S.Ramakrishnan.
பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பாக எனது நண்பர் ராம்நாராயண் எனும் ராம்ஜி ஹோம்டிவி என்ற நியூடெல்லியில் உள்ள தொலைக்காட்சி நிறுவனத்திற்காக ஜல்லிகட்டு பற்றிய ஆவணப்படம் ஒன்றினை இயக்க முனைந்தார். அப்போது நான் அவருடைய அறைத்தோழனாக இருந்தேன்.
ராம்ஜி பூனா திரைப்படக்கல்லூரியில் ஒளிப்பதிவுத் துறையில் பயின்றவர். இன்று தொலைக்காட்சி தொடர்கள், விவாத நிகழ்வுகள் என்று விஜய் டிவி உள்ளிட்ட பல சேனல்களில் பரபரப்பாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். அவரது முதல் ஆவணப்படமது என்பதால் நாங்கள் சிறிய குழுவாக செயல்பட்டு அதை சிறப்பாக உருவாக்கலாம் என்று முனைந்தோம்.
பிசினஸ் இந்தியா இதழில் பணியாற்றும் புகைப்படக்கலைஞரான ரமேஷ், சென்னை திரைப்படக்கல்லூரியில் பயின்ற மணிஸ்ரீதர், பூனாவில் ஒலிப்பதிவு படித்த இளங்கோ, ராம்ஜியோடு பூனாவில் ஒளிப்பதிவு துறையில் பயின்ற சசிகாந்த் என்று திறமையான தொழில்நுட்பக்குழு ஒன்று சேர்ந்தது. எதையாவது செய்து சாதித்து காட்ட வேண்டும் என்ற பொறி யாவருக்குள்ளும் இருந்தது. அதற்கான முன்திட்டமிடல், நேரடி ஆய்வு என்று செயல்படத்துவங்கினோம்.
நான் அந்த ஆவணப்படத்தின் ஆதார ஆய்வை மேற்கொண்டேன்.
அதற்காக மதுரையைச் சுற்றி ஜல்லிகட்டு நடைபெறும் இருபதிற்கும் மேற்பட்ட ஊர்களைப் பார்வையிட்டேன். நேரடியாக ஜல்லிகட்டு மாடு வளர்ப்பவர்கள், மாடுபிடிப்பவர்கள், கோவில் சடங்குகள், ஜல்லிகட்டு பற்றிய கதைகள், நம்பிக்கைகள்,கிராமத்து மக்களின் நினைவுகள் என்று சேகரித்து கொண்டிருந்தேன். அது வளர்ந்து ஆயிரம்பக்கமுள்ள பெரிய புத்தகம் எழுதுமளவு சேர்ந்து போனது. அதில் இருந்து முக்கிய விபரங்களாகத் தேர்வு செய்து தொகுத்துக் கொண்டேன்.
தமிழ் அறியாத வேறுமாநில மக்களுக்கு ஜல்லிக்கட்டு பற்றி விளக்கிச் சொல்ல இருக்கிறோம் என்பதே எங்களின் பிரதான குறிக்கோள். அந்த முனைப்பிலே ஆவணப்படம் பெரிதும் உருவாக்கபட்டது. அதே நேரம் மிக ஆதாரப்பூர்வமான தகவல்கள்,நேர்காணல்கள் இடம்பெற வேண்டும் என்றும் விரும்பினோம்.
ஜல்லிக்கட்டு என்ற விளையாட்டின் பின்னால் தென்மாவட்ட கிராமப்புறக் கலாச்சாரத்தின் வேர்கள் எவ்வளவு ஆழமாக ஊடுருவியிருக்கிறது என்று அந்த நாட்களில் தான் முழுமையாகப் புரிந்தது.
ஜல்லிகட்டு மாடு வளர்க்கபடுவதே ஒரு கலை. அந்த மாட்டை ராணுவத்திற்கு தயார் செய்யும் நபரைப் போல பார்த்துப் பார்த்து வளர்க்கிறார்கள். பச்சரிசி ஆட்டி உண்ணத் தருகிறார்கள். தினசரி குளியல், நடை, சீற்றம் பாய்வது என்று மாடு கொஞ்சம் கொஞ்சமாக தயார் செய்யப்படுவது ஒரு அரிய கலை.
மாடு அதை வளர்ப்பவனின் குணத்தினையே பெரிதும் கொண்டிருக்கிறது. ஜல்லிகட்டில் அது போன்ற மாடுகளை யார் வளர்க்கிறார் என்று அறிந்தே அதன் பாய்ச்சலைத் தெரிந்து கொள்கிறார்கள். சில மாடுகள் லேசாகச் சீண்டினால் உடனே பாய்ந்துவிடக்கூடியவை.ஆனால் சில மாடுகளோ சலனமேயில்லாமல் நின்று பார்த்தபடியே இருக்கும். நெருங்கிவந்து பாயும் போது மட்டுமே சீற்றம் கொள்ளும். இன்னும் ஒரு சில மாடுகள் பயங்கரமாக துள்ளி ஆடித் தெறிக்கும். ஆனால் பிடிபோட்டவுடன் பசு போல அடங்கிப் போய்விடும். அது போன்ற மாடுகளைக் கேலி செய்வார்கள். இது போலவே மாடுகளுக்கு ஊர்வாகும் சேர்ந்தேயிருக்கிறது.
சில ஊர் மாடுகள் இயல்பிலே சற்று முறைப்பு கொண்டேயிருக்கின்றன. சிறாவயல் ஜல்லிகட்டில் ஒரு மாட்டினைக் கண்டேன். அது ஒரு கண் இல்லாத மாடு. வயதும் அதிகமானது போலிருந்தது. அடங்கிய கொம்புகள், காய்ந்து உலர்ந்த குளம்புகள். குறைந்த மயிர் கொண்ட வால், நெற்றிமேடு துருத்திக் கொண்டிருந்தது. அந்த மாடு நின்றவாகு ஒரு சாமுராய் வீரன் நிற்பதை போல கம்பீரமாகவே இருந்தது. அதன் பார்வையில் சலனமேயில்லை. அது ஒற்றைக் கண்ணால் பார்த்தபடியே நிற்கிறது. அதன் சீற்றம் பெருமூச்சென எழுவதும் அடங்குவதுமாக இருந்தது.
விடைத்த காதுகள் எழும்பி நின்றன. மாட்டின் கால் நுனி பாயத் தயாராக நிற்கிறது. அதன் உடலில் யாரோ மஞ்சள் பூசியிருக்கிறார் என்பது போல லேசாக ஒரு திட்டு படிந்திருந்தது. அது தன்னை பின்னால் இருந்து யாரும் வந்து பிடித்துவிடக்கூடாது என்பதில் மிகக் கவனமாக இருந்தது. ஆகவே பின்னால் நடந்து வரும் அரவம் கேட்டாலே அது சட்டென சுழித்துத் திரும்பி விடுகிறது. அது போலவே மாட்டின் இருள் அடைந்து போன கண் பக்கம் ஆள் வரும் போது அது தன்னை அவமதிக்கிறான் என்பது போலத் தலையை சாய்ந்துக் கொண்டு பார்க்கிறது.
முப்பது வயதுள்ள ஒரு மனிதன் அதை லாவகமாகப் பிடிக்க பதுங்கிப் பதுங்கி போகிறான். அரங்கம் அவனை வேடிக்கை பார்க்கிறது.காக்கிடவுசரும் வெற்றுடம்புமாக அவன் ஒட்டப்பந்தய வீரன் துப்பாக்கி சப்தத்திற்கு காத்திருப்பது போல விறைப்பாக நிற்கிறான். அவன் தொடும் தூரத்தில் போய் நிற்கும் வரை மாடு சலனமற்று நின்றபடியே இருந்தது.
அவன் மாட்டின் கண்களை ஊடுருவிப் பார்க்கிறான். அது இன்னமும் களைத்துப் போகவில்லை என்பது தெரிகிறது. அதை ஒடவிட்டு களைத்துப் போக விட வேண்டும் என்பது போல சீண்டுகிறான். அது பாயத்தயாராகிறதே அன்றி ஒட மறுக்கிறது. அவன் விடவில்லை. அதன் வால்பக்கம் போய்ச் சீண்டுகிறான். அப்போதும் அது காலால் புழுதியை பறக்கவிடுகிறது. கொம்பை ஆட்டித் துள்ளுகிறது. ஆனால் ஒடவில்லை.
அவன் விடவில்லை. மாட்டின் மீது பாய்வது போல பொய்பாய்ச்சல் காட்டுகிறான். மாடு ஆவேசம் கொள்கிறது. ஆனால் அவன் தப்பிவிடுகிறான். இந்த நாடகம் அதன் உச்சத்தை அடைகிறது. மாடு இப்போது அவன் தன்னை ஏன் பாய்ந்து அடக்க மறுக்கிறான் என்பது போல குமுறுகிறது. அவன் அதன் கொம்புகளைப் பார்த்தபடியே நிற்கிறான். அதன் கண்களில் வெறுமை தென்படுகிறது.
அவன் மாட்டின் இரண்டு கொம்புகளுக்கு நடுவில் பாய்கிறான். அவன் கைகளில் மாட்டின் கொம்பு சிக்கிக் கொள்கிறது. மாடு திமிறுகிறது. அவன் கால்கள் இழுபடுகிறது. மாடு ஒடத்துவங்குகிறது. அவன் அதை எதிர்பார்த்தவன் போல ஒலமிடுகிறான். அது அவனை இழுத்துக் கொண்டு ஒடி உதற எத்தனிக்கிறது. அவன் விடவேயில்லை. மாடு தரையில் அவனை போட்டு தேய்த்துவிட முயற்சிப்பது போல முயற்சிக்கிறது. கூட்டம் ஆர்ப்பரிக்கிறது. மாடு ஆவேசம் அடங்காமல் இழுக்கிறது. அவன் மாட்டின் கொம்புகளைத் திருக்குகிறான்.
மாட்டின் கண்கள் மேலோங்குகின்றன. அவன் கால்கள் மாட்டின் அடிவயிற்றுள் போய் பிணைந்து கொண்டது போலிருக்கிறது. மாடு துள்ளுகிறது. அவன் கொம்பை விடவேயில்லை. மாடு தன் இயலாமையை உணர்ந்து கொண்டதைப் போல மெல்ல சீற்றம் அடங்குகிறது. மாட்டின் குதம் வெளியே தள்ளுகிறது. அவன் மாட்டின் கொம்பின் பிடியை மேலும் இறுக்குகிறான். அது தடுமாறுவது போல சுழல்கிறது.
மாட்டினை அவன் வீழ்த்திவிட்டதாக நினைக்கிறான். வெற்றி அவன் கண்களுக்கு தெரிகிறது. அவன் மெல்ல தன்பிடியைத் தளர்த்துகிறான். இதற்காகவே காத்திருந்தது போல அந்த மாடு ஆவேசமாக சீறித் துள்ளுகிறது. அவன் நிலைதடுமாறுகிறான். மறுபடி பிடி வலுவாக கிட்டவில்லை. அவன் தடுமாறி கிழே விழுகிறான். கூட்டம் கத்துகிறது. மாடு புழுதி எழும்ப அவனை தூக்கி மேலே வீசுகிறது. அவன் பறக்கிறான். தரையை அவன் தொடும்முன்பாக மாடு மறுபடியும் தாக்க கொம்பை முட்டுகிறது. அவன் புரள்கிறான். ஒரு குத்து விழுகிறது. அவன் எழுந்து கொள்ள முயன்று முடியாமல் புரள்கிறான். அதற்குள் தொலைவிலிருந்து நாலைந்து பேர் அவனைக் காப்பாற்ற ஒடிவருகிறார்கள்.
மாடு கிழே விழுந்துகிடந்தவன் அருகே போகிறது. அவன் பூமியில் விழுந்து கிடக்கிறான். அவனது அரைடவுசர் கிழிந்து புழுதியோடு விதைக்கொட்டைகள் வெளியே தெரிகின்றன. அவன் வயிற்றை மாடு குத்திகிழிக்கப் போகிறது குடல் சரிய அவன் சாகப்போகிறான் என்றே கூட்டம் நினைத்தது.
ஆனால் அந்த மாடு விழுந்துகிடந்தவனின் முன்பு வந்து ஒரு சுற்றுசுற்றிவிட்டு நின்று கொண்டது. அவன் விழுந்துகிடந்தபடியே மாட்டையேப் பார்த்து கொண்டிருந்தான். யாரும் மாட்டை நெருங்க முடியவில்லை. பிறகு மாடு தானாக விலகி சற்றுத் தள்ளிப்போய்நின்று கொண்டது. நாலைந்து பேர் பாய்ந்து அவனைத் தூக்கினார்கள். அவன் மைதானத்தில் இருந்துவெளியேறி போகும்வரை அந்த மாட்டையே பார்த்து கொண்டேயிருந்தான். அவனது குருதி வழிந்து மணலில் உறைந்து போயிருந்தது. அந்த மாட்டை மூன்று பேர் சேர்ந்து பிடித்து அடக்கினார்கள். அவ்வளவு ஆவேசமான பொருந்துதலை என் வாழ்வில் அன்று தான் கண்டேன்.
அவன் பல வருசமாக அந்த மாட்டைப் பிடிப்பதை வழக்கமாக கொண்டிருக்கிறான் என்றும் இன்று ஒரு பழைய கணக்கு தீரக்கபட்டிருக்கிறது என்றும் உள்ளுர் பூசாரி சொன்னார். என்னால் நம்பவேமுடியவில்லை. தன்னை பலமுறை வென்ற மனிதனை ஏன் மாடு குடலை கிழிக்காமல் வெளியே விட்டது ? என்ன உறவு அது. அந்த மாட்டினை அந்த மனிதன் மிகவும் நேசித்தான் என்கிறார்கள். அவன் ஜல்லிகட்டில் பிற மாடுகளைப் பிடிப்பதை விட இதற்காகவே வருகிறான் என்றும் அவனது ஊர் சிங்கம்புணரி என்றும் சொன்னார்கள். அவன் என்ன வேலை செய்கிறான் என்று கேட்டேன்.
ரிசர்வ் போலீஸில் வேலை செய்கிறான் என்றார்கள். ஜல்லிகட்டில் பெரும்பான்மை மாடுபிடிப்பவர்கள் காவல்துறையில் வேலை செய்யும் இளைஞர்களே. அந்த மாட்டின் ஒரு கண் போனபிறகும் அதை எப்படி ஜல்லிகட்டில் அனுமதிக்கிறார்கள் என்று கேட்டேன். அதை வளர்ப்பவர் ஒரு சாராயவியாபாரி என்றும், அந்த மாட்டினை அவரது வீட்டு பெண்கள் தான் தயார்படுத்தினார்கள் என்றும் சொன்னார்கள்.
ஜல்லிக்கட்டிற்கு மாடு கொண்டுவரும்போது மட்டுமே அதை லாரியில் ஏற்றிக் கொண்டுவருகிறார்கள். ஜல்லிகட்டு முடிந்தபிறகு அந்த மாடு தன் வீட்டினைத் தேடி தானே போய்விடுகிறது. எனக்கு அந்த மாட்டின் வீட்டிற்குப் போய் காண வேண்டும் போலிருந்தது. மறுநாள் சிங்கம்புணரியில் உள்ள அந்த மாட்டின் உரிமையாளர் வீட்டிற்குப் போயிருந்தேன்.
அதே மாடு தொழுவத்தில் நின்றிருந்தது. மாடு ஜல்லிகட்டில் இருந்து வந்தவுடன் அதற்கு மஞ்சள் பத்து போட்டு விசேசமாக அரைக்கபட்ட தானியங்கள், அரிசி அரைத்த கலவை கலந்த உணவை தந்திருக்கிறார்கள். நேற்று பார்த்த அந்த ஆவேசம் இன்று மாட்டிடம் இல்லை. அது தளர்ந்திருந்தது. அடுத்த வருசம் அதை அனுப்பமுடியுமா என்று தெரியவில்லை. இந்த வருசமே சண்டை போட்டு தான் அதை சேர்த்தேன் என்றார் உரிமையாளர்.
அந்த மாட்டினை ஜெயித்த ஆளைப் பற்றி கேட்டேன். அவன் பலமுறை இந்த மாட்டினை அடக்கியிருக்கிறான். தோற்றுபோய் திரும்பும் மாடுகள் சில நாட்களுக்கு ஒடுங்கியே இருக்கும். வீட்டுப் பெண்கள் அதை கடுமையாக திட்டுவார்கள். மாட்டிற்கு அது புரியவே செய்கிறது என்றார். மாட்டின் கண்களில் முந்திய நாளின் ரௌத்திரமில்லை. அது ஈரம் ததும்பியிருந்தது. அதை அடக்க முயன்று காயம்பட்டவன் மருத்துவமனையில் சேர்க்கபட்டிருந்தான். அது ஒரு பந்தம். மாடுகளுக்கும் இது விளையாட்டு என்று தெரியும் என்றாள் வீட்டுப்பெண்மணி.
சிங்கம்புணரி கோவிலில் கூட ஜல்லிகட்டு மாடுகள் உள்ளன. அந்த மாடுகளை ஜல்லிகட்டில் யாரும் பிடிக்க கூடாது என்பது ஜதீகம். அவை பந்தயத்தின் முதலாக அனுப்படுகின்றன.கோவில் அருகாமையிலே அம்மாடுகள் வளர்க்கபடுகின்றன.
ஜல்லிகட்டு பார்க்க ஒன்று போல இருந்தாலும் ஒவ்வொரு ஊருக்கும் அது ஒருவிதமாகவே நடக்கிறது. பொதுவிதிகள் ஒன்று போலவே இருக்கின்றன. வெற்றி தோல்வி குறித்து அரிதாகவே சர்ச்சைகள் வருகின்றன. சாதீயம் சார்ந்த கொந்தளிப்புகளும் இதன் பின்புலத்தில் இருக்கவே செய்கின்றன.
அலங்காநல்லூரில் பார்க்கும் ஜல்லிகட்டு ஒரு சர்க்கஸ் போல மாறியிருக்கிறது. ஆனால் கொடிக்குளம், சிறாவயல், பாலமேடு, கண்டுபட்டி, வேந்தன்பட்டி, அவனியாபுரம், மேட்டுபட்டி என்று மதுரை சிவகங்கை புதுக்கோட்டை பகுதிகளில் நடைபெறும் ஜல்லிகட்டுகள் வேறுவிதமானவை. ஜல்லிகட்டில் இரண்டுவிதமாக உள்ளது. ஒன்று வாடிவாசல் கொண்டது.அதில் மாடுகள் ஒன்றன்பின் ஒன்றாக வாடிவாசல் வழியாக திறந்துவிடப்படுகின்றன. மற்றது வெளிவிரட்டு எனப்படும் திறந்தவவெளியில் மாடுகள் அவிழ்த்துவிடப்படுவது. இந்தவகையில் மாடு எந்தப் பக்கம் இருந்து வரும். யாரைத் தூக்கும் என்று தெரியாது. அந்த இடம் ஒரு போர்களம் போலிருக்கும்.
நாங்கள் இப்படியான ஒரு வெளிவிரட்டினைப் படம்பிடிக்க முனைந்தோம். அதற்காக மூன்றுகேமிராகள் பயன்படுத்தபட்டது. அதில் ஒரு கேமிராவை கையாண்டவர் ராஜிவ் மேனனின் உதவியாளராக இருந்த ராஜசேகர். இன்று அவர் காக்க காக்க உள்ளிட்ட பல கௌதம் மேனன் படங்களில் ஒளிப்பதிவு செய்து திரைப்படத்துறையில் மிக முக்கிய ஒளிப்பதிவாளராக உயர்ந்து நிற்கிறார். அவர் ஒரு வேனின் மீது நின்றபடியே படமாக்கிக் கொண்டிருந்தார்.
இன்னொரு கேமிரா ஒரு மேடை மீதிருந்தது. அதை ரமணி படமாக்கிக் கொண்டிருந்தார். மூன்றாவது கேமிராவை கையில் வைத்து கொண்டு சசிகாந்த் மாடுகளின் நடுவில் ஒடிக் கொண்டிருந்தார். நாங்கள் ஒரு வேன்மீது நின்றபடியே எந்தப் பக்கம் எந்த மாடு வருகிறது என்று சொல்லிக் கொண்டிருந்தோம். எதிர்பாராமல் பாய்ந்து வந்த ஒரு முரட்டு மாடு ஒன்று ராஜசேகர் நின்றிருந்த வேன் மீது மோதியது. அவர் தூக்கி எறியப்படுகிறார் என்று நினைத்தோம். அப்போதும் கூட அவர் படப்பிடிப்பை நிறுத்தவேயில்லை. அவர் நிலைதடுமாறி தன்னை சுதாரித்து கொண்டுவிட்டார். ஆனால் ஒரு அற்புதமான காட்சி கேமிராவில் பதிவாகியிருந்தது.
மதுரையை சுற்றிலும் ஒரு மாத காலத்திற்கும் மேலாக படப்பிடிப்பு நடந்தது. அதை நேர்த்தியான ஒரு ஆவணப்படமாக எடிட் செய்து பின்னணி இசை சேர்த்து ஜல்லிகட்டு குறித்த வீரபாண்டிய கட்டபொம்மன் படக்காட்சியும் இணைத்து. எம்.ஜி.ஆர் படங்களில் காணப்படும் ஜல்லிகட்டு முரட்டுகாளையில் வரும் ஜல்லிகட்டு என்று சிறிய காட்சிகள் ஒன்றிணைக்கபட்டு ஒரு மணி நேர அளவில் உருவாக்கபட்டது. அந்த ஆவணப்படம் தேசிய அளவில் தொலைக்காட்சியில் பலமுறை ஒளிபரப்பபட்டு மிக பெரிய வரவேற்பையும் விருதுகளையும் பெற்றுத் தந்தது.
அப்போது ஜல்லிகட்டு குறித்து விரிவாக எழுதலாம் என்று நினைத்து நிறையக் குறிப்புகள், புகைப்படங்கள் யாவும் சேகரித்து வைத்திருந்தேன். பின்னாளில் வீடு மாறும்போது அவை காணாமல் போய்விட்டன. அந்த நாட்களும் மனதின் ஆழத்தில் போய் புதையுண்டுவிட்டிருந்தது.
ஜல்லிகட்டு பற்றி தமிழில் அருமையான ஒரு நாவல் வந்துள்ளது. அது சி.சு.செல்லப்பாவின் வாடிவாசல். 1950களில் செல்லப்பா நேரடியாக பல ஜல்லிகட்டுகளைப் பார்த்து தானே புகைப்படம் எடுத்திருக்கிறார். அவர் எவ்வளவு தேர்ந்த புகைப்படக்கலைஞர் என்பதற்கு அவர் எடுத்த ஜல்லிகட்டு புகைப்படங்களே சாட்சி. ஹெமிங்வே ஸ்பானிய காளைச் சண்டையைப் பற்றி எழுதிய குறுநாவலை தோற்காதவன் என்ற பெயரில் செல்லப்பா தனது எழுத்து இலக்கியஇதழில் வெளியிட்டிருக்கிறார்.
அது போல தனது ஜல்லிகட்டு அனுபவத்தைப் பின்புலமாகக் கொண்டு வாடிவாசலை எழுதியிருக்கிறார். உண்மையான காளைச்சண்டையைக் காண்பது போன்ற அற்புதமான எழுத்துமுறை கொண்டது. தற்போது அதன் புதிய பதிப்பை காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்டுள்ளது. சி.சு. செல்லப்பாத் தவிர வேறு நவீன எழுத்தாளர்கள் எவரும் ஜல்லிக்கட்டு பற்றி தனித்து எழுதியதாகத் தெரியவில்லை.
இன்றும் ஜல்லிகட்டு நடந்தக்கூடாதென்று நீதிமன்றத்தில் வழக்கு நடக்கிறது. வாதபிரதிவாதங்கள் நடைபெறுகின்றன. ஜீவகாருண்ய நிறுவனங்கள் போராடுகின்றன. ஆனால் இந்த விளையாட்டின் பின்உள்ள மனப்போக்கும், மாடுகளைச் சண்டைகளுக்குத் தயார் படுத்தும் விதமும் அதன் தொன்மையான நினைவுகளும் இது வெறும் வெறியூட்டும் விளையாட்டில்லை என்றே என்னை உணர வைத்துள்ளது.
அதே நேரம் வெளிநாட்டவருக்கான கண்காட்சிப் பொருள் போல ஜல்லிகட்டு உருமாற்றபட்டு ஸ்பான்சர்களின் மூலம் அது காட்சிசண்டையாக நடைபெறுவதையும் என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
ஸ்பெனியில் இன்றும் காளைச் சண்டைகள் நடக்கின்றன. குதிரை பந்தய ரேஸ் உலகெங்கும் நடந்தபடியே தானிருக்கிறது. நாய்களைப் பழக்கி சண்டையிடுவது அலாஸ்காவில் காணப்படுகிறது. இவை முறைப்படுத்தபட்டிருக்கின்றன. மிருகங்களின் ஆரோக்கியம் மற்றும் நலன் குறித்த அக்கறைகள் முறையாக மேற்கொள்ளவும் கண்காணிக்கவும் படுகின்றன. ஆனால் நம்மிடையே அதற்கான முயற்சிகள் குறைவாகவே உள்ளன. எல்லா வீரக்கலைகளும் போலவே தான் ஜல்லிகட்டும். அதில் மாடுகள் கொல்லப்படுவதில்லை.
மாடு நுரை தள்ளிவிட்டால் உடனே நிறுத்தும்படியாக அறிவிப்பு வந்துவிடுகிறது. அது போல அந்த மாடுகளைப் பிடிக்க முயற்சிக்கின்றவர்கள் பரிசுப்பணத்தின் காரணமாக போட்டியில் கலந்து கொள்வதில்லை. அது தரும் சாகச உணர்வையே பெரிதாக நினைக்கிறார்கள்.
ஜல்லிகட்டு என்ற விளையாட்டின் பின்னால் சொல்லித்தீராத கதைகள் புதைந்திருக்கின்றன. தன் இளம்பிராயத்தில் பிடித்த மாடு ஒன்றினைப் பற்றி பாலமேட்டில் ஒரு பெரியவர் சொல்லும் போது அவரது கண்களில் அந்த நாளின் வெளிச்சம் பீறிட்டது. அவர் தன் சட்டையை அவிழ்த்து தனது அடிவயிற்றை காட்டினார். அங்கே ஒரு விரல்நீள தழும்பு இருந்தது. மாடு கிழித்தது என்று சொல்லியபடியே. ரத்தம் ரொம்ப ஒழுகி எனக்கு கண்ணைக் கட்டிகிட்டு வந்துச்சி. ஆனாலும் நான் பிடியை விடவேயில்லை. கடைசியில் நான் தான் ஜெயிச்சேன் என்றார்.
அதற்கு பரிசாக என்ன கிடைத்தது என்று கேட்டேன். அவர் ஒரு ரூபா என்று பெருமையாக சொன்னார். ஒரு ரூபாய்க்காக உயிரோடு போராடியிருக்கிறீர்களே என்றேன். அப்பிடியில்லை தம்பி. நம்ம உடம்பு எம்புட்டுக் கெதியா இருக்குனு எப்படி தெரிஞ்சிகிடுறது. மாட்டை பிடிச்சி பார்த்தா நம்ம உடம்பு எப்படியிருக்குனு தானா தெரிஞ்சிகிடலாம். என்று சொல்லிச் சிரித்தார்.
அந்த நினைவுகளைத் தொடரும்படியாக சொன்னேன்.அவர் பெருமூச்சிட்டபடியே சொன்னார்
அந்த வருசம் மாடுபிடிச்ச ராமு ஆள் எப்படியிருப்பான் தெரியுமா. உலக்கை மாதிரி உறுதியான உடம்பு. மாட்டை பிடிச்சான்னா உடும்பு மாதிரி விடவே மாட்டான். அவனை பாத்தா மாடுகள் பயப்படும். எங்கே போனாலும் ஜெயம் தான். ரெண்டு பேரும் ஒண்ணா தான் சுத்துவோம்.
இப்போ கொஞ்ச நாளைக்கு முன்னாடி மதுரை பெரிய ஆஸ்பத்திரியில் ராமுவைப் பாத்தேன். பெத்தபிள்ளைகளே வேண்டாம்னு துரத்தி விட்டுட்டாங்களாம். குடல்புண்ணாகி சிகிட்சை பண்ணிகிட்டு இருந்தான். உடம்பு ஈர்க்குச்சி மாதிரி இருந்துச்சி. தலைமயிர் கொட்டி போய் சிரட்டை மாதிரி தலை துருத்திகிட்டு இருந்துச்சி. என் மனசு கேட்கலை. பக்கத்தில போயி என்னய்யா ராமு இப்படியிருக்கேனு கேட்டேன்.
அவனுக்கு என்னை அடையாளம் தெரியலை. அவன் வயிற்றில பதினெட்டு தையல் போட்டு இருக்கு. அதை காட்டி நாம ஒண்ணா மாடு பிடிச்சமே என்று சொன்னேன். அவன் பதிலே பேசவில்லை. பச்சைப்பிள்ளை போல பொலபொலனு அழ ஆரம்பிச்சிட்டான். எனக்கும் தாங்கமுடியவில்லை.
அன்னைக்கு பூரா அந்தக் காலத்தில நடந்த ஜல்லிக்கட்டு ஒவ்வொன்னா பேசிகிட்டு இருந்தோம். இப்போ அவன் செத்துப் போயிட்டான். ஆனா வருசம் வருசம் நானும் ஜல்லிகட்டு போய் பாக்குறேன். அப்படி ஒரு பய இன்னும் வரவேயில்லே. என்றார். அந்த நினைவுகள் வெறும் கடந்தகால சுவடுகள் மட்டுமில்லை. அது ஒரு தீராத வலி. மறக்கமுடியாத இழப்பு என்று உணர முடிந்தது.
சில தினங்களுக்கு முன்பு எதையோ தேடிக் கொண்டிருந்தபோது ஜல்லிகட்டு நிகழ்விற்காக அலைந்த நாட்களின் ஒரு பழைய புகைப்படம் கையில் கிடைத்தது. அதை வைத்து பார்த்தபடியே இருந்தேன். காலம் எவ்வளவு வேகமானது. எவ்வளவு கடந்து போயிருக்கிறது. இன்று அந்த புகைப்படத்தில் உள்ள நாங்கள் யாவரும் ஏதேதோ துறைகளில் இருக்கிறோம். அவரவர் அளவில் சாதித்திருக்கிறோம். நாங்கள் இப்போதும் சந்தித்துக் கொள்வதுண்டு. தொலைபேசியில் பேசிக் கொள்வதுண்டு. ஆனால் அன்றிருந்த நெருக்கம் இன்றில்லை. அந்த ஆவணப்பட நிகழ்வு ஒவ்வொரு மனதிலும் ஒரு பிம்பமாக பதிந்து போயிருக்க கூடும்.
இந்த புகைப்படத்தை பார்த்த போது ஜல்லிக்கட்டு பற்றி எழுதாமல் விட்டதை மறுபடி தொடர வேண்டும் என்று மனது ஏக்கம் கொள்ளத் துவங்கியது. கணிப்பொறியில் சேகரித்து வைத்திருந்த செல்லப்பாவின் ஜல்லிக்கட்டு புகைப்படங்கள் ஒன்றிரண்டை தேடி எடுத்து பார்த்து கொண்டிருந்தேன். எப்போதும் எழுத நினைப்பது தரும் வசீகரம் எழுதிய எந்த படைப்பிலும் இருப்பதேயில்லை.
காலத்தின் போக்கில் மனதில் உறங்கிகிடந்த ஜல்லிக்கட்டின் நினைவுகள் பீறிடுகின்றன. காளையின் மூச்சு சீறும் சப்தம் நினைவு அடுக்குகளில் கேட்க துவங்கியுள்ளது. இசை, நடனம் நாடகம், வீரவிளையாட்டுகள், நுண்கலைகள் என தமிழின் மரபுக்கலைகள் சார்ந்த நவீன சிறுகதைகள், கட்டுரைகள், நினைவலைகள் என யாவையும் ஏன் தொகுத்து ஒரே தொகுதியாக கொண்டுவரக்கூடாது என்றும் எண்ணம் உருவாகி உள்ளது.
ஒற்றைக்கண் கொண்ட அந்தக் காளையின் மனஇயல்பு இன்றைக்கும் வியப்பூட்டிக் கொண்டேதானிருக்கிறது. ஜல்லிகட்டின் பின்னால் இது போன்ற புதிர்மைகள் நிறையவே இருக்கின்றன. அதற்காகவே அதைப் பற்றி விரிவாக எழுத வேண்டியிருக்கிறது.
thanks to
http://sramakrishnan.com/view.asp?id=445&PS=1
No comments:
Post a Comment