பராமரிப்பில்லாமல் அழிந்து வரும் மன்னர் கால மண்டபங்கள்



வந்தவாசி: வந்தவாசி அருகே பராமரிப்பு இல்லாததால் மன்னர்கள் காலத்து தங்கும் மண்டபங்கள் சேதமடைந்து அழிந்து வருகின்றன.பல நூறு ஆண்டுகளுக்கு முன் பொதுமக்கள் தாங்கள் செல்ல வேண்டிய இடங்களுக்கு பெரும்பாலும் நடந்தும், குதிரை வண்டி, மாட்டு வண்டிகளிலும் பயணம் செய்து வந்தனர். மேலும் புனித ஸ்தலங்களுக்கு யாத்ரீகர்கள் அடிக்கடி யாத்திரை மேற்கொள்வர். இதனால் பொதுமக்கள் மற்றும் யாத்ரீகர்கள் தங்கிச்செல்ல சாலைகளின் ஓரம் ஆங்காங்கே கருங்கற்களால் ஆன தங்கும் மண்டபங்களை அக்கால மன்னர்கள் அமைத்தனர். மேலும் பெரும்பாலான தங்கும் மண்டபங்களின் அருகே குளங்களையும் அமைத்தனர். இதனால் அக்காலத்தில் பொதுமக்கள் மற்றும் யாத்ரீகர்களுக்கு இந்த மண்டபங்கள் பெரிதும் உதவின.இது போன்ற மண்டபங்கள் வந்தவாசி-காஞ்சிபுரம் சாலையில் வீரம்பாக்கம், பெருநகர் புதுகாலனி, பெருநகர், மாமண்டூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ளன. இந்த மண்டபங்களை சரிவர பராமரிக்காததால் சேதமடைந்து வருகின்றன. இந்த மண்டபங்களின் மேற்கூரைகள் மீது செடிகள் முளைத்தும் தரைகள் பெயர்ந்தும் உள்ளன. இதில் சில மண்டபங்கள் மாட்டுத் தொழுவங்களாக மாறி உள்ளன. மேலும் சமூக விரோதிகள் மது அருந்தவும், சூதாடவும் பயன்படுத்தி வருகின்றனர்.ஆண்டுதோறும் புரட்டாசி மாதத்தில் வந்தவாசி, திண்டிவனம், விழுப்புரம், புதுச்சேரி, கடலூர், காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த பல்வேறு ஊர்களிலிருந்து பக்தர்கள் பல குழுக்களாக இச்சாலை வழியாக திருப்பதிக்கு யாத்திரை செல்வர். இவர்கள் இளைப்பாறவும், இரவுகளில் தங்கவும் இந்த மண்டபங்கள் பயன்பட்டு வருகின்றன.எனவே இந்த மன்னர்கள் காலத்து தங்கும் மண்டபங்களை சீரமைக்கவும், சமூக விரோதிகள் பயன்படுத்தாமல் பாதுகாக்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

http://www.dinamani.com/edition/story.aspx?artid=320709&SectionID=129

No comments:

Post a Comment