புலம்பலில் பிரமலைக் கள்ளர்கள்....From Vikatan


களவாடப்படும் கண்டிஷன் ஜாரி நிலங்கள்!

பஞ்சமி நிலங்கள் விவகாரம் தமிழக அரசியல்வாதிகளை பாடாய்படுத்திக் கொண்டிருப்பது போதாதென்று இப்போது, 'எங்களுக்கு வழங்கப்பட்ட கண்டிஷன் ஜாரி நிலங் களை மீட்டுக் கொடுங்கள்' என்று தென் மாவட்டங்களில் வசிக்கும் பிரமலைக் கள்ளர் சமூகத்தினர் ஆர்ப்பரிக்கத் துவங்கியிருக்கிறார்கள். இதை வலியுறுத்தி தேனியில் அந்த சமூகத்தினர் உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டம் என போராட் டத்தில் குதித்திருப்பதால் விவகாரம் விஸ்வரூபம் எடுத்துக் கொண்டிருக்கிறது. 
நம்மிடம் பேசிய 'பிரமலைக் கள்ளர் ஜாரி நிலம் மீட்புக் குழு' தலைவர் தமிழரசன்,

''பிரமலைக் கள்ளர் உள்ளிட்ட சில சாதியினருக்கு எதிராக பிரிட்டீஷ் ஆட்சியில் 'கைரேகை' சட்டம் என்ற கொடுமையான சட்டம் அமல் படுத்தப்பட்டது. அதை எதிர்த்து உசிலம்பட்டி அருகிலுள்ள பெருங்காமநல்லூரில் நடந்த கிளர்ச்சியில் 30-க்கும் மேலான வர்களை சுட்டுக் கொன்றது போலீஸ். அப்போது நடந்த கலவரங்கள் தொடர்பாக விசாரணை நடத்திய வருவாய்த் துறை அதிகாரிகள், 'பொருளாதாரரீதியாக முன்னேற செய்தால் பிரமலைக் கள்ளர் சமூகத்தினரை திருட்டுத் தொழிலுக்கு போகவிடாமல் திருத்திவிடலாம்' என அரசுக்கு அறிக்கை கொடுத்தார்கள்.

அதன் அடிப்படையில்தான் 1915-ல் 'கள்ளர் மறு சீரமைப்புத் துறை' உருவாக்கப்பட்டது. அந்தத் துறையின் மூலம் பிரமலைக் கள்ளர்கள் முன்னுக்கு வருவதற்காக நிலமும் வழங்கி னார்கள். அப்படி வழங்கப்பட்ட 'கண்டிஷன் ஜாரி நிலங்களை' விற்கவோ வாங்கவோ கூடாது என்பது அரசாணை. சுதந்திரப் போராட்ட காலத்தில் சுபாஷ் சந்திரபோஸின் இந்திய தேசிய ராணுவத்தில் பிரமலைக் கள்ளர்களும் கணிச மான அளவில் பங்கெடுத்தார்கள். அதனால், அவர்கள் எல்லாம் பிரிட்டீஷ் அரசாங்கத்தால் நாலா திசைகளிலும் விரட்டி அடிக்கப்பட்டனர். அப்படி ஓடியவர்களின் ஜாரி நிலங்கள் எல்லாம் அப்போது பிரிட்டீஷ் ஆட்சிக்கு ஆதரவாக இருந்த பிற சாதிக்காரர்களால் ஆக்கிரமிக்கப்பட்டு விட்டன. காலப்போக்கில் விதிகளை மீறி அந்த நிலங்களுக்கு பட்டா மாறு தலும் செய்திருக்கிறார்கள்.
இப்படி அபகரிக்கப்பட்ட நிலங்களை மீட்டுக் கொடுக்கச் சொல்லி பசும்பொன் தேவர் காலத்திலிருந்தே கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது. நாங்கள் ஒன்றுகூடினால் வலுவான அரசியல் சக்தியாக உருவெடுத்து விடுவோமோ
என்ற பயத்தில் அரசியல் கட்சியினர் சதி செய்து எங்களைப் பிரித்து விடுகிறார்கள். கண்டிஷன் ஜாரி நிலங்கள் எவ்வளவு இருக்கிறது என்பது குறித்து தகவல் அறியும் உரிமை சட்டத்தில் மனு கொடுத்ததற்கு, பெரியகுளம் தாலுக்காவில் 800 ஏக்கர், தேனியில் 400 ஏக்கர், ஆண்டிபட்டியில் 300 ஏக்கர் நிலங்கள் இருப்பதாக தகவல் கொடுத்திருக்கிறார்கள். ஆனால், இவைகளில் பெரும்பகுதி வேறு சமுதாயத்தினர் பெயரில் பட்டா மாறுதல் செய்யப்பட்டுவிட்டது!'' என்றார். 

குழுவின் சட்ட ஆலோசகர் முத்துப்பாண்டி, ''போராடிப் பார்த்தும் எந்த நடவடிக்கையும் இல்லாத தால், ஆக்கிரமிக்கப்பட்டுள்ள கண்டிஷன் ஜாரி நிலங்களில் 'இது கள்ளர் ஜாரி நிலம்' என தட்டிபலகை ஊன்றினோம். அதை போலீஸார் அப்புறப்படுத்தி விட்டார்கள். இப்போது உண்ணாவிரதம் நடத்தியுள்ளோம். இனியும் தீர்வில்லை என்றால் அடுத்தகட்டமாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ள எங்களது இடங்களில் எங்கள் மக்களைக் குடியேற்றும் போராட்டத்தை நடத்துவோம்!'' என்றார்.

வருவாய்த் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, ''குறிப்பிட்ட சாதியினருக்கு என்றில்லாமல் நிலமற்ற ஏழை எளியவர்கள் அனைவருக்கும் அப்போது நிலம் வழங்கப்பட்டுள்ளது. பிரமலைக் கள்ளர் ஜாரி நிலங்கள் தற்பொழுது யார் பிடியில் உள்ளது என்ற விவரம் தெரியவில்லை. சம்பந்தப் பட்டவர்கள் உரிய தகவல்களுடன் என்னை சந்தித்தால் அந்த நிலங்கள் அதிகம் உள்ளதாக சொல்லப்படும் மதுரை, தேனி, திண்டுக்கல் மாவட்ட கலெக்டர்களிடம் பேசி நடவடிக்கை எடுக்கக் காத்திருக்கிறேன்!'' என்றார்.  

இதனிடையே தேனி மாவட்டம் கூடலூரைச் சேர்ந்த தருமர் என்பவர், 'எனது கள்ளர் கண்டிஷன் ஜாரி நிலத்தை கேரளத்தைச் சேர்ந்தவர்கள் சட்ட விரோதமாக பட்டா மாறுதல் செய்துவிட்டதாக' போலீஸில் புகார் கொடுக்க... சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. தருமரை சந்தித்தோம், ''எங்க அப்பா காலத்தில் கண்டிஷன் ஜாரி நிலமாக எங்களுக்கு ஐந்தரை ஏக்கர் கொடுத்தார்கள். என்னைப்போல ஊமையன் தொழுசரலைக்காட்டு மேட்டில் 400 ஏக்கர் கள்ளர், ஆதிராவிடர்களுக்கு கண்டிஷன் ஜாரி நிலம் கொடுத்திருக்காங்க. இந்த நிலங்களை கேரளாவைச் சேர்ந்த மத்திய அமைச்சர் ஒருவருக்காக ஜான் வி.லிட்டோ, ராணி சேவியர், சேவியர், ஜேம்ஸ் ஆகியோர் பெயர்களில் வாங்கி, பட்டாவும் மாத்திட்டாங்க. என்னிடம் நிலத்தை கேட்டாங்க. நான் கொடுக்கலைன்னதும் அவங்களாவே 2008-ல் போலி ஆவணங்கள் தயாரித்து பட்டா மாறுதல் செய்திட்டாங்க. நான் வருவாய்த் துறையினரிடம் முறையிட்டும் பயனில்லை. நீதிமன்ற உத்தரவு வாங்கிய பின்னரும் வருவாய்த் துறை அமைச்சர் தலையீடு இருப்பதாக சொல்லி போலீஸ் நடவடிக்கை எடுக்கல. இப்ப இருக்கிற எஸ்.பி-யான பாலகிருஷ்ணன்தான் என் பக்கம் உள்ள நியாயத்தைப் புரிஞ்சுக்கிட்டு வழக்குப் போட வைத்திருக்கிறார்!'' என்றார்.

எஸ்.பி-யிடம் பேசினோம். ''கண்டிஷன் ஜாரி நிலங்களை பட்டா மாறுதல், பத்திரப் பதிவு செய்யக்கூடாது. அதை மீறி சட்ட விரோதமாக செயல்பட்டதால்
ஜான் வி.லிட்டோ, ராணி சேவியர், சேவியர், ஜேம்ஸ் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்திருக்கிறோம். கூடலூர் ஊமையன் தொழுவில் 400 ஏக்கர் கண்டிஷன் ஜாரி நிலங்களை வாங்கிய இந்த கும்பல், அந்த ஆவணங்களை வைத்து வங்கியில் கடன் வாங்கியுள்ளதும் எங்கள் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதன் பின்னணியில் மிகப்பெரிய மோசடிகள் நடந்திருப்பதால், இவர் களுக்கு பட்டா மாறுதல் செய்து கொடுக்க உறுதுணையாக இருந்த வருவாய் மற்றும் பத்திரப் பதிவு துறையினர் மீதும் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுப்பது குறித்து ஆலோசனை நடத்தி வருகிறோம்!'' என்றார்.

- இரா.முத்துநாகு 
நன்றி : பானு தேவர்

1 comment:

Unknown said...

திரு,தமிழரசன்.செல்,நம்பர் தேவை