கேட்பாரற்று கிடக்கும் இசை குதிரை சிற்பத்தின் அருகே கல்வெட்டு ஆய்வாளர் பண்ருட்டி தமிழரசன். |
இந்த இசை தரும் குதிரைச் சிற்பம் உள்ள இடம் கி.பி. 12-13 ஆம் நூற்றாண்டுகளில் தலை நகரமாக விளங்கி இன்று சிறிய கிராமமாக காட்சி தரும் சேந்தமங்கலம் என்ற ஊராகும்.விழுப்புரம்-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கெடிலம் நதிக்கு தேற்கே 1 கி.மீ தொலைவில் உள்ள இவ்வூர் பல போர்களை நிகழ்த்திய வரலாற்றுப் பெருமை வாய்ந்தது.பல்லவர் குலத் தோன்றல்களாகிய
மணவாளக் காடவராயரும்,
அவர் மகனாகிய கோப்பெருஞ்சிங்கக் காடவராயரும்
தங்கள் வீர வாள்களால் நிகழ்த்திய போர்களில் பெற்ற வெற்றியின் சின்னமாக அப்பகுதியில் இருந்த பெரிய காட்டை அழித்து வாணிலை கண்டீச்சுரம் (வாள்நிலை கண்ட ஈச்சரம்) என்கிற சிவன் கோயிலைக் கட்டினர். ஏழு வாயில்கள் மற்றும் அகழிகள் சூழ்ந்த கோட்டைக் கொத்தளங்களை அமைத்து, அருகே மக்களைக் குடியமர்த்தி சேர்ந்தமங்கலம் என்ற பெயரைச் சூட்டினர்.இவர்களுக்குப் பிறகு பிற்காலப் பாண்டியர்கள், விஜயநகர-நாயக்கர் போன்ற மன்னர்களின் ஆளுகைக்கு உள்பட்டுப் பின்னர் கவனிப்பாரற்று சிதைந்து வந்துள்ளது. தற்போது இக்கோயில் மத்திய தொல்பொருள் ஆய்வுத் துறையினரின் கட்டுப்பாட்டில் வந்தபிறகு திருப்பணி தொடங்கி நடந்தேறி வருகிறது.இக்கோயிலுக்கு எதிரில் பெரிய குளத்தை வெட்டிய காடவ மன்னர்கள், நாற்புறங்களிலும் அழகிய படிக்கட்டுகளை அமைத்து வட கரையில் நிழல் தருவதற்கென இரண்டு குதிரைகள் பூட்டிய தேர் போன்ற வடிவமைப்பில் எழில்மிக்க கருங்கல் மண்டபத்தை கட்டியுள்ளனர். இந்த மண்டபம் தற்போது முற்றிலும் அழிந்து இரண்டு குதிரைகள் மட்டும் எஞ்சியுள்ளன.சீறிப் பாய்வதுபோல் நின்று கொண்டிருக்கும் இக்குதிரையின் மீது சிறு கல்லை எடுத்து எங்கெல்லாம் தட்டுகிறோமோ அங்கெல்லாம் பல விதமான ஒலியெழுப்பி நம்மை வியப்படையச் செய்கிறது. இதில் ஒரு குதிரை தரையில் விழுந்து கிடக்கிறது. எஞ்சி நிற்கும் ஒரு குதிரையாவது விழுவதற்குள் காப்பாற்றப்பட வேண்டும் என்பது வரலாற்று ஆர்வலர்களின் ஆவல் என பண்ருட்டி தமிழரசன் கூறினார்.
thanks to http://www.dinamani.com/edition/edustory.aspx?&SectionName=Tamilnadu&artid=253792&SectionID=129&MainSectionID=129&SEO=&Title=%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%20%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%87%E0%AE%9A%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D
No comments:
Post a Comment