பிணத்தைச் சும்மாதான் எடுக்க வேண்டும். பொதுக் குளத்தில் தண்ணீர் எடுக்கக்கூடாது. என்றெல்லாம் ஆணை போட்டு" அமுல்படுத்தியிருப்பதாகத் தெரிகிறது. இந்த ஆணைகள் அக்காலத்தில் நிலவிய அடக்குமுறைகளை எடுத்துக்காட்டுவதாக ஆய்வாளர் கூறுகிறார்கள்.

பிராமணர்களே சோழ நிர்வாகத்தின் முக்கியமான பதவிகளை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தனர். மற்றவர்கள் அவர்களுக்கு வேலை செய்தார்கள். பிராமணர்கள் அல்லாதோர் ஒன்றாக செயல்படுவதை தடுப்பதற்கு சாதிச் சார்பையும், சாதி ஒற்றுமையையும், சாதி சமூகங்களையும் பிராமணர்கள் ஊக்குவித்தார்கள்.
 சோழர்கள் வேழத்தில் (palace establishments) நூற்றுக்கணக்கான பெண்கள் அரசனினின் பாலியல் மற்றும் களியூட்டல் பயன்பாட்டுக்காக இருந்தார்கள். இங்கு ஆண் அடிமைகளும் வேலை செய்தார்கள். இதை பேராசிரியர் தாவுத் அலி அவர்கள் தனது "சோழர் காலக் கல்வெட்டுக்களில் வேழம் என்னும் சொல் பற்றிய ஆய்வு"[6] என்ற ஆய்வுக்கட்டுரையில் விளக்கியுள்ளார்.

ரொமிலா தபார் (Romila Thapar) என்று முக்கிய வரலாற்று அறிஞர் இந்தியாவின் வரலாறு (A History of India) என்ற தனது நூலில் சோழர்கள் அடிமைகள் வைத்திருந்தை குறிப்பிட்டுள்ளார். அடிமைகள் தாமாகவோ அல்லது வேற்றோராலோ அடிமைத்தனத்துக்கு விற்கப்பட்டார்கள். கோயில்களுக்கும் அடிமைகள் விற்கப்பட்டனர். பட்டினிக் காலத்தில் இது பெருமளவில் இருந்தது என்றும் குறிப்பிடுகின்றார். அடிமைகளின் எண்ணிக்கை சிறியது என்றும், பாரிய உற்பத்திகளுக்கு அடிமைகள் பயன்படுத்தப்பட்டதாக தெரியவில்லை என்றும் அவர் குறிப்பிடுகின்றார்.

சோழர்களின் வெளிநாட்டு வணிக முயற்சிகளின் செல்வாக்கு, சீனா, தென்கிழக்காசியா ஆகிய பகுதிகள் வரை எட்டியிருந்தது.
 இராஜராஜன் தன் ஆட்சியின் தொடக்கத்திலேயே மும்முடிச் சோழன் என்ற பட்டம் பெற்றான். இராஜராஜனின், மும்முடிச் சோழன், செயங்கொண்டான், அருண்மொழி என்ற பெயர்கள் நகரங்களின் பெயர்களாக மாறியதோடு, வளநாடுகளும் மண்டலங்களும் இம்மன்னனின் பெயராலேயே அறியப்பட்டன. இப்பெயர்களுடன் சோழேந்திர சிம்மன், சிவபாத சேகரன், க்ஷத்திரிய சிகாமணி, சனநாதன், நிகரிலிச் சோழன், இராஜேந்திர சிம்மன், சோழ மார்த்தாண்டன், இராஜாசிரயன், இராஜ மார்த்தாண்டன், நித்திய விநோதன், பாண்டிய லோசனி, கேரளாந்தகன், சிங்களாந்தகன், இரவிகுலமாணிக்கம் தெலிங்க குல காலன் போன்ற பல பட்டங்கள் பெற்றிருந்தான்.

ராஜராஜ சோழனின் மிகச் சிறந்த சாதனையாக தஞ்சை பெரிய கோயில் கருதப் படுகிறது.
http://savukku.net/index.php?option=com_content&view=article&id=106:2010-09-28-06-25-44&catid=1:2010-07-12-16-58-06&Itemid=2

No comments: