ஸ்வஸ்திஸ்ரீ திருமகள் போல பெருநிலச் செல்வியுந் தனக்கேயுரிமை பூண்டமை மனக்கொளக் காந்தளூர்ச் சாலைக் களமறூத்தருளி வேங்கை நாடும் கங்கைபாடியும் நுளம்பபாடியும் தடிகை பாடியும் குடமலை நாடும் கொல்லமும் கலிங்கமும் எண்டிசை புகழ்தர ஈழ மண்டலமும் இரட்டபாடி ஏழரை இலக்கமும் திண்டிறல் வென்றி தண்டால் கொண்டதன் பொழில் வளர் ஊழியுள் எல்லா யாண்டிலும் தொழுதகை விளங்கும் யாண்டே செழிஞரை தேசுகொள் ஸ்ரீ்கோவிராஜராஜகேசரி பந்மரான ஸ்ரீராஜராஜ தேவர்
இதன் மூலம் இராஜராஜனின் போர்த்திறன் வெளிப்படுகிறது. காந்தளூர் என்னும் துறைமுகத்தில் சேரர்களின் (பாஸ்கர் ரவி வர்மன் திருவடி) கப்பல்களை அழித்ததாகக் குறிப்பிடும் இவ்வரிகளிலிருந்து, சோழ கப்பற்படை நன்கே இருந்தது எனக் கொள்ள்லாம். அதே போல ஸ்ரீலங்காவின் மீது 993(கி.பி)-ஆம் ஆண்டில் படையெடுத்து அதன் வடபுறத்தினைக் கைப்பற்றி அந்த இடத்திற்கு ‘மும்முடி சோழ மண்டலம்’ எனப் பெயரிட்டதும், இராஜராஜனின் கடற்படைத் திறனைக் காட்டுகிறது. தனது ஆட்சிக் காலத்திலேயே ஸ்ரீலங்கவை முழுவதுமாக வென்று, பின்னர் வெங்கி நாட்டையும் தனதாக்கிக் கொண்டு அதைச் சக்திவர்மனுக்கு ஆட்சி புரிய அளித்தான். கடற்படையில் சிறந்திருந்த போதும், இராஜராஜன், அப்படையை எந்நாட்டையும் அழிக்கப் பயன்படுத்தவில்லை.
சைலேந்திரர்களுடன் அவனது உறவு குறிப்பிடப்படவேண்டியது. ஏனெனில் சரித்திரரீதியாக நாம் அறிந்து கொள்வதெல்லாம் சைலேந்திரர்கள் குறிப்புகள் மூலமே! சுமத்ராவிலும் இன்றைய மலேசியாவிலுமிருந்து தான் நமக்கு அதிகமான சான்றுகள் கிடைக்கின்றன. அவற்றிலிருந்தே, அதாவது, அவை அங்கு கிடைப்பதிலிருந்தே, இராஜராஜனின் பெருமை அறியப்படலாம். அங்கு கிடைக்கும் பல சான்றுகளினின்றும் சைலேந்திர நாட்டு சூளாமணிவர்மன் அவனது மகனான விஜயோத்துங்கவர்மன் (1003-1005) ஆட்சியிலும் இராஜராஜனின் உறவு அந்நாட்டினுடன் மிக நன்றாகவே இருந்திருக்கிற தென்பதைத் தெரிந்து கொள்கிறோம். ராஜேந்திரன் காலத்தில் தான் கடற்படை ஆக்ரமிப்புக்குப் பயன் படுத்தப்பட்டது. இராஜராஜனின் கப்பல்கள் மாலத்தீவுக்குச் சென்று அங்கு 10,000 தீவுகளைக் கைப்பற்றியதாகவும் தெரிகிறது.
அதே போல சீன நாட்டிலிருந்தும் பல சான்றுகள் நமக்குக் கிடைத்துள்ளன.


முக்கியமாக, நாடு கடந்து அச்சமின்றி வெளிநாடுகளுக்குச் சென்று அங்கு நம் வணிகர்கள் தமது வணிகத்தை நிலைநிறுத்தினது மட்டுமன்றி, அரசு மாறினாலும் அதனால் அவர்களுக்கு ஒருவிதக் குறையுமின்றி வணிகம் நடத்துவதற்கு உண்டான உபாயங்களையும் செய்து கொடுத்த மன்னன் இராஜராஜன் என்று கூறலாம்!
thanks to http://www.tamilhindu.com/2010/08/rajaraja-cholans-power-in-sea-route-power/
No comments:
Post a Comment