செல்லியம்மன் திருவிழா --- ஒக்கநாடு

0 c
THANKS TO  : http://www.sekalpana.com/search/label/%E0%AE%92%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81

அசுர நாகரிக வளர்ச்சியின் ஊடே,கிராமங்களும் தங்கள் நிறத்தினை மாற்றிக் கொள்ள தொடங்கினாலும் , சில பழமையான விழாக்களால் கிராமங்கள் இன்னும் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டுதான் உள்ளது.நாட்டுப்புற வழிபாடுகள் என்பது தொன்மை வாய்ந்தது. இவ்வழிபாடுக்ள மூலமாக பழமைகள் போற்றப்படுகின்றது.காக்கப்படுகின்றது என்றும் கூறலாம்.

வரலாற்றுச் சிறப்பைத் தன்னகத்தே கொண்டு , உலகின் அச்சானியாகத் திகழக் கூடிய உழவுத் தொழிலை மையமாகக் கொண்டு ,கலைகளின் பிறப்பிடமாய் திகழக் கூடிய தஞ்சை தரணினியின் ஒரு சிறு பகுதியாக உள்ளதுதான் ஒக்கநாடு கீழையூர் என்னும் கிராமம். இங்கு உழவுத் தொழில் தான் முக்கிய தொழிலாகவுள்ளது.ஆண்டு தோறும் உழைத்துக் களைத்த மக்களுக்கு , அவர்கள் கொண்டாடும் விழாக்களே ஒரு மாற்றாகவுள்ளது.இந்த கிராமத்தில் நாகரிக வளர்ச்சியின் தாக்கம் தலைக்காட்டத் தொடங்கியிருந்தாலும்,இன்னும் பழமை மாறாமல் விழாக்களை நடத்திக் கொண்டுள்ளனர்.

கோடைக்காலத்தில் (மே) மாதத்தில் விழாக்கள்நடைபெறுவது வழக்கம்.இந்த ஆண்டும் கடந்த வாரம் காப்புக் கட்டுடன் இங்கு விழாத்தொடங்கியது.இன்னும் இங்கு விழாவினைப் பறையறைந்து அறிவிக்கும் முறைவுள்ளது.விழா அறிவிக்கப்பட்டவுடன் ஒவ்வொரு வீடுக்ளிலும் நவதானியங்களைக் கூட்டி,ஆட்டின் புழுக்கையைக் கொண்டு வந்து ,இடித்து,பொடியாக்கி, அதனை பானையை உடைத்து அதன் கழுத்துப் பகுதியில், இல்லை இப்பொழுது வெங்கலத்தில் ,முளைப்பாளி இடுவதற்கென வந்துள்ள பாத்திரத்திலோ இட்டு முளைப்பாளியை வளர்ப்பார்கள். தனித்தனியாக வீடுகளில் வளர்க்காமல் நான்கு ,ஐந்து பேர்கள் இணைந்து ஒரு வீட்டில் போடுவார்கள்.முளைப்பாளி இடும் வீட்டினைத் தினமும் மிகத் தூய்மையாகப் பேணுவார்கள்.முளைப்பாளி நன்றாக வளர வேண்டும் என்பது அனைவருடைய வேண்டுதலாக இருக்கும். காரணம் யாருடைய முளைப்பாளியாவது சரியாக வளரவில்லை என்றால்,அந்த ஆண்டு ,முளைப்பாளி சரியாக வளராதவர்களுடைய வீட்டில் ஏதேனும் கெட்டது நடக்கும் என்பது நம்பிக்கை.அது உண்மையும் கூட,எங்கள் வீட்டில் 1999 இல் திருவிழா நடந்தபோது போட்ட முளைப்பாளி அழுகிவிட்டது, ஏதோ நடக்க போகிறது என்றார்கள்,அதுபோலவே என் தந்தை 2000 இல் இயற்கை எய்திவிட்டார். அதிலிருந்து அதில் கொஞ்சம் நம்பிக்கை உண்டு.


விழா அறிவிக்கப் பட்ட ஏழாம் நாள் கழித்து மூன்று நாள்கள் விழா நடைபெறும் .முதலா நாள் கொழுக்கட்டை திருவிழா.அன்று வெளியூரில் இருக்க கூடிய சொந்த பந்தங்களுக்கு கொழிக்கட்டை சுட்டுக் கொண்டு கொடுத்து விட்டு விழாவிற்கு அழைப்பது வழக்கம். காலையில் இருந்து மாலை வரை ஒரே கொழுக்கட்டை மயமாக இருக்கும். மாலையில் முளைப்பாளி போட்ட வீட்டிலிருந்து அவரவர் வீடுகளுக்கு எடுத்து வந்து, அதற்கு சாமிகும்பிடுவார்கள்.


இரண்டாம் நாள் முமையாக மீன்.எங்கு பார்த்தாலும் மீன் விற்பனை, எல்லார் வீட்டிலும் மீன் குழம்பு மீன் வறுவலாக இருக்கும்.மாலையில் முளைப்பாளியினை அலங்கரித்துக்கொண்டு, அனைவரும் ஒரே இடத்தில் குழுமி,திரௌபதி அம்மன் கோயிலுக்கு அருகே உள்ள குளத்தில் கொட்டி விட்டு வருவார்கள். அன்று இரவு முமுதும் 21 காய்கறிகள் ,மீன் குழம்பு கருவாட்டு குழம்பு,மீன் கருவாடு வறுவல் சமையல் நடக்கும்.
மூன்றாம் நாள் தேர் திருவிழா.தேரில் வாரையினைக் கட்டி முன்பு தூக்கிச் செல்வது வழக்கம்,அதனைப் பார்க்கும் போது நன்றாக இருக்கும். ஆனால் இப்போது உள்ளவர்களால் தூக்கமுடியாமல் ,சக்கரத்தின் மீது தேரினை வைத்து இழுத்துச் செல்லுகின்றார்கள். அப்போது உடல் வலிமை மிக்கவர்களாக இருந்தார்கள். இன்று இளைஞர்களிடம் உடல் வலிமை எப்படி இருக்கிறது என்பதற்கு இதுவே சாட்சியாகவுள்ளது.


செல்லியம்மன் திருவிழா எப்படி நடக்கத் தொடங்கியது என்பதற்கு ஒரு கதை சொல்கிறார்கள். நான் அந்த ஊரில் பிறந்து வளர்ந்தேன் என்றுதான் பெயர் . வீட்டை விட்டு எதற்கும் வெளியில் செல்வது கிடையாது.தேர்வீட்டு முன்பு வரும்போது வணங்குவதுடன் சரி.இப்போது அதனைப் பற்றி அறியவேண்டும் என்ற ஆவலில் கோயிலுக்குச் சென்றேன்.அங்கு உள்ள பெரியவர்கள் இக் கதையைக் கூறினார்கள். அந்த கோயில் ஊரின் எல்லையில் வயலுக்குள் இருக்கும்.


முன்பு ஒக்கநாடு மேலையூர்,ஒக்கநாடு கீழையூர் என்ற பிரிவு இல்லாமல் இருந்து என்றும், இரண்டு ஊராக பிரிந்தவுடன் இரண்டு ஊருக்கும் உள்ள பொருள் நிலம் அனைத்தையும் பங்கிட்டுக் கொள்ளும் போது,ஒக்கநாடு கீழையூரில் வணங்குவதற்கு உரிய தெய்வத்தைப் பிரித்துக் கொடுத்து இருக்கின்றார்கள்.பிரித்து கொடுத்த தெய்வத்தை அங்கிருந்து ,அந்த ஊரில் பிறந்த பெண்தான் எடுத்து வரவேண்டும் என்ற வழக்கம் இருந்துள்ளது,அப்படி அந்த பெண் எடுத்து வரும்போது,இப்பொழுது கோயில் உள்ள அந்த இடத்தில் இருந்து,அம்மன் வரமறுத்ததாம், அதனால் அந்த இடத்திலேயே கோயில் கட்டவேண்டிய நிலை ஏற்பட்டது என்று கூறப்படுகின்றது.



செல்லியம்மன் உள்ள அந்த கோயில்லுக்கு இரவு சமைத்த உணவினை ஊரில் உள்ள அனைவரும் கொண்டு வந்து அங்கு வைத்துக் கும்பிடுவார்கள்,வரமுடியாத சிலர் வீட்டில் வைத்தும் கும்பிடுவதும் உண்டு.இதனை சுள்ளுஞ்சோறு படைத்தல் என்று கூறுவார்கள்.
அது முடிந்தவுடன் மதுகாட்டல் என்ற ஒரு நிகழ்ச்சி நடைபெறுகிறது.மதுகாட்டல் என்றால் ,அந்த ஊரில் உள்ள தலித் இன மக்கள் திருவிழா அறிவிக்கப்பட்ட நாள் முதல் நவதானியங்களை ஒன்று சேர்த்து ,ஒரு புதுப் பானையில் ஊர வைப்பார்களாம் ,அது ஒரு வாரத்திற்கு நன்கு ஊறுவதால் ,அதிலிருந்து ஒருவகையான மது உற்பத்தி ஆகுமாம்.அதனை அந்த ஆண்டு தேர்ந்தெட்டுக்கப் பட்ட குடும்பம் தான் செய்யும்.திருவிழா அன்று அந்த மதுவினை வடித்து இரண்டு புதுப் பானைகளில் ,அந்த இனத்தை சார்ந்த பெண்கள் எடுத்து வருவார்கள்.அவர்கள் எப்படி எடுத்து வருவார்கள் என்றால் இடுப்புக்கு மேல் எவ்வித துணியும் அணியாமல் பூவினை அணிந்து மட்டும்கொண்டும், சிலர் வேண்டுதல் காரணமாக பெண்கள் தங்களுடைய தாலிகளை எல்லாம் கழற்றி இவர்கள் கழுத்தில் அணிந்து கொண்டும் வருவார்கள் . தாலியினை கழற்றி அவர்கள் கழுத்தில் அணிவிப்பதால்அம்மனிடம் வேண்டிய வேண்டுதல் பலிக்கும் என்ற நம்பிக்கை.


இரு பெண்களும் மது உள்ள அந்த கலசத்தை தாரை,தப்பட்டைகள் அதிர எடுத்து வருகிறார்கள்.அவர்களுடன் புதுப்பானையில் கரண்டிபடாமல் சமைத்த உணவு,காய்கறிகள், ஆட்டுக்கறி போன்றவற்றையும் எடுத்து வருகின்றார்கள். எடுத்து வந்து அந்த கோயிலை ஒருமுறை வலம் வந்த பிறகு, அந்த பெண்களை தலையில் இருந்து அந்த கலசம் இறக்கப்பட்டு,அம்மனுக்குப் படையல் இடப்படுகின்றது. அம்மனை அவ்வூர்கார்ர்கள் தூக்கிக் கொண்டு நிற்க,இவர்கள் படையல் இடுகின்றார்கள்.படையல் இடும் போது வாயினைத் துணியைக் கொண்டு கட்டிக்கொண்டும், உணவுகளை கையினாலேயே எடுத்து வைக்கின்றார்கள்.


சாமி கும்பிட்ட பிறகு,தாளம் சொல்லுதல் என்ற ஒரு நிகழ்ச்சி உள்ளது, அவர்கள் ஒவ்வொரு கரை என்று கூறுகிறார்கள் அந்த ஒவ்வொரு கரைக்கும் ஒருவராக வரிசையாக நின்று கொண்டு , தப்போசைக்கு ஏற்ப ,அம்மனின் பெருமையைப் பாட்டாக பாடுகின்றார்கள். இந்த பாட்டில் இதனைப் பற்றிய நிகழ்ச்சி காஞ்சிபுத்திலும் ,திருவாரூரிலும் இருப்பதாகக் கூறுகின்றார்கள். எனக்கு சரியாக புரியவில்லை ஆராயப்படவேண்டிய ஒன்று.
தாளம் சொல்லுதல் முடிந்தவுடன்,அங்கு படைக்கப்பட்ட மதுவினை அவர்கள் அனைவரும் குடிக்கின்றார்கள்,அது அந்த இனத்தைச் சார்ந்தவர்கள் மட்டுமே குடிக்க வேண்டுமாம்,பெண்களும் அதனைப் பருகின்றார்கள்.


இதன் பிறகு அம்மன் தேரில் ஏற்றபட்டடு,ஒவ்வொரு தெருவாக கொண்டு செல்வார்கள்.நல்ல பெரிய தேராக இருக்கும். இங்கு என்ன சிறப்பு என்றால் புதிதாக வெட்டி மரத்தில் இருந்த உடனே இந்த தேர் செய்யப்படுவது.நல்ல உயரமாக இருக்கும். தேரில் அம்மன் ஏற்றப்பட்டு தெருவுக்குள் நுழையும் போது,பல ஆடுகள் பலியிடப்படும்.முதலில் எங்கள் தெருவுக்குத்தான் வரும். எங்கள் தெருவுக்கு மட்டும் ஒரு பழக்கம் தேர் வந்து சென்ற பிறகுதான் சாப்பிட வேண்டும் என்பது. தேர்வருவதற்கு கால தாமதம் ஏற்பட்டாலும் காத்திருந்துதான் சாப்பிடவேண்டும். ஒரு முறை தேர் எங்கள் தெருவின் பாதியிலேயே நின்று விட்டது அப்போது சாப்பிடாமலேயே இருந்தோம் தேர் சென்ற பிறகு மாலைதான் சாப்பிட்டோம்.






தேரில் ஏற்றப்படும் அம்மன்


கோயிலில் உள்ள அம்மன்


படையல்





மதுக்குடம் ஏந்திய பெண்கள்


21 வகை காய்கறிகள்

மாடு

0 c
THANKS TO 
http://tamilnaducattle.blogspot.com/2011/01/tamizhakattin.html
சோழதேசம் - மொட்டை மாடு (உம்பளச்சேரி) - இவை கொம்புகள் சுடப்பட்டும், கால் காய்க்கப்பட்டும் காணப்படும் - சேற்றுழவுக்கு சிறந்தவை - தஞ்சை, நாகப்பட்டினம், திருவாரூர், புதுக்கோட்டை காவேரி பாசனப்பகுதியில் பெருமளவு உள்ளன. சோழிய வெள்ளாள பிள்ளைமார், சோழிய பிராமணர்கள், தஞ்சைக்கள்ளர் ஆகியோர் இவ்வினத்தைப் பேணுகின்றனர்.

             உம்பளச்சேரி பொலிகாளை















             



            உம்பளச்சேரி பசுக்கள்

8. பாண்டிதேசம்   - (இருச்சாளி) - சிவகங்கை மாவட்டத்திலுள்ள காட்டுப்பகுதியில் காணப்படுகிறது. இப்பொழுது மிக மிக குறுகி அருகிவிட்டது. 

9. பாண்டிதேசம் - சல்லிக்கட்டு (புலிக்குளம்) - ஒருகாலத்தில் நிலக்கோட்டை, நத்தம், மதுரை, தேனி, பெரியகுளம், சிவகங்கை, ராமநாடு ஆகிய பகுதிகளில் பெருமளவு இருந்தது. இப்பொழுது தேனி பள்ளத்தாக்கில் மட்டுமே பெருமளவு உள்ளது. பல்வேறு இனங்கள் வைத்திருப்ப்பினும், கள்ளர், மறவர், அகம்படியார் இனத்தவரே பிரதானமாக விரும்பி வளர்க்கின்றனர். முக்குலத்தோரோடு பிண்ணிப்பிணைந்த இனம்.

  
                  புலிக்குளம்  காளைகள்












                 
              புலிக்குளம் கன்றுகள்

பொய்சொல்லாதேவன்

0 c
thanks to http://kambanadippodi.blogspot.com/2009/03/blog-post_3643.html

செட்டிநாடுப்பகுதியைச் சேர்ந்த இரு நிலப்பகுதிகளை கானாடு அல்லது கானநாடு என்றும் கோனாடு என்றும் அழைப்பார்கள். கானாடுகாத்தான் என்ற ஊர்கூட இருக்கிறது. கானாட்டின் வடக்கில் இருப்பது கோனாடு. கானாடு, கோனாடு ஆகிய இருநாட்டிலும் வாழ்ந்த இருபத்துநான்கு கோட்டத்து வேளாளர்கள்தாம், வேளாளரைச் சிறப்பித்து 'ஏர் எழுபது' என்னும் நூலைக் கம்பரை இயற்றச்செய்து, அரங்கேற்றி, பரிசில்களும் வழங்கினர். பொன்னமராவதி என்னும் கோனாட்டைச் சேர்ந்த ஊரின் தலைவராகிய பொய்சொல்லாதேவன் என்னும் கள்ளர் மரபினரின் தலைவரிடம் இதுகுறித்து ஒரு சாசனம் இருந்தது. புதுக்கோட்டை அரசினரிடம் அந்த சாசனம் சேர்ப்பிக்கப்பட்டது. கம்பர் தன் இறுதிக்காகாலத்தில் செட்டிநாட்டில்தான் இருந்தார் என்று நம்பப்படுகிறது. கானாட்டின் முக்கிய ஊர்களில் ஒன்று நாட்டரசன்கோட்டை. அங்கு 'கண்ணுடையநாயகியம்மன்' கோயில் என்ற அம்பிகை கோயில் இருக்கிறது. அந்த ஊரையும் கம்பனையும் சம்பந்தப்படுத்துவார்கள். கம்பன் அடங்கிய இடம் என்று அதனைச் சொல்வார்கள். அங்கு கம்பன் அடங்கிய இடமாகக் குறிக்கப்படும் நடுகல்லுடன் கம்பன் செய், கம்பன் குளம், கம்பன் ஊருண்ணி என்ற பெயர்களும் வழங்குகின்றன. 1775இல் முத்துநாயகப்புலவர் என்பவர் 'கண்ணுடையநாயகியம்மன் பள்ளு' என்ற சிறு பிரபந்தத்தைப்பாடியுள்ளார்.. அதில் ஓரிடத்தில், 'வாசமான தென்பாண்டி நன்னாடு மதுரை நாட்டில் வளருமிந்நாடு காசினிக்குள் கதிர்க்கின்ற நாடு முன்கம்பர் வந்து துதிக்கின்றநாடு. பூசுரர்க் கன்னதானம் செய்நாடு புலவர் மேல்அபிமானஞ் செய்நாடு ராசலட்சுமி கண்ணுடை யாள்அருள் நல்கு நாட்டரசன் கோட்டை நாடே.' அந்தத்தொடர்பால் கம்பன் விழா சமயத்தில் அங்கும் ஒரு விழா நடக்கும். கம்பன் விழாவை முதன்முதலில் தோற்றுவித்தவர் 'காரைக்குடி கம்பன்' என்று மக்களால் அழைக்கப்பட்டு வந்த 'கம்பனடிப்பொடி' சா.கணேசன் அவர்கள். வரலாற்றாராய்ச்சிப் பேரறிஞர்; மிகச்சிறந்த தமிழறிஞர். தேசத்தியாகி. பாரதம் சுதந்திரம் அடையும்வரை சட்டையே போடுவதில்லை என்ற விரதத்தை மேற்கொண்டவர். பாரதவிடுதலைக்குப் பிறகும்கூட சட்டை போடாமலேயே இருந்தவர். தனதூராகிய காரைக்குடியில் கம்பன் கழகத்தைத் தோற்றுவித்தவர். தன்னுடைய பேரனுக்கு 'கம்பன்' என்று பெயரிட்டு வாய்நிறைய அழைத்து இன்பம் கண்டவர். அவர்தான் காரைக்குடியில் தொடர்ந்து அவ்விழா நடைபெறும் வண்ணம் ஏற்படுத்தியவர். பக்தி இலக்கியம் என்ற தகுதியை மட்டுமே பெற்றிருந்த கம்பராமாயணத்தை ஒரு பேரிலக்கியமாகப் புகழ் பெறச்செய்த பெருமையில் சா.கணேசனுக்குப் பெரும்பங்கு உண்டு. பல இடங்களில் கம்பன் கழகங்களையும் நிறுவக்காரணமாக இருந்தவர். முதன்முதலில் 1939ஆம் ஆண்டில் அவர் காரைக்குடியில் கம்பன் கழகத்தைத் தோற்றுவித்தார். கி.பி.886ஆம் ஆண்டு பங்குனி மாதம், நான்காம் நாள், புதன்கிழமை, ஹஸ்த நட்சத்திர நாளன்று கம்பராமாயணம் அரங்கேற்றப்பட்டதாக சா.கணேசன் தம் ஆராய்ச்சியால் நிறுவியுள்ளார். ஆகவே ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாதத்தில் மகம், பூரம், உத்தரம் ஆகிய மூன்று நாட்களில் காரைக்குடியிலும் ஹஸ்தநட்சத்திரன்று நாடரசன்கோட்டையிலுள்ள 'கம்பனுடைய பள்ளிப்படை' என்னும் இடத்திலும் கம்பன் திருவிழா கொண்டாடப்படுகிறது. 1952ஆம் ஆண்டில் கம்பன் விழாவை முதன்முதலாகக் கொண்டாடத்தொடங்கினர். இவ்வழக்கத்தை ஏற்படுத்தியவர் சா.கணேசன்தான்.

உறந்தை - உறையூர்---கள்ளர் இனத்தில் உறந்தைராயர்

0 c

சங்க இலக்கிய ஊர்ப்பெயர்கள் ஆய்வு (சிறப்பாய்வு - உறையூர்)

thanks to http://www.sekalpana.com/2010/06/blog-post.html
தமிழக ஊர்ப்பெயர் ஆய்வுகள் ,

1. ஊர்ப்பெயர் புனைவுகளை ஆதரித்துப் பொருள் கூறுதல்.
2. ஊர்ப்பெயர் புனைவுகளைக் கட்டுடைத்து அறிவார்ந்த நிலையில் விவாதித்தல்.

என இரண்டு நிலைகளில் நிகழ்த்தப்பட்டுள்ளன. இந்நிகழ்வுகளுக்கு அடிப்படையாக 18 ஆம் நூற்றாண்டில் கோட் பிரைடுவில் ஹெல்ம் லெய்ப்னிஷ் என்பவர் இடப்பெயராய்வை ஒரு அறிவியல் துறையாகத் தோற்றுவித்தார். இத்துறை வரலாறு, மொழியியல் துறைகளில் அசைவுகளை ஏற்படுத்தியது. அதன் காரணமாக இடப்பெயராய்வு உலகளவில் கவனப்படுத்தப்பட்டு, மேற்கண்ட இரண்டு நிலைகளில் உலகளவிலும் இந்தியாவிலும் குறிப்பாக தமிழகத்திலும் இடப்பெயர் தொடர்பான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன .
வள்ளலார்(1828-1874) ஊர்ப்பெயராய்வில் விருப்பம் காட்டினார் என்றாலும் பெரிதாக ஈடுபடவில்லை. 1946 இல் வெளியான ரா. பி. சேதுப்பிள்ளையின் ஊரும் பேரும் என்னும் நூல் படிப்பதற்குச் சுவையாக இருப்பினும் ஆய்வு தொய்வுடையதாக அமைந்துள்ளது. (2008:206). திரிசிரபுரம் மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம்பிள்ளை எழுதிய தலபுராணங்களிலும் ஊர்ப்பெயர் பற்றிய காரணங்கள் கூறப்பட்டுள்ளன. எனினும் அக்காரணங்கள் புராண புனைவுகளின் அடிப்படையிலேயே அமைந்துள்ளன. இது போன்ற செயல்பாடுகளில் ஊர்ப்பெயர்களில் காணப்படும் புனைவுகளை ஆதரித்து அதற்கு ஏற்றார் போல் விளக்கம் கூறிச்செல்லும் போக்கே காணப்பட்டன.
மொழியியலின் வருகையால் ஊர்ப்பெயர் ஆய்வுகள் அறிவார்ந்த தளத்தில் முன்னெடுக்கப்பட்டன, 1965 இல் கேரளப் பல்கலைக்கழகத்தில் எம்.லிட் பட்டத்திற்கு ஞானமுத்துவும் டாக்டர் பட்டத்திற்குக் கி.நாச்சிமுத்துவும், 1973 இல் திருவேங்கடம் பல்கலைக்கழகத்தில் டாக்டர் பட்டத்திற்கு ஆர்.விஸ்வநாத ரெட்டியும் இத்தளத்தில் இயங்கி ஊர்ப்பெயராய்வில் புதுத் தடத்தினை உருவாக்கினர்.


1972 இல் திருப்பதியில் அனைத்திந்திய திராவிட மொழியியல் கழகம் தன்னுடைய இரண்டாவது மாநாட்டை நடத்தியபொழுது திராவிட இடப்பெயராய்வுக் கழகத்தைத் தோற்றுவித்தது.


1976 இல் வால்டேர் நகரில் திராவிட மொழியியல் கழகம் நடத்திய கிடுகு இராம மூர்த்தி நினைவு இடப்பெயராய்வுச் சொற்பொழிவு முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்பட்டது. இதன் விளைவாக சமூக பண்பாட்டு மொழி அசைவுகள் ஊர்ப்பெயரில் ஊடாடிக்கிடக்கின்றன என்பதையும், தொல் பொருளாய்வில் காணப்படாததும், வரலாற்றுச் சான்றுகளில் திரிபடைந்தும் அல்லது புறக்கணிக்கப்பட்டுக் காணப்படுவதுமான மொழியியல் செய்திகளை இடப்பெயர்கள் முழுமையாகத் தருகின்றன(1983:51) என்பதையும் உணர்ந்து 1979 இல் இந்திய இடப்பெயர் கழகம் மைசூரிலுள்ள குவேம்பு வித்திதக் டிரஸ்டின் ஆதரவுடன் நிறுவி,பல கருத்தரங்குகளை நடத்தியது. அதோடு Studies in Indian Places Names என்ற பெயரில் ஆய்விதழையும் தொடர்ந்து நடத்தி வருகின்றது.


கல்வெட்டுகளும், செப்பேடுகளும், நாணயங்களும், மட்பாண்டங்களும் முதுமக்கள் தாழிகளும், தொல்லியல் வரலாற்றினை அறியப் பெரிதும் உதவி செய்கின்றன. அதுபோலவே சங்க இலக்கியங்களும் தொன்மையான ஊர்ப்பெயர்கள் ஆய்வுக்கு உறுதுணை செய்கின்றன என்பதை உணர்ந்த உலகத்தமிழாராய்சி நிறுவனமும் ஊர்ப்பெயர்த்தொடர்பான ஆய்வுகளில் ஈடுபட்டு 1983 இல் கல்வெட்டுகளில் ஊர்ப்பெயர்கள் என்னும் நூலை முதலில் கொண்டு வந்தது. அதனைத் தொடர்ந்து சமகால ஊர்ப்பெயர்களையும், இலக்கியங்களில் காணப்படுகின்ற ஊர்ப்பெயர்களையும் தொகுத்து ஆய்வு மேற்கொண்டுள்ளது.
பாட்டும் தொகையுமாகிய சங்க இலக்கியத்தின் மீதான வாசிப்பும், ஆய்வும் பல்வேறு நிலையில் நிகழ்த்தப்பட்டுள்ளன. சங்க இலக்கிய ஊர்ப்பெயர்களைத் தொகுத்து, ஆர்.ஆளவந்தார் என்பவர் ஆய்வுகளை மேற்கொண்டார். எனினும் தொடர்ந்து ஆய்வு நிகழ்த்துவதற்குரிய களமாகவே அத்துறை அமைந்துள்ளது. சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ள ஊர்ப்பெயர்களை முழுமையாகத் தொகுத்து நிலவரைவுக்கு உட்படுத்தும் போது, சங்க காலம் பற்றிய வரலாற்றுத் தெளிவும், பிற்காலங்களில் குறிப்பாக சமய நிறுவனங்களின் பின்னணியாலும், காலனிய ஆதிக்கத்தின் விளைவாலும் ஊர்ப்பெயர்கள் சிதைந்தும், திரிந்தும், மருவியும் இருப்பதை இனங்காண முடிகிறது. ஊர்ப்பெயர் ஆய்வின் முக்கியத்துவத்தைப் பற்றி குறிப்பிடும் ஆர். ஆளவந்தார் ,


ஊர்ப்பெயராய்வுகள் பழந்தமிழரின் இருப்பைப் பறைசாற்றுவதோடு, ஊர்ப்பெயர்களை வைப்பதில் நம்முன்னோர் ஓர் ஒழுங்குமுறையைப் பின்பற்றி இருப்பதையும் அறியலாம். எங்கே வரலாறு மௌனம் சாதிக்கத் தொடங்குகின்றதோ அங்கே இடப்பெயர்களும் ஊர்ப்பெயர்களும் தம் வாய்திறந்து பேசத்தொடங்கும். வெவ்வேறு வகையான உருவங்களைக் கொண்ட ஊர்ப்பெயர்களில் மனித இனத்தின் அனுபவம் பொதிந்துள்ளது. எனவே இடப்பெயர்கள் எல்லாம் மனிதனின் மொழிமரபையும் பண்பாட்டையும் வளர்க்கின்றன. இதனடிப்படையில் ஊர்களை இனங்காணுவது மனித இனத்தின் முக்கிய நடத்தையை உருவாக்குகின்றது. (1984:10)
என்கிறார்.

எனவே ,‘எல்லாச் சொல்லும் பொருள்குறித் தனவே’(தொல்.சொல்.640) என்னும் தொல்காப்பியரின் கூற்றின்படி, ஊர்ப்பெயர்களும் ஏதோ ஒரு பொருளினைப் பொதிந்துக்கொண்டு உள்ளன. அப்பொருள் இயற்கை சார்ந்தோ, மக்களின் வாழ்வியல் நிகழ்வுகள் கலந்தோ இருப்பதனால், ஊர்ப்பெயரினை அறிந்துகொள்ளுதல் இன்றைய தேவையாகவுள்ளது.


சங்க இலக்கியப் பாடல்களில் மட்டுமல்லாமல், அப்பாடல்களைப் பாடிய புலவர்களும் தாங்கள் சார்ந்த ஊரினை அடையாளப்படுத்தும் நோக்கத்துடன் தங்களுடைய பெயருடன் ஊரின் பெயரினையும் இணைத்துள்ளனர். சங்க இலக்கியத்தில் 200க்கும் மேற்பட்ட புலவர்களின் பெயர்கள் ஊர்ப்பெயர்களின் அடையுடனே காணப்படுகின்றன.
சங்க இலக்கியங்களில் இயற்கையைச் சார்ந்தும் (குன்றம், கொல்லி, முதிர மலை), நீர்நிலையமைப்பாலும் (அலைவாய், கண்டவாயில், துறையூர்) தாவரத்தின் பெயராலும் (அரையம் ,மருவூர், மல்லி) விலங்கின் பெயராலும் (எருமைவெளி, செங்கண்மா) தெய்வத்தின் பெயராலும் (இருந்தையூர்) அரசர்களின் தொடர்பாலும் (கிள்ளி மங்கலம், கோநாடு), நிலப்பிரிவின் தன்மையாலும் (நெய்தலங்கானம், பட்டினப்பாக்கம், வயலூர்), தொழிற் பெயரினாலும் (செயலூர், கொற்கை) பொருட்பெயராலும் (அள்ளூர், ஊணூர், கள்ளூர்), திசைப்பெயராலும் (குடந்தை, குடவாயில், இடைக்காடு), போர்முனைத் தொடர்பாலும் (அட்டவாயில், முனையூர்), இருக்கும் இடத்தின் தன்மையாலும் (ஈரந்தை, உறந்தை, ஏரகம்) பிற நாட்டுப் பெயர்களும் (அடவிநாடு, அங்க நாடு, துளுநாடு, புன்றாளக நாடு) என 300 - க்கும் மேற்பட்ட ஊர்ப்பெயர்கள் இடம்பெற்றுள்ளன.


சங்க காலத்தில் நகரங்களாக விளங்கியவைகளுள் சில, பிற்காலத்தில் தங்கள் அடையாளங்களை இழந்து , வளர்ச்சியடைந்த நகரத்தின் அங்கமாக மாறிவிடுதும் உண்டு. பாண்டிய மன்னர்கள் ஆண்ட மதுரை இன்றும் தன் அடையாளத்தை இழக்காமல், இயங்கிக் கொண்டு இருக்கின்றது. அதே நேரத்தில் சேரர் ஆண்ட வஞ்சி பற்றி முடிவு செய்யமுடியாத சூழல். சோழ மன்னர்களின் தலை நகரமாக விளங்கிய உறந்தை தன் அடையாளத்தை இழந்து திருச்சிராப்பள்ளியின் ஒரு பகுதியாக இன்று மாறிவிட்டது. இவ்வுரந்தை நகரமே தற்பொழுது உறையூர் என அழைக்கப்படுகிறது. இவ் உறந்தை ஒவ்வொரு காலகட்டத்திலும் எவ்வாறு மாற்றத்திற்கு உட்பட்டு வந்துள்ளது என்பதைச் சமூக வரலாற்றுப் பின்புலத்தோடு ஆராயமுடியும்.


உறந்தை - உறையூர்


உறந்தை சங்க காலச் சோழர்களின் தலைநகரமாக விளங்கியது . இது திருச்சிராப்பள்ளிக்கு மேற்கே 1.6 கி.மீ தொலைவில் காவிரி ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. இது உறைந்தை, உறையூர், கோழி, கோழியூர், வாரணம், உரபுரம் முதலான பெயர்களாலும் வழங்கப்பட்டது.
உறப்பு என்ற சொல் செறிவு என்னும் பொருள்படுவதைக் காணும்போது, மக்கள் நெருங்கி வாழ்ந்த இடமாக இருந்ததால் உறந்தை எனப் பெயர் பெற்றிருக்கலாம். உறைதல் என்றால் தங்குதல் எனப் பொருள் கொண்டு மக்கள் வாழ்வதற்குரிய நிலமைப்பும், வளங்களும் இருந்த ஊர் ஆகையால் உறையூர் எனப் பெயர் வழங்கியிருக்கலாம். வளம்கெழு சோழர் உறந்தைப் பெருந்துறை(குறுந்.11) மக்கள் வாழ்வதற்குரிய வளமை நிறைந்து காணப்பட்டதால் ஊர் எனப்படுவது உறையூர் எனவும் பாராட்டப்பட்டுள்ளது. சங்க பாடல்களில் உறந்தை எனவும், சங்க புலவர்களின் பெயர்களோடு ஊர்ப்பெயர் அடையெடுத்து வரும்பொழுது உறையூர் எனவும் வழங்கப்படுகிறது. ஏணிச்சேரி முடமோசியார், கதுவாய்ச் சாத்தனார், சல்லியங்குமரனார், சிறுகந்தனார், பல்காயனார், மருத்துவன் தாமோதரனார், முதுகண்ணன் சாத்தனார் போன்ற புலவர்கள் பெயருடன் உறையூர் அடையெடுத்தே வருகின்றது.

சிறுபாணாற்றுப்படை,83, நற்றிணை, 234,400 குறுந்தொகை,116, அகநானூறு,4,6,93,122,137,226,237,369,385, புறநானூறு,39, 58, 352,395 ஆகிய சங்க இலக்கியப் பாடல்களில் உறந்தை என்றும் புறம் 68,69 ஆகிய பாடல்களில் உறந்தையோன் என்னும் சொல்லட்சிகள் காணப்படுகின்றன. சங்க இலக்கியப் பாடல்கள் அனைத்திடங்களிலும் உறந்தை என்னும் சொல்லாட்சியே காணப்படுகின்றன. சங்க இலக்கியப் புலவர்களின் பெயரிலும் பின்னால் தோன்றிய இலக்கியங்களிலும், உரைகளிலும் தான் உறையூர் என்னும் சொல்லாட்சி காணப்படுகின்றது.


சிலப்பதிகாரத்தில் ஓரிடத்தில் உறையூர் (சிலம்பு.10—242) எனவும், உறந்தை எனவும்(சிலம்பு.8-3)கோழி (சிலம்பு.299) வாரணம்( சிலம்பு.10- 247,248) இளங்கோ ஆண்டிருப்பதும், முத்தொள்ளாயிரத்தில் உறையூர் (58 - 3) என வருவதும் குறிப்பிடத்தக்கது.


செல்லா நல்லிசை உறந்தைக் குணாது (புறம்.395) என்னும் அடிக்குப் பெயரறியப்படாத உரையாசிரியர் உறந்தை என்பதற்கு உறையூர் எனக் குறிப்புரையில் குறிப்பிடுகின்றார்(1971:592).




உறந்தை என்பதற்கு உ.வே.சா பதிப்பித்த புறநானூற்று உரையில் அரும்பத முதலியவற்றின் அகராதியில்,


உறையூர் என்பதற்கு விளக்கம் கூறும் பொழுது உறையூர் ஓருர் பழைய இராசதானி; உறந்தை என்றும் கோழி என்றும் வழங்கப்படும்(1971:613).


என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் சிலப்பதிகார அரும்பத முதலியவற்றின் அகராதியில் உறந்தை என்பதற்கு மேற்கண்ட விளக்கத்தையே கூறுகின்றார்.(2008:621)
இவ்வடிக்கு உரையெழும் ஔவை சு. துரைசாமிப் பிள்ளையும்,

காவிரிப்பூம்பட்டினம் தோன்றிச் சிறந்து விளங்குவதற்கு முன்பே விளக்கம் பெற்ற தலைநகர் உறையூர் ஊரெனப்படுவது உறையூர் என்ற சிறப்புடையது. அதனையே இவர் செல்லா நல்லிசை யுறந்தை என்று குறிப்பிடுகின்றார். (2007:446)


உறந்தை என்பதற்கு உறையூர் என்றே பொருள் எழுதுகின்றார்.
சோழநன் னாட்டுப் படினே கோழி
உயர்நிலை மாடத்துக் குறும்பறை இயைஇ(புறம்,67)

இப்பாடலில் கோழி என்பதற்குப் புறநானூற்றுப் பெயரறியப்படாத உரையாசிரியர்,
நல்ல சோழநாட்டின்கட் சென்று பொருந்தின், உறையூரின்கண் உயர்ந்த நிலையுடைய மாடத்தின்கண்ணே நினது குறும்பொறையொடு தங்கி வாயில்காவலர்க்கு உணர்த்திவிடாதே(1971: 159)


புறநானூற்று 212 பாடலில் கோழியோன் என்பதற்கு உறையூரென்னும் படைவீட்டிருந்தான் எனவும் கோழி என்பது உறையூரையே குறிக்குமெனப் பதிவு செய்கின்றார்.
சிலப்பதிகார நாடுகாண் காதையில்,
முறஞ்செவி வாரண முன்சம முருக்கிய
புறஞ்சிறை வாரணம் புக்கனர் புரிந்தென்(சிலம்பு,10- 247,248)

என்ற அடிக்கு அடியார்க்குநல்லார் வாரணம் ஆகுபெயர் யானையைக் கோழிமுருக்கால் கோழியென்று பெயராயிற்று. யானை சயித்த கோழி தோன்றினவிடத்து வலியுடையதென்று கருதி அவ்விடத்து அதன்பெயராலே சோழன் ஊர்காண்கின்ற பொழுது சிறையும் கழுத்துமாக ஆக்கியவதனால் புறம்பே சிறையுடைய கோழி என்று ஆயிற்று.

உறையூர் என்பதற்கு ,

இது சோழர்களுடைய பழைய நகரம். இஃது உறந்தை என்றும் கோழியென்றும் வழங்கப்படும். பழைய உறையூர், திருச்சிராப்பள்ளி ஜில்லாவில் பாண்டமங்கலத்தில் இருபதடிக்கு கீழ் இருக்கிறது. மண்மாரியால் முழுகியது

என அபிதானசிந்தாமணி விளக்கம் கூறுகின்றது.
சமணர்கள் மந்திர வலிமையினாலோ, தவ வலிமையினாலோ கல்மழையும் மண்மழையும் பொழியச் செய்து உறையூரை அழித்தார்கள் என்று ,

மலைகொண் டெழுகுவார் கடல்கொண் டெழுவார்
மிசைவந்து சிலா வருணஞ் சொரிவார்
நிலைகொண் டெழுவார் கொலைகொண் டெழுவார்
இவறிற் பிறர் யாவர் நிசாசரே(தக்கயாகப்பரணி 70)



கூறுகிறது. இதற்குப் பழைய உரையாசிரியர் உறையூரில் கல் வருஷமும் மண்வருஷமும் (வருஷம்- மழை) பெய்வித்து அதனைக்கெடுத்துத் துரோகஞ் செய்தார் இவர். அதற்குப்பின்பு இராசதானி திருச்சிராப் பள்ளியாய்த்து என்று கூறிகின்றார்.இதனைக் கொண்டே அபிதானசிந்தாமணி ஆசிரியர் மண்மாரியால் உறையூர் முழுகியது என்று கூறுகின்றார் போலும்.

ஒரு ஊர் பல பெயர்களைப் பெறுவது இயல்பு. மேற்காட்டிய சான்றுகளில் இருந்து உறந்தை, உறையூர், கோழி, கோழியூர் அனைத்தும் ஒரே ஊரே என்று துணியலாம்.
இருப்பினும் சங்க இலக்கிய பாடல்களில் உறந்தை என்னும் சொல்லாட்சி மிக்கு வருகின்றது. ஆனால் சங்க பாடல்களைப் பாடிய புலவர்களின் பெயரில் ஊர்ப்பெயர் அடையெடுத்து வரும்போது உறையூரைச் சார்ந்த புலவர்களுக்கு உறையூர் பெயரே அடையாக வருகின்றது. சங்க இலக்கியத்தில் உறந்தை என வரும் இடங்களில் எல்லாம் பழைய உரையாசிரியர் உறையூர் என்றே குறிப்பிடுகின்றார். அவருக்குப் பின் எழுந்த உரைகளும் உறந்தையை உறையூர் என்றே எழுதுகின்றன. கி.பி. 13 நூற்றாண்டைச் சேர்ந்த மாறவர்மன் சுந்தரபாண்டியனின் கல்வெட்டில் உறந்தை என்றே கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.(வாழ்வியற் களஞ்சியம்,தொகுதி5: 548)


கோழி,கோழியூர், வாரணம் ஆகிய ஊர்களுக்குக் கூறப்படும் காரணங்கள் புனைவு தன்மை உடையதாகவே காணப்படுகின்றது.

தஞ்சைக்கருகில் உறந்தைராயன் குடிக்காடு என்னும் ஊர் காணப்படுகின்றது, அதோடு கள்ளர் இனத்தில் உறந்தைராயர்,உறந்தை கொண்டார், உறந்தைப்பிரியர், உறந்தையர், உறந்தையாண்டார், உறந்தையாளர், உறந்தையாளியார், உறந்தையாட்சியார், உறந்தையுடையார் என்னும் பட்டப்பெயர்களும் உள்ளன. இவை உறந்தையொடு தொடர்புடையனவா என்பதும் ஆய்வுக்குரியுது.

தொல்காப்பியப் புணரியலில் 11 ஆவது நூற்பாவிற்கு விளக்கம் கூறும் நச்சினார்க்கினியர் மருதநிலத்துக்குரிய ஊர்ப்பெயர்களுக்குப் பின்னொட்டாக ஊர் வரும் என்று குறிப்பிடுகின்றார். ஆகையால் உறையூர் மருதநிலப் பகுதியாக இருப்பதால் உறையூர் என்ற பெயரே முன்பு வழக்கில் இருந்து பின்பு மருவி உறந்தை ஆகியிருக்கலாம், என்றாலும் நமக்குக் கிடைத்துள்ள முதல் சான்றான சங்க இலக்கியத்தில் ஊறந்தை என்னும் சொல்லாச்சியே காணப்படுகின்றது, அதோடு அப்பகுதியில் இருந்து இடம்பெயர்ந்த மக்களின் பட்டப்பெயர்களோடு உறந்தை என்னும் பெயரே வருவதால் முதலில் உறந்தை என்று வழங்கப்பட்டுப் பின்னால் உறையூர் என்னும் பெயர் வழங்கப்பட்டு இருக்கலாம் எனத் துணியலாம்.


உறந்தை சோழர்க்குரியதாகவும், வளமையாகவும், செல்வச் சிறப்புடன் திகழ்ந்ததால் மக்கள் அதனை விட்டு நீங்க விருப்பம் கொள்ளதவர்களாகவும் இருந்தனர்,
கைவல் யானைக் கடுந்தேர்ச் சோழர்
காவிரிப் படப்பை உறந்தை அன்ன
பொன்னுடை நெடுநகர்(அகம்.385)

என அகநானூறும், நல்ல புகழினையும் தேரினையும் உடைய சோழனது உறந்தை தன்பால் வாழ்வோர் விட்டு நீங்காமைக்குக் காரணமான சிறப்பினை யுடையது என (சிறுபாணற்றுப்படை82,83) கூறுகின்ற சிறப்புப் பொருந்திய, உறந்தையின் தொடக்கால வரலாற்றில் வெளியன் தித்தன் என்னும் தலைவனுக்கு ஒரு சிறந்த இடம் உண்டு. கடற்கரைப் பட்டிணத்தின் தலைவனான இவன் உறையூரைக் கைப்பற்றிப் பிறர் எளிதில் தாக்காவண்ணம் உறையூரில் அரண்களை அமைத்து, வலுவுள்ளதாக மாற்றியுள்ளான்.
நொச்சி வேலித் தித்தன் உறந்தை
கல்முதிர் புறங் காட்டன்ன (அகம்,385)
வென்றெறி முரசின் விறற்போர்ச் சோழர்
இன்கடுங் கள்ளின் உறந்தை ஆங்கண் (அகம்,137)

அதோடு உறந்தை நல்ல வளம் பொருந்திய தலமாகவும் , வெண்ணெய் வயல்கள் வேலியாகச் சூழ்ந்த உறந்தை பெரிய வண்மையுடைய தித்தனுக்குரியதாவும். (புறம்.352) உறந்தையைச் சுற்றியுள்ள பகுதி வளப்பமுடையதாகவும் நெற்குவியல்கள் மிகுந்த உறந்தை மழைபோல வழங்கும் வண்மையுடைய தித்தனுடையதாகவும்(அகம்.6) சிறுகண் யானைகளையுடைய தித்தனுக்குரிய உறந்தை கெடாத நல்ல புகழ் வாய்ந்ததாகவும்; நல்ல விளைபுலங்களால் சூழப்பட்டு இருந்ததாகவும் (புறம்,395) இப்பாடல்களில் காணப்படுவதால் தித்தன் ஆண்ட காலத்தில் உறையூரைச் சுற்றியுள்ள இடங்கள் நெல் உற்பத்தி திறன் பெற்றிருந்ததால், சிறந்த நெற்களஞ்சியமாகவும், புகழ்பெற்ற நகரமாகவும் நல்ல சூழமைவுடனும் விளங்கியுள்ளது.
பின்னால் உறந்தை நகரினைத் திருமாவளவன் காடுகளை வெட்டியழித்து நாடாகச் செய்து களங்கள் அழித்து பல்வேறு வளங்களையும் பெருகச்செய்து பெரியநிலைகள் பொருந்திய மாடங்களை அமைத்து விரிவுறச் செய்தான். (பட்டிணப்பாலை,284-286)
சோழன் நலங்கிள்ளி ஆவூரை முற்றுகையிட்ட காலத்து அதனை அடைத்துக் கிடந்த நெடுங்கிள்ளியின் பின் தப்பிச் சென்று உறையூரை அடைத்துக் கிடக்க, அதனையும் அந் நலங்கிள்ளி முற்றுகையிட்டான். அந்நிலையில் கோவூர்க்கிழார் அவ்விருவரையும் அணுகிப் போரைக் கைவிடுமாறு அறிவுரை கூறினார். (புறம்.44,45) சோழன் நலங்கிள்ளியிடமிருந்து உறையூருக்கு வந்த இளந்தத்தனென்னும் புலவனை ஒற்றெனைனக் கருதி, அங்கிருந்த நெடுங்கிள்ளி கொல்ல முயன்றபொழுது கோவூர்க்கிழார் அவனைப் பாடி இளந்தத்தனை உய்யக்கொண்டார்.(புறம்.47) கோப்பெருஞ் சோழன் வடக்கிருந்த இடத்துச் சென்று மீண்டு அவனது உறையூருக்கு வந்த பொத்தியார் யானை இருந்து இறந்த கூட்டத்தைப் பார்த்துக் கலங்கும் பாகனைப் போல அம்மூதூரில் அவனிருந்த மன்றத்தைக் கண்டு அழுது பாடினார். (புறம்.210) வெற்றிமுரசினையும் போர்வென்றியையும் உடைய சோழர்க்குரிய உறந்தை இனிய கடுப்பு மிக்க கள்ளினை உடையது. (அகம்.137) நீர்மோதும் வாய்த்தலைகளை உடைய உறந்தையில் உள்ளோர், பாணர் முதலாயினருக்குக் கொழுவிய நிணத்துண்டுகள் கலந்த மெல்லிய தினைச் சோற்றையும் கருப்பம் பாகுடன் பால்பெய்து அளைத்த பசிய அவலையும் வழங்குவர்.(அகம்.369) கழுமலப்போரின்கண் மாற்றாரை வென்று அவர்தம் குடையோடகப்படுத்திய வெற்றியையும் நல்ல தேரினையும் உடைய சோழனின் உறந்தையில் பங்குனி விழா நடைபெற்றது.(நற்.234) மறம் பொருந்திய சோழரது உறந்தையிலுள்ள அவைக்களத்து அறம் கெடவறியாது நின்று நிலை பெற்றது. (நற்.400)
இச்செய்திகளினால் உறையூரின் வரலாற்றுச் சுவடுகளையும் ,மக்கள் வாழ்வியல் பதிவுகளையும் அறியமுடிகின்றது.


கரிகாற் சோழன் தனது தலைநகரை உறையூரில் இருந்து காவிரிப்பூம்பட்டிணத்திற்கு மாற்றினான் என்பதைப் பட்டினப்பாலை கூறுகின்றது. இதன் பிறகு ஏறத்தாழ கி.பி.6 ஆம் நூற்றாண்டு முடிய உறையூரைப் பற்றிய செய்திகள் விரிவாகக் கிடைக்கவில்லை. திருச்சிராப்பள்ளி கல்வெட்டும், மலைக்கோட்டையில் உள்ள இரு குடைவரைகளும், இப்பகுதியில் ஏற்பட்ட பல்லவர், பாண்டியர் ஆதிக்கத்தைக் காட்டுகின்றது. உறையூர் கூற்றம் என்ற ஒரு தனிக் கூற்றத்தின் தலைநகரமாகவும் சிறந்து விளங்கியது. இக்கூற்றம் வடக்கே காவிரி ஆற்றையும் தெற்கே உய்யக்கொண்டான் ஆற்றுடன் கற்குடி மலையையும் கிழக்கே சிராப்பள்ளி குன்றையும் மேற்கே குளித்தலையையும் தனது எல்லைகளாகக் கொண்டிருந்தது என்பதைக் கல்வெட்டுகளால் அறியலாம்.எல்லா வகையான சிறப்புகளும் வளங்களும் செல்வச் சிறப்பும் உறையும் நகரமாதலின் இது உறையூர் என வழங்கப்பட்டதாகப் பெரியப்புராண ஆசிரியர் கூறுவர். கோழியொன்று யானையைப் போரில் வென்றதால், வீரமிக்க இந்த இடம் கோழி அல்லது கோழியூர் என வழங்கப்பட்டதாகவும் கூறப்படுகின்றது. உறையூர் பஞ்சவர்ணசாமி கோயிலில் கோழியும் யானையும் போரிடும் காட்சி சிற்பமாக செதுக்கப்பட்டுள்ளமை, இந்நிகழ்ச்சிக்குச் சான்றாகவுள்ளது. (வாழ்வியற் களஞ்சியம்,தொகுதி5,பக்.548)


தாலமி குறிப்பிடும் ஓர்தூரா ரெஜிய சோர்னாதி என்பது, சோரநாத என்னும் நாட்டின் அல்லது சோரிங்கி அரசின் தலைநகராகிய உறையூரையே குறிக்கும் என்று கன்னிங்ஹாம் கூறுகின்றார். (1989: 30) கி. பி. 81- 96 இல் எழுதப்பட்ட பெரிப்ளூஸ் என்ற சிறிய நூலின் ஆசிரியர் சோழநாட்டைப் பற்றி கூறும் போது, கொல்சிப் பகுதியை அடுத்து, கடலை அடுத்துள்ள கடற்கரை பகுதி எனப்படும் மற்றொரு மாவட்டமும் அருகறு எனப்படும் பகுதியும் உள்ளது என்று கூறுகிறார். இக்கூற்றிலிருந்து சோழநாடு, கடற்கறைப் பகுதி, உள்நாட்டுப் பகுதி என்ற இரு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டிருந்தது என்பதை அறியலாம். கடற் பகுதியை புகார் எனப்படும் காவிரிப்பூம்பட்டணத்தினின்றும், உள்நாட்டுப் பகுதியை உறையூரினின்றும் சோழர்கள் ஆண்டுள்ளனர்.(1989: 29) இவர் கூறும் அருகறு என்பது உறையூரே என்று அறிஞர்கள் கருதுகின்றனர். அருகறு உறையூரைக் குறிக்குமா என்பது ஆய்வுக்குரியது. அலெக்சாண்டிரியா நாட்டு வணிகர் எழுதிய குறிப்பில், உறையூர் சோழநாட்டின் தலைநகரமாக இருந்து வந்த செய்தி இடம்பெற்றுள்ளது. சோழர்களின் ஆட்சி காலத்தில் இந்த ஊர் மெல்லிய பஞ்சாடை வணிக மையமாக பெயர்பெற்றிருந்தது என்ற செய்தி பெரிப்ளூஸ் நூலில் காணப்படுகின்றது.( திருச்சி தமிழ்நாடு அரசாங்க செய்தித்துறை வெளியீடு, பக்.18) உறையூரில் அகழ்வாய்வு மேற்கொள்ளப்பட்ட பொழுது சாயத் தொட்டிகள் கிடைத்துள்ளது,(வாழ்வியற் களஞ்சியம் தொகுதி5,பக்.548) மேற்கண்ட செய்தியை உறுதிப்படுத்துகிறது.


பல்லவ அரசன் சிம்ம விட்டுணுவால் (கி.பி.550) கைக்கொள்ளப்பட்டது. உறையூர்ப் பகுதி ஏறத்தாழ கி.பி. 600 முதல் 875 முடிய பல்லவரின் ஆட்சிக்கு உட்பட்டிருந்தது. பல்லவரை அடுத்து, பாண்டியர் உறையூர்ப் பகுதியில் மேலாண்மை செலுத்தினர் என்பதை நெடுஞ்சடையான் பாண்டியனின் (கி.பி. 768 – 815) வேள்விக்குடிச் செப்பேடு சுட்டுகின்றது. தேர்மாறன் என்னும் பாண்டிய மன்னன் கூடல், வஞ்சி, கோழி என்னும் தலைநகரங்களிலுள்ள அரண்மைகளையும், அரண்களையும் புதுப்பித்த செய்தி, இச்செப்பேட்டால் அறியப்படுகிறது. உதயேந்திரச் செப்பேடு பராந்தகச் சோழனின் தலைநகரம் உறையூர் என்று செப்புகிறது. இதனால் உறையூர் பாண்டியரிடமிருந்து மீண்டும் சோழர் வசம் வந்தது புலனாகின்றது. பிற்காலப் பாண்டியர் வலுவடைந்த பொழுது, மீண்டும் உறையூர் பாண்டியர் கைக்கு மாறியது. முதலாம் மாறவர்மன் சுந்த பாண்டியன்(கி.பி 1216 – 1235) உறையூரையும் தஞ்சையையும் தீக்கிரையாக்கினான் என்று திருக்கோயிலூர் கல்வெட்டு கூறுகின்றது.
பாண்டிய நாட்டின் மீது கி.பி 1310 – இல் படையெடுத்த அலாவுதீன் கில்சியின் படைத்தலைவனான மாலிக்கப்பூர் உறையூரையும் அழித்தான். இவ்வாறு பகைவர்களால் உறையூர் அவ்வப்போது அழிக்கப்பட்டது. இதற்கு முன்பே கி.பி. பத்தாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் காவிரியின் வெள்ளப்பெருக்கால் அல்லூரும், உறையூரும் அழிந்தன என்பதை அல்லூர்க் கல்வெட்டு அறிவிக்கின்றது. அதனை உறையூரில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வும் உறுதி செய்கின்றது.

விசயநகர வேந்தனான இரண்டாம் அரி அரசனின் ஆட்சி காலத்தில்( கி.பி. 1377 – 1404) உறையூரில் விசய நகரத்தார் ஆட்சியைக் கண்டது. அதன் பிறகு உறையூரைப் பற்றியச் செய்திகளை அறியமுடியவில்லை.


சமண பள்ளிகள் உறையூர் பகுதியில் நிலைகொண்ட பிறகு, உறையூரின் புகழ் மங்கத் தொடங்கியது. காலனிய ஆதிக்கத்தின் போதும் உறையூர் கண்டுகொள்ளபடவில்லை .
முன்பு உறையூரைக் கொண்டு, திருச்சிராப்பள்ளி அடையாளப்படுத்தப்பட்ட நிலை மாறி , இன்று திருச்சிராப்பள்ளியின் ஒரு பகுதியாகச் சுருங்கி பழம் பெருமையையும், அடையாளத்தையும் சுவடுகளாகத் தாங்கிகொண்டு உறைகிறது உறையூர்.
தமிழ் சமூகத்தின் அடிவேராக விளங்கும் சங்க பாடல்களில் புதைந்து கிடக்கும் வரலாற்றுக் கூறுகளைப் பிற வரலாற்றுக் கூறுகளோடு தொடர்புபடுத்தி அவற்றின் உண்மை நிலையினைத் தெரிந்து எழுதினால் தமிழக வரலாற்றை அறிந்துகொள்ள முடியும். இது போன்ற ஊர்ப் பெயர் பற்றிய உரையாடல்களின் மூலமாக மானிட சமூகத்தின் தடத்தினை கண்டடைய முடியும்.




ஆதாரங்கள்
ஆளவந்தான், ஆர், இலக்கியத்தில் ஊர்ப்பெயர்கள் ,உலகத்தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை, 1984.
சாமிநாதையர், உ . வே, (ப. ஆ) புறநானூறும் பழைய உரையும், குறுந்தொகை மூலமும் உரையும் உ.வே. சா. நூல்நிலையம், சென்னை,1971.
சாமிநாதையர், உ . வே . (ப.ஆ) குறுந்தொகை மூலமும் உரையும், உ.வே. சா. நூல்நிலையம்,சென்னை, 2009.
தமிழண்ணல், அண்ணாமலை, சுப,(ப.ஆ), அகநானூறு,கோவிலூர் மடாலயம், கோவிலூர், 2004.
நாச்சிமுத்து, கி, இடப்பெயராய்வு, சோபிதம் பதிப்பகம், நாகர்கோவில்,1983.
நீலகண்ட சாஸ்திரி, கே. ஏ, சோழர்கள், இந்தியன் கவுன்ஸில் ஆப் ஹிஸ்டாரிகல் ரிசர்ச் நியூ தில்லி அண்ட் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பிரைவேட் லிமிடெட், சென்னை,1989.
ஜெய அரிகரன்(தொ-ர்) வ.அய். சுப்பிரமணியம் கட்டுரைகள், மொழியும் பண்பாடும், அடையாளம், திருச்சி, 2007.
வாழவியற் களஞ்சியம், தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர், 1987.
Index des mots da la Litterature tamoule acienne, INSTITUT FRANCAIS D’ INDOLOGIE,PONDICHERY,1967.


 

கள்ளர்கள் 5000 பேர் படுகொலை செய்யப்பட்டார்கள். இன்னொருமுறை 2000 பேர் படுகொலை செய்யப்பட்டார்கள்.

0 c

காவல்கோட்டம்

குற்றப் பரம்பரைச் சட்டம் பற்றி நீங்கள் ஏற்கெனவே ஆய்வு செய்து எழுதியுள்ளீர்கள். இச்சட்டத்தை மையமாக வைத்துப் பெரியதொரு நாவல் எழுதவேண்டும் எனும் மன உந்துதல் உங்களுக்கு எப்படி ஏற்பட்டது?
குற்றப் பரம்பரைச் சட்டம் பற்றிய தேடல் நீண்டகாலம் என் மனசைச் சுற்றியே வந்தது. அதற்குக் காரணம் மதுரைக்குப் பக்கத்தில் இருக்கிற கீழக்குயில்குடிங்கிற ஒரு சின்ன கிராமம். நான் அரசியல் பணிகளுக்காகக் கிராமங்களுக்குப் போய் அங்கிருக்கிற தோழர்களோடும் மக்களோடும் பேசிப் பழகும்போது அந்தக் கிராமத்தில் 1910-20களிலேயே சாலை போடும் பணியும் பள்ளிக்கூடப் பணியும் நடைபெற்றிருந்ததை அறியமுடிந்தது. மேலும், அந்த ஊருக்குள் கோர்ட் மற்றும் ஜெயில் இருந்ததையும் அறிந்தேன். ஒருநாள் தோழர் ஒருவரின் வீட்டில் கூட்டம் நடைபெற்றபொழுது பழைய நோட் டொன்றைக் கொண்டுவந்து கொடுத்தார். அந்நோட்டில் பள்ளிக் கூடத்துக்கு வராத குழந்தைகளோட அப்பாவை ஜெயில்ல வைக்கச் சொல்லி போலீஸ் சூப்பிரண்ட்டுக்கு ஸ்கூல் டீச்சர் எழுதின லட்டர் இருந்தது. எனக்கு ஆச்சர்யமாகவும் அதிர்ச்சியாகவும் இருந்தது. இந்தக் கடிதத்தின் வழியேதான் என் பயணம் தொடங் கியது; CTA Act பற்றிய ஆய்வாக மூன்று வருடம் தொடர்ந்தது. இதைப் புனைவாக எழுதுவதா அல்லது ஆய்வாக எழுதுவதா எனும் குழப்பம் இருந்தது. பிறகு, முதலில் எல்லாவற்றையும் சேகரிப்போம்; அதன் பிறகு முடிவுசெய்து கொள்ளலாம் என்று சேகரிக்கத் தொடங்கினேன். அச்சேகரிப்பின் வழியாகத் துவங்கியதுதான் இப்பணி. குறிப்பாக அதனுடைய ஆழம்தான் என்னை ஒரு புனைவை நோக்கித் தள்ளியது. கண்டிப்பாக ஒரு ஆய்வு நூலாக மட்டும் இதனை முன்வைக்க முடியாது. முன்வைக்க முடியாது என்பதைவிட காலத்துக்கும் இது தன்னுடைய இடத்தை, உண்மையை நெருங்குவதற்குப் புனைவு வடிவமே ஏற்றது என உணர்ந்தேன். அந்த அடிப்படையில்தான் அதனைக் காவல்கோட்டம் நாவலாக எழுதத் தொடங்கினேன்.
காவல்கோட்டத்தையோ குற்றப்பரம்பரையையோ வாசிக்கும்போது சுதந்திரமாகச் சுற்றித் திரிந்த உடலைக் கட்டுப்படுத்துவதன் மூலம் மக்களின் உளவியலையே கட்டுப்படுத்துவதின் வலியை உணர முடிகிறது. வாசிச்ச எங்களாலயே இரவுல தூங்க முடியல. எழுதும்போது உங்க மனநிலை எப்படி இருந்தது?
அது மறக்கமுடியாத காலம்தான். இப்பகூட காவல்கோட்டத்தின் இரண்டாம் பதிப்பில் சின்னக் குறிப்பொன்றை எழுதியிருக்கேன். மனநிலை பிறழ்ந்து பித்தாகித் திரிந்த காலம்னுதான் அத எழுதியிருக்கேன். ஏனெனில் உச்சபட்சமான ஒரு கொடூரம் 1910இல் ஆரம்பித்து 1920 - 25 வரை நடந்தது. பதினைந்து ஆண்டு காலம் அந்த மொத்த சமூகத்தையுமே கசக்கிப் பிழிந்த காலம். 1925க்குப் பிறகு அந்தக் கொடுமையை ஏத்துக்கிட்ட அல்லது இனி ஒன்றும் செய்யமுடியாது எனும் நிலைக்கு வந்தார்கள். குறிப்பிட்ட இனத்தை ஒரு குறிப்பிட்ட இடத்துக்குள், நேரத்துக்குள் கட்டுப்படுத்துறதுதான் குற்றப் பரம்பரைச் சட்டம். ஒருவனுடைய இருப்பு, நேரம், காலம் அனைத்தையும் கண்காணிப்புக்குட்படுத்துவதுதான் அதனுடைய தன்மை. அதே சமயம் விவசாயம் உள்ளிட்ட தொழில்களைச் செய்துகொள்ளலாம் எனப் பேருக்கு ஒரு ஜனநாயக முகமும் இருக்கும். ஆனால் தோட்டத்துக்குப் போய் விவசாயம் செய்பவனோ அல்லது மாடு மேய்க்கின்றவனோ எப்படி 6 மணிக்குள் வீட்டுக்கு வரமுடியும்? பக்கத்து ஊருக்குச் சென்றாலும் சீட்டு வாங்கிச் செல்லவேண்டும். அந்தப் பொழுதுக்குள் வராவிட்டால் ஜெயிலுக்குப் போகவேண்டும். அவ்வளவு பெரிய கண்காணிப்பு. ஒரு பக்கம் கண்காணிப்பு; இன்னொரு பக்கம் கட்டாயக் குடியேற்ற முகாம். இது ஹிட்லருடைய இராணுவ கேம்ப் அளவுக்கு சொல்ல முடியாவிட்டாலும் அந்தத் தன்மையானதுதான்.
கீழக் கூடலூரில் உருவாக்கப்பட்ட அந்த முகாம் குறித்து நாவலுடைய கடைசிப் பகுதியில் வரும். அந்த முகாமில் மொத்த ஜனத்தொகை 34. குழந்தைகளையும் சிறார்களையும் கழித்துவிட்டுப் பார்த்தால் 24 பேர். போலீஸாரின் எண்ணிக்கை 18 பேர். ஏறக்குறைய ஒருத்தருக்கொருத்தர். 18 பேரில் 7பேர் வரை வெள்ளை அதிகாரிகள். அவ்வளவு பெரிய உச்ச கண்காணிப்பு. பிறகு இவர்களைத் தேயிலைத் தோட்டங்கள், இராணுவம் மற்றும் அஸாம் காடுகளுக்கு அனுப்பிக் கொடுமை செய்தனர். உண்மையைச் சொல்லப் போனால் அந்தப் பகுதியை என்னால் எழுதவே முடியவில்லை. நாவலை எழுதுவதற்குக் காரண மான பகுதி அதுதான். அதைமட்டும் 500 பக்கங்கள் எழுதுவதற்கான தரவுகளும் குறிப்புகளும் என்னிடம் இருந்தன. ஆனால் நான்கு நாட்களில் நான் அந்தப் பகுதியை எழுதினேன். அதற்கு மேல் எழுத என்னால் முடியவில்லை. எப்படியாவது எழுதி வெளியே வரவேண்டும் எனும் மனநிலைதான் இருந்தது. மிகப் பெரிய வலி. மொத்த நாவலையும் எழுதவைத்தது அந்த வலிதான். இது வரலாறாக, அரசியலாக, இலக்கியமாக வேறெங்கும் பதிவாக்கப்படவேயில்லை.
காவல்கோட்டத்தில் கள்ளர்கள் மட்டுமல்லாமல் குறவர், வலையர், மறவர் முதலானோரும் காவல் காத்தனர்; அவர்களின் காவல்முறை குலைக்கப்படும்போது களவாடினர் எனப் பதிவு செய்துள்ளீர்கள். குறிப்பாக, செம்பூர்காரர்கள் பற்றிய புனைவு முக்கியமானது. இவை இதுவரை பதிவு செய்யப்படாதவை. இவற்றை எங்கிருந்து கண்டெடுத்தீர்கள்?
செம்பூர்காரர்கள் புனைவுதான். அதற்குள் இருக்கின்ற குணாம்ச ரீதியாப் பார்த்தால் அது ஒரு குறிப்பிட்ட சமூகம் என யூகிக்கலாம். மங்கம்மா உருவாக்கிய சாலையைக் காவல் காக்கும் செம்பூர்காரர்கள் ஒட்டுமொத்த காவல்முறையின் சின்னக் குறியீடு. செம்பூர்காரர்கள் எப்படி சாலையைப் பாதுகாக்க முடியாமல் பிரிட்டிஷாரால் கொஞ்சம் கொஞ்சமாக கொள்ளையர்களாக மாற்றப்படுகிறார்களோ அதேமாதிரி தான் இங்கும் நடக்கிறது. மற்றபடி பண்டுக் கலவரத்தைப் பேசுகிறபொழுது வலையர்களையும் குறவர்களையும் பற்றி பேசவேண்டி யிருக்கிறது. என்னுடைய நாவலின் மையத்திலிருந்து நான் ரொம்ப விலகிப் போவதற்கு எனக்கு அனுமதி இல்ல இல்லையா? அதனால் அது சார்ந்து அவசியமாக இருப்பதனை மட்டும் எவ்வளவு தூரம் சொல்ல முடியுமோ அவ்வளவு தூரம் சொல்லி இருக்கிறேன். நாவலைப் பொருத்த வரைக்கும் வரலாற்றின்மீது கட்டப்பட்ட புனைவும் புனைவின்மீது கட்டப்பட்ட வரலாறுமாக இருக்கிறது. இல்லையா?
நிச்சயமா. பண்டுக் கலவரம் என்பதே கள்ளர்களுக்கு எதிராக உயர் சாதியினர் அம்மையப்பக் கோனாரைத் தூண்டிவிட்ட நிகழ்வுதான் என்று குறிப்பிட்டுள்ளீர்கள். மேலும் கள்ளர் - கோனார்களுக்கு இடையிலான நீண்ட உறவு, வணிகத்தில் வளர்ந்துவரும் நாடார்களுக்கு பாது காப்பளிக்கும் கள்ளர்கள் முதலான வரலாற்று நிகழ்வுகளைப் பதிவு செய்துள்ளீர்கள். அதேசமயம் கிடைகளில் களவு கொடுத்த கோனார்களின் வலி, ரௌத்திரம் மற்றும் சிவகாசி கலவரத்தில் மேலூர் கள்ளர்களின் பங்கு ஆகியன பதிவு செய்யப்படாதது தற்செயலானதா?
சிவகாசி கலவரம் ஒரு பெரும் நாவலுக்குரியது. பண்டுக் கலவரம் அதைவிடப் பெரியது. சிவகாசிக் கலவரம் ஒரு நகரத்தினுடைய சம்பவம். பண்டுக் கலவரம் ஏறக்குறைய இன்றைய திண்டுக்கல் மாவட்டம் முழுக்க கிராமக் காவலர்கள் தாக்கப்பட்டு பூர்வீகக் கிராமங்களுக்கு விரட்டப்பட்டனர்; அது கொடுமை. நீங்கள் கேட்ட இந்த ரெண்டு கேள்விகளுமே ஏற்கனவே சிலரால் விமர்சனமாகவும் முன்வைக்கப் பட்டன. இப்படிப் பார்த்தால் இதே காலத்தில் கமுதிக் கோயிலில் நாடார்கள் நுழைய முயன்றதும், அங்கிருந்து வெளியேற்றப் பட்டதுமான நிகழ்வுகள் நடந்துள்ளன. இது மாதிரி மதுரையைச் சுற்றி பல சமூக நிகழ்வுகள் நிகழ்ந்திருக்கு. இது தற்செயலானதா என்றால் என்னுடைய நோக்கமும் பணியும் இதை மையமிட்டுதான் இருந்தது. நான் எழுதப் போற Non fiction புத்தகத்துல பண்டுக் கலவரத்தைப் பற்றி தனியா ஒரு அத்தியாயமாக எழுதப்போறேன். பண்டு கலவரம் பற்றிய அரசு ஆணை மட்டும் 436 பக்கங்கள். அது ஒரு தனி ஆய்வு. அதற்கே நிறைய செலவு செய்து நிறைய குறிப்புகளைச் சேகரித்து வைத்திருக்கேன். அதையெல்லாம் நாவலுக்குள் கொண்டுபோனா எங்கேயோ போயிருக்கும். அம்மையப்பக் கோனார் என்கிற ஒரு சின்ன பாத்திரத்தை வைத்து நாவலில் அது எப்படி ஒரு தாக்கத்த ஏற்படுத்தி இருக்கும் என்கிற உண்மையைப் புனைவின் மூலம் கண்டறிகிற முயற்சியைச் செய்திருக்கிறேன்.
உங்களுடைய நாவல்ல கதைசொல்லல் மரபைப் போலவே பெண்களின் ஆளுமையும் வீரியம் மிக்கதாக உள்ளது. அதை எப்படி எழுத்தில் கொண்டுவந்தீர்கள்?
நான் கொல்லவாருகள், பிரமலைக் கள்ளர்கள் என்ற இரண்டு இனக்குழுக்களைப் பற்றி இந்த நாவல்ல பேசியிருக்கேன். நாவலில் அவர்களுடைய ஒட்டுமொத்த விஸ்வரூபத்தையும் என்னால முழுசா பதிவு செய்திருக்க முடிஞ்சிதா அல்லது நான் நினைத்த அளவுக்கு வந்தி ருக்கா என்ற கேள்வி இருக்கு. ஆனால் படித்தவரைக்கும் அதனுடைய பிரம்மாண்டத்தை எல்லோராலும் உணர முடிகிறது. கங்காதேவி ஆரம்பித்து கழுவாயி வரைக்கும் இரத்தமும் சதையுமான பெண்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக உணர்கிறேன். ஆனால் இந்த இரண்டு இனக் குழுக்களிலும் பெண்களுடைய இடம் பிரம்மாண்டமானது. அதை யெல்லாம் சாதாரணமாகக் கடந்து போய்விட முடியாது. ஆண்களப் பார்த்தா வெளியில்போய் காவல் காத்துட்டு வருவான்; பெரிய வீரனா இருப்பான்; ஆனா ஊருக்குள்ளப் போவதற்கு பயப்படுவான். ஏனா அங்கதான் அடி வாங்குவான். அங்க அவன் பொம்பளைங்கள எதிர்கொள்றது ரொம்ப கஷ்டம். அவங்களுக்குதான் உண்மை என்னன்னு தெரியும். நாவலே சடச்சி, கங்காதேவி என்ற இரண்டு பெண்களுடைய வழித்தோன்றகளைப் பற்றித்தான். கடைசி வரைக்கும் சடச்சி மாதிரி ஒருத்தியா அப்படின்னுதான் ஏக்கத்துடனும் பிரம்மாண்டத்துடனும் பேசியிருந்தேன். அதேமாதிரி நாவலுடைய மிகப் பெரிய கதாபாத்திரம் மாயாண்டி பெரியாம்பள. அவனை கொடிக்காபட்டி கிழவி சாதாரணமாக நீயெல்லாம் ஒரு ஆளான்னுவா. நாவலின் பிரம்மாண்டமான கதாபாத்திரத்தை அடிச்சி தூக்கிப்போட்டு போயிட்டே இருப்பா.
காவல்கோட்டத்தில் மேலூர் கள்ளர்கள் ஐந்தாயிரம் பேரைப் பிரிட்டிஷார் கொன்ற வன்மத்தை எப்படி உங்களால் எட்டு வரி செய்தியாக மட்டுமே பதிவு செய்ய முடிந்தது. அது எவ்வளவு வலிகளும் வன்மமும் நிறைந்தது?
சரிதான். இது உச்சமான சோக நிகழ்வு. ஒருமுறை மேலூர் கள்ளர்கள் 5000 பேர் படுகொலை செய்யப்பட்டார்கள். இன்னொருமுறை 2000 பேர் படுகொலை செய்யப்பட்டார்கள். மற்றுமொருமுறை பல ஆயிரக்கணக் கான பேர்னு சொல்றாங்க. இவை எல்லாமே பிரிட்டிஷார் எழுதிவைத்த ஆவணங்களில் இருக்கு. இது எங்கு நடந்தது, எப்படி நடந்தது, இதைப் பற்றிய கதைகள் ஏதாவது இருக்கா என்று நான் இந்த நாவல் எழுதிய ஆண்டுகள் முழுக்கத் தேடி இருக்கிறேன். என்னுடைய பிரதானமான கதைக்களனாகவும் கவனமும் இருந்தது மேற்குநாடும் பிரமலைக் கள்ளர்களும்தான். எனவே மேலூர் கள்ளர் படுகொலையில் அதிகக் கவனம் செலுத்தமுடியவில்லை. ஆனா இப்ப வரைக்கும் நான் படுகொலை நடந்த இடத்தைத் தேடிகிட்டு இருக்கேன். பிரிட்டிஷ்காரங்க இரண்டு இடங்களைக் குறிப்பிடுகிறார்கள். திருப்பூர் கோயில்குடி என்ற ஊர் சொல்லப்படுகிறது. ஆனால் அப்படி ஓர் ஊர் இன்றில்லை. ஒருவேளை படுகொலைக்குப் பிறகு அந்த ஊர் அழிந்திருக்கலாம். மதுரையில் கோவில்பட்டி, கோயிலாங்குடி என்ற ஊர்கள் இருக்கு. இதெல்லாம் மருவி வந்திருக்கலாம், வெள்ளளூர் நாடு பற்றியும் குழப்பம் இருக்கிறது. எது எப்படியோ மேலூர் கள்ளர்கள் மீது நிகழ்த்தப்பட்டது மிகப்பெரும் படுகொலை.
இந்திய சரித்திரத்தில் இவ்வளவு பெரிய படுகொலைகள் வேறு எங்கும் நிகழ்ந்திருக்காது. ஆனால் அதனை இந்த நாவலில் attend பண்ண முடியாது. அது நாவலாகவோ, Non fiction ஆகவோ தனியே எழுதப்படவேண்டிய பெரிய விஷயம். காவல்கோட்டத்தின் கதைத்தளத்தில் இருந்து ரொம்ப தள்ளி நடக்கின்ற ஒரு நிகழ்வு இது. ஆனாலும் ஒரு குறிப்பாகவாவது அதனைப் பதிவு செய்யவேண்டும் என்பதால்தான் நாவலில் பதிவு செய்திருக்கிறேன். அதைக் கடந்து அந்தச் செய்தி சார்ந்து கடந்த ஆறு, ஏழு வருடங்களாக நான் ஆய்வு செய்துகொண்டு இருக்கிறேன். ரூம்ளே என்ற ஒரு சாமி இருக்கிறது என்று முல்லர் என்கிற பிரிட்டிஷ்காரன் எழுதியிருக்கான். அப்படி ஒரு சாமி இருக்கான்னு நான் தேடிக்கிட்டு இருக்கேன். ஏனா இந்தச் சம்பவம் நடந்து சுமார் 270 வருடங்கள் ஆகிறது. தடயத்தைக் கதை களின் மூலமாகத்தான் கண்டு பிடிக்கமுடியும். இருந்தும், உறுதியாக அவர்கள் பிரிட்ஷாரை எதிர்த்ததும் இந்தப் படுகொலைக்குக் காரணமாயிருக்கலாம். மருது சகோதரர்கள், ஊமைத்துரை எனப் போராட்டக்காரர்களின் புகலிடமாக மேலூர் காடுகள்தான் இருந்தன. அதன் தொடர்ச்சியாகத்தான் இந்த அழிவு நடந்திருக்கலாம். மருது சகோதரர்கள் காலம் ஆரம்பித்து பெரியாற்று நீர்ப்பாசனம் கொடுக்கும் வரைக்கும் முந்நூறு வருடங்கள் மேலூர் காடுகளும் மக்களும் பிரிட்டிஷாருடைய கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டு இருந்தனர். மேலூர் கள்ளர்கள் பற்றி கண்டிப்பாக, புனைகதையாகவோ அல்லது ஆய்வாகவோ பதிவு செய்யப்பட வேண்டியது அவசியம். 
உரையாடியவர்கள்: ஜ. சிவகுமார் மற்றும் மு. காமாட்சி, தமிழ் இலக்கியத்துறை முனைவர்பட்ட ஆய்வாளர்கள்
http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=12229:2011-01-05-09-34-24&catid=1237:2010&Itemid=499

 

இராமநாதபுரம்

0 c
thanksto http://deviyar-illam.blogspot.com/2011/01/blog-post_31.html
 
நாம் ஆங்கிலேயர்கள் இந்தியாவிற்குள் வந்த கதையை, அவர்களுக்கு இங்கிருந்த இந்திய சூழ்நிலை எப்படி உதவியது என்பதை ஏற்கனவே பார்த்தோம்.  இராமநாதபுரம் மாவட்டத்தை எப்படி ஆங்கிலேயர்கள் தங்கள் ஆட்சிக்குள் கொண்டு வந்தார்கள் என்பதை சுருக்கமாக பார்க்கலாம்.


14 ஆம் நூற்றாண்டில் பாண்டிய மன்னர்களை முகமதியர்கள் வென்றனர். மறுபடியும் போராடி பாண்டியர்கள் தங்கள் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றினாலும் 16 ஆம் நூற்றாண்டில் தெலுங்கு நாயக்கர்களிடம் தோற்றன்ர். மதுரையை அடிப்படையாக வைத்து ஆட்சி புரிந்த நாயக்கர்கள் இராமநாதபுரம், திருநெல்வேலி சுற்றியுள்ள தென்மாவட்டங்களில் தங்களின் அதிகாரத்தை வலுவாக்கினர், அப்போது கன்யாகுமரி மட்டும் திருவாங்கூருடன் சேர்ந்திருந்தது. ஏற்கனவே ஆட்சி புரிந்த பாண்டிய மன்னர்களின் சிறப்பான நிர்வாகத்தில் உள்ளேயிருந்த ஒவ்வொரு பகுதியும் "நாடு" என்ற பெயரில் இருந்தது. இந்த நாடு என்ற பெயர் தான் இன்று வரையிலும் இராமநாதபுரம் மாவட்டம் சார்ந்த பல்வேறு இனமக்களிடம் இருந்து வருகின்றது. 

தென்மாவட்ட மக்களிடம் நாம் பேசிப்பார்த்தால் அதுவும் முக்குலத்தோர் மக்களிடம் உரையாடினால் இந்த நாடு என்ற வார்த்தை வந்துவிடும். ஒவ்வொரு நாடு என்ற பகுதிகளுக்குள் பல் கிராமங்கள் இருந்தது.  நாயக்கர்களின் வரிசையில் வந்த விஸ்வநாத நாயக்கர் (1529 முதல் 1564 வரை) சிறந்த நிர்வாகத்தை உருவாக்கும் பொருட்டு தமது ஆட்சி எல்லைக்கு உட்பட் பகுதிகளை 72 பாளையங்களாக மாற்றினார்..  தனது நம்பிக்கைக்கு பாத்திரமான நபர்களிடம் அந்தந்த பகுதியின் பொறுப்பைக் கொடுத்து பாளைய்த்து தளபதியாக நியமித்தார். இவர்கள் தான் உள்ளே உள்ள கிராமவாசிகளிடம் வரி வசூல் செய்வது முதல் அந்த கிராம மக்களை பாதுகாப்பு வரைக்கும் உள்ள அத்தனை விசயங்களுக்கும் பொறுப்பாக இருந்தனர். இது போன்ற பதவிகளில் தெலுங்கு பேசும் நாயக்கர்கள் முதன்மையாகவும், மறவர் குலத்தில் பிறந்தவர்கள் அடுத்த நிலையிலும் இருந்தனர். காரணம் இன்று வரைக்கும் மறவர் குலத்தில் உள்ளவர்களின் வீரமும் அவர்களின் முன் கோபத்தையும் பழகியவர்கள் நன்றாக உணர்ந்தே இருப்பார்கள். 

18 ஆம் நூற்றாண்டின் மத்தியில் பல தென்னிந்திய பகுதிகள் கர்நாடகத்தில இருந்த நவாப்பிடம் மாறிய போது பாளையக்காரர்கள் தங்களை காத்துக் கொள்ள ஊரைச்சுற்றி அகழியை வெட்டி வைத்ததோடு பல போர்ப் படைகளை உருவாக்கியும் வைத்திருந்தனர். ஆனால் காலப்போக்கில் பாளையக் காரர்களின் சுயநலமும், ஒருவருக்கொருவர் அடித்துக்கொண்டு சாக குழப்பமும் கூச்சலுமாய் பாளையக்காரர்களின் நிர்வாகம் சீர்கெடத் துவங்கியது. இது போன்ற சமயத்தில் இன்று நாம் பார்த்துக் கொண்டிருக்கும் முக்குலத்தோரில் ஒரு பிரிவான மறவர் இன மக்கள் தான் ஒவ்வொரு கிராமத்திற்கும் காவல் பணியில் இருந்தனர். இந்த மறவர்களுக்கு தேவைப்படும் ஊதியத்தை நெல்லாக பணமாக கிராம மக்கள் வழங்கிவந்தனர்.  இந்த மறவர்கள் தான் அந்தந்த கிராம மக்களின் மொத்த உடைமைகளுக்கும் பொறுப்பாக இருந்தனர். காந்தி சொன்ன கிராம சுயராஜ்யத்தியத்தை இது போன்ற சம்பவங்களின் மூலமாக நாம் நன்றாக உணர்ந்து கொள்ள முடியும். 

காவல் பொறுப்பில் இருந்த மறவர் குல இளைஞர்கள் பல முறை தேவையில்லாமல் திருட்டுப் பழியை ஏற்றுக் கொண்டு அதற்கான நஷ்ட ஈடுகளையும் கிராமத்து மக்களுக்கு கொடுத்த பல அதிசயங்களை வரலாற்றுக் குறிப்புகள் போகிற போக்கில் தெரிவிக்கின்றது.  மொத்தத்தில் கிராம வாழ்க்கையில் வாழ்ந்த மக்களுக்கு ராமன் ஆண்டால் என்ன? இராவணன் ஆண்டால் என்ன? என்று வாழ்ந்திருந்தாலும் தங்கள் கிராமத்து வாழ்க்கை உணர்ந்து உண்மையாகவே வாழ்ந்து இருக்கின்றனர். மொத்த பிரச்சனைகளும் மேலேயிருந்த தலைகளால் தான் உருவாகி ஒவ்வொரு காலகட்டத்திலும் இந்த மாவட்டம் பல மாறுதல்களை பெற்று இருக்கிறது.

தென்னிந்திய பகுதிகளில் உள்ளே வந்த நவாப் தன்னுடைய ஆட்சி பலவீனமாகத் தொடங்கிய போது தங்கள் ஆட்சியில் இருந்த பகுதிகளை மீட்டுத் தருமாறு ஆங்கிலேயர்களிடம் கோரிக்கை வைக்க 1751 ஆம் ஆண்டு திருநெல்வேலிக்கு அருகே உள்ள பாளைங்கோட்டையில் ஆங்கிலேயர்கள் முதன் முதலாக ஒரு நிரந்தர படைப் பிரிவை உருவாக்கி வைத்தனர்.இதன் தொடர்ச்சியாக உள்ளேயிருந்த ஒவ்வொரு பாளையக்காரர்களுடனும் ஆங்கிலேயர்கள் போர் செய்து தங்கள் வழிக்கு கொண்டு வர ஆரம்பித்தனர்.

கடைசியாக 1783 மற்றும் 1799 ஆம் ஆண்டு நடைபெற்ற இரு பெரும் போர்களின் இறுதிக்கட்டமாக கிழக்குத் திருநெல்வேலியிலுள்ள பாஞ்சாலங்குறிச்சிப் பாளையக்காரராக இருந்த கட்டமொம்ம நாயக்கரை (வீர பாண்டிய கட்டபொம்மன்) எதிர்த்து நடைபெற்றது..இதுவரைக்கும் ஆங்கிலேர்களுக்கு அடிபொடியாக இருந்த நவாப் உள்ளே உள்ள பகுதிகளில் இருந்து வரி வசூல் செய்து ஆங்கிலேயர்களிடத்தில் கொடுத்து அவர்களின் விசுவாசியாக இருந்தார். நவாப் ஆங்கிலேயர்களுடன் போட்டு வைத்திருந்த ஒப்பந்தமும் 1785 ஆம் ஆண்டோடு முடிவுக்கு வந்தது.  


இதற்குப் பிறகு ஆங்கிலேயர்கள் நேரிடையான நடவடிக்கையில் இறங்கி மற்ற பகுதிகளுடன் நவாப் ஆளுமையில் இருந்த பகுதிகளையையும் தங்கள் ஆட்சி அதிகாரத்திற்குள் கொண்டு வந்து சேர்ந்தனர். ஆங்கிலேயர்கள் ஈழத்திலும் இந்த முறையில் தங்கள் ஆட்சியை உருவாக்கினர். ஒருவரை வைத்து உதவி பெற்று கடைசியாக அவரையே அழித்து முடித்துவிடவேண்டியது. காட்டிக் கொடுத்தவனும் சாக, காட்டிக் கொடுக்கப்பட்டவனும் செத்துப் போக ஆங்கிலேயர்களுக்கு பிரச்சனை முடிவுக்கு வந்துவிடும்.

1801 ஆம் ஆண்டு கட்டபொம்ம நாயககரின் தோல்விக்குப் பிறகு கர்நாடகப் பகுதி முழுவதும் ஆங்கிலேயர்கள் நிர்வாகத்தின் கீழ் வந்தது.  தங்கள் பேச்சை கேட்க தயாராக இருந்த பாளையக்காரர்களை ஆங்கிலேய அரசாங்கம் ஜமீன்தாரர்களாக நியமித்து மற்ற படைகளை கலைத்து விரட்டியடித்தது. இப்போது தான் ஆங்கிலேய அரசாங்கம் முழுமையாக இந்த பகுதிகளில் செயல்படத் தொடங்கியது.

1801 ஆம் ஆண்டு ஆங்கிலேய அரசாங்கத்தில் முதல் கலெக்டர் நிர்வாக பொறுப்பை ஏற்றுக் கொண்டபோது இராமநாதபுரம், சிவகங்கை பகுதிகள் இரு வேறு கூறுகளாக இருந்தது. இதன் நிர்வாகம் முழுக்க ஆங்கிலேயர்களின் வசமிருந்தாலும் உள்ளே உள்ள பகுதிகளில் ஆங்கிலேயர்களின் கட்டுப்பாட்டில் பாளையக்காரர்களும் இருந்தனர். இவர்களைத்தான் ஜமீன்தாரர்கள் என்று அழைக்கப்பட்டனர். 1803 ஆம் ஆண்டு மேலே சொன்ன இரண்டு பகுதிகளை இணைத்து கலெக்டர் நிர்வாகத்தின் கீழ் இராமநாதபுரம் மாவட்டம் என்ற பெயரில் உருவானது. ஆனால் இடையில் நடந்த மாறுதலுக்கு அப்பாற்பட்டு இறுதியாக 1910 ஆம் ஆண்டு ஸ்ரீவில்லிபுத்தூர், சாத்தூர் ஆகிய தாலூகாக்களைச் சேர்த்து உள்ளேயிருந்த இரண்டு ஜமீன்களின் கட்டுப்பாட்டில் இருந்த ஏழு தாலூகாக்களையும் சேர்த்து இந்த இராமநாதபுரம் என்ற மிகப் பெரிய மாவட்டம் உருவாக்கப்பட்டது. 

இதற்கு முன்பு திருநெல்வேலி மாவட்டம் பல முறை மாற்றி அமைக்கப்பட்டு இருந்தாலும் இராமநாதபுரம் மாவட்டம் என்ற ஒரு பெயரில் உருவாக்கப்பட்ட பிறகு நெல்லை மாவட்டம் எட்டு வட்டங்களாக பிரிக்கப்பட்டு இருந்தது. இந்தியா சுதந்திரம் பெற்று 1956 ஆம் ஆண்டு மொழிவாரி மாநிலங்களாக பிரிக்கப்பட்டபோது திருவாங்கூருடன் இணைந்து இருந்த செங்கோட்டை வட்டம் நெல்லை மாவட்டத்ததுடன் சேர்க்கப்பட்டது. அதே நேரத்தில் தென் திருவாங்கூரில் உள்ள தமிழ் வட்டங்கள் நான்கையும் சேர்த்து புதிதாக கன்யாகுமரி மாவட்டம் உருவானது

ராஜராஜசோழன்

0 c



பல்லாண்டு! பல்லாண்டு! பலகோடி நூறாயிரம்!

First Published : 24 Sep 2010 12:00:00 AM IST

ராஜராஜசோழன்...! இந்தத் திருப்பெயரைக் கேட்டாலே தமிழர்களின் நெஞ்சம், பெருமித உணர்வால் நிறையும். "செயற்கு அரிய செய்வார் பெரியர்' என்று பெருஞ் சாதனையாளர்களுக்கான இலக்கணத்தை வகுத்தார் திருவள்ளுவர். அவ்வகையில் பல அரிய சாதனைகளை நிகழ்த்திய பெரியோன், ராஜராஜசோழன் ஆவார்.தனது ஆட்சிக் காலத்தில் சோழ சாம்ராஜ்ய எல்லைகளை விரிவுப்படுத்திப் பெரியதாக்கினார். பெரும் வீரனாக விளங்கினார்! இன்றளவும் உலகமே வியக்கும் அளவு மிகப் பெரிய சிவாலயத்தை தஞ்சையில் உருவாக்கினார். வடமொழி, தென் மொழி வல்லுநர்களை ஆதரித்த பெரிய மனம் படைத்தவராக விளங்கினார். பெருவுடையார் கோயிலில் மிகப் பெரும் கருவறை விமானத்தை அமைத்தார். பிரம்மாண்டமான பெரிய லிங்கத்தை கருவறையில் பிரதிஷ்டை செய்தார். தனது குருநாதராகிய கருவூர் தேவரிடம் பெரும் பக்தி உடையவராகத் திகழ்ந்தார்.முடியாட்சியிலும் "குடவோலை' முறையில் தக்கோரைத் தேர்வு செய்த சீர்திருத்தப் பெரியவராய்த் திகழ்ந்தார். சைவத் திருமுறைகளில் பெரும்பற்று கொண்டிருந்தார். தில்லையில் இருந்த தேவாரப் பதிகங்களை ராஜராஜ சோழ மாமன்னர் மீட்டெடுத்தார் என்றொரு கர்ண பரம்பரைக் கதையுண்டு. ஆனால் இதைச் சில அறிஞர்கள் மறுத்துரைக்கின்றனர். எது எவ்வாறாயினும், தான் கட்டிய சிவாலயத்தில் தேவாரப் பதிகங்கள் பாட நாற்பத்தெட்டு ஓதுவார்களை இம்மாமன்னர் நியமித்ததாகக் கல்வெட்டொன்று தெரிவிக்கின்றது. இதனால் இவர் பெரும் சிவ பக்தர் என்பதும் நிரூபணமாகிறது.அரசியல், ஆன்மீகம் தாண்டி கலைகளை வளர்ப்பதிலும் பேரார்வம் காட்டியவர் ராஜராஜ சோழன். முத்தமிழில் மூன்றாம் தமிழான நாடகக் கலையையும் வளர்ப்பதில் பெரு விருப்பம் காட்டினார் இப்பேரரசர்.பெருவுடையார் ஆலயத்தின் சுற்றுப்புறத்தில் நானூறு வீடுகளைக் கட்டி, "தளிச்சேரி பெண்கள்' எனப்பட்ட நாட்டிய நங்கைகளைக் குடியமர்த்தினார். இந்தப் பகுதிகளுக்கு "தளிச்சேரிகள்' எனப் பெயரிட்டு, பரத நாட்டியக் கலையை ஊக்குவித்தார்.இவ்வாறு பற்பல விஷயங்களை அடுக்கிக்கொண்டே போக ஆதாரங்கள் நிறையவே உள்ளன. மொத்தத்தில் செயற்கரிய பெரும் சாதனைகளைப் படைத்த பேரரசர் ராஜராஜ சோழன் என்பதில் ஐயமே இல்லை.மக்கள் தலைவர்!பராந்தக சுந்தர சோழரின் மூன்றாவது மகனாகப் பிறந்தவர் ராஜராஜன். இவரது இயற்பெயர், "அருள்மொழி வர்மன்' என்பதாகும். அன்றைய அரசியல் முறைப்படி இவரது அண்ணனாகிய, "இரண்டாம் ஆதித்தன்' என்பவரே பட்டத்து இளவரசராக இருந்தார். ஆதித்தனும் வீரத்தில் சளைத்தவரல்லர்! அக்காலத்தில் பாண்டிய நாட்டை ஆண்ட வீரபாண்டிய மன்னரின் தலையைப் போர்க் களத்தில் ஆதித்த சோழர் கொய்ததாக வரலாறு கூறுகின்றது. பின்னர் இவர் வீரபாண்டியனின் மெய்க்காப்பாளர்களால் கி.பி. 969ல் மர்மமான முறையில் கொல்லப்பட்டார் என்கின்றனர். அதன் பின்னர் தனது மகளான குந்தவை பிராட்டியாரிடமும், மூன்றாவது மகனான அருள்மொழி வர்மனிடமும் பெரும் நம்பிக்கை வைத்து வாழ்ந்தார் சுந்தர சோழர். "சோழ சாம்ராஜ்யத்தின் எதிர்காலமே அருள்மொழியால் வளப்படும்' என்றவர் உறுதியாக நம்பியதாக வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.ஆனால் எதிர்பாராத விதமாக கண்டராதித்த சோழரின் மகனான உத்தமசோழர் என்பவர் வசம் சோழ நாட்டை ஒப்படைக்கும் சூழ்நிலை உருவானது. "ராஜராஜனை அரசாளும் மோகம் ஆட்டிப் படைக்கவில்லை' என்றே அவரது வரலாற்றினை நுட்பமாக ஆராய்ந்த வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். ஆனால் காலம், அவரை தலைமை ஏற்க வைத்தது.இங்கே ஒரு முக்கியமான விஷயத்தையும் குறிப்பிட்டாக வேண்டும். சுந்தர சோழரின் மூத்த மகனான ஆதித்த சோழரும் - கண்டராதித்த சோழரின் வாரிசான உத்தம சோழரும் வாழ்ந்த காலத்திலேயே அருள்மொழி வர்மருக்கு, மக்கள் செல்வாக்கு மகோன்னதமாக இருந்தது. அருள்மொழி வர்மரை "திருமாலின் அவதாரம்' என்றே அன்று சோழ அரசின் குடிமக்களில் பெரும்பாலானோர் கருதினர். திருவதிகையில் கிடைத்த கல்வெட்டொன்று, ""அருள்மொழியின் அங்கத்தில் காணப்படும் "சாமுத்ரிகா லட்சணங்கள்' அவரை மூவுலகும் ஆளும் திருமாலின் அம்சம் என்பதைத் தெளிவுப்படுத்துவதாய் உள்ளன'' என்றும் கருத்துபடப் பேசுகின்றது.மக்களின் மகத்தான ஆதரவினால் சோழ சாம்ராஜ்யத்தின் அரசராக முடி சூட்டிக் கொண்டார், அருள்மொழி வர்மர் என்னும் முதலாம் ராஜராஜ சோழன். மக்கள், தன் மீது காட்டிய பேரன்பை மனதில் கொண்டே "குடவோலைத் தேர்தல்' முறையைத் தனது ஆட்சிக் காலத்தில் செயல்படுத்தினார் போலும் இந்தப் பேரரசர்!மும்முடிச் சோழர் :பதவிக்கு வந்ததும், சோழ வம்சத்தின் பழம் புகழை மீண்டும் நிலைநாட்டி, அதை மேலும் வளர்த்திட வேண்டும் என்று உறுதி பூண்டார் ராஜராஜ சோழன். தங்களது அரச பரம்பரைக்கு எதிரிகளாக இருந்த சேர, பாண்டிய, சிங்கள மன்னர்களை வென்றொழிக்க முடிவு கட்டினார். இவர் நடத்திய "காந்தளூர் சாலைப் போர்' வரலாற்று பிரசித்தி பெற்றது. இப்போரில்தான் பாஸ்கர ரவி வர்ம சேரனின் கோட்டையைத் தகர்த்தெறிந்து, அந்நாட்டை தனது அரசாட்சியின் கீழ் கொணர்ந்தார். அன்றைய பாண்டிய மன்னன் அமரபுஜங்கனையும் வென்று புகழ் பெற்றார். சேர-பாண்டிய-சோழ மணிமுடிகளின் ஒரே உரிமையாளனாக மாறி, "மும்முடிச் சோழர்' எனப் போற்றப்பட்டார்.தெற்கே இலங்கை, வடக்கே கங்க நாடு என்று தெற்கு பாரதத்தின் முக்கால்வாசி பிரதேசங்களையும் வென்றெடுத்து - குமரி முனை முதல் கலிங்க தேசம் வரை சோழ சாம்ராஜ்யத்தை விரிவுப்படுத்தினார். கடற்படையமைப்பதில் இம்மன்னருக்கிருந்த திறமை அளவிடற்கரியது. இத்தகைய பேரரசரே பக்தி நெறியிலும் தலை சிறந்தவராகத் திகழ்ந்தார். அதன் தலையாய வெளிப்பாடே தஞ்சைப் பெருவுடையார் கோயில்.கேரளாந்தகன்:தென்னிந்தியாவுக்கு வரும் வெளிநாட்டவர்கள் விரும்பித் தேடி வரும் இடங்களில் ஒன்றாக தஞ்சைப் பெருவுடையார் கோயில் உள்ளது. வீரத்தில் ஒப்பாரும் மிக்காரும் இல்லாதவராய் ராஜராஜன் விளங்கியதை ஏற்கெனவே குறிப்பிட்டுள்ளோம். தான், கேரள அரசன் ரவிவர்மனை போரில் வென்றதை மனதில் கொண்டு, பெருவுடையார் கோயிலின் முகப்புக் கோபுரத்துக்கு, "கேரளாந்தன் வாயில்' என்றே பெயரிட்டார் ராஜராஜன்."அந்தகன்' என்ற சொல்லுக்கு, "பார்வையற்றவன்' என்பது பொருள். உயிர்களைப் பறிப்பதில் பாரபட்சம் காட்டாததால் யமதர்மனுக்கும் "அந்தகன்' என்ற பெயர் உண்டு. பார்வையற்றோர் எங்கும் இருளையே காண முடிவது, இயற்கை செய்த சதி! அப்படி இருள் மயமாயிருந்த "அந்தகாசுரன்' என்பவனையும், அந்தகனாகிய யமனையும் சம்ஹாரம் செய்தவர் சிவபெருமான் என்று புராணங்கள் கூறும். அதனால் முறையே "அந்தகாசுர மூர்த்தி' என்றும், "கால சம்ஹார மூர்த்தி' என்றும் பரமசிவத்துக்கு திருநாமங்கள் உள்ளன.சிறந்த சிவபக்தராகிய ராஜராஜ சோழனும் தனது இஷ்ட தெய்வத்தின் திருப்பெயர்களின் சாயலிலே, "கேரளாந்தகன்' எனப் போற்றப்படுவதை உளப்பூர்வமாக ஏற்றுக் கொண்டார். "சிவபாத சேகரன்' என்பதும் இவருடைய பக்தியையும், அடக்கவுணர்வையும் பறை சாற்றும் புகழ்ப் பெயர்களில் ஒன்று! ஆயினும் தனது வீரத்தை உறுதிப்படுத்தும் விதத்தில், பெருவுடையார் கோயிலின் முகப்புக் கோபுரத்துக்கு "கேரளாந்தகன் வாயில்' என்று பெயரிட்டார்.பெருவுடையார் கோயில்:கி.பி. 985-ல் பெருவுடையார் கோயிலைக் கட்ட ஆரம்பித்து, கி.பி. 1010-ல் நிறைவு செய்தார் ராஜராஜ சோழன். "கேரளாந்தகன் கோபுரம்' தாண்டி உள்ளே சென்றால், "ராஜராஜன் வாயில்' என்ற பெயரில் மற்றொரு ராஜ கோபுரத்தைக் காணலாம். அதனுள்ளே நுழைந்தால் பிரம்மாண்ட நந்தியெம்பெருமான் மண்டபமும், வலது புறத்தில் ஸ்ரீபிருஹன் நாயகி சந்நிதியும், நேரே 216 அடி உயரமுள்ள விண் முட்டும் கருவறை விமானத்துடன் கூடிய ஸ்ரீபிரகதீஸ்வரர் சந்நிதியும் காட்சியளித்து, நம்மை மெய் சிலிர்க்க வைக்கின்றன.கருவறை விமானத்துக்கு, "தட்சிண மேரு' என்று பெயரிட்டுள்ளார் ராஜராஜ சோழன். வடக்கே மேருமலை உள்ளதாகப் புராணங்கள் கூறுகின்றன. அதனால் இக்கருவறை விமானத்தை, "தெற்கில் உள்ள மேரு' என்றழைத்துள்ளார் பேரரசர். தட்சிண மேரு முழுவதற்கும் பொன் பூசிய தகடுகளை ராஜராஜ சோழன் வேய்ந்திருந்ததாகச் சொல்கின்றனர். இதை நினைத்துப் பார்க்கவே நெஞ்சம் பூரிக்கின்றது. ஆனால் பிற்காலப் படையெடுப்புகளில் இத்தகடுகள் களவாடப்பட்டிருக்கலாம்.கருவறையில் பதிமூன்றடி உயரமும், அதற்கேற்ற ஆவுடையாரும் உடைய பிரம்மாண்டமான சிவலிங்கத்தை தரிசிக்கின்றோம். கருவறையின் பக்கவாட்டில் உள்ள புறச்சுவர்களும் பிரமிப்பூட்டும் வண்ணம் அமைந்துள்ளன. அவற்றில் அமைந்துள்ள பெரும் சிற்பங்களும், கீழ்ச்சுற்று அறையின் சுவரில் காணப்படும் சோழர் கால ஓவியங்களும், "தட்சிண மேரு'வில் உச்சியில் காணப்படும் 12 அடி உயர கலசமும், ஏன் ஆலயத்தின் அனைத்து அம்சங்களுமே ராஜராஜ சோழனின் பெரும் புகழை உள்ளத்தில் பதியும்படி உணர்த்துகின்றன.இக்கோயிலில் தற்போது காணப்படும் சில கோட்டங்கள், நாயக்க மன்னர்கள் காலத்தில் அமைக்கப்பட்டவை என்பது வரலாற்று அறிஞர்களின் கருத்து. ஆனால், "எல்லாப் புகழும் இறைவனுக்கே' என்பது போல், பொதுமக்கள், அனைத்தையும் ராஜராஜ சோழனின் அரும்பணியாகவே மதித்து ஆராதிக்கின்றனர்.ஆயிரமாண்டு நிறைவு விழா: தஞ்சைப் பெருவுடையார் கோயிலின் ஆயிரமாவது ஆண்டு நிறைவு விழா, இன்றிலிருந்து துவங்கி, நாளது 26ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. சிறப்புக் கண்காட்சி, ஆய்வரங்கம், நாட்டியாஞ்சலி, ராஜராஜ சோழன் வரலாற்று நாடகம், ஓதுவார்களின் திருமுறை நிகழ்ச்சி என அற்புதமான அம்சங்களோடு இப்பெருவிழா கொண்டாடப்படவுள்ளது.தமிழர்களின் பெருமையை தரணி அறியச் செய்த ராஜராஜ சோழனின் திருப்புகழ், மேலும் பல்லாயிரம் ஆண்டுகள் நிலைத்திருக்கும் என்பதில் ஐயம் இல்லை. வாழிய செந்தமிழ்! வாழிய மும்முடிச் சோழர்!(படங்கள் - நன்றி : டாக்டர் குடவாயில் பாலசுப்பிரமணியன்)
thanks to http://www.dinamani.com/edition/story.aspx?&SectionName=Vellimani&artid=307534&SectionID=147&MainSectionID=147&SEO=&Title=

பெரியகோயில் ஓவியத்தில் தஞ்சை நால்வர்

0 c
தஞ்சாவூர், டிச. 28:   தஞ்சாவூர் பெரியகோயில் அம்மன் சன்னதியின் முன் மண்டபக் கூரையில் காணப்படும் புராண ஓவியத் தொகுப்பில், தஞ்சையைச் சேர்ந்த நால்வர் நாட்டியமாடும் பெண்ணுக்கு நட்டுவாங்கம் சொல்லும் அரிய ஓவியக் காட்சி இடம் பெற்றுள்ளது (படம்).
    இதுகுறித்து வரலாற்று ஆய்வாளர் குடவாயில் பாலசுப்பிரமணியன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
    தற்போது தமிழகத்தின் தலைசிறந்த நாட்டிய விற்பன்னர்களில் பெரும்பாலானவர்கள் பின்பற்றும் நாட்டிய மரபு, சுமார் 180 ஆண்டுகளுக்கு முன்பு தஞ்சை நால்வர் என அழைக்கப்படும் நான்கு சகோதரர்கள் வகுத்த நாட்டிய நெறிமுறைகளேயாகும்.
    தஞ்சாவூர் சுப்பராய நட்டுவனார், பரமானந்தம் அம்மையார் தம்பதிக்கு, சின்னையா (1802), பொன்னையா (1804), சிவானந்தம் (1808), வடிவேலு (1810) ஆகிய நால்வரும் மகன்களாகப் பிறந்தனர்.
    இவர்கள், தஞ்சை சரபோஜி மன்னர் மற்றும் சிவாஜி ஆகியோர் காலத்தில் தஞ்சாவூர் பெருவுடையார் கோயிலில் நாட்டிய ஆசான்களாக பணிபுரிந்ததோடு, பரதநாட்டியம், ஹிந்துஸ்தானி ஆகியவற்றை கற்பித்தனர். மேலும், அக்கோயிலின் நாட்டிய உரிமையைப் பெற்றவர்களாகவும் திகழ்ந்தனர்.
     பின்னாளில் இவர்களில், வடிவேலு திருவனந்தபுரம் சுவாதித் திருநாள் மகாராஜாவிடமும், சின்னையா, மைசூர் சாமராஜ உடையார் சமஸ்தானத்திலும் அரசவைக் கலைஞர்களாக விளங்கினர்.
   இவர்கள் நால்வரும் நவசந்தி கவுத்துவம் என்ற கோயில் ஆடல் மரபை உருவாக்கிப் புகழ் பெற்றனர். பல சாகித்தியங்களையும் புனைந்தனர். இவர்களில் சிவானந்த நட்டுவனார் தமிழில் கையொப்பமிட்டு எழுதிய மோடி ஆவணம் ஒன்று சரஸ்வதி மகாலில் உள்ளது.
    இவர்கள் பெரியகோயிலில் பணிபுரிந்த போது, அம்மன் மண்டபத்து உள்கூரையில் தக்கன் யாகம் செய்த புராண வரலாறும், தேவி மகாத்மியமும் தொடர் ஓவியங்களாகத் தீட்டப் பெற்றன. அப்போது அந்த ஓவியர்தான், கோயிலில் கண்ட தஞ்சை நால்வர் நடனம் நிகழ்த்தும் காட்சி ஒன்றை புராணக் காட்சிகளுக்கு இடையே ஓவியமாகத் தீட்டியுள்ளார்.
    பொதுவாக நாயக்கர், மராட்டியர், சேதுபதி மன்னர்கள் காலத்து புராண ஒவியக் காட்சிகளில் ஓவியனின் சமகாலத்து முக்கியஸ்தர்களின் ஓவியங்களையோ அல்லது விழாக் காட்சிகளையோ படைப்பது வழக்கம். திருவாரூர், கோனேரிராஜபுரம், ராமநாதபுரம், மதுரை ஆகிய இடங்களில் இத்தகைய மரபைக் காண முடியும் என்றார் அவர்.
© Copyright 2008 Dinamani

இராஜராஜேச்சரம், திருவாரூர் திருக்கோயில்

0 c



First Published : 11 Jan 2011 05:07:26 AM IST

thanks to http://dinamani.com/edition/edustory.aspx?&SectionName=Chennai&artid=359774&SectionID=97&MainSectionID=97&SEO=&Title=%E0%AE%89%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AE%BE?
தமிழர் வரலாற்றின், கலைப் பண்பாட்டின், கலாசாரத்தின் தவிர்க்க முடியாத ஓர் அங்கம் கோயில்கள். கோயில்களோடு கூடிய வாழ்வு நம்முடையது. ஆனால், நம்முடைய கோயில்களைப் பற்றி நமக்கு எந்த அளவுக்குத் தெரியும்? கோயில்கள் தொடர்பாக நமக்கு கிடைக்கும் புத்தகங்கள் எந்த அளவுக்குத் தரமானவை?  தமிழகத்தின் மிகச் சிறந்த கலைப் படைப்பான தஞ்சாவூர் பெருவுடையார் திருக்கோயில் பற்றியும் தமிழகத்தின் மிகத் தொன்மையான - திராவிடக் கட்டடக் கலைக்கு உன்னதமான உதாரணமான - திருவாரூர் தியாகராஜர் திருக்கோயில் பற்றியும் அற்புதமான இரு புத்தகங்களை எழுதியிருக்கிறார் குடவாயில் பாலசுப்பிரமணியன். இந்தப் புத்தகங்களை வாசிக்கும்போது கோயில்களைக் கட்டுவது மட்டும் இல்லை; கோயில்களை அணுகுவதும்கூட ஒரு பெரிய கலை என்ற உண்மை புலப்படுகிறது. கோயில் நிர்மாணம், அமைப்பு, கட்டுமானச் சிறப்புகள், சிற்பங்கள், ஓவியங்கள், அவை சொல்லும் செய்திகள், தத்துவ விசாரங்கள், வழிபாட்டு முறைகள், வழக்கொழிந்த அம்சங்கள், புனை கதைகள் என ஒரு கோயிலைப் பற்றிப் பேசவும் கேட்கவும் எத்தனை வாய்ப்புகள் இருக்கின்றனவோ அத்தனை வாய்ப்புகளிலும் புகுந்து வருகின்றன இந்த இரு புத்தகங்களும். முக்கியமான புத்தகங்கள் இவை.  1. இராஜராஜேச்சரம் - ரூ. 700  2. திருவாரூர் திருக்கோயில் - ரூ. 600  சென்னைப் புத்தகக் காட்சியில் இந்த இரு புத்தகங்களும் அன்னம் பதிப்பகத்தில் கிடைக்கின்றன. இரண்டையும் வாங்குவோருக்கு  ரூ. 1,050 சலுகை விலையில் தருகிறார்கள்.

சோழனின் பெரியகோயிலும்.. சேரனின் நுழைவாயிலும்!

0 c
thanks to http://www.dinamani.com/edition/print.aspx?artid=308721

தஞ்சைப் பெரிய கோயிலை சோழ மன்னனான ராஜராஜன் உருவாக்கியிருந்தாலும், அக் கோயிலில் சேர நாட்டின் கலைப்பாணியையும் உள்ளடக்கியிருந்த கட்டுமானங்கள் உள்ளது தற்போதைய ஆய்வுகளில் அறியப்பட்டுள்ளது.

தஞ்சாவூர் பெருவுடையார் கோயிலில் உள்ள மாமன்னன் ராஜராஜனின் கல்வெட்டுகளில்  கேரளாந்தகன் திருவாயில், ராஜராஜன் திருவாயில் என இரண்டு கோபுரங்களைக் குறிப்பிடுகின்றன. அதைப் போலவே அப்பேரரசின் மற்றொரு கல்வெட்டு இந்தக் கோயிலில் உள்ள அணுக்கன் திருவாயில் என்ற ஒன்றைக் குறிப்பிடுகிறது. இது திருமதிலின் வடமேற்குப் பகுதியில் வடபுறத் திருவாயிலாகும்.  இவ்வாயில் பற்றியும், திருச்சுற்று மாளிகையின் மேற்கு மற்றும் தெற்கு  மதில்களில் உள்ள மற்ற மூன்று வாயில்கள் பற்றியும் இதுவரைக் கட்டடக் கலை  வல்லுநர்களால் ஆராயப்பட்ட எந்த ஒரு கருத்தும் வெளியிடப்படவில்லை. 


அணுக்கன் திருவாயிலும் மற்ற மூன்று வாயில்களும் ராஜராஜன் திருவாயில் போன்று தமிழக பாணி கோபுரங்களாக அமையாமல், சேர நாட்டுக் கோபுர கலைப் பாணியில் இரண்டு அல்லது மூன்று அடுக்குகளோடு திகழ்ந்திருக்க வேண்டும் என்பதைக் கட்டுமான அமைப்பின் மூலம் உணரமுடிகிறது.
இந்த நான்கு வாயில்களில் அணுக்கன் திருவாயிலே மிகுந்த எழிலோடு படைக்கப் பெற்றிருக்க வேண்டும் என்பதை அங்கு காணப்படும் எச்சங்களிலிருந்து உணர முடிகிறது. மரத்தால் செய்யப்பட்டது போன்று நுணுக்கமான வேலைப்பாடுகளுடன் இவ் வாயில் நிலைக் கல்லால் அமைந்துள்ளது. அருகே சங்கநிதி, பதுமநிதி, சாமரம் ஏந்திய பெண்கள், குத்து விளக்குகள், பூரண கலசம் ஆகிய சிற்பங்களும் இடம் பெற்றுள்ளன.
நிலைக்காலுக்கு மேலாக மதில் சுவரில் இரண்டு வரிசையாகச் சாரத்துவாரங்களும்  அவற்றுக்குக் கீழாகச் சிம்ம வேலைப்பாடுகளுடன் தண்டியங்களும் கல்லிலேயே செதுக்கப்பட்டுள்ளன. இவற்றில் மரச் சட்டங்களைச் சொருகி மரப் பலகைகளாலும்,  செம்பு தங்கம் போன்ற தகடுகளாலும் போர்த்தி கோபுர முகப்பை உருவாக்கி இருந்திருக்க வேண்டும். இவ்வகை அமைப்புக் கோபுரங்கள் ராஜராஜன் காலத்தில் இருந்தன என்பது அப்பேரரசன் தீட்டியுள்ள தஞ்சை பெருங்கோயிலின் ப்ரஸ்கோ ஓவியங்கள் மூலம் தெரியவருகிறது. தில்லைக் கோபுரங்கள் அனைத்தும் அவ்வகைக் கோபுரங்களாகத்தான் இருந்தன என்பதை ராஜராஜன் தன் மனைவியருடன் தில்லைக்கோயிலில் வழிபடும் காட்சியிலும், சுந்தரர் பதிகம் பாடும் காட்சியிலும் காண முடிகிறது.
ராஜராஜ சோழனின் அரண்மனை, இவ்வாயிலுக்கு அருகே உள்ள சீனிவாசபுரம் பகுதியில் இருந்திருக்க வேண்டும் என்பது தொல்லியல் ஆய்வுகளால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மாமன்னன் இறைவனை வழிபட வரும் திருவாயில் இது என்பதால்தான் இவ்வாயில் பேரழகோடு மங்கலம் பொலிகின்ற திருவாயிலாக அமைந்துள்ளது.  இவ்வாயில் வழியாகப் புகுந்து கருவறைக்குச் செல்லும் வடபுற வாயிலில் மட்டுமே அட்ட  மங்கலச் சிற்பங்கள் இடம் பெற்றுள்ளன. செம்பு மற்றும் தங்கத் தகடுகள் போர்த்தப்பட்டிருந்த இவ்வாயிலின் முகப்புப் பகுதி பிற்கால கொள்ளையடிப்புகளின்போது  சிதைந்திருக்க வேண்டும். இவ்வாயில் முக்கியத்துவம் பெற்ற வாயில் என்பதால் மாமன்னன்  ராஜராஜன் மெய்க் காவலர்கள் பலரை அங்கு நியமித்திருந்தான் என்பதை அவனது சாசனம் ஒன்று எடுத்துக் கூறுகிறது. அணுக்கன் திருவாயில் போன்றே மற்ற மூன்று வாயில்களும் சேரநாட்டு கோபுர பாணியில் தான் இருந்திருக்க வேண்டும் என்பதை மெய்ப்பிக்கும் வண்ணம் மரச்சட்டம் சொருகுவதற்கேற்ற சாரத்துவாரங்களும் தண்டியங்களும் அவ்வாயில்களின் மேற்புறம் உள்ளன.
சேரர் கலைப்பாணியில் கொடுங்கைகள்: தஞ்சைப் பெரியகோயிலைப் பின்னாளில் புதுப்பித்த விஜயநகர அரசர்களும், தஞ்சை நாயக்கர்களும் சேரநாட்டுக் கலைப் பாணியில் திகழும் கூரை அமைப்பை கல்மண்டபங்களின் கொடுங்கைகளில் கட்ட ஒரு புதிய கட்டட மரபைத் தோற்றுவித்தனர். ஸ்ரீராஜராஜேச்சரத்தின் (பெரிய கோயில்) முகமண்டபத்திலும் சுப்பிரமணியர் ஆலயத்தின் மகா மண்டபத்திலும் இத்தகைய கொடுங்கைகளைக் காண முடிகிறது. உத்தரத்திலிருந்து ஏறத்தாழ 7 அடி நீளத்துக்கு வளைவுக் கூரையுடன் இக்கொடுங்கைகள் காணப்படுகின்றன.
கீழே மரச்சட்டங்கள், குமிழ் அணிகள், குறுக்குச் சட்டங்கள் என அனைத்தும் கருங்கல்  கொண்டே அமைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கதாகும். பொதுவாக ஆவுடையார் கோயில் கொடுங்கைகளைச் சிறப்பாகக் குறிப்பிடுவர். ஆனால் இவற்றையும் விஞ்சும் வகையில் தஞ்சைப் பெரியகோயில் கொடுங்கைகள் விளங்குகின்றன.  சேரநாட்டில் இன்றும் பொலிவுடன் திகழும் அக்கலை மரபை சோழ நாட்டிலும் போற்றி புதிய படைப்புக்களை உருவாக்கினர் என்பதற்கு தஞ்சைப் பெரியகோயிலே சிறந்த எடுத்துக்காட்டு.

தாராசுரத்தில் அரிய சோழர் கால நாட்டியச் சிற்பம்

0 c
First Published : 13 Sep 2009 10:36:12 AM IST
thanks to dinamani news 
தஞ்சாவூர், செப். 12: தாராசுரம் ஐராவதீசுவரர் கோயிலில் அரிய சோழர் கால நாட்டியச் சிற்பம் (படம்) கண்டறியப்பட்டுள்ளது.  இதுகுறித்து கல்வெட்டு ஆராய்ச்சியாளர் குடவாயில் பாலசுப்பிரமணியன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:  கோயிலிலுள்ள திருமண்டபத் தூண் ஒன்றில் நங்கை ஒருத்தி, தான் விருதாகப் பெற்ற தலைக்கோலைத் தலையில் தாங்கி ஆடும் அரிய காட்சிச் சிற்பம் கண்டறியப்பட்டது.  நாட்டியக் கலையை முழுமையாகக் கற்றறிந்த பெண் அரங்கேற்றம் செய்யும் அரங்க மேடைக்கு தலைக்கோல் தானம் என இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தில் குறிப்பிட்டுள்ளார். அந்நாளில் போர் நிகழும்போது பகைவர்கள் தோற்று, புறமுதுகிட்டு ஓடும்போது விட்டுச் செல்லும் கொற்றக் கொடையின் மரக்காம்புக்கழி அல்லது பகை மன்னர்களின் நகரங்களுக்குப் பாதுகாப்பாக விளங்குகின்ற காடுகளில் விளைந்த மூங்கில் கழி ஆகியவற்றை வெட்டி எடுத்து வந்து, அதில் தங்கத் தகடு போர்த்தி, நவமணிகளைப் பதித்து, பின்பு புனித நதிகளின் நீரால் பூஜை செய்து அக்கோயிலுக்கு "தலைக்கோல்' என பெயரிடப்படும். பின்னர் அரசனின் பட்டத்து யானை மீது ஏற்றி நகர் வலம் வந்து நிறைவாக நடன மேடைமீது வைத்து மலர் தூவி வழிபடுவர். நாட்டிய அரங்கேற்றம் முடிந்தபிறகு, அந்நங்கையின் ஆடல் வல்லுநர்களால் அங்கீகரிக்கப் பெற்ற அப்பெண்ணின் கையில் அங்குள்ள தலைக் கோலை அளித்து அவளுக்குத் "தலைக்கோலி' என்ற விருதையும் வழங்குவர்.  சிலப்பதிகாரத்தில் மாதவி தலைக்கோல் விருது பெற்ற வரலாறு குறிக்கப்பட்டுள்ளது. பின்பு சோழப் பேரரசர்கள் காலத்தில் பல நாட்டிய நங்கையர்களுக்கு இந்தப் பட்டம் அளிக்கப்பட்டது. 
 
திருவாரூர் கோயில் உள்ளிட்ட பல கோயில் கல்வெட்டுகளில் இது கூறப்பட்டுள்ளது.  தாராசுரம் சிற்பத்தில் நவமணிகள் பதிக்கப்பெற்ற தலைக்கோலை வலது கையால் பிடித்த வண்ணம் தலையால் தாங்கிப் பேரழகோடு நங்கை ஆடும் காட்சியை நாம் காணலாம்.    இது பண்டைய தமிழ்நாட்டு நாட்டிய மரபின் காட்சி முத்திரையாக விளங்குகிறது என்றார் குடவாயில் பாலசுப்பிரமணியன்.

சோழர்கள் ஆட்சியில் தென்னிந்தியாவுக்குத் தலைநகராக விளங்கியது தஞ்சை: குடவாயில் பாலசுப்பிரமணியன்

0 c
thanks to http://www.dinamani.com/edition/Story.aspx?SectionName=Edition-Trichy&artid=373865&SectionID=13

First Published : 09 Feb 2011 12:19:10 PM IST


தஞ்சாவூர், பிப். 8: ராஜராஜசோழன், ராஜேந்திரசோழன் ஆகியோரது ஆட்சிக் காலத்தில் தென்னிந்தியாவுக்கே தலைநகராக விளங்கியது தஞ்சாவூர் என்றார் வரலாற்று ஆய்வாளர் குடவாயில் பாலசுப்பிரமணியன். 
 
 தஞ்சாவூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மாவட்ட மூத்தக் குடிமக்கள் பேரவைக் கூட்டத்தில் வரலாற்றில் தஞ்சாவூர் என்ற தலைப்பில் அவர் மேலும் பேசியது:  குளிர்ந்த நிலப்பரப்பை உடைய இடம் என்பதால் தஞ்சை என்ற பெயர் ஏற்பட்டது. வரலாற்றில் முதல்முறையாக கி.பி. 550-ல் வெட்டப்பட்ட கல்வெட்டில் தஞ்சையின் பெயர் காணப்படுகிறது.
 
திருச்சி மலைக்கோட்டை தாயுமானவர் கோயிலின் பின்பகுதியில் சீராமுனிவர் என்ற சமண முனிவர் உயிர்த்திறந்த குகையில் இந்தக் கல்வெட்டு காணப்படுகிறது.  சிம்மவிஷ்ணு பல்லவன், சோழநாட்டை கைப்பற்றியது குறித்த இந்தக் கல்வெட்டில் தஞ்சையை வெற்றிகொண்டான் என்ற பொருள் தரும் பட்டப் பெயரான தஞ்சகரக என்று பொறிக்கப்பட்டுள்ளது. பின்னர், 
 
அப்பர் சுவாமிகள் திருவீழிமிழலையில் பாடிய பாடலில் தஞ்சை தளிக்குளத்து மகாதேவர் என்று பாடியுள்ளார். இந்தக் கோயில் சீனிவாசபுரம் பகுதியில் இருந்துள்ளது.  பூதத்தாழ்வார், திருமங்கை ஆழ்வார் பாடல்களிலும் தஞ்சையைப் பற்றி கூறப் பட்டுள்ளது. ஆழ்வார்கள் பாடல் பெற்ற மாமணிக்கோயில் பெருமாள் கோயில், நீலமேகப் பெருமாள் கோயில் ஆகியவை தஞ்சையில் இருந்துள்ளன. நகரின் பல்வேறு பகுதிகளில் இருந்த இந்தக் கோயில்கள் பின்னர் நாயக்கர்கள் காலத்தில் வெண்ணாற்றங் கரையில் அமைக்கப்பட்டன.  சோழர்களுக்கு முன்னர் முத்தரையர் காலத்திலேயே தஞ்சை தலைநகராக விளங்கியது. 
 
பின்னர், விஜயாலய சோழன் தஞ்சையை கி.பி. 850-ம் ஆண்டில் மீட்டான். அப்போது முதன் முதலில் கீழவாசல் பகுதியில் தற்போது ராகுகால காளி, வடபத்ர காளி என அழைக்கப்படும் நிசும்பசூதனிக்கு கோயில் கட்டினான். இதுதான் சோழர் களின் குல தெய்வம்.  ராஜராஜசோழன், ராஜேந்திரசோழன் ஆட்சிக் காலத்தில் தஞ்சாவூர், தென்னிந்தியாவுக்கே தலைநகராக விளங்கியது. அவர்கள் தற்போதைய ஒரிசா வரை அரசாண்டனர். ராஜராஜசோழன் மறைவுக்குப் பிறகு 10 ஆண்டுகள் தஞ்சையை தலைநகராகக் கொண்டுதான் ராஜேந்திரசோழன் ஆட்சி செய்தார். 
 
 பின்னர் குதிரை, யானைப் படைகள் உள்ளிட்டவை பல ஆறுகளைத் தாண்டிச் செல்வதில் இருந்த சிரமத்தைக் குறைப்பதற்காக கங்கைகொண்ட சோழபுரத்துக்கு தலைநகரை மாற்றினான். சோழர்களின் அரண்மனை தற்போதை சீனிவாசபுரத்தில் இருந்ததற்கான சான்றுகள் கிடைத்துள்ளன.  மாறவர்மசுந்தரபாண்டியன் இந்த அரண்மனையை அழித்தார். பின்னர் பாண்டிய மன்னரின் தளபதியான சாமந்தநாராயணன் தஞ்சையில் மீண்டும் ஓர் ஊரை உருவாக்கினார். இவர்களைத் தொடர்ந்து, நாயக்கர்கள், மராட்டியர்கள் தஞ்சையை தலைநகராகக் கொண்டு தஞ்சையை ஆட்சி செய்தனர் என்றார் குடவாயில் பால சுப்பிரமணியன்.  கூட்டத்தில் பேரவைத் தலைவர் தங்கராஜன், பொருளாளர் கலியமூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.



மதுவிலக்கே மந்திரமாகட்டும்

0 c
காலம் எத்தனை மாற்றங்களை ஏற்படுத்தினாலும் மனித குலத்துக்கு நன்மையை உடனடியாக அது செய்யாதபோது நீண்ட காலத்துக்கான அடிப்படையிலும் அது நன்மை தருவதில்லை. நன்மையைத் தராவிடினும் தீமையைத் தராமலாவது இருக்கலாம். குறிப்பாக பொழுதுபோகுக்கான பழக்கங்கள் ஒரு தலைமுறையை அழிப்பதோடு நான்கைந்து தலைமுறையையும் பாழ்படுத்தாமல் இருப்பதில்லை. பரம்பரையாய் உயிர்க் கொல்லி நோயாய் இருப்பது மதுப்பழக்கம்.


மது என்பது எந்த வகையாக இருந்தாலும் அது ஏதோ ஒரு வகையில் தீமை பயப்பதுதான். இன்றைக்குக் 'கள்' இறக்குவதைச் சட்டப்படி குற்றமற்றதாக அறிவிக்க வேண்டும் என்றும் 'கள்'ளை மதுபான பட்டியலிலிருந்து நீக்க வேண்டும் என்கிற குரலும் எழுந்திருக்கிறது. அதற்கு ஆதரவாகப் பல அரசியல் கட்சிகளும் குரல் கொடுத்து வருகின்றன. அரசியல் கட்சிகளைப் பொருத்தவரை எந்த லட்சியமும் அற்ற கொள்ளைக் கூட்டணியாகச் செயல்படுவதால் இதைத்தான் எதிர்பார்க்க முடியும். ஒரு காலத்தில் மாப்பிள்ளைக்குக் குடிக்கிற பழக்கம் இருக்கிறதா? என்றுதான் பார்ப்பார்கள். இப்போது படித்த மாப்பிள்ளைகள் 'பாரில்' அமர்ந்து குடிப்பதை நாகரிகமாகவும் 'பார்ட்டி' என்கிற பெயரில் குடித்துக் கும்மாளமிடுவதை உயர்வென்றும் கருதுவதும் குடியின் ஆதிக்கமாகக் கருதலாம். குடித்து விட்டுத் தெருவில் வீழ்ந்து கிடப்பதும் தகராறு செய்வதும் பண்பற்ற செயல்களாக இருந்த நிலைகூட மாறி, இதுவெல்லாம் இனித் தடுக்க இயலாது என்கிற பொதுப்புத்தி நிலைக்கு இந்த நாடு தள்ளப்பட்டு விட்டது.
கவிஞர்கள், எழுத்தாளர்கள், விஞ்ஞானிகள் என்று சகல துறையினரும் குடிப்பதைப் பற்றிக் குற்றவுணர்வு ஏதும் இல்லாமல் இயல்பாக அதுபற்றி, இது தனிமனித சுதந்திரம் என்று கருத்துரைப்பதும் இதற்கு ஆதாரம் தேடி சங்க இலக்கிய உதாரணங்கள் என்று பிதற்றுவதும் வெட்கக் கேடான விஷயம் என்பது மட்டுமன்றி, ஒரு தலைமுறைக்கே தவறான வழிகாட்டும் கைகாட்டி மரங்களாகவும் இவர்கள் வலம் வருகிறார்கள்.
குடியால் உயர்ந்தவர்களைப் பற்றி இவர்களால் யாரேனும் ஒருவரை அடையாளம் காட்ட முடியுமா...? அரசுக்கு வருமானம் மதுக்கடைகள் என்று அரசுகள் பிதற்றுகின்றனவே, இது வரை வறுமை ஒழிந்திருக்கிறதா...? வேலை வாய்ப்புகள் தான் பெருகியுள்ளதா...?
படித்த பண்புள்ள இளைஞர்கள் பலரும் 'டாஸ்மாக்' மதுக்கடைகளில் வேலைக்குச் சேர்ந்தபின் புதிய குடிகாரர்களாய் மாறிப்போனதை யாராலும் மறுக்க இயலுமா...? மேலதிகாரிகளைச் சரிகட்ட, எப்படியாவது சம்பாதிக்கிற உத்திகளைப் பழகவில்லையென்றாவது கூற முடியுமா...? கல்லூரி மாணவர்களில் சிலர் மேலைநாட்டுத் தாக்கத்தின் விளைவாகக் குடிக்கிற பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டனர்.
குடிக்கிற ஆண்களைக் கண்டிக்க வேண்டிய மாதர்கள்கூட குடிக்கத் தொடங்கிய வரலாறுகளும் நம்மிடம் உண்டு. தாயே தன் மகனுக்கு ஊற்றிக் கொடுக்கிறாராம். வெளியே சென்று அதிகமாகக் குடித்துப் பழகி விடுவானாம். வீட்டிலேயே ஒரு 'பெக்கோ' இரண்டு 'பெக்கோ' கொடுத்து விட்டால் வெளியே சென்று சீரழிய மாட்டானாம். குடிக்கு வக்காலத்து வாங்குகிற வணிக ஊடகத்தில் பிதற்றுகிற பேட்டியின் குரல் இது.
குடியின் தீமைகளைப் பற்றிப் பல நூற்றாண்டுகளாக பலரும் குரல் கொடுத்து வரும்போது இந்த நூற்றாண்டிலும் தேவைதானா....? என்கிற ஒரு பழமைக் கேள்வி புதுமையாய் எழுந்து வரும்! எந்த நூற்றாண்டானால் என்ன? நெருப்பு சுடத்தானே செய்யும்! குடி, குடியை எப்போதும் கெடுக்கத்தான் செய்யும். மிகப் பெரிய சாதனையாளர்கள் தங்கள் வாழ்நாளில் ஒரு பகுதியில் குடித்தே அழிந்து போயிருக்கிறார்கள்.
சில கருத்துகளை ஏற்கெனவே சொல்லப்பட்டு விட்டது என்று ஒதுக்கி விட முடியாது. திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டுதான் இருக்க வேண்டும். புதிய தலைமுறைக்கு இந்தக் கருத்துகள் மிகவும் அவசியம் தான். ஒரு தவறை தவறே இல்லையென்று சமாதானப்படுகிற ஒரு தலைமுறை உருவாகி வருகிறபோது இத்தலைமுறையை யார் எப்படிக் காப்பாற்றுவது?
குடி, ஒருவகையில் தனிமனிதப் பிரச்னைதான். அவர்களின் பணம், செல்வம் குடியில் அழிந்து விடுகிறபோது மீறிப்போனால் அக்குடும்பம் பாழ்படும். இது மேலோட்டமானதுதான். குடிக்கிற ஒருவனுக்குப் பிறக்கும் குழந்தைக்கும் நோய்க்கூறு ஏற்படும். குறைந்த விலை மருந்து, உழைக்கும் திறன் குறைவதால் நாட்டுக்கு இழப்பு என்று தொடர் சங்கிலிபோல் குடிகாரர்கள் பிரச்னைகள் தொற்று நோயாகி விடுகின்றன.
குடியை ஒழிக்க அல்லது கட்டுப்படுத்த இடைவிடாத பிரசாரமும் கருத்துப் பரிமாற்றமும் இன்றைக்குத் தேவை. இதற்கான வாய்ப்புகள் உருவாக்குகிற எந்தக் கட்சியையும் அமைப்பையும் ஆதரிக்கத்தான் வேண்டும்.
பூரண மதுவிலக்கே நம் நாட்டின் அறிவுச் செல்வத்தை தக்க வைக்கும். உழைக்கும் திறனை மேம்படுத்தும்! தனி நபர் சேமிப்பைப் பெருக்கும்! வாழ்க்கை வளமும் நலப்படும்! பூரண மதுவிலக்குக்கு யார் குரல் கொடுக்கிறார்களோ அவர்களை அமைப்பு ரீதியாக ஆதரித்துச் செயல்படுவது காலத்தின் கட்டாயம்!
நன்றி : - க. அம்சப்ரியா - தினமணி